Sunday, December 9, 2012

சட்டப் பேரவை வைர விழா : ‘‘இன்னும் என்ன செய்யலாம்?’’ து. ரவிக்குமார்





நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கையின்றி கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் தேர்தல் புறக்கணிப்பு அரசியலைப் பின்பற்றி வந்தவன் நான் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் வற்புறுத்துதலால் அக்கட்சியில் சேர்ந்து, தேர்தலில் நிறுத்தப்பட்டபோது வெற்றிபெறுவோம் என்று எண்ணவில்லை. ஆனால், 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய  எனது அனுபவம், இந்திய நாடாளுமன்ற அரசியல் முறையில் போராட்டங்கள் மூலம்  மட்டுமல்ல, பேச்சுவார்த்தைகளின் (Negotiation) வழியாகவும் சிலவற்றை வென்றெடுக்க முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.

வைரவிழா கொண்டாடும் இத்தருணத்தில் தமிழக சட்டப்பேரவை ஆற்றியிருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணிகளை நாம் நினைவுகூர்வதோடு அதன் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைந்திட வழிகாணுவதும் அவசியம்.

பேரவையின்  அலுவல் காலம் அதிகரிக்கப்படவேண்டியது மிக மிக முக்கியம். நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாவிட்டால், பிற்பகலிலும் பேரவையை நடத்த வேண்டும். அப்போதுதான் விவாதங்களுக்குப் போதிய நேரம்  ஒதுக்க முடியும். மசோதாக்களை விவாதித்து, சட்டங்களாக இயற்றுவதுதான் பேரவையின் பிரதானமான பணி. ஆனால், அதற்குப் போதுமான கவனம் அளிக்கப்படுவதில்லை. கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் பத்து இருபது என மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றுவது இப்போது நாடாளுமன்றத்திலும் வழக்கமாகிவிட்டது. இது தவிர்க்கப்படவேண்டும்.

 பொதுக்கணக்குக் குழு உள்ளிட்ட சட்டமன்றக் குழுக்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. அந்தக் குழுக்கள் திறம்படச் செயல்பட்டால், சட்டப் பேரவை இன்னும் பொருள் பொதிந்ததாக இருக்கும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரையும் வெளியேற்றுவது, அவர்கள் இல்லாமலே அலுவல்களை நடத்துவது போன்ற நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் அவ்வளவாக இல்லை. அதை சட்டப்பேரவையிலும் பின்பற்றவேண்டும்.

அவை  நடவடிக்கைகளை பொதுமக்கள் அறியும்படி செய்ய, நாடாளுமன்றத்தில் செய்வதுபோல தொலைக்காட்சியில் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பவேண்டும்.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாவிட்டால் அதை ஒரு கட்சியாக அங்கீகரிக்க, பேரவை விதிகளில் இடமில்லை. அது திருத்தப்படவேண்டும். ஓர் உறுப்பினர் இருந்தாலும் அதைக் கட்சியாக அங்கீகரித்து, அதற்கான உரிமைகளை வழங்கவேண்டும்.

சட்டப்பேரவை நூலகத்தை முழுவதும் கணினிமயமாக்க வேண்டும். அங்கிருக்கும் அரிய ஆவணங்கள் போதிய பராமரிப்பின்றி, தூசு படிந்து மட்கிக்கொண்டிருக்கின்றன. நான் உறுப்பினராக இருந்தபோது அந்த நூலகத்தைப் புரட்டிப்போட்டுத் தேடி, சுவாமி சகஜானந்தா பேரவையிலும், மேலவையிலும் ஆற்றிய உரைகளைத் தொகுத்து நூலாக்கினேன். அதுபோல எண்ணற்ற நூல்களை பேரவை  ஆவணங்களிலிருந்து உருவாக்கமுடியும். முதல்கட்டமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து அதற்கான ஆய்வுகளை ஊக்குவிக்கலாம்.

சட்டப்பேரவையின் வைர விழா நினைவாக வளைவு ஒன்றைக் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தகைய நினைவுச் சின்னங்களை எழுப்புவதைவிடவும் பேரவையின் செயல்பாடுகளை மேலும் ஜனநாயகப்படுத்துவதே முக்கியம்."
நன்றி : புதிய தலைமுறை 

No comments:

Post a Comment