Friday, July 29, 2011

சமச்சீர் கல்வி: விவாதத்துக்காக சில குறிப்புகள் - ரவிக்குமார்


( இந்தக் கட்டுரை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுதி சுற்றுக்கு விடப்பட்டது. விழுப்புரம் ,சென்னை கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அன்றைய பள்ளிக் கல்வி அமைச்சரிடம்  என்னால் தெரிவிக்கப்பட்டன  )
இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலாகும். ‘ இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதிலிருந்து பத்து ஆண்டுகளில்(1960க்குள்) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வியை வழங்கவேண்டியது அரசின் கடமை’ என நமது அரசியல் சட்டத்தின் பிரிவு 45இல் கூறப்பட்டுள்ளது.இது வழிகாட்டும் நெறிமுறைகளில்( directive principles) ) கூறப்பட்டிருப்பதால் அரசுக்கு இதை நிறைவேற்ற வேண்டிய சட்ட நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.ஆனால் 1993 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற உன்னிகிருஷ்ணன் எதிர் ஆந்திரப்பிரதேச அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ஒரு குழந்தைக்கு இளமையில் கல்வி மறுக்கப்பட்டால் அதன் வாழ்வே நாசமாகிவிடும்,எனவே அரசியல் சட்டத்தின் பிரிவு 45 என்பதை அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் பிரிவு 21 உடன் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும்.‘எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கல்வியையும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அறிவிக்கவேண்டுமென நாடெங்கும் கோரிக்கைகள் எழுந்தன.வேறுவழியின்றி மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் 21 ஏ என்ற பிரிவைப் புதிதாகச் சேர்த்து ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக் இலவசக் கல்வியை வழங்கிட வகை செய்தது.கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் இதற்கான சட்டங்களை மாநில அரசுகள் இயற்றிக்கொள்ளவேண்டுமென மத்திய அரசு சொல்லிவிட்டது.ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும் செலவை கனக்கில் கொண்டு மத்திய அரசே சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டுமென மாநில அரசுகள் கோரிவந்தன.அதைத் தொடர்ந்து மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மசோதாவை பல மாநில அரசுகள் நிராகரித்துவிட்டன.அதனால் அந்த சட்டத்திருத்தம் எவ்வித பயனுமின்றி அப்படியே கிடக்கிறது.
       சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமப்படுத்தவேண்டுமென்றால் சமூகத்தின் அங்கங்களாக இருக்கிற ஒவ்வொரு துறையிலும் சமநிலையைக் கொண்டுவர வேண்டும். அப்படியானதொரு எண்ணத்தின் அடிப்படையில்தான் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ‘தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த குழு ஒன்றை 08.09.2006 அன்று அமைத்தது. ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட அக்குழுவுக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ச.முத்துக்குமரன் தலைவராக நியமிக்கப்பட்டார்.  டாக்டர் முத்துக்குமரன் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் இப்போது சமர்ப்பித்துவிட்டது. அந்த அறிக்கை அண்மையில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறதா? இல்லையா? என்பது பற்றி முடிவு எதுவும் அறிவிக்கப்படாத  நிலையில் அதுபற்றி பல்வேறு தகவல்கள் நாளேடுகளில் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் தேர்வுகளில் சீர்திருத்தங்களைச் செய்யப்போவதாகவும் அடுத்தடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடும் பொறுப்பு திரு.விஜயகுமார் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்போது மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரி பள்ளிக் கல்வி முறை, மாநில வாரியக் கல்விமுறை என ஐந்து விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.இப்படி வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தக் கல்வி முறைகளின் காரணமாக மாணவர்களின் கல்வித் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருகின்றன.இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இப்போது சமச்சீர் கல்வி முறை வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
கல்வி என்பது காசிருப்பவர்களின் சொத்தாக மாறுவது சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்துதான் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிய தமிழக அரசு முத்துக்குமரன் குழுவை நியமித்தது.  அந்தக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து கருத்துக்களைத் தெரிவிக்க உட்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள்ளாகவே அது அறிக்கையை தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்க நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே முப்பது லட்சம் என 2006ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஐந்தாயிரம் உயர்நிலைப்பள்ளிகளும் நான்காயிரத்து ஐநூறு மேல்நிலைப்பள்ளிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இதில் சுமார் அறுபது சதவீதம் மாநிலக் கல்வி முறையைப் பின்பற்றும் பள்ளிகள்தான். முப்பத்தைந்து சதவீதம் மெட்ரிக் பள்ளிகள். மற்றவை யாவும் சேர்த்து ஐந்து சதவீதம் அளவுக்கு உள்ளன. இதில் மத்திய அரசு நேரிடையாக நடத்தும் பள்ளிகளும், அதன் அனுமதி பெற்று நடத்தப்படும் பள்ளிகளும் உள்ளன. அவற்றின் நிலைமைகளை விரிவாக ஆராய்ந்துள்ள இந்தக் குழு நூற்று அறுபது பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை, அதுபோல சுமார் இரண்டு பங்கு அளவுகொண்ட பின்னிணைப்புகளோடு சேர்த்து சமர்ப்பித்திருக்கிறது.
