Thursday, December 13, 2012

பொன்விழா கண்ட தமிழகத் தொல்லியல்- ரவிக்குமார்

                                                       ஐராவதம் மகாதேவன் 


கடந்த காலத்துக்குள் மூழ்கித்தான் எதிர்காலத்துக்கான கதைகள் கண்டெடுக்கப்படுகின்றன.நிகழ்காலம்தான் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் அதைவிடவும் வேகமாக மாறுகிறது கடந்தகாலம். ஏனென்றால் கடந்தகாலம் என்பது நாம் கண்டுபிடிப்பதல்ல, நம் விருப்பத்துக்கேற்ப நாம் கட்டியமைப்பது.
 பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியா நாசமாகிவிட்டது என்று தூற்றும்தேசபக்தர்கள்அதிகரித்துவிட்ட காலம் இது. காலனிய ஆட்சியை எதன் காரணமாகவும் நாம் ஆதரிக்கமுடியாது என்றாலும் இந்தியாவின் கேடுகள் எல்லாவற்றுக்கும் இப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியைக் குற்றம்சாட்டிக்கொண்டிருப்பது அவதூறு தவிர வேறில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நமக்குக் கிடைத்த நன்மைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்றுதான் தொல்லியல் ஆராய்ச்சி.

சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் தான் தொல்லியல் ஆராய்ச்சிக்காக 1784 ஆம் ஆண்டு கல்கத்தாவில்ஆசியாட்டிக் சொஸைட்டிஎன்ற அமைப்பைத் தோற்றுவித்தார். கிரேக்க வரலாற்றாசிரியர்கள்சந்த்ரகொட்டொஸ்எனக் குறிப்பிட்டிருந்தது சந்திரகுப்த மௌரியரைத்தான் என்பதை அவர்தான் முதன்முதலில் அடையாளம்கண்டு சொன்னார். இந்திய வரலாற்றை வரிசைக்கிரமமாகத் தொகுத்துக்கொள்ள அதுதான் அடிப்படையாக அமைந்தது. பாடலிபுத்திரம்  கண்டறியப்பட்டதும், வில்கின்ஸன் என்பவர் குப்தர்களின் எழுத்துகளை வாசித்ததும் அதன்பின்னரான முக்கிய நிகழ்வுகள்.

1861 ஆம் ஆண்டில்  இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டு முதல் தொல்லியல் சர்வேயராக  அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நான்கே ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளை சர்வே செய்தார். குறிப்பாக சீன யாத்திரீகர் யுவான் சுவாங் பயணம் செய்த பகுதிகள் அவரால் ஆய்வு செய்யப்பட்டன. ஒருபுறம் இத்தகைய சர்வேக்கள் நடந்துகொண்டிருக்கும்போது இன்னொருபுறம், பிரிட்டிஷ் அரசு 1863 இல் ஒரு சட்டத்தை இயற்றி தொன்மைவாய்ந்த சின்னங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. குடிமக்கள் எவரும் பூமியைத் தோண்டும்போது தொல்லியல் பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் ஒன்று 1878 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1904 ஆம் ஆண்டில் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அதுதான் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்துக்கு முன்னோடி.இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் போயிருந்தால் நாம் இப்போது பெருமையோடு சொல்லிக்கொள்ளும் பல தொல்லியல் சின்னங்கள் அறியாமை என்னும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும்.
இந்தியத் தொல்லியல் ஆய்வுகளாக இருந்தாலும் சரி, வரலாறாக இருந்தாலும் சரி அவற்றைப் பற்றிப் பேசுகிற பலரும் வட இந்தியாவை முன்னிறுத்தியே பேசி வருகிறார்கள். அதற்குக் காரணம் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்களைச் சரியாக எட்டாததுதான். ஐராவதம் மகாதேவன், இரா.நாகசாமி, ஒய்.சுப்பராயலு, கா.ராஜன் முதலானவர்களின் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியான பிறகு அந்த நிலையில் சற்றே மாற்றம் தென்படுகிறது என்றாலும் நாம் செல்லவேண்டிய தொலைவு அதிகம்

