Saturday, January 30, 2016

முதல்வர் வேட்பாளர்: ஒரு விளக்கம் - ரவிக்குமார்



வணக்கம் 

தேர்தலில் முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரையோ பிரதமர் வேட்பாளரையோ அறிவித்து அவரை முன்னிறுத்தி வாக்கு கேட்பது இந்திய பாராளுமன்ற தேர்தல் முறைக்கு எதிரானது. அது, அதிபர் ஆட்சி முறைக்கானது எனவே முதல்வர் வேட்பாளர் என எவரையும் அறிவிப்பதில்லை என்பதே மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு. இதில் எனக்கோ எமது இயக்கத் தோழர்களுக்கோ எந்த ஊசலாட்டமும் இல்லை. 

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி நான் 2014 அக்டோபரில் எழுதிய வலைப் பதிவை அடிப்படையாகக் கொண்டதாகும். பீகாரில் திரு மாஞ்சி முதல்வராக்கப்பட்டபோது, 16% தலித் மக்கள்தொகை கொண்ட பீகாரில் ஒரு தலித் முதல்வராகும்போது மக்கள் தொகையில் 21% பட்டியலினத்தவர் இருக்கும்  தமிழ்நாட்டில் அப்படி நடக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதிய பதிவு அது. இலவசங்களுக்கும், பணத்துக்கும், சினிமா கவர்ச்சிக்கும் இந்த மக்களின் வாக்குரிமை விலைபேசப்படுகிறதே என்று மனம் குமைந்து எழுதியது. இப்போதும் அந்த கருத்தில் நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். சமூகநீதிக்கு பெயர்போன தமிழ்நாட்டில் தலித் மக்கள் அதிகாரத்தை நுகரமுடியாமல் புறந்தள்ளப்பட்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. 

நான் கேட்பது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரை அறிவிக்கவேண்டும் என்பதல்ல; தலித் ஒருவர் ஏன் இங்கு முதல்வராக வரமுடியவில்லை என்பதை அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் விவாதிக்க முன்வரவேண்டும் என்பதுதான். 

அதிகாரத்தை நுகர்வதற்கு தலித் என்பதையே தகுதியாக நான் சொல்லவில்லை, எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் இந்த சமூகத்தில் தலித் என்பதே தகுதியின்மையாக ஆக்கப்பட்டிருக்கிறதே என வேதனைப்படுகிறேன். 

மக்கள் நலக்கூட்டணி விடுதலைச் சிறுத்தைகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். அதைப் பலவீனப்படுத்த நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம். அதுபோலவே 'எளிய மக்களுக்கும் அதிகாரம்! கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்! ' என்ற எமது லட்சியத்திலிருந்தும் பின்வாங்கமாட்டோம். 

நான் 2014 ல் எழுதிய பதிவை இங்கே படிக்கலாம்: 

நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
 
Monday, October 27, 2014
தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதிலும் இப்போதே அதற்கான அணிசேர்க்கைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. யார் முதல்வர் என்ற கேள்வி ஊடகங்களில் உலாவரத் தொடங்கிவிட்டது. 

தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதென்றும் அதை நிரப்புவதற்கு இந்த நடிகர் வருவாரா அந்த நடிகர் வருவாரா என்றும் ஊடக மாயைகள் உருவாக்கப்படுகின்றன. சினிமாவை வைத்தே பக்கங்களை நிரப்பும் அச்சு ஊடகங்களும், சினிமாவின் நீட்சியாகவே செயல்படும் காட்சி ஊடகங்களும் திரைப்படத் துறையிலிருந்து ரட்சகர்களைக் கண்டுபிடிக்க நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் நாம் அதற்கு இன்னும் எத்தனைகாலம் பலியாகிக்கொண்டிருப்பது? என்ற கேள்வியை யார் கேட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ தலித்துகள் கேட்டுக்கொண்டாகவேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள்தொகை இருபது விழுக்காட்டுக்குமேல் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறுகொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும், மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகைகொண்ட பீஹாரிலும்கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத நிலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது? தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என அறிவிக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என எப்போது தமிழ்நாட்டு தலித்துகள் உறுதிபூணுகிறார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அந்த அரசியல் தற்சார்பு நிலையை உருவாக்குவதே இன்று தலித் இயக்கங்களின் முதன்மையான பணி

1 comment:

  1. There is no reservation system in election as well in politics. Why this dalit_non dalit attitude and separatism. Whoever is meritorious and capable and well educated should come as leader. India is nor progressing due to the casteistic attitude. We are all divided on the basis of caste, creed, religion, language state wise etc This attitude should go from our mind for overall growth. Throw away this mind set and bring oneness in pour thoughts

    ReplyDelete