Thursday, December 25, 2014

உண்மையின் முகங்கள் - மஹ்மூத் தர்விஷ்

 
தமிழில்: ரவிக்குமார்
===========
உண்மை என்பது உருவகப்படுத்தப்பட்ட பெண்
அதன் உருவத்தில் கலக்கிறது
நெருப்பும் நீரும்

உண்மை என்பது சார்புநிலை
அதன் இரவில் உதிரமும் உதிரமும் ஒன்றுகலக்கும்போது

உண்மை என்பது பகலைப்போல நிர்மலமானது
பாதிக்கப்பட்ட ஒருத்தர் துண்டிக்கப்பட்ட காலுடன் மெள்ள நடக்கும்போது 

உண்மை என்பது கவிதையில் ஒரு பாத்திரம்
அதுவோ அதற்கு மாறானதோ அல்ல
அதன் நிழலிலிருந்து துளித்துளியாய் சொட்டுவது

Tuesday, December 23, 2014

கே.பாலச்சந்தர்: ரசனை மட்டத்தை உயர்த்திய இயக்குனர்! - ரவிக்குமார்





தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்துவிட்டார் என்ற செய்தி சிலநாட்களாகவே அவ்வப்போது பரவி மறைந்துவந்தது. இன்று அது உண்மையாகிவிட்டது. 

நாடகத் தன்மை தூக்கலாக இருந்தபோதிலும் அவர் இயக்கிய திரைப்படங்கள் பார்த்துவிட்டுவந்த பின்பும் பேசத்தக்கனவாக இருந்தன. எனது பதின் பருவத்தில் நான் பார்த்த அரங்கேற்றம், தப்புத்தாளங்கள், அபூர்வராகங்கள்,முதலான படங்களின் பாத்திரங்களோடு என்னை நான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. ஆனால் என்னை மிகவும் அவை வசீகரித்தன. ஆங்கிலத்தில் பேசி அதை உடனே தமிழில் மொழிபெயர்க்கும் சுந்தர்ராஜனைக்கூட சகித்துக்கொள்ளம்கூடிய பாத்திரமாக அவர் அபூர்வராகங்களில் படைத்திருந்தது நினைவுக்கு வருகிறது. 

சரிதா என்ற அற்புதமான நடிகையைத் தந்ததற்காக அவர் ரஜினியை அறிமுகப்படுத்தியதைக்கூட நாம்
மறந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. 

பாலச்சந்தரின்  படங்களை ரசித்தவர்கள் அவற்றைவிடவும் நல்லபடங்களைத் தேடித்தான் போயிருப்பார்கள், ஒருபோதும் மலிவான கமர்ஷியல் குப்பைகளை நாடியிருக்கமாட்டார்கள். அந்த வகையில் தமிழில் நல்ல ரசனை உருவாகக் காரணமாக இருந்த கே.பாலச்சந்தர் அவர்களுக்கு என் அஞ்சலி!

Sunday, December 21, 2014

’விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்: கிளிகள் மறக்காது - ரவிக்குமார்



ஜூனியர் விகடனில் நான் தொடர்ந்து பத்திஎழுதிக்கொண்டிருந்த காலம் அதுஅப்போது விகடன் குழுமஇதழ்கள் அந்த ஊழியர்களால்’எம்டி’ எனவும் 'பெரியவர்எனவும்மரியாதையோடு குறிப்பிடப்படும் திரு பாலசுப்ரமணியன்அவர்களின் மேற்பார்வையில் இருந்தன என நினைவுசுமார்மூன்றாண்டுகாலம் பத்திகள் எழுதிய பின்னர் அப்போது ஜூவியில்இணையாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர்விகேஷ் அவர்களிடம் 'பெரியவரைசந்திக்கவேண்டும் என்ற என்விருப்பத்தைத் தெரிவித்தேன்.

தற்போதிருக்கும் அன்ணாசாலை அலுவலகத்தில் புதிப்பிக்கும் பணிகள் நடந்துவந்ததால் ஜூவி அலுவலகம் அப்போது க்ரீம்ஸ் ரோட்டில் தற்காலிகமாக இயங்கிவந்தது. விகேஷ் எனக்கு உடனடியாகவே நேரம் வாங்கித் தந்துவிட்டார்அடுத்த நாள்காலை ஜூவி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்.ஒரு சிறிய அறையில் அவர் அமர்ந்திருந்தார். முறுவல் தவழ்வதுபோன்ற முகபாவம், பார்ப்பவர்களிடம் மரியாதையை உருவாக்கும் தோற்றம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த துணிச்சல்காரர் இவர்தானென்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும், அப்படியொரு பணிவு. 