தொல்லியல் துறையில் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துவரும் பலர் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அகழ்வாய்வு, கல்வெட்டியல், காசு இயல் முதலிய துறைகளில் அவர்கள் முக்கியமான ஆய்வுகளையும், கள ஆய்வுகளையும் செய்திருக்கிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களைவிட கள ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்ட தொல்லியல் ஆராய்ச்சி தமிழ்நாட்டில்தான் அதிகம் நடந்திருக்கிறது.அதன் விளைவாக இந்தியாவிலேயே மிக அதிகமான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறப்புகளை வெகுசனப் பரப்பில் எடுத்துச்சொல்லவும்,அங்கீகரிக்கவும் ஆளில்லை. அதனால்தான் தமிழகத் தொல்லியல் துறை துவக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த ( 1961 – 2011 ) செய்தி எவராலும் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தொல்பழங்கால ஆய்வு பல்லாவரத்தில் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்பவர் 1863 ஆம் ஆண்டு கண்டெடுத்த கற்காலக் கருவி ஒன்றிலிருந்து தொடங்குகிறது. அவர் தமிழ்நாட்டில் 1863 முதல் 1884 வரை பல்வேறு சர்வேக்களை செய்து தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் அவையெல்லாம், ஆசியாட்டிக் சொஸைட்டியாலோ, இந்தியத் தொல்லியல் துறையினாலோ கவனத்தில்கொள்ளப்படவில்லை. பின்னர், சென்னை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட  அவரது சேகரிப்புகள் இன்றளவும் ஆய்வாளர்களின் கையேடாகத் திகழ்கின்றன அவரும், வில்லியம் கிங் என்பவரும் தொல்பழங்கால ஆய்வில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். 1960களுக்குப் பிறகு கே.டி.பேனர்ஜியின் தலைமையில் இந்தியத் தொல்லியல் துறை அத்திரம்பாக்கம், வடமதுரை, பூண்டி , நெய்வேலி முதலான இடங்களில் நடத்திய அகழ்வாய்வுகளின் முடிவுகள் ஏற்கனவே நம்பப்பட்டுவந்த பல கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கின (Dr.K.Rajan, History of Archeological Research in Tamilnadu). 

சங்க காலம் என நாம் இப்போது பெருமைப்பட்டுக்கொள்கிற காலத்தை உறுதிசெய்ய இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இலக்கியப் பிரதிகளுக்கு அப்பால் போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட வரலாறு குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபட எதையும் கூறமுடியாத நிலை. அத்தகைய சூழலில் ’’கல்வெட்டுத் துறையில் மிகப்பெரும் புரட்சியை உருவாக்கியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர் ஆவார். 1924 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் வாசித்தளித்த கட்டுரையில்தான் முதன்முதலாகத் தமிழ்நாட்டின் இயற்கையான குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியாவிலிருந்து வந்த பௌத்த துறவிகளால் பிராமியிலும், பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை. அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றுதான் வரலாற்றாசிரியர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். அதை மறுத்து குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கேயுரிய சிறப்பு எழுத்துகளான ,,, போன்ற எழுத்துகள் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும் , தமிழ் இலக்கணம் இருப்பதையும் சுட்டிக்காட்டி முதன்முதலாக நிரூபித்தார். அவரது கருத்து அறிஞர்களிடையே உடனடித் தாக்கம் எதையும் நிகழ்த்தவில்லை. அடுத்து தி.நா.சுப்பிரமணியம் அவர்கள் 1938 இல் வெளியிட்டபண்டைத் தமிழ்க் கல்வெட்டுகள்என்ற நூலில்தான் ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளோடு ஒப்பிட்டுத் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஒரு புதிய முறையைச் சுட்டிக்காட்டினார்.  “ ( ஐராவதம் மகாதேவன், வரலாறு.காம், 2008 ) . 
                                                                 இரா .நாகசாமி 