பாடத்திட்டமானது ஒரு மாணவனிடத்தில் அவனது ஆயுள் முழுமைக்கும் தேவையான செய்திகளைத் திணிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக குறைந்தபட்ச அளவே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவன் தனக்குத் தேவையானவற்றைத் தானே கற்கும் மனநிலையைப் பெறுவான் என குழு கருத்து தெரிவித்துள்ளது.
தேர்வு என்பது இன்றியமையாதது என ஏற்றுக்கொண்டுள்ள குழு ‘‘பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியில் அளிக்கப்படவேண்டும். சிறுபான்மையோருக்கு அவர்கள் விரும்பினால் இப்போது நடைமுறையில் உள்ள அவர்களது மொழியைப் பயிற்று மொழியாகத் தொடர வாய்ப்பு அளிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஆசிரியர் மாணவர் விகிதம் குறித்த அதன் பரிந்துரையாகும். 1966ஆம் ஆண்டு மைய அரசால் அமைக்கப்பட்ட கோத்தாரி குழு, ‘‘அதிகமான மாணவர்கள் அடங்கிய வகுப்புகள் கற்பிக்கும் தரத்திற்கு அதிகமாகத் தீங்கு விளைவிப்பவை. அங்கே சிறந்த முறையில் கற்பித்தாலும்கூட அது பயனற்றுப் போய்விடும்’’ எனக் கூறியுள்ளதை இந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஒரு ஆசியருக்கு முப்பது மாணவர்கள் வீதம் இருக்க வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி முறை வெற்றிபெற வேண்டுமென்றால் பாட நூல்களின் தரத்தை அதற்கேற்ப உயர்த்த வேண்டும். இதைக் குழுவும் ஆமோதித்துள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள் இருப்பது நல்லது. பாடநூல்கள் தவிர விரிவாக எழுதப்பட்ட வழிகாட்டி நூல்களும், துணை நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், அகராதிகள் முதலிய நூல்களையும் தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் வெளியிடலாம் என்ற ‘அரிய’ ஆலோசனையை குழு முன்வைத்துள்ளது.