ஒரு எம்.எல்.ஏ எனத் தெரிந்திருந்தும் ஜூவியில் எல்லா விஷயங்களையும் பற்றி பத்தி எழுத வாய்ப்பு தந்ததற்காகஅவருக்கு நன்றி  தெரிவித்தேன். " நான் தான் உங்களுக்குநன்றி சொல்லணும்ஜூவி வாசகர்கள் க்ரைம் விஷயங்களமட்டும்தான் படிப்பாங்க அப்படீன்னு ஒரு எண்ணம் இருந்ததுஉங்களோட பத்தி வந்தப்புறம் தான் அவங்களோட ரீச் என்னன்னு தெரிஞ்சதுஅதும் ஒரு எம்.எல்.ஏவா இருந்துட்டு நடுநெலையோட உலக விஷயங்களையெல்லாம் பத்தி எழுதுறீங்க. அதுக்கு எவ்வளவு ஒழைக்கணும்னு எனக்குத் தெரியும். ஒங்க நேரத்த ஒதுக்கி எங்களுக்காக எழுதுறீங்களே அதுக்காக நான் உங்களுக்கு தேங்க் பண்ணனும்என்றார்.

என்னைப்பற்றியும் எனது பிள்ளைகள் பற்றியும் கேட்டுத்தெரிந்துகொண்டார்.” தமிழ்ல பயிற்சி பெற்ற இதழாளர்கள் குறைவாத்தான் இருக்காங்க. அதனால ரிப்போர்ட்டிங்ல பல பிரச்சனைகள் வருது.இந்து பத்திரிகை நிறுவனம் ஆங்கில இதழியலுக்காக ’ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்னு’ நடத்துற மாதிரி தமிழ் ஜர்னலிசத்துக்காக நீங்க ஒரு பயிற்சிக் கல்லூரியை ஆரம்பிச்சா உதவியா இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன். ” என்னைக் கேட்டா அப்படி எந்த ட்ரெயினிங்கும் வேணாம்னுதான் சொல்வேன். இப்போ தமிழ்ல இருக்குற நல்ல பத்திரிகையாளர்கள் எந்த காலேஜ்ல படிச்சாங்க?” என்று என்னைத் திருப்பிக் கேட்டார். “அது வேற தலைமுறை. இன்னைக்கு நெலமை அப்படி கிடையாது. ஒரு கிராமத்துல இருக்குற பிரச்சனைய புரிஞ்சுக்கணும்னாகூட உலக நடப்புகளப் பத்திய அறிவு இருந்தாகணும்குற நெலமை இப்போ” என்று நான் சொன்னேன். ” என் காலம் முடிஞ்சு போச்சு.என் பையன் சீனிவாசன்தான் இப்போ எல்லாத்தையும் பார்க்கிறார். அவருக்கு நீங்க சொல்ற விஷயத்துல ஆர்வம் உண்டு. அவர்கிட்ட பேசுங்க” என்றார். 

திரு பாலசுப்ரமணியன் அவர்கள் பிராமண வகுப்பில் பிறந்தாலும் தனது நிறுவனத்தில் சாதி பார்த்து எவரையும் வேலைக்கு அமர்த்தியது இல்லை என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுகூட அந்தக் குழுமத்தின் பத்திரிகைகளை ஆசிரியர்களாக இருந்து நிர்வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர் அல்லாத இளைஞர்கள்தான். அதைப்பற்றி அவரிடம் நான் குறிப்பிட்டபோது நான் இப்போ படப்பையில இருக்குற வீட்லதான் இருக்கிறேன். அங்கே எனக்கு எல்லாமும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவங்கதான் என்னப் பாத்துக்குறாங்க. நீங்க படப்பைக்கு என்னோட வீட்டுக்குவரணும்நான் பிரமாதமா என்.வி சமைப்பேன்.அதுவும் போர்க் ரொம்ப நல்லா சமைப்பேன். நானே சமைச்சு உங்களுக்குசாப்பாடு போடறேன்என்றார்அவரோடுபேசிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடகநிறுவனம் ஒன்றின் முதலாளியோடு பேசுகிற உணர்வேஎழவில்லைஅவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்ததுஅவரது அணுகுமுறை.