இந்த இரு ஆளுமைகளின் பங்களிப்புகளுக்குப் பின்னரும் கல்வெட்டியல் தொய்வடைந்துதான் கிடந்தது. அதைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். முப்பத்தெட்டு ஆண்டுகாலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் ( Early Tamil Epigraphy, Harward University press and CreA,  2003 ) இந்திய வரலாறு என்றாலே அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ,ஆரம்பகால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் இருந்த கல்வி நிலையையும் அது எடுத்துக்காட்டுகிறது.
இரா.நாகசாமி, நடன.காசிநாதன் ஆகிய இருவரும்  ஐராவதம் மகாதேவனைப் போலவே தமிழ்க் கல்வெட்டியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச்செய்துள்ளனர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஏராளமான நூல்களை அவர்கள் எழுதியுள்ளனர். ஐராவதம் மகாதேவன், நாகசாமி ஆகிய இருவரின் கருத்துகள் பலவற்றை மறுத்து நடன.காசிநாதன் அண்மைக்காலமாக முன்வைத்துவரும் ஆய்வுகள் தற்போதைய தமிழ்த் தொல்லியலின் திசை வழியைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

சர்ச்சைகளில் சிக்காத, அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பால் தமிழகத் தொல்லியல் அரங்கில் தனக்கெனத் தனித்துவம் வாய்ந்த இடமொன்றை உருவாக்கிக்கொண்டிருப்பவர் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு. சோழர்கால வரலாற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள அவரது ஆய்வுகள் மிகவும் உதவக்கூடியவை. பாறைகளில் வெட்டப்பட்டிருந்த எழுத்துப் பொறிப்புகளைத் தொகுத்து ஐராவதம் மகாதேவன் ஆராய்ந்ததுபோல பானை ஓடுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளைத் தொகுத்து சுப்பராயலு செய்த ஆய்வு மிகவும் முக்கியமானது ( Pottery Inscriptions of Tamilnadu- A Comparative view , Y.Subbarayalu, 2008 ). அது இன்னும் விரிவான தனி நூலாக வெளியிடப்படவில்லை.  
                                                                   ஒய் .சுப்பராயலு 
கல்வெட்டியலைப் போலவே தொல்லியலின் பிற துறைகளான காசு இயல் , அகழ்வாய்வு முதலானவற்றிலும் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ’’ சில ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்ககாலக் காசுகள் கிடைக்கவில்லை. மீன் புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன .ஆனால் அவை சங்க காலத்தைச் சேர்ந்தவை என உறுதியாகக் கூற முடியவில்லை. இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டில் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதன்முதலாகக் கண்டுபிடித்து வாசித்தளித்த பாண்டியன் பெருவழிக்காசு தமிழக நாணயவியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. இதையடுத்து டாக்டர் நாகசாமி அவர்கள் கரூரில் கண்டெடுத்த இரும்பொறைக்காசுகள், மீண்டும் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட மாக்கோதை, குட்டுவன்கோதை என்ற சேர மன்னர்களின் பெயர்கள் பொறித்த வெள்ளிக்காசுகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. சங்க காலக் காசுகள் அனைத்தையும் தொகுத்து ஆங்கிலத்தில் ஒரு பெரும் நூலாக வெளியிட்டு ( Sangam Age Tamil Coins, R.Krishnamurthy, Garnet Publications, 2003 ) உலக அரங்கில்  தமிழ்ப் பண்பாட்டின்  பெருமையை உணர்த்தியதில் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பங்களிப்பு மகத்தானதாகும்’’ ( ஐராவதம் மகாதேவன், 2008 ).

