Thursday, July 7, 2011

பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து எம் ஏ நுஃமான்  (பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.கேட்டு எழுதியவர்: ரவிக்குமார் )


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நேற்று மாலை(06.07.2011) தனது எண்பதாவது வயதில் கொழும்பில் தனது  மகளின் வீட்டில் காலமானார் . சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்ப்  புலமைத் துறையிலும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவராக செயல்பட்டுவந்தவர் அவர். பேராசிரியர்கள் வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வ.அய்.சுப்ரமணியம் போன்றவர்களின் பின்னர் தமிழியல் துறையில் உலகளாவிய நிலையில் பாரிய செல்வாக்கு செலுத்திய இரு தமிழ்ப் பேராசிரியர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கைலாசபதி, மற்றவர் சிவத்தம்பி. கைலாசபதி தனது நாற்பத்தொன்பதாம் வயதில் காலமானார். அவரைவிட முப்பது ஆண்டுகள் அதிகம் வாழ்ந்து சிக்கலான சமூக அறிவியல் சூழலில் உயிர்ப்புடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் ,சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரைப்போல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலங்கையைத் தாண்டி தமிழ்நாட்டிலும் ஆழமான செல்வாக்கு செலுத்தியவர்கள் பேராசிரியர் கைலாசபதியும், சிவத்தம்பியுமே என்பது மிகையான  கூற்று அல்ல. 1956இல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய சிவத்தம்பி இலங்கை பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.பின்னர் வித்யோதய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1965இல் இணைந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிப் பின்னர் ஓய்வுபெற்றார்.கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவர் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்திருக்கின்றார். சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் அவர் ஒரு வருகைதரு பேராசிரியராக கௌரவம் பெற்றிருக்கின்றார்.

1950களில் இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்களில் சிவத்தம்பியும் ஒருவர். மார்க்சிய சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு பல்துறை சிந்தனையாளனாக அவர் வளர்ச்சி அடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இலக்கியம்,பண்பாடு,சமூகம்,அரசியல் என்பவற்றுக்கிடையே இருந்த ஊடாட்டத்தை அவர் தம் ஆய்வுகளில் விளக்க முயன்றார்.இந்தவிதத்தில் தமிழியல் துறையின் செழுமைக்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. சங்க இலக்கியம் , தொல்காப்பிய கவிதையியல் பற்றிய அவரது ஆய்வுகளும் முக்கியமானவை. நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம் ,கவிதை என்பன தொடர்பாக அவர் அதிகம் எழுதியுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் மேலோங்கியிருந்த இனத்துவம், இன முரண்பாடு, அரசியல் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக எழுதிவந்தார்.

1950களிலிருந்து இன்றுவரை அவர் எழுதியவை ஏராளம்.தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன.இன்னும் ஏராளமான அவரது கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டியுள்ளன.சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகால அவரது பல்கலைக்கழக சேவையில் அவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார்.தன் கல்வி சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.தமிழ் மொழி ,இலக்கியம்,தமிழர் பண்பாடு அரசியலென்று எத்துறை தொடர்பாகவும் ஆழமான கருத்துகளைச் சொல்லக்கூடிய ஒருவராக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமே. பலதுறை ஆளுமைமிக்க அவரது மறைவு ஒரு பெரிய இடைவெளியை விட்டுச்சென்றுள்ளது.

2 comments:

  1. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க்கையின் மிகச்சிறந்த, மிகச்சுருக்கமான வரைவு! நன்றி

    ReplyDelete
  2. பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு தமிழை நேசிக்கும் உள்ளங்களில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.1996 இல் அவர் எனது முதல் கவிதைத்தொகுதியான எரி நெருப்பிலிருந்து நூலின் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்ததும் அங்கு பேசியதும் இன்னும் நினைவில் நீங்காமல் உள்ளது.முதல் குட்டும் முதல் மாலையும் ஒரு பெருந்தகையின் கரத்தினால் எனக்கு வாய்த்து விட்ட காரணத்தினால் என்னவோ பிற்காலங்களில் பரந்த வாசிப்புத்தளத்திற்கும் தீவிர எழுத்திற்கும் என்னை இட்டுச்சென்றது.பேராசிரியரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
    ஓட்டமாவடி அறபாத்
    இலங்கை

    ReplyDelete