நான் சந்தித்துவிட்டுவந்த சில நாட்களில் அவர்அமெரிக்காவுக்குப் போய்விட்டதாக அறிந்தேன்மீண்டும்ஒருமுறையாவது அவரைப் பார்க்கவேண்டும் எனநினைத்திருந்தேன்அதற்குள் காலம் அவரைப்பறித்துக்கொண்டுவிட்டதுபடப்பையில் அவர் வளர்த்துவரும் எண்ணற்ற பறவைகள் பற்றி நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கிருக்கும் கிளிகள் அவரை ‘பாலு’ என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரால் பயன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும் அந்தக் கிளிகள் அவரை மறக்காது என்று தோன்றுகிறது.


Friday, December 19, 2014

அம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்?



சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் பூமணியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். 'பிறகு' நாவல் எழுதியதற்கே அவருக்கு விருது தந்திருக்கவேண்டும். தாமதித்துத் தரப்படும் அங்கீகாரம் என்றாலும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு எழுத்தாளரை அங்கீகரிக்க சாகித்ய அகாடமியின் தமிழகப் பிரிவுக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது. 

பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கும் சாகித்ய அகாடமியின் புதிய குழு இத்தனை காலமும் இருந்ததுபோல் அல்லாமல் விருது வழங்குவதில் ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது. பாராட்டுவோம். 

பாலினரீதியான சமத்துவத்தையும் அந்தக் குழு கவனத்தில் கொள்ளவேண்டும். அம்பைக்கு 70 வயதாகிவிட்டது. சாகித்ய அகாடமியின் கருணைப் பார்வை தன்மேல் படுவதற்கு இன்னும் அவர் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? 

Thursday, December 18, 2014

மறுமதமாற்றம்: மதவாதிகளும் சாதிவாதிகளும் - ரவிக்குமார்


"கிறித்தவத்திலிருந்தோ இஸ்லாத்திலிருந்தோ இந்துமதத்துக்கு மீண்டும் வருபவர்கள் தாம் விரும்புகிற சாதியைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்என விஸ்வ இந்து பரிஷத்தின்செயலாளர் கூறியிருக்கிறார்.

"
மறுமதமாற்றம் செய்யப்படுகிறவர்களின் பரம்பரைநம்பிக்கைபண்பாடு ஆகியவற்றை விஎச்பி ஆராயும்எனக் கூறியிருக்கும்விஎச்பி பொறுப்பாளர் வெங்கடேஷ் அப்தேவ் " 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறுமதமார்றம் என்ற பெயரில் பீதியூட்டிக்கொண்டிருக்கும் இந்துத்துவவாதிகளிடம், "மறுமதமாற்றம் செய்பவர்களை எந்த சாதியில் அடைப்பீர்கள்?" என தலித் அமைப்புகள் கேள்வி எழுப்பினஅதற்குப்பதிலளிக்கும் விதமாகவே விஎச்பியின் இந்த அறிவிப்புசெய்யப்பட்டுள்ளது.

மதமாற்றமும் சேரி என்னும் சிறையும்:

கிராமப் புறங்களில் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்டக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க கிறித்தவத்தைத் தழுவியவர்கள்பிறசாதிக் கிறித்தவர்கள் வாழும் குடியிருப்புகளுக்குச் சென்றுஅங்கே வீடுகட்டிக்கொண்டு வாழமுடிவதில்லைஏற்கனவேஅவர்கள் வாழ்ந்த சேரிகளில் ஒரு தனித்த பிரிவாக வாழ்வதுஅல்லது சேரியை ஒட்டிய பகுதியில் தெருவைஅமைத்துக்கொள்வது என்ற நிலைதான் தமிழ்நாட்டில் கடந்தமூன்று  நான்கு நூற்றாண்டுகளாக உள்ளதுஇந்தியாவின் பிற பகுதிகளிலும்கூட இதே நிலைதான். 

சாதி என்பது அருவமான கருத்தியல் எல்லைகளை மட்டுமின்றிஸ்தூலமான நிலவியல் எல்லைகளையும் கொண்டிருக்கிறதுஅருவமான எல்லைகளைக் கடந்தாலும்கூட ஸ்தூலமானஎல்லைகளைக் கடப்பதற்கு சாதியவாதிகள் அனுமதிப்பதில்லை.