அகழ்வாய்வுகளில் அண்மைக்காலமாக பேராசிரியர் கா.ராஜன் நிகழ்த்திவரும் சாதனைகள் ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. நடுகற்களைப் பற்றி உலக அறிஞர்களின் கவனத்தைக் கவரும் விதமான ஆய்வுகளை முன்வைத்த அவர்,  பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலமாகத் தமிழ் எழுத்தின் காலத்தை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் எடுத்துச் சென்றுள்ளார். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தித் தனது கண்டுபிடிப்புகளை அவர் காலக்கணிப்புச் செய்துள்ளார். ’தொல்லியல் நோக்கில் சங்க காலம்என்ற அவரது நூல் இலக்கியம், வரலாறு, அகழ்வாய்வு, கல்வெட்டியல் முதலான துறைகளில் உள்ள ஆய்வு மாணவர்களுக்குக் கையேடாக விளங்குகிறது

1961 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட தமிழகத் தொல்லியல் துறை, 1965 முதல் 1975 க்குள் தமிழ்நாட்டிலிருக்கும் அத்தனை கல்வெட்டுகளையும் அடையாளம்கண்டு, படியெடுத்து அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுவிடுவது என்ற மாபெரும் திட்டத்தைத் தீட்டியது. ஆனால் அது நிறைவுபெறவில்லை. இருப்பினும், தர்மபுரி, கன்னியாகுமரி,சென்னை, தஞ்சை ஆகிய பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகள் தமிழகத் தொல்லியல் துறையால் பதிப்பித்து வெளியிடப்பட்டன. நடுகற்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் அவற்றில் முக்கியமானவை. இதுவரை பதினான்காயிரம் கல்வெட்டுகளை இத்துறை கண்டுபிடித்து அவற்றின் மசிப் படிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறது. தொல்லியல் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் பலவற்றையும் அது வெளியிட்டிருக்கிறது.
2

உலகமயமாதல் என்பது பொருளாதார தளத்தில் மட்டுமின்றிசமூகத்தின்  அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தைஏற்படுத்திவருகிறதுதொல்லியல்  துறையும் அதற்கு விதிவிலக்கல்ல.அதைப்பற்றி அக்கறையோடு பேசிவரும் இந்தியத் தொல்லியல்அறிஞர்களில் ஒருவரும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியருமான  திலீப் சக்கரவர்த்தி, நாட்டின்மீது  நேசத்தை உருவாக்கக்கூடிய வரலாற்றுக் கல்விக்கான திட்டம் ஒன்றைஉருவாக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்உள்ளூர் அளவில்  தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான குழுக்களைஉருவாக்க வேண்டும் என்று  கூறியிருக்கும் அவர்இங்கிலாந்தில்பின்பற்றப்படும்  நடைமுறை ஒன்றை விளக்கியிருக்கிறார்.அங்கு பெரிய முதலீடுகளைச் செய்து உருவாக்கப்படும் கட்டிட மற்றும்சாலை அமைப்புத் திட்டங்களின் செலவில் ஒரு சிறு பகுதியைத்தொல்லியல் ஆய்வுகளுக்கென ஒதுக்குகிறார்கள்அந்தத் திட்டத்தால்அந்தப் பகுதியின் தொல்லியல் பண்போஅடையாளங்களோபாதிக்கப்படுகிறதா என்று முன்னதாகவே ஆய்வு செய்யப்படுகிறது.அந்த ஆய்வுகளுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அந்தப்பகுதியிலிருக்கும் தொல்லியல் குழுக்கள் போட்டியிடுகின்றனஅந்தஒப்பந்தத்தில் கிடைக்கும் தொகையைக்கொண்டு ஆய்வுகளைச் செய்துஅறிக்கைகளை அவை வெளியிடுகின்றனஅந்தப் பகுதி மக்களிடையேஅப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்செய்யும் அக்குழுக்கள் மக்களைகள ஆய்வுகளுக்கும் அழைத்துச்செல்கின்றனசிறிய அளவிலான கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.அதைப்போல இந்தியாவிலும் செய்யலாம் என அவர் ஆலோசனைகூறியிருக்கிறார்

