Tuesday, January 12, 2016

உலகமயம் உருவாக்கும் புதிய கொத்தடிமைகள்



சென்னை லயோலா கல்லூரியின் சமூகவியல் துறை சார்பில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (12.01.2016) நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அதைப்பற்றி தமது நிலைபாட்டைத் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டது. 
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்வரும் கருத்துகளை நான் முன்வைத்தேன்: 

1. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு உலகமயமாக்கலின் விளைவாக தீவிரமடைந்திருக்கும் இடப்பெயர்வு புதிய கொத்தடிமைகளை உருவாக்கியுள்ளது. 

2. கொத்தடிமைகளை சொந்த ஊரில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள்; வேறு ஊர்களில் / மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவுகளில் அடக்கலாம். சொந்த ஊரில் கொத்தடிமைகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் உள்ளனர். இந்த கொத்தடிமைத்தனத்தைப் பாதுகாப்பதில் சாதியமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இவர்களைவிட ஒப்பீட்டளவில் அயல் மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 

3. குறைந்தபட்ச கூலியைவிட குறைவாகக் கொடுத்தால் அது கொத்தடிமைத் தனமாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இதைக் குறிப்பிட்டுத்தான் குறைந்தபட்ச கூலியை உயர்த்த வைத்தேன். குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலியை உயர்த்தவேண்டும். அதற்காக நாம் குரலெழுப்பவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்தபட்ச கூலி முழுமையாகக் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். 

4. தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலிலும் ஹோட்டல் தொழிலிலும் பீகார், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் பலர் அரை கொத்தடிமை நிலையிலேயே உள்ளனர். அவர்களைக் கணக்கெடுப்புச்செய்து அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

5. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அரபுநாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்கின்றனர். அவர்களையும் இதில் கவனத்தில்கொள்ளவேண்டும். 

6. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Global Slavery Index அறிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் அடிமைகள் இருப்பதாகக் கூறியுள்ளது. சுமார் ஒன்றரை கோடி பேர் இந்தியாவில் அடிமைகளாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

7. இங்கே விவாதிக்கப்படும் விஷயங்களைத் தொகுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்து அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அதற்கு ஆதரவு திரட்டலாம். 

No comments:

Post a Comment