சாதியின் செயல்பாடு நுட்பமானதுநிலவியல் எல்லைகள்நெகிழ்வாயிருக்கும் நகர்ப்புறச் சூழலில் கருத்தியல்எல்லைகளை வலுவாக்குவதுகருத்தியல் எல்லைகள்கடக்கப்படும் இடங்களில் நிலவியல் எல்லைகளைத்தாண்டமுடியாமல் செய்வது - என இரட்டைத் தன்மையோடுஅது செயல்படுகிறது.

மதமாற்றமோ மறுமதமாற்றமோ இந்த எல்லைகளை முற்றாகஅழிப்பதில்லைஎனவே விஎச்பி சொல்வதுபோல மறுமதமாற்றம் செய்யப்படுபவர் தான் விரும்பிய சாதியைத்தேர்ந்தெடுத்துக்கொண்டு கருத்தியல்பண்பாட்டுஎல்லைகளைக் கடக்க முயன்றாலும் அவர் ஒருபோதும் சாதியின் நிலவியல் எல்லைகளைக் கடப்பது சாத்தியமில்லை.

ஆணவக் கொலைகளுக்குப் புதிய பலிகளா?

தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களைக் காதலித்ததிருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்துக்காக நாடெங்கும்ஆயிரக் கணக்கில் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள்அதை இந்துத்துவ அமைப்புகள் கண்டிப்பதில்லைஇன்னும்சொல்லப்போனால் அத்தகைய சாதிவெறியைத் தூண்டிவிட்டுக்குளிர்காய்கின்றன

இந்தச் சூழலில் மகராஷ்டிர மாநிலக் கிராமம் ஒன்றில் தலித்கிறித்தவர் ஒருவர் மீண்டும் இந்துவாகி தன்னை மராத்தாசாதியில் இணைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம்அல்லது தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் தலித் கிறித்தவக்குடும்பம் ஒன்று இந்து மதத்துக்குத் திரும்பி தம்மைநாடாராகவோமுக்குலத்தோராகவோவன்னியராகவோஉடையாராகவோ சொல்லிக்கொள்வதாகவைத்துக்கொள்வோம்அதை அங்கு இருக்கும் அந்தச்சாதியினர் ஏற்பார்களாஅப்படிச் சொன்னால் அங்கு அவர்களதுகதி என்னாகும் என்பதை எண்ணிப்பாருங்கள்கலப்புத்திருமணத்தையே ஒப்புக்கொள்ளாத ஆணவக்கொலையாளிகளுக்கு அவர்கள் இரையாவதைத்தவிர வேறுவழிஇருக்கிறதா? இந்துத்துவவாதிகளின் விருப்பம் அவர்களை சாதிவெறியர்களுக்குப் பலியிடுவதுதானா? விஎச்பி என்ற அமைப்பு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் கட்டளைப் பிறப்பிக்கும் வலிமைகொண்டதா? அத்தகைய அதிகாரம் எந்தவொரு இந்துத்துவ அமைப்புக்காவது இருக்கிறதா?


மதமாற்றம் என்பது தலித் பிரச்சனை மட்டும்தானா?

இந்து மதத்திலிருந்து கிறித்தவத்தையோ இஸ்லாத்தையோதழுவியவர்கள் அனைவரும் தீண்டாத வகுப்பினர் அல்லபல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் மதம்மாறியிருக்கிறார்கள்ஆனால்மறுமதமார்றம் தொடர்பான இப்போதைய விவாதம் முழுக்க தலித்துகளையே மையமிட்டுநடத்தப்படுகிறதுஇந்துத்துவ அமைப்புகள் தலித்துகளைக்குறிவைத்து மறுமதமாற்றம் செய்வதால்தான் இந்த நிலைஏன்அவர்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை மறுமதமாற்றம்செய்ய முற்படவில்லைஏனெனில்வேறு சாதிகளிலிருந்துகிறித்தவத்துக்குச் சென்றவர்கள் இரண்டுவிதமானஅனுகூலங்களை அனுபவிக்கிறார்கள்சமூகத் தளத்தில் சாதிவழங்கும் ஆதிக்கத்தையும்அரசியல்அரசாங்க  தளத்தில்சிறுபான்மை மதத்துக்கான சலுகைகளையும் அவர்கள் ஒருசேரஅனுபவிக்கிறார்கள்அந்த வசதிகளை விட்டுவிட்டு மீண்டும்இந்துமதத்துக்குத் திரும்பவேண்டிய தேவை அவர்களுக்குஇல்லை