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரிய திட்டங்கள் சுற்றுச் சூழலில்ஏற்படுத்தும் பாதிப்பை அறிய,  முன்னதாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுஅதற்கான சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.அப்படியான ஆய்வை நடத்துவதோடு,மக்களின் கருத்தறிய பொது விசாரணைகளையும்  நடத்த வேண்டும்.அவ்வாறு திரட்டப்படும் விவரங்கள்  யாவும்  சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு  அளிக்கப்படும்சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுஅறிக்கை ( Environmental Impact Assessment - EIA ) என அழைக்கப்படும்அந்த அறிக்கையின் அடிப்படையில்  சுற்றுச்சூழல்  அமைச்சகம்   அந்தத் திட்டத்துக்கு  ஒப்புதல்  வழங்குவது  குறித்து  முடிவு செய்யும்

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிபெற வேண்டும் என்ற நடைமுறையால் பெரிய திட்டங்களைத்  துவக்குவதில்  காலதாமதம் ஏற்படுவதாக அவ்வப்போது விமர்சனங்கள் கூறப்பட்டுவந்தன.12ஆவது ஐந்தாண்டுத்  திட்டத்துக்கு  ஒப்புதல்  வழங்குவதற்கென  2012,செப்டம்பர்  மாதத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில்நாட்டின் பொருளாதாரவளர்ச்சியை  ஊக்குவிக்க வேண்டுமென்றால்   கட்டமைப்பு  வசதிகளைப் பெருக்குவதில்  வேகம் காட்டவேண்டும் என்ற கருத்துமுன்வைக்கப்பட்டதுஅத்தகையத்  திட்டங்களுக்கு  சுற்றுச்சூழல்துறையின் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் சுட்டிக்காட்டப்பட்டுஅது களையப்படவேண்டும் என வலியுறுத்தப் பட்டது

சர்வதேச நெருக்கடியை சமாளிக்க சுற்றுச்சூழல் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு இப்போது அந்த சட்டத்தை ஒழித்துக்கட்டத் திட்டமிடுகிறது. சுற்றுச் சூழல்  துறையின்  அனுமதி  பெறாமலேயே பெரிய திட்டங்களை  ஆரம்பிப்பதற்கு ஏதுவாக ’ தேசிய முதலீட்டுஒப்புதல் வாரியம் ( National Investment Approval Board - NIAB ) என்ற அமைப்பை  உருவாக்கும்  யோசனை  இப்போது மத்திய அரசால் விவாதிக்கப்பட்டு வருகிறதுபிரதமர்  தலைமையில்  அமையும்  இந்தவாரியமே  அனைத்துவிதமான  பெரிய  திட்டங்களுக்கும்  இறுதி ஒப்புதலை  வழங்கக்கூடிய  அதிகாரம்  கொண்ட அமைப்பாக இருக்கும்.இந்த வாரியத்தை உருவாக்கக்கூடாது என சுற்றுச்சூழல் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்கூட, ’நாட்டை  முன்னேற்றியே  தீருவதுஎன சபதம்  செய்திருக்கும்   பிரதமரும்நிதி அமைச்சரும் அதற்கு இணங்குவார்களா  என்று  தெரியவில்லை

