Saturday, January 23, 2016

ஈழம்: Uprooting the Pumpkin: தன்னெழுச்சியும் கூர்மையும் குன்றாத மொழிபெயர்ப்பு - ரவிக்குமார்



2009 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னர் ஈழப் பிரச்சனை சர்வதேச கவனத்தைப் பெற்றது. ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்களும் அவற்றையொட்டி கிடைத்த ஊடக கவனமும் ஈழத் தமிழ் படைப்புகளுக்கு புதிய வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பரவி வாழும் ஈழத் தமிழர்கள் இந்தச் சூழலை சரியாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதில் முன்னோடியாக செயல்பட்டவர் செல்வா கனகநாயகம் (1952-2014) கனடாவின் டொரன்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராக இருந்த அவர் ஈழத் தமிழ் இலக்கியத்தை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை சோர்வின்றி செய்துவந்தார். (இனி அவரது இடத்தை சேரன்தான் நிரப்பவேண்டும்)

அவரது முன்முயற்சியில் ஈழ இலக்கியத்தின் இன்னொரு ஆங்கிலத் தொகுப்பு இப்போது வெளிவந்திருக்கிறது. இதை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 

24 கவிதைகள்,ஒரு நாடகம், 15 சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. லஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம், சிவசேகரம், பத்மா நாராயணன் உள்ளிட்ட 10 பேர் இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல் 1971 ல் இறந்த மஹாகவியில் தொடங்கி 1974 ல் பிறந்த அனாரில் முடிகிறது. 

நவீன ஈழத் தமிழ் இலக்கியம் வளமான கவிதை மரபைக் கொண்டது. எப்படித் தொகுத்தாலும் சிலபேர் விடுபட்டுப் போய்விடுவார்கள். எனவே தர அளவுகோலை வைத்து அளந்து பொறுக்கியெடுத்து கவிதைகளை சேர்க்கலாம். ஈழத்து கவிதை மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது எனக்கென்று ஒரு சோதனை முறையை நான் வைத்திருக்கிறேன். சேரனின் தன்னெழுச்சியும் பா.அகிலனின் கூர்மையும் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறதா என்று முதலில் சோதிப்பேன். இந்தத் தொகுப்பு அந்தச் சோதனையில் தேர்ச்சிபெற்றுவிட்டது. 

கவிதைகளைப்போல சிறுகதையில் அப்படியொரு காத்திரமான மரபு அங்கு இருப்பதாகக் கூறமுடியாது. எனவே தர அளவுகோலை ஓரமாக வைத்துவிட்டுத்தான் அந்தத் தொகுப்பைச் செய்யவேண்டும். அதனால்தான் சிறுகதைகளைத் தொகுக்கும்போது செ. யோகநாதனும், அ.முத்துலிங்கமும் தவிர்க்கமுடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். 

ஈழத்துப் பேராசிரியர்களை/ கருத்தாளர்களை மார்க்சியம் அறிந்த தமிழ்த்தேசியவாதிகள், மார்க்சியம் அறியாத தமிழ்த்தேசியவாதிகள் என இரண்டாகப் பிரித்தால் செல்வா கனகநாயகம் இரண்டாவது பிரிவுக்குள் வருவார். இந்தப் பிரிவினரிடமும் புலமைத்துவம் நிறைந்திருந்தது, இவர்களது பார்வையை எந்தக் கோட்பாடும் வடிவமைக்காததால் இத்தகையோரின் தெரிவுகள் அகவயப்பட்டவையாக அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது. இது தனிநபரின் குறை என்பதைக்காட்டிலும் அவர்களது கருத்தியலின் விளைவு என்றே கூறவேண்டும். 

இத்தொகுப்பில் நாவல் பகுதிகள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம். அப்படி சேர்த்திருந்தால் டானியல், மு.தளையசிங்கம், கோவிந்தன் உள்ளிட்டோரின் எழுத்துகள்  இடம்பெற்றிருந்திருக்கும். 

இத்தொகுப்பை சாத்தியப்படுத்திய பத்மநாப அய்யர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ் இலக்கிய உலகம் கடன்பட்டுள்ளது.


No comments:

Post a Comment