இந்துத்துவவாதிகள் மதவாதிகளாக மட்டுமின்றிசாதியவாதிகளாகவும் இருப்பதால் அவர்கள் சாதிக்கிறித்தவர்களோடு சமரசம் செய்துகொள்கிறார்கள்எனவேதான்தலித் கிறித்தவர்களை,தலித் முஸ்லிம்களை மட்டும் அவர்கள்குறிவைத்து செயல்படுகிறார்கள். 

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் செய்யவேண்டியது என்ன?

இந்துத்துவவாதிகளின் திட்டம் மறுமதமாற்றம் செய்துஇந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள்அனைவரையும் இந்துக்களாக்கிவிடுவதல்லஅப்படி அவர்கள் விரும்பினாலும் அது சாத்தியமில்லை. இந்தியாவில் மதமாற்றத்தைத் தடைசெய்து சட்டம் இயற்றவேண்டும்என்பதுதான் அவர்களது நோக்கம்அதன்பிறகு சிறுபான்மைமதத்தவரை அச்சுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என அவர்கள்நினைக்கின்றனர்அதற்காகவே இந்த மறுமதமாற்றம் என்னும்நாடகம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் சிறுபான்மை மதங்களில்தலைவிரித்தாடும் சாதிவெறியையும் கண்டிக்கவேண்டும்அப்படிக் கண்டிக்காவிட்டால் மதவெறிதான் மோசம் சாதிவெறிமோசமில்லை எனச் சொல்வதாகவே அது பொருள்படும்சிறுபான்மை மதங்களில் சமத்துவத்தைஜனநாயகத்தைக்கோராமல் இந்துத்துவத்தை மட்டும் எதிர்த்தால் வாக்குவங்கிஅரசியல் என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடும்.

இந்துத்துவ மதவெறியும் சிறுபான்மை மதங்களின் சாதிய பாகுபாடும்:

இந்துத்துவ மதவெறி எனப் பேசும்போது இந்து மதத்தில் நிலவும் சாதி வெறியை நாம் மறந்துவிடமுடியாது. அதுமட்டுமல்லாது அது பெரும்பான்மை மதவெறியாக இருக்கிறது என்ற அம்சத்தையும் மனதில் கொள்ளவேண்டும். அதற்கு இணையான ஆபத்தாக சிறுபான்மை மதங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டைப் பார்க்க முடியாது . அதே நேரத்தில் அந்த சாதிய பாகுபாடுகளைக் கண்டும் காணாமல் போய்விடுவதும் முறையல்ல. 

தேசமோ மதமோ பிறரின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது தம்மை ஒருங்கு திரட்டிக்கொள்ள தமது உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது வழமை. சமத்துவத்தை வழங்க முற்படுவது இயல்பு. அதுபோல இந்தியாவில் பெரும்பான்மை மதவாதத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்திலாவது சிறுபான்மை மதத்தவர் தமது மதங்களைச் சார்ந்த அனைவரையும் சமத்துவத்தோடு நடத்துவது பற்றி சிந்திக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் இந்துத்துவ எதிர்ப்பு என்பதன் பின்னால் தமது சமத்துவமற்றப் போக்கை மூடிமறைத்துக்கொள்ள முயலக்கூடாது.  


சிறுபான்மை மதங்களின் சாதிய பாகுபாட்டை மட்டும் பேசுவதுஇந்துத்துவத்துக்கு ஆதரவாகிவிடும்இந்துத்துவத்தை மட்டும்எதிர்ப்பது சிறுபான்மை மதங்களில் ஆதிக்கம் செலுத்தும்சாதிவெறியர்களை ஊக்குவிப்பதாகிவிடும்எனவே நமதுபோராட்டம் ஒருபுறம் இந்துத்துவவாதிகளின் மதவெறியைஎதிர்ப்பதாகவும் இன்னொருபுறம் சிறுபான்மைமதங்களிலிருக்கும் சாதிவெறியை எதிர்ப்பதாகவும்இருமுனைகொண்டதாக இருக்கவேண்டும்ஒன்றுக்குஇன்னொன்றைப் பலியிடுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீங்காகவே முடியும்.