பெரிய திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம்  சுற்றுச் சூழல் துறைஅல்லதாமதத்தை செயற்கையாக உருவாக்கிதிட்ட மதிப்பீட்டைஅதிகமாக்கி லாபம் பார்க்கும் ஒப்பந்ததாரர்களே அதற்குக் காரணம்.மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனாமாநிலங்களவையில் தெரிவித்த எழுத்துபூர்வமான பதிலில் ’திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினால் அத்திட்டங்களுக்கான செலவு மதிப்பீட்டில்   2012 மே  மாதம் வரை  52445 கோடி  ரூபாய் அதிகரித்திருக்கிறதுஎனக்  கூறியிருக்கிறார்தேசிய முதலீட்டு ஒப்புதல் வாரியம் உருவாக்கப்படுவதால் இத்தகைய கூடுதல் செலவுகள் கட்டுப்படுத்தப்படப்போவதில்லைஅதுகுறித்துநிதி  அமைச்சருக்கோ , பிரதமருக்கோ அக்கறை இருப்பதாகவும்தெரியவில்லைஆட்சி முடிவதற்குள் தமது பொருளாதாரப் பரிசோதனைகளுக்கு இந்திய மக்களை சோதனை எலிகளாக்கிப் பார்க்கவேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என்று தோன்றுகிறது.

மத்திய அரசின் நோக்கம் எதுவாக இருப்பினும் நாம் சிலவற்றைவலியுறுத்தியாகவேண்டும்பெரிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், ஐம்பது ஏக்கருக்குக் கூடுதலாக நிலம் தேவைப்படும் திட்டங்கள் அனைத்துக்கும்  இனி தொல்பொருள் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை ( Archaelogical Impact Assessment - AIA )  அளிக்கப்படவேண்டும்  என  சட்டம் இயற்ற வேண்டும்தொல்லியல்  துறையின் அனுமதிபெற்ற பிறகே அத்திட்டங்களைத் துவக்குவதற்கு ஒப்புதல் தரவேண்டும்

அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் தொல்லியலைச் சுற்றி நச்சரவுகளாக இறுக்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படியான கோரிக்கை தேவைதானா? என்ற கேள்வி எழலாம். தொல்லியல் ஆய்வுகள்மீது சாதி, மதக் கறைகள் படியாமல் பார்த்துக்கொள்வதைப் போலவே நமது தொல்லியல் வளங்களைப் பாதுகாப்பதும் முக்கியம்.

3

தமிழகத் தொல்லியல் துறையில் உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் சில இருக்கின்றன. தமிழ்நாட்டில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒரே ஒரு சதவீத இடத்தில் மட்டும்தான் இதுவரை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் அதிகமான இடங்களில் அகழ்வாய்வுகளை நடத்துவதற்கும், பூம்புகார்ப் பகுதியில் தடைபட்டு நிற்கும் கடல் அகழ்வாய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரை அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகளைப் படியெடுக்கவும், படியெடுத்தவற்றைப் பதிப்பிக்கவும் ஆவன செய்யவேண்டும். காவேரிப் பிரச்சனையை முன்வைத்துத் தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்துக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துவரும் நிலையில் மைசூரில் பாதுகாக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வெட்டுகளின் மசிப்படிகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவர உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களின்  வரலாற்றை அக்கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள், அங்கிருக்கும் சிலைகள் மற்றும் ஓவியங்களின் புகைப்படங்கள் அடங்கிய நூல்களாக வெளிக்கொண்டுவரவேண்டும். பிராமிக் கல்வெட்டுகளும், சமணப் படுக்கைகளும் உள்ள குன்றுகளில் குவாரிப் பணிகள் முற்றாகத் தடைசெய்யப்படவேண்டும்.
இந்தியத் தொல்லியல் துறை துவக்கப்பட்டு ( 1861 - 2011 ) நூற்றைம்பது ஆண்டுகளும்தமிழகத் தொல்லியல் துறை ஆரம்பித்து ( 1961 - 2011 )ஐம்பது ஆண்டுகளும் நிறைவடைந்திருக்கும் இந்தச் சூழலில் இவர்றைச் செய்யுமாறு  ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டியது  இந்திய  வரலாற்றிலும்தொல்லியலிலும் அக்கறை கொண்டவர்களது கடமை

நன்றி : தீராநதி டிசம்பர் 2012


No comments:

Post a Comment