தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளம் முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்
~~~~~~~~
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்று திடீரென அவர் உயிர் பிரிந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு, இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் நானும் சில தோழர்களும் முன்னெடுத்தபோது எங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு.
இன்று தி இந்து நாளேட்டின் சார்பில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் இன்று மாலை நான், அவர், நீதியரசர் கே.சந்துரு, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இப்படியொரு செய்தி வந்துவிட்டது.
தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளமான கே.ஏ.ஜிக்கு என் அஞ்சலி.
No comments:
Post a Comment