Saturday, December 13, 2014

ஒரு வேண்டுகோள்!



பார்ப்பனீயத்தின்மீதான தலித்துகளின் விமர்சனமும் பார்ப்பனரல்லாதாரின் விமர்சனமும் ஒருதரத்தவை அல்ல. சாதி ஒழிப்பு என்ற நோக்கிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது தலித் விமர்சனம். மாறாக, அதிகாரப் போட்டியிலிருந்து வைக்கப்படுகிறது பார்ப்பனரல்லாதார் விமர்சனம். அதுபோலத்தான் இடைநிலைச் சாதியினர்மீது வைக்கப்படும் பார்ப்பனர்களின் விமர்சனமும் ஆகும். இதில் மிக மிகக் குறைவான விதிவிலக்குகளே உள்ளன. 

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அரசியலை சாதி ஒழிப்பு அரசியலாக மாற்ற பார்ப்பனர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரிலும் உள்ள ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவோம்! - ரவிக்குமார்



இந்தித் திணிப்பை எதிர்த்து 1938 டிசம்பர் 8 ஆம் நாள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கைதியாகவே 1939 சனவரி 15 இல் தன் இன்னுயிரை நீத்து மொழிப்போரில் முதல் களப்பலியானவர் நடராசன். அவரது நினைவு நாள் சனவரி 15. அந்த நினைவு நாளை தமிழக அரசு சார்பில் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும்;

நடராசன் இறந்த சிலநாட்களின்பின் கைதாகி மொழிப்போரில் இரண்டாவது களப்பலியானவர் தாளமுத்து. அவரை  அடக்கம் செய்யும் நேரத்தில் " தந்தை பெரியாரின் ஒரு பக்கம் நடராசனும் இன்னொரு பக்கம் தாளமுத்துவும் இருப்பதுபோல சிலை நிறுவுவோம்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய சூளுரையை நிறைவேற்றும் விதமாக சென்னையில் பொருத்தமானதொரு இடத்தில் சிலை நிறுவவும் 

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம். 

இந்தியென்றும், சமஸ்கிருதமென்றும் மொழிப்பகை சூழும் இந்த நேரத்தில் சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவோம்! 


Friday, December 12, 2014

பாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் பணி - ரவிக்குமார்


(புதுவை பாரதி அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரதி பிறந்தநாள்விழாவில் ( 11.12.2014) பேசியதன் சுருக்கம்)

 

பாரதி இன்று பலருக்கும் தன் சொற்களை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஊடக நிகழ்ச்சிகளின் தலைப்புகளாக, முழக்கங்களாக,இலச்சினை வாசகங்களாக அவரது சொற்கள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளை எழுதியும், மொழிபெயர்த்தும் வருகிற என்னுடைய ஆதர்சங்களில் பாரதியும் ஒருவர். அடுத்து வெளியாக இருக்கும் எனது நூல் ஒன்றின் தலைப்புகூட அவரிடமிருந்து எடுத்ததுதான் ‘ நடுக் கடல் தனிக் கப்பல்’ 

இன்று பாரதி பிறந்த நாளுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் ஒரு ட்விட்டர் செய்தி வெளியாகியிருப்பதாக அறிந்தேன். மகிழ்ச்சியளிக்கும் செய்திதான், ஆனால் அதில் பாரதியை ஒரு ‘தமிழ் இந்து ஆக்டிவிஸ்ட்’ எனக் குறிப்பிட்டிருப்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. 

பாரதியைக் கொண்டாடுகிறவர்கள் இருப்பதைப்போலவே அவரை விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அக்ண்ட பாரதத்தைக் கனவு கண்டவர் என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது அல்ல பாரதி முனைப்போடு இயங்கிய காலத்திலேயே அத்தகைய விமர்சனங்கள் அயோத்திதாசப் பண்டிதரால் வைக்கப்பட்டன. 1907 ஆம் ஆண்டு சுதேசியத்தை விமர்சித்து அயோத்திதாசர் விரிவாகத்தமிழன் இதழில் எழுதினார். அதில் பாரதியையும், வஉசியையும் கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார். 

