சிறந்த சிறுகதை நூலுக்காக தமுஎகச விருதுபெற்ற 'கூனல் பிறை' என்ற தொகுப்பில் 'ஆரியமாலை' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது. நா.வானமாமலை பதிப்பித்த காத்தவராயன் கதைப்பாடலை எடுத்து தனது பாணியில் சிறுகதையாக்கியிருக்கிறார் தேன்மொழி. இக்கதையில், காத்தவராயனின் தாயும் ஆரியமாலையும் சாதிப்பிரச்சனை குறித்துப் பேசிக்கொள்வதாய் வரும் உரையாடல், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆணவக் கொலைகளில் முடியும் இன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது.
காத்தவராயனின் இசையில் மயங்கி அவனோடு ஆரியமாலை செல்வதாக வரும் சித்திரிப்பு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்ட தேன்மொழியின் உரைநடைக் கவிதை மொழிக்கு உதாரணம். அதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:
" ஆரியமாலையின்செவிகளில் அந்த இசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. அதுஇசைதானா அல்லது உயிரை உலர்த்திச் சருகுபோல்ஆக்குவதற்கு இறைவன் கண்டுபிடித்த உபாயமா என்று அவள்குழம்பினாள். அந்த இசை காத்தவராயனின் கையிலிருந்த கிண்ணரியிலிருந்து வந்ததா அல்லது அவனது குரலில் பெருக்கெடுத்துக் காற்றில் வண்ணங்களைப் பூசியதா என்றுஅவளால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியவில்லை.அந்த இசைஅவளை நதியின் ஆழத்தில் மூழ்கடித்தது. அவள் அல்லிமலரைப்போல மலர்ந்தாள், அடுத்தகணம் அன்னத்தைப்போல நீந்தினாள். மழையின் அழுகையைப்போல நிறுத்த முடியாது நீண்டுகொண்டிருந்தது அந்த இசை. காற்றின் முனகலாக அவளதுகாதுகளுக்குள் கிசுகிசுத்தது அவனது குரல். வானம் இறங்கிவந்துஒரு நீலநிறச் சேலையாக தன்னைப் போர்த்துவதுபோல்உணர்ந்தாள் ஆரியமாலை."
யதார்த்தம் கடந்ததொரு சித்திரிப்பைக் கொண்ட இந்தச் சிறுகதை தலித் பெண்ணிய நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது. சாதியைக் கடந்த காதலின் வலிமையைப் பெண்ணின் நோக்கிலிருந்து பார்க்கவேண்டியதன் அவசியத்தையும், பெண்ணாக இருந்தபோதிலும் ஒரு பிராமணப் பெண்ணுக்கும் ஒரு தலித் பெண்ணுக்கும் இடையே சமூகப் புரிதலில் இருக்கும் வேறுபாட்டையும், அந்த வேறுபாடு உண்மையான நேசம் மழையாய்ப் பொழிகையில் கரைந்துபோய்விடும் என்ற உண்மையையும் இந்தக் கதை உணர்த்துகிறது. தலித் வாழ்க்கைமுறையின் தனித்துவத்தையும் அழகியலையும் இந்தக் கதை ஆர்ப்பாட்டமில்லாமல் பேசுகிறது.
இலக்கிய ருசி அறியாத சாதிய மனம் கொண்ட கோட்பாட்டாளர்கள் தமிழில் அவசர அவசரமாகக் கட்டமைத்த 'தலித் ஸ்டீரியோடைப்'புக்குள் அடங்காத சிறுகதை இது. இலக்கியத்தை மதிப்பவர்கள் நிச்சயம் இக்கதையை விரும்புவார்கள் என்பதென் நம்பிக்கை.
No comments:
Post a Comment