மாணவர்களை நூலகத்துக்கு அனுப்புவதற்கென சில நல்ல யோசனைகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளியில் நூலகம் ஒன்று இருக்க வேண்டும். அதில் சென்று படிக்கக்கூடிய விதத்தில் வாரத்துக்கு ஒரு மணி நேரமோ அல்லது ஒரு ‘பீரியடோ’ அதற்காக ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள முத்துக்குமரன் குழு பொது நூலகங்களைக் கல்வி நிறுவனங்களோடு இணைப்பதற்கான ஆலோசனையையும் முன் வைத்துள்ளது. ‘‘மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் சுமார் ஐநூறு மாணவர்களுக்கு மேல் கல்வி கற்கும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஒரு நூலகர் அமர்த்தப்படவேண்டும். மாணவர்களை அவர்கள் அந்தவாரம் படித்த நூல் பற்றி எழுதச் சொன்னால் அந்த மாணவனுக்கு சிந்திக்கும்,  எழுதும் திறன்களும் மேம்படும்’’ என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
‘‘ஒவ்வொரு நாளும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்களும், மாணவர்களும் வழிபாட்டுக் கூட்டத்தில் கூடுவது மிகுந்த நலம் பயக்கும்’’ என குழு அறிவுரை வழங்கியுள்ளது. வழிபாட்டுக் கூட்டம் (Prayer Meeting) என்னும்போது அதில் மதத்தின் வாசனை கலந்து விடக்கூடும். அந்தக் கூட்டத்தில் உணர்வூட்டக்கூடிய கதை, இசை, கருத்துரைகள், செய்திகள் முதலியவற்றை இடம் பெறச்செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளின் நிர்வாகத்தில் தன்னாட்சி இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. ‘பொதுப்பள்ளி முறை’ உருவாவதற்கும் இது உதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ‘‘பள்ளி இறுதித் தேர்வுக்குரிய பாடநூல்களை மட்டும் மாநில அளவில் திட்டமிட்டு தயாரிக்கலாம். மற்ற நிலைகளில் உள்ள பாடநூல்கள் எல்லாவற்றையும் பள்ளி மட்டத்தில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானிப்பது செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது’’ எனக் குழு கருதுகிறது.
மாநில அரசின் ஒவ்வொரு துறையிலும் ஒரு கையேடும் (Manual) தணிக்கை நெறிமுறைகளும் (Audit Code) வெளியிடப்பட்டு அதனடிப்படையில்தான் அந்தத் துறைகளின் நிர்வாகம் நடத்தப்படுகிறது. ஆனால் கல்வித்துறையில் மட்டும் இவை வெளியிடப்படாத நிலை உள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள குழு உடனடியாக அவற்றை வெளியிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளது.
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் இப்போது கிராமக் கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் கல்விக்குழு உருவாக்கப்பட்டு அந்தந்தப் பகுதி பள்ளிகளைத் தொடர்பு கொண்டு கல்வித்தரம் சிறப்பாக அமைய உதவலாம் என முத்துக்குமரன் குழு ஆலோசனை கூறியுள்ளது.
வகுப்பறைகள் போதுமான வெளிச்சத்தோடும், காற்றோட்டத்தோடும் அமைக்கப்பட வேண்டும். ‘‘இனி வரும் காலங்களில் புதியதாகத் தொடங்கவுள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளும், ஏற்கனவே உள்ள பள்ளிகளில் புதியதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறைகளும் ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டர் இடவசதியும், 3.7 மீட்டர் உயரமும்’’ இருக்கும் விதமாக அமைக்கப்படவேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண இயக்கம் இதுபோல ஏதேனும் ஒன்றில் சேர்ந்து கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆலோசனைகள் மட்டுமல்லாது மேலும் சிலவற்றையும் அது கூறியுள்ளது.
முத்துக்குமரன் குழுவின் அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்பட்டபோதிலும் அது இன்னும் அரசால் ஏற்கப்படவில்லை. அதுபற்றி அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க முடியாத ஒரு இக்கட்டான சூழல். ஏனென்றால் தனது ஆலோசனைகளை எப்படி செயல்படுத்துவது என்ற செயல் திட்டத்தை குழு அளிக்கவில்லை.இந்த அறிக்கையும்கூட திருத்தமாகத் தயாரிக்கப்படவில்லை.அவசரத்தில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
      
இந்தக் குழுவின் உறுப்பினராக இடம் பெற்றிருந்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேனிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான கிறிஸ்து தாஸ் பதினேழு பக்கங்களில் அறிக்கை ஒன்றை குழுவிடம் கொடுத்திருக்கிறார். மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தை பொதுவான பாடத்திட்டமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதே அவருடைய வாதம். தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்பதையோ, வகுப்பறைகள் வெளிச்சமும், காற்றோட்டமும் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதையோ கிறிஸ்து தாஸ் ஏற்கவில்லை. முழுக்க முழுக்க மெட்ரிக் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடே அவர் தனது கருத்துக்களை கூறியுள்ளார். அப்படித்தான் மற்ற உட்குழுக்களின் கருத்துக்களும் இருக்கின்றன. சமூக அறிவியல் பாடம் குறித்த உட்குழு தற்போது மாநில வாரியக் கல்வி முறையில் உள்ள பாடங்களை அப்படியே சமச்சீர் கல்வித் திட்டத்துக்குப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.

