01.05.2012 அன்று புதுச்சேரியில் எனது மூத்த மகன் ஆதவனின் திருமணத்தை எழுச்சித் தமிழர் தொல் .திருமாவளவன் தலைமையில் மருத்துவர் அய்யா நடத்திவைத்த காட்சி
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களை இரு வகைப்
படுத்தலாம். ஒன்று, பெற்றோர் பார்த்து செய்துவைக்கும்
திருமணங்கள்; மற்றது, மணமக்களே விரும்பிச் செய்துகொள்ளும் காதல் திருமணங்கள். தமது
வாழ்க்கைத் துணையைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் காதல் திருமணம்தான் உண்மையான திருமணம்
ஆகும்.
இந்த இருவகைத் திருமணங்களுக்கும் அப்பால் மணமகள்
தனது சம்மதத்தைத் தெரிவிக்கக்கூடிய அளவுக்கு முதிர்ச்சி அடையாத வயதில்- அதாவது அரசு
நிரணயித்துள்ள 18 வயதுக்குள் – நடத்தப்படும் திருமணங்கள் உள்ளன. அவற்றைக் குழந்தைத்
திருமணங்கள் என்கிறோம். திருமணத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் அப்போது
பெண்ணுக்கு இருப்பதில்லை என்பது மட்டுமின்றி, திருமண உறவால் ஏற்படும் குழந்தைப் பேறு
உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கக்கூடிய அளவுக்கு அப்பெண்ணின் உடலும் ,மனமும் வளர்ச்சிபெற்றிருப்பதில்லை.
அந்த நிலையில் நடைபெறும் திருமணம் அப்பெண்ணைப் பொருத்தவரை விளையாட்டுத் திருமணம்தான்.
அதை ’நாடகத் திருமணம்’ எனச் சொல்வதில் தவறில்லை.
உலகிலேயே
இந்தியாவில்தான் இத்தகைய நாடகத் திருமணங்கள் அதிகம் நடத்தப்படுகின்றன. இந்த உண்மையை
‘லான்ஸெட்’ என்ற மருத்துவ இதழ்
வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் ஏறத்தாழ நாற்பத்தைந்து சதவீத
திருமணங்கள் பெண்ணுக்கு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே
நடந்து விடுகின்றன என அந்தப் பத்திரிகை
கூறுகிறது. ‘நேஷனல்
ஃபேமிலி ஹெல்த் சர்வே’ மூலம்
பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை
தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்திய
பிரதேசம், ஆந்திரா, உத்திர பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது சகஜமானதாக
இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு
போன்ற மாநிலங்களில் நிலைமை சற்றே பரவாயில்லை
என்றபோதிலும், இவையும்கூட விதிவிலக்குகள் அல்ல. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால்,
இன்னும் பல பகுதிகளில் குழந்தைத்
திருமணம் நடைமுறையில் இருந்து வருகிறது. தர்மபுரி,
பெரம்பலூர், விழுப்புரம் முதலான மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் இப்போதும் பெருமளவில்
நடந்துவருகின்றன. 2011 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 120 குழந்தைத்
திருமணங்கள் அதிகாரிகளின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டன. கிராமப்புறங்களில்
இப்போதும் கோலோச்சுகிற அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பொட்டுக்கட்டி விடுவது, தவளையோடு கல்யாணம் செய்துவைப்பது போன்ற மூடப்பழக்கங்கள் நடைமுறையில்
இருப்பதை பத்திரிகைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் கல்வி நிலை மோசமாக
இருக்கும் பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிகமாக இருக்கிறது என்பதைப்
பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள,
பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கேற்ற சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பது
1978ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகும். குழந்தை திருமணம்
பற்றி முதலில் அக்கறை காட்டியவர்கள்
நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள்தான்.
அவர்கள்தான் 1929ஆம் ஆண்டில் குழந்தைத்
திருமணங்களை தடை செய்வதற்கான சட்டத்தை
முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். அப்போது பெண்ணுக்கு சட்டபூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பதினான்கு,
அது 1940ஆம் ஆண்டில் பதினைந்து
என உயர்த்தப்பட்டது.
2001ஆம் ஆண்டு எடுத்த
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில்
சுமார் மூன்று லட்சம் பெண்கள்
பதினைந்து வயதுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பெண் எய்ட்ஸ் நோயாளிகளில்
பெரும்பாலானோர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு சட்டம் இருந்தபோதிலும், பதினெட்டு
வயதுக்குக்கீழ் உள்ள பெண்ணோடு செய்யப்படும்
திருமணத்தை ரத்து செய்வதற்கு தற்போது
வழியேதும் இல்லை. அவ்வாறு ரத்து
செய்தால் அது அந்தப் பெண்ணுக்கு
மேலும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால்
நீதிமன்றங்கள் அத்தகைய திருமணங்களை சட்டபூர்வமாக
அங்கீகரித்தே வருகின்றன. குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக இருப்பவர்களைத் தண்டிப்பதற்கு
தற்போது சட்டத்தில் இடமிருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே
இருக்கிறது.
