தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக புதுவகை 'குறி சொல்லிகள்' ஓரிருவர் உருவாகியுள்ளனர். உலகமயமாதலின் உபவிளைவுகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றுகிறது.
வரலாற்றறிவைத் துச்சமாக நினைத்து ஊதியப் போட்டிக்குள் தொலைந்த, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைஞர்கள் சிலர் சற்றே பொருளாதாரத் தன்னிறைவு அடைந்ததும் தான் இழந்துபோன 'பண்பாட்டு பொக்கிஷங்கள்' குறித்த ஆற்றாமையிலும், பழமை ஏக்கத்திலும் ' மரபு' ' பண்பாடு' என்பவை குறித்த தமது குழப்பங்களுக்கு 'உடனடி விடைகளை'த் தேடுகிறார்கள். அவர்களின் தேவையை இந்த கலாச்சார கணியர்கள் நிவர்த்தி செய்கின்றனர்.
காட்சி ஊடகங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கைகொடுக்க சில ' கருத்தாளர்கள்' இருப்பதைப்போல இந்தக் கணியர்கள் பழமை ஏக்கத்தால் பீடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களையும் கணித்துச் சொல்வதில் இவர்கள் வல்லவர்கள் என ஆங்காங்கே விளம்பரங்கள் தென்படுகின்றன.
மார்க்சியம் என்ற கத்தியால் கொஞ்சம் கீறிப் பார்த்தால் இவர்களின் அடிப்படைவாதத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம்.
No comments:
Post a Comment