       சமச்சீர்கல்வியைத் தருவது குறித்து இந்திய அளவில் முயற்சி மேற்கொண்டுள்ள இன்னொரு மாநிலம் பீகார்.தமிழ்நாட்டில் குழு அமைப்பதற்கு முன்பே பீகாரில் தான் இதற்கான குழு அமைக்கப்பட்டது.2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி அந்தக் குழு அமைக்கப்பட்டது.டெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் திரு.முச்குந்த் துபே தலைமையில் டாக்டர் மதன்மோகன் ஜா மற்றும் பேராசிரியர் அனில் சட்கோபால் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு 306 பக்கங்கள்கொண்ட தனது அறிக்கையை 2007 ஜூன் எட்டாம் தேதி பீகார் மாநில அரசிடம் அளித்தது.நீதிபதி சச்சார் குழு அறிக்கையைப்போல மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் இந்த அறிக்கை விளங்குகிறது.கடந்த பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்காக நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த பேராசிரியர் அனில் சட்கோபாலின் பங்களிப்பே இந்த சிறப்புகளுக்குக் காரணம்.
       பீகாரில் உள்ள பள்ளிகளை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரையுள்ளஆரம்பப் பள்ளிகள், எட்டாம் வகுப்புவரை உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஒன்பதிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை உள்ள சீனியர் செகண்டரி பள்ளிகள் என மூன்று அடுக்குகளில் அமைக்கவேண்டும் என அந்டஹ் குழு கூறியுள்ளது.5முதல் 14 வயதுவரையிலான பிள்ளைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும்,உயர்நிலைக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்குவது எட்டு வருடங்களில் எட்டப்படும் என அது தெரிவித்துள்ளது.ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் சம்பளத்தை அதிகப்படுத்துவதற்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.ஆசிரியர் பணி மாறுதலுக்கு உரியது அல்ல ஆசிரியரே விரும்பிக்கேட்டால் அவரது மொத்தப் பணிக்காலத்தில் இரண்டு முறை அவருக்கு மாறுதல் வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரத்துள்ளது.தனியார் பள்ளிகளிலும் இலவசக் கல்வியே வழங்கப்படவேண்டும்.அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் எனக் கூறியுள்ள அந்தக் குழு தனியார் பள்ளிகளும் அரசு அறிவிக்கும் பாடத்ட்திட்டங்களையே பின்பற்றவேண்டும் எனக் கூறியுள்ளது.பள்ளிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட குழுவைக்கொண்டே நிர்வகிக்கவேண்டும் அவர்களில் 50% பெண்கள் இடம்பெறவேண்டும்.இதற்காகத் தனியே சட்டமியற்றவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
       சமச்சீர்கல்வியை பீகாரில் அமுல்படுத்த ஆகும் செலவைக் கணக்கிட்டு அதை எப்படி ஈடுகட்டலாமெனவும் வழிகாட்டப்பட்டுள்ளது.சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநில அளவில் சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் எனக் கூறியுள்ள அந்தக்குழு அந்த சட்ட மசோதாவையும் தயாரித்து அளித்துள்ளது.இந்த அறிக்கையைப் பார்க்கும்போதுதான் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முத்துக்குமரன் குழு அறிக்கை எந்த அளவுக்குப் போதாமையோடு இருக்கிறது என்பது தெரிகிறது.
       சமச்சீர் கல்வியை கொண்டுவருவது அரசின் கடமை மட்டுமல்ல.அதற்காக நாமும் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கடந்த 04.11.2007 அன்று விழுப்புரத்தில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் கூட்டப்பட்டது.அதில் மக்களின் அடிப்படைக் கல்வி பற்றி அக்கறை உள்ள இருபதுபேர் கலந்து கொண்டனர்.அடுத்தபடியாக சென்னையில் 16.12.2007 அன்று அடுத்த கூட்டம் நடைபெற்றது.அதில் நாற்பதுபேர் கலந்துகொண்டனர்.
      


No comments:

Post a Comment