‘ஈனப் பறையரேனும்’ என்ற பாரதியின் பாடல் வரியை எடுத்துக் காட்டி அதைக் கேட்கிற யாராவது “ ஈனப் பார்ப்பார்களேனும்” என மறுத்துக் கூறினால் ஒர்றுமை நிலைக்குமா ? என அயோத்திதாசர் விமர்சித்திருக்கிறார். “ சாதி கர்வம், மத கர்வம், வித்தியா கர்வம், தன கர்வம் நான்கையும் கை பிடித்துக்கொண்டு பொதுச் சீர்திருத்தம் செய்யப்போகின்றோம் என்றால் சிறப்பாக இருக்குமா?”  என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

வந்தே மாதரம் என்ற அந்தப் பாடலில் “ஈனம் “ என்ற சொல்லை அடுத்த ரியில் வரும் ”சீனம்” என்ற சொல்லுக்கு மோனையாக அமைத்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். இழிவுபடுத்தும் நோக்கில் அவர் பாடியிருந்தால் அவரது பல்வேறு பாடல்களில் சாதியை மறுத்து அவர் பாடியிருக்க மாட்டார். “ நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்” எனப் பாடியிருக்கமாட்டார். 

;எந்தவொரு போராட்டமும் தமர் பிறர் என அடையாளங்களை உருவாக்கிக்கொள்ளும். காலனிய எதிர்ப்புப் போராட்டம் ஆங்கிலேயரைப் பிறராகக் (Other ) கட்டியமைத்து இந்தியர்கள் எல்லோரையும் திரட்ட முயன்றது. அது புதிய விஷயமல்ல, சேக்கிழார் காலத்திலேயே நடந்த ஒன்றுதான். புற சமயங்கள் எனச் சொல்லப்பட்டவற்றுக்கு எதிராக சைவ மத ஆதரவாளர்களாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திரட்டியதன் அடையாளம்தான் பெரியபுராணம். பாரதியும் அப்படித்தான் செய்தார். ஆனால் ஒரு அரசியல்வாதி அதைச் செய்வதற்கும் படைப்பாளி செய்வதற்கும் வேறுபாடு உண்டு. பாரதி சொன்னாரே உண்மை ஒளி அதுதான் அந்த வேறுபாடு. தான் சொன்னதை பாரதி நம்பினார், அதையே வாழ்க்கையாக வாழ்ந்தார். இன்று சில எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். ஞானபீடப் பரிசை வாங்குவதற்காக அவர்கள் செய்யும் அரசியல் தந்திரங்களைப் பார்க்கிறோம். அவர்களது எழுத்துகள் மையால் எழுதப்படவில்லையென்றாலும் ஆவியாகப் போய்விடுவதையும் பார்க்கிறோம். 

இன்று காலையில் எழுத்தாளர் மாலன் அவர்கள் முகநூலில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். ஊடகத் துறையில் இருந்ததால்தான் பாரதிக்கு அந்த அளவுக்குக் கவனம் கிடைத்தது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். “ பாரதி பத்திரிகைத் தொழிலுக்கு வராமல் போயிருந்தால் அவர் அவரது சமகாலத்தவர்களான இன்னொரு சோமசுந்தர பாரதியாக, அரசஞ் சண்முகனாராக, உ.வே.சா வாக முடிந்து போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுவொரு முக்கியமான கருத்து. இன்று தம்மைத் தாமே மாபெரும் படைப்பாளிகள் என அறிவித்துக்கொள்கிறவர்கள் ஊடகங்கள் மூலம் தனது உருவைப் பெருக்கிக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படி பாரதி செய்யவில்லை என்றாலும் தனது பாடல்களை, கருத்துகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டுசெல்ல ஊடகம் இருந்திராவிட்டால் அவரது இறப்புக்குப் பிறகு அவருடைய படைப்புகளைத் திரட்டியிருக்கக்கூட முடியாது என்பது உண்மைதான். 

நான் பாரதியின் இரண்டு கருத்துகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை” என்று பாரதி ஒரு பாடலிலே பாடியிருப்பார். இந்த சமத்துவ உணர்வை அவரது கவிதைகள் நெடுகிலும் காணமுடியும். இந்திய சமூகத்துக்கு சமத்துவம் என்ற கருத்தாக்கம் புதியது. இங்கே எப்போதும் சமத்துவம் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களும்கூட சமத்துவம் கொண்ட சமூகத்தை நமக்கு அடையாளம் காட்டவில்லை. சமத்துவம் என்ற நவீன சிந்தனை இந்தியாவுக்கு வெளியிலிருந்துதான் இங்கே வந்தது. அன்னியரை எதிர்த்தாலும் அன்னிய கருத்தாக்கமான நவீனத்துவத்தை பாரதி ஏர்றுக்கொண்டிருந்தார். அதனால்தான் அவரால் சமத்துவத்தை வலியுறுத்த முடிந்தது. 