இந்திய சட்ட ஆணையம்
குழந்தைத் திருமணத்
தடைச்
சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் சிலவற்றை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பதினாறு வயதுக்கு கீழ்
உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும்;
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375ஐ திருத்தம் செய்து
சட்டரீதியாக உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயது
பதினாறு என ஆக்கவேண்டும்; அனைத்து
விதமான மதங்களிலும் திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்வதற்கு ஆணையிட
வேண்டும்; இந்து திருமணச் சட்டத்தின்
ஷரத்துகளும் குழந்தை திருமணத் தடைச்
சட்டத்தின் பிரிவுகளும் முரண்படாதபடி உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும்
முதலான யோசனைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை
மத்திய, மாநில அரசுகள் இதுவரை
பரிசீலித்ததாகத் தெரியவில்லை.
*******************
அண்மையில் நடைபெற்ற
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில் தமிழக முதல்வர் முன்னூறுக்கும்
மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குண்டர் சட்டத்தை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்கான
திருத்தங்கள் செய்யப்படும் என்பது அந்த அறிவிப்புகளில் ஒன்று. தற்போது இருக்கும் வடிவத்திலேயே
அதைத் தம் விருப்பம்போல காவல் துறையினர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருவரைக் குண்டர்
சட்டத்தின்கீழ் கைது செய்வது என காவல்துறை முடிவுசெய்துவிட்டால் அதை யாராலும் தடுக்க
முடியாது என்ற நிலையே இப்போது இருக்கிறது. ஒரு குற்றம் செய்தாலே போதும் அவரையும் குண்டர்
சட்டத்தில் கைது செய்யலாம் என நீதிமன்றங்கள் ஏற்கனவே பல முறை தீர்ப்பளித்திருக்கின்றன.
எனவே புதிதாக இந்தத் திருத்தம் தேவையில்லை. இருந்தபோதிலும் இதைச் செய்வதற்கு தமிழக
அரசு முடிவு செய்திருக்கிறது. காரணம், குண்டர் சட்டத்தை ‘ தடா’ ‘பொடா’ போல அது மாற்ற
நினைக்கிறது. அதற்கான தேவை என்னவென்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் 2011 இல் 7.19 லட்சம்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டை ஒப்பிட இது 2.5 சதவீதம் அதிகம்
என்றாலும் பயங்கரவாதத் தாக்குதல்கள், அசாதாராணமான குற்றங்கள் எவையும் இங்கு நடந்துவிடவில்லை.
நாட்டிலுள்ள சட்டங்களில் சமூகப் பாதுகாப்புச்
சட்டங்கள் சில இருக்கின்றன. வரதட்சணைத் தடுப்புச் சட்டம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம்,
குழந்தைகள் உரிமைச் சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் முதலானவை இந்த வகைப்படும். மனித உரிமை ஆர்வலர்களால்
‘ கறுப்புச் சட்டங்கள் என வர்ணிக்கப்படும் தடுப்புக் காவல் சட்டங்கள் சில இருக்கின்றன.
தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் முதலியவை இதில் அடங்கும். இந்த
கறுப்புச் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை பலப்படுத்தவேண்டும்
என மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். தற்போது தமிழக அரசு செய்ய உத்தேசித்திருக்கும்
சட்டத் திருத்தம் துஷ்பிரயோகத்துக்கே அதிகம் வழிவகுக்கும்.
நாடகத் திருமணங்களான ‘குழந்தைத் திருமணங்களையும்;
நசுக்கும் சட்டங்களான குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச்
சட்டங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பவேண்டியது நாட்டின்மீது அக்கறை உள்ளவர்களின் கடமை.
ஆனால் காதல் திருமணங்கள் தான் நாடகத் திருமணங்கள் என்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களில்
ஒன்றான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தான் நசுக்கும் சட்டம் என்றும் பா.ம.க நிறுவனர்
பேசி வருகிறார். கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 7.19 லட்சம் வழக்குகளில் வன்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் 1391 மட்டும்தான். அதாவது 0.19 சதவீதம்தான்.
மருத்துவர் அறியாமையால் பேசினால் அதை நாம் மாற்ற முயற்சிக்கலாம். அவரோ அரசியல் ஆதாயத்துக்காக
இப்படிப் பேசுகிறார்.
ஒரு காலத்தில் தடா பொடா போன்ற கறுப்புச் சட்டங்களை
அவர் எதிர்த்தவர்தான். ஆனல் இப்போதோ சாதிப் பகைமையை வளர்ப்பதில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
அவரால் திரட்டப்பட்டிருக்கும் சாதிவெறி சக்திகளால் வன்முறை என்பது நாடெங்கும் நச்சுப்
புகையாகப் பரப்பப்படும் இன்றைய சூழலில் உண்மையான நாடகத் திருமணங்களைத் தடுக்கவும்,
நசுக்கும் சட்டங்களை எதிர்க்கவும் ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment