Showing posts with label eelam. Show all posts
Showing posts with label eelam. Show all posts

Wednesday, April 10, 2013

ரவிக்குமார் கவிதை

 
 
எலி வளைகளிலும்
தானியம் அற்றுப்போன கோடையெனக்
கழிகிறது காலம்
குழந்தைகள் பூனைகளைப் போல சிரிக்கிறார்கள் 
வானம் சாம்பலாய்ப் பொழிகிறது

குருதிக் கறை  படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை

நாம் கேட்கிறோம்
நீதி
கொல்லப்பட்டவர்களுக்காக
பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்காக
அங்ககீனம் செய்யப்பட குழந்தைகளுக்காக
நாடற்றுத் திரியும் அகதிகளுக்காக 

நமது பேச்சில் தெறிக்கிறது
தாய்,சகோதரி, இனம், ரத்தம்,
உரிமை,துரோகம்,வீரம், வரலாறு . . .
நாம் கேட்கிறோம்
நீதி

சக மனிதனின் வாயில்
மூத்திரம் பெய்தபடி

Monday, March 4, 2013

ஜெனீவா மாநாடு : அமெரிக்க தீர்மானத்தின் வரைவு





( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின்  வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற 
இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் : ரவிக்குமார் ) 



ஐ.நா மனித உரிமைக் குழு

ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும்,

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாதப்படுத்துவதும்  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி ,

இலங்கை அரசின் தேசிய செயல் திட்டம் மற்றும் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதன் வாக்குறுதிகளை கவனத்தில்கொண்டு,

தேசிய செயல் திட்டம் என்பது எல்.எல்.ஆர்.சியின் எல்லாவிதமான பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,

சட்டத்துக்கு விரோதமான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள் கடத்தல்கள் முதலானவை குறித்த நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுதல்; இலங்கையின்  வடக்குப் பிரதேசத்திலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது; நிலங்கள் தொடர்பிலான புகார்கள் குறித்த நடுநிலையான விசாரணையை மேற்கொள்வது; தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து மீளாய்வுசெய்வது; முன்னர் சுதந்திரமானவையாக இருந்த சிவில் நிர்வாக அமைப்புகளை பலப்படுத்துவது; மாகாணங்களுக்கு அதிகாஅரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கன அரசியல் தீர்வைக் காண்பது; அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்  உருப்படியான பரிந்துரைகளைக் கவனப்படுத்தி,

அதேசமயத்தில் தேசிய செயல் திட்டமோ எல்.எல்.ஆர்.சி யோ இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்துப் போதுமான அளவில் அக்கறைகாட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,
இலங்கையில்  மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாகவும், மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாகவும்  தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலை தெரிவித்து,

1) ஐ.நா. மனிதவுரிமைகள் குழுவின் ஆனையர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

2) எல்.எல்.ஆர்.சி யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், நல்லிணக்கம், பொறுப்பேற்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத்தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,பேச்சுரிமை,கூடுவதற்கான உரிமை,சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்டமுறையிலான ஆள்கடத்தல்  ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி  வந்து ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

4) மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்தாலோசனை செய்து அதன் ஒப்புதல் பெற்று ஐ.நா  மனித உரிமைகள் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.  

5) ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையர் மற்றும் அவரையொத்த அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர்,  இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைகள் குழுவின் இருபத்தைந்தாவது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.






Sunday, March 3, 2013

Draft Resolution of US on Sri Lanka in UNHRC

Here is the first draft of the resolution to be submitted by the US  to the Human rights Council and circulated by the UN Mission Geneva. ( Please note that this is a not a confirmed official US document yet ) 

The Human Rights Council,
Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights and other relevant instruments,

Recalling Human Rights Council Resolution 19/2 on Promoting Reconciliation and Accountability in Sri Lanka,
Reaffirming that it is the responsibility of the Government of Sri Lanka to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms of its entire population,

Taking note of the Government of Sri Lanka’s National Action Plan and its commitments as set forth in response to the findings and recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) of Sri Lanka,
Noting with concern that the National Action Plan does not adequately address all of the findings and constructive recommendations of the LLRC,
Recalling the constructive recommendations contained in the LLRC’s report, including the need to credibly investigate widespread allegations of extra-judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, re-evaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement on the devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all and enact rule of law reforms,

Also noting with concern that the National Action Plan and the LLRC’s report do not adequately address serious allegations of violations of international law,
Expressing concern at the continuing reports of violations of human rights in Sri Lanka, threats to judicial independence and the rule of law, and failure by the Government of Sri Lanka to fulfill its public commitments, including on devolution of political authority to provinces as called for in Sri Lanka’s constitution,


1.    Welcomes the report of the High Commissioner for Human Rights on the human rights situation in Sri Lanka;

2.    Reiterates its call upon the Government of Sri Lanka to expeditiously implement the constructive recommendations made in the LLRC report and to take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability, and reconciliation for all Sri Lankans;

3.    Urges the Government of Sri Lanka to formally respond to outstanding  requests, including by providing unfettered access, by special procedures mandate holders, in particular the Special Rapporteurs on independence of judges and lawyers; torture; human rights defenders; freedom of expression; freedom of association and assembly; extrajudicial, summary or arbitrary executions; and the Working Group on enforced or involuntary disappearances;

4.    Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps;

5.    Requests the Office of the High Commissioner for Human Rights, in consultation with relevant special procedures mandate holders, to present a report on the provision of such assistance and progress on reconciliation and accountability, including investigations of violations of international law, in Sri Lanka to the Human Rights Council at its twenty-fifth session. 
 http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1

Sunday, February 24, 2013

ஈழம் : ரவிக்குமார் கவிதைகள்





வாக்குமூலம் 1

தாயின் உதிரத்தில்
தாகம் தணிபவர்கள்
தந்தையின் தலைகொய்த மரபினர்
சகோதரனோ சகோதரியோ
எமக்கில்லை, எல்லாம் பிறர்தான்
பிள்ளைக்கறி கேட்டதெம் கடவுள்
எம்மிடத்தில்
காட்டுகிறாய் பாலகன் ஒருவனின் சடலத்தை
கருணை சுரக்குமென எதிர்பார்த்து.

எமக்கோ
நாக்கு சுரக்கிறது



வாக்குமூலம் 2

வானூர்தியின் இரைச்சல் கடக்கும் முன்
வெடித்துச் சிதறுகிறது தாயின் உடல்
பதுங்கு குழிகளில் அலறும்
பிள்ளைகளின் குரல்களை அமுக்குகிறது
இன்னொரு வெடிப்பு
பொருள் எது உடல் எது
எங்கும் சிதறல்கள்
இடைக்கிடை பேசுகிறவர்களின்
வாய்களிலிருந்து தெறிக்கிறது ரத்தம்

பின்புலத்தில் அடர்ந்தெழும்  
புகையின் கறுப்புக்கும்
ரத்தத்தின் சிவப்புக்கும் இடையிலான
முரண் அழகை ரசிக்கிறதெம் மனம்




வாக்குமூலம் 3

கதவுகள் இல்லா வீட்டைத்
தட்டிக்கொண்டிருப்பது
உனது தவறு
தொழுநோயாளியின் சருமத்தில்
உஷ்ணம் உரைப்பதில்லை
ஒரு லட்சம் சடலங்கள்
என்கிறாய்
அவ்வளவையும்
ஒரு சுவரொட்டிக்குள் அடக்குவது எவ்விதமென
யோசிக்கிறேன் நான்




  




Friday, February 22, 2013

3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு






            ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போது சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின்பேரில் அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்துதான் உள்ளன. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலையாகும். அப்படி கொல்லப்பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர் கூட அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17ஆம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. ஆங்காங்கே தப்பியோடிப் பதுங்கியிருந்த ஒன்றிரண்டு பேர்களையும்கூட விட்டுவைக்காமல் தேடித்தேடி இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கிறது.
            போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அப்போது அவையெல்லாம் பொய்யான காட்சிகள் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல் பூர்வமாக சோதனை செய்த ஐ.நா. சபை அது உண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்துள்ளது. ஐ.நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாயுள்ள பிலிப் ஆல்ஸ்டன் என்பவர் இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவர்களது குடும்பத்தினரோடு கடந்த மே 17ஆம் தேதி இரவு இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மை விவரங்களை தெரிவிக்குமாறு அவர் கூறியிருக்கின்றார். ‘‘இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே 17ஆம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குப் புறமாக ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்களின் மூலமாக அவர்கள் உங்கள் அரசைத் தொடர்பு கொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துறை செயலாளரும், உங்கள் அரசுக்கு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே பதினெட்டாம் தேதி அதிகாலையில் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளைத் துணிகளைப் பிடித்தபடி ராணுவத்தை நோக்கி சரணடைய வந்தபோது அவர்களை இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு அவர்களைப் படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதி படுத்தியுள்ளனர் என்றும் ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
            1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3 போர்க்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றி கூறியுள்ளது. ‘‘போரில் நேரடியாக பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பதினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபமான முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளது. அதுபோலவே சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது. எனவே இதைப்பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி உள்ளார். ”போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று ஆதாரங்களோடு உங்கள் அரசு நிரூபிக்க முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பரிசீலித்து அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும்” என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
            இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக ஐ.நா. சபையே விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஐ.நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும் விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகிப் பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அவர்மீது முதலில் ஐ.நா. சபை விசாரணை நடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
            ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும்கூட சிங்கள ராணுவம் இப்படி சித்திரவதை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி டெக் என்னும் நிறுவனத்தின் இயக்குனராயிருந்த கதிர்வேலு தயாபர ராஜா என்பவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார் தனது மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணுவம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்த அறிக்கை தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.
            வன்னி டெக் என்ற அமைப்பு சுயேட்சையாக நடத்தப்பட்டு வந்த ஒரு அமைப்பாகும். சில காலத்துக்குப்பிறகு புலிகள் அந்த அமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்கு தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றைப் புலிகள் வாங்கி வந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனராக இருந்த தயாபர ராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக்கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என்பவரும் தயாபர ராஜாவும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜா இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத்துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்து செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபர ராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை நிற்கவே இல்லை. இடையிடையே தயாபர ராஜாவின் மனைவியான உதயகலாவின் பாட்டி அவர்களை சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே கடந்த 2009 செப்டம்பர் பதினைந்தாம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள் தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாக பொய் சொல்லி தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும் இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாக கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக்கூட முடியாத நிலை. அந்த அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
            இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்று பாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் மும்முரத்தில் தீவிரமாக இருக்கின்றன. அங்கு அதிகாரத்துக்காக போட்டியிடும் இரண்டு கொலைக்காரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்த கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அதிகம் உள்ளது.
            இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில முன்முயற்சி எடுத்தபோது அதை தடுத்து இலங்கை அரசை காப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல் உருவாகியிருக்கிறது. ஐ.நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கைக்குப் பிறகு சர்வதேச சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். இலங்கையை ஒரு ‘இனப்படுகொலை செய்த நாடு’ என்று அறிவிக்குமாறு ஐ.நா. சபையை இந்திய அரசு வலியுறுத்தினால் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இலங்கை பிரச்சனையை புலிகளை மட்டுமே மையமாக வைத்த அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசு அதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது முன்பைவிட இப்போது அதிகம் தெளிவாகி உள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பை கருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.