நவீன சிந்தனையை உள்வாங்கிக்கொண்டதால்தான் அம்பேத்கர் அதைப் பயன்படுத்தினார். இந்தியா குடியரசானபோது அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய அம்பேத்கர்  நமது அரசியலமைப்புச் சட்டம் அரசியல் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்றார். ‘ ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு ” என்பதைத்தான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படையாக அம்பேத்கர் குறிப்பிட்டார். பாரதி பல ஆண்டுகளுக்கு முன்பே பாடிய ’எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை’ என்பதுதான் அம்பேத்கர் குறிப்பிட்ட அரசியல் சமத்துவம். பாரதியின் அந்த வார்த்தைகள் வெறும் பாடல் வரி அல்ல, அதுவொரு மகத்தான கனவு. அதனால்தான் அது ஈடேறியது. அத்தகைய மகத்தான னவுகளைக் கண்டதனால்தான் 19 ஆம் நூர்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இறந்துபோன பாரதியை 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

பாரதியின் வரிகளைப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பலரும் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று பிராமணர்களை விமர்சிக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்துவது. “ பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்ற வரியையும் “ பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான் “ என்பது போன்ற வரிகளையும் எடுத்துக்காட்டி பிராமணர்களை விமர்சிப்பார்கள். தான் பிறந்த சாதியை விமர்சிக்கும் அறிவுநேர்மை பாரதிக்கு இருந்தது. அது அவரை விமர்சிப்பவர்களுக்கு இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். தான் பிறந்த சாதியை விமர்சிக்கும் துணிவுகொண்ட எழுத்தாளர்கள் இப்போது இருக்கிறார்களா என எண்ணிப் பார்க்கவேண்டும். 

எந்தவொரு நல்ல படைப்பாளிக்கும் வழிகாட்டி இருக்கமாட்டார், வாரிசும் இருக்க முடியாது. பாரதி அப்படியானதொரு நல்ல படைப்பாளி. அவருக்கு கவி வாரிசு எவரும் இல்லை. பாரதியின் அடிமை என்ற பொருள்பட புனைபெயர் வைத்துக்கொண்ட பாரதிதாசன் கூட பாரதியின் கவி வாரிசாகத் தன்னைக் கூறிக்கொள்ளவில்லை. அவர் இறப்புக்கு ஒருசிலர்தான் வந்திருந்தார்கள் எனக் குறைபட்டுக்கொள்வார்கள். அது குறை அல்ல. படைப்பாளி என்பவர் தனிமையில் கிடக்க சபிக்கப்ப்டுகிறார். அண்ணா இந்தபோது வந்த கூட்டம் போல பாரதிக்கு வந்திருந்தால் அவர் மஹாகவியாகியிருக்க முடியாது. 

பாரதியை தேசிய கவியாக அறிவிக்கவேண்டும், அவரது நூல்களைத் தேசிய நூல்களாக அறிவிக்கவேண்டும் என பாஜக காரர்கள் இப்போது பேசுகிறார்கள். அது தேவையற்றது. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களின் கதி என்னவென்று நமக்குத் தெரியும் அந்த கதி பாரதியின் படைப்புகளுக்கு வரக்கூடாது. நாம் செய்யவேண்டியது பாரதியின் படைப்புகளுக்கு விவரக் குறிப்புகளுடன்கூடிய செம்பதிப்புகளைக் கொண்டுவருவதுதான். பாரதி அன்பர்களாகிய நீங்கள் அதற்கு முன்வரவேண்டும். அவர் புதுவையில் பாடிய குயில் பாட்டையாவது முதலில் அந்த முறையில் நாம் பதிப்பிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்வோம். பாரதியை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டுசேர்க்கும் பணி அதுதான். அதை அரசாங்கமோ அரசியல்வாதிகளோ செய்யமாட்டார்கள் பாரதி அனபர்களே நீங்கள்தான் செய்யவேண்டும். நன்றி. வணக்கம்!