Showing posts with label caste. Show all posts
Showing posts with label caste. Show all posts

Sunday, September 29, 2013

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா




நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும் கொடுமையானதாக சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்காக பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப் படுகின்றன. ஒரு விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான், பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்”  என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விருதுபெற்ற ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “ அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால்  அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக , யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.

விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார். 

என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அடுத்து பேராசிரியர் அ.ராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப் போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனைவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது. அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப் பாராட்டவேண்டும். எனக்கு தலித் பிரச்சனை குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும் ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச் செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”   
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர் கல்வியை அவர்  சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம் ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர். அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம் பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும் வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான் நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான் என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.”   
”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.அவற்றை எதிர்த்து அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில் அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில் படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன் கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்கவேண்டும்’. அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும் வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.”
“நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத் துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுப்பார்கள்?”
“ இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்படவேண்டுமென்றால் கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப் புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம் போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று வசந்திதேவி பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர் இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர்  கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். 

Friday, December 21, 2012

நாடகத் திருமணங்கள், நசுக்கும் சட்டங்கள் - ரவிக்குமார்


   
      
01.05.2012 அன்று புதுச்சேரியில் எனது மூத்த மகன் ஆதவனின் திருமணத்தை எழுச்சித் தமிழர் தொல் .திருமாவளவன் தலைமையில் மருத்துவர் அய்யா நடத்திவைத்த காட்சி 


                    இந்தியாவில் நடைபெறும் திருமணங்களை இரு வகைப் படுத்தலாம். ஒன்று, பெற்றோர் பார்த்து  செய்துவைக்கும் திருமணங்கள்; மற்றது, மணமக்களே விரும்பிச் செய்துகொள்ளும் காதல் திருமணங்கள். தமது வாழ்க்கைத் துணையைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் காதல் திருமணம்தான் உண்மையான திருமணம் ஆகும்.

       இந்த இருவகைத் திருமணங்களுக்கும் அப்பால் மணமகள் தனது சம்மதத்தைத் தெரிவிக்கக்கூடிய அளவுக்கு முதிர்ச்சி அடையாத வயதில்- அதாவது அரசு நிரணயித்துள்ள 18 வயதுக்குள் – நடத்தப்படும் திருமணங்கள் உள்ளன. அவற்றைக் குழந்தைத் திருமணங்கள் என்கிறோம். திருமணத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் அப்போது பெண்ணுக்கு இருப்பதில்லை என்பது மட்டுமின்றி, திருமண உறவால் ஏற்படும் குழந்தைப் பேறு உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கக்கூடிய அளவுக்கு அப்பெண்ணின் உடலும் ,மனமும் வளர்ச்சிபெற்றிருப்பதில்லை. அந்த நிலையில் நடைபெறும் திருமணம் அப்பெண்ணைப் பொருத்தவரை விளையாட்டுத் திருமணம்தான். அதை ’நாடகத் திருமணம்’ எனச் சொல்வதில் தவறில்லை.
    உலகிலேயே இந்தியாவில்தான் இத்தகைய நாடகத் திருமணங்கள் அதிகம் நடத்தப்படுகின்றன. இந்த  உண்மையை ‘லான்ஸெட்’ என்ற மருத்துவ இதழ் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் ஏறத்தாழ நாற்பத்தைந்து சதவீத திருமணங்கள் பெண்ணுக்கு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே நடந்து விடுகின்றன என அந்தப் பத்திரிகை கூறுகிறது. ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே’ மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.
                இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது சகஜமானதாக இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலைமை சற்றே பரவாயில்லை என்றபோதிலும், இவையும்கூட விதிவிலக்குகள் அல்ல. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்னும் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருந்து வருகிறது. தர்மபுரி, பெரம்பலூர், விழுப்புரம் முதலான மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் இப்போதும் பெருமளவில் நடந்துவருகின்றன. 2011 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 120 குழந்தைத் திருமணங்கள் அதிகாரிகளின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டன. கிராமப்புறங்களில் இப்போதும் கோலோச்சுகிற அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பொட்டுக்கட்டி விடுவது, தவளையோடு கல்யாணம் செய்துவைப்பது போன்ற மூடப்பழக்கங்கள் நடைமுறையில் இருப்பதை பத்திரிகைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் கல்வி நிலை மோசமாக இருக்கும் பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன.
                தற்போது நடைமுறையில் உள்ள, பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கேற்ற சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பது 1978ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகும். குழந்தை திருமணம் பற்றி முதலில் அக்கறை காட்டியவர்கள் நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள்தான். அவர்கள்தான் 1929ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்களை தடை செய்வதற்கான சட்டத்தை முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். அப்போது பெண்ணுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பதினான்கு, அது 1940ஆம் ஆண்டில் பதினைந்து என உயர்த்தப்பட்டது.
                2001ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் பெண்கள் பதினைந்து வயதுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெண் எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
                குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு சட்டம் இருந்தபோதிலும், பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை ரத்து செய்வதற்கு தற்போது வழியேதும் இல்லை. அவ்வாறு ரத்து செய்தால் அது அந்தப் பெண்ணுக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால் நீதிமன்றங்கள் அத்தகைய திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்தே வருகின்றன. குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக இருப்பவர்களைத் தண்டிப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமிருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது.
                இந்திய சட்ட ஆணையம் குழந்தைத்  திருமணத்  தடைச் சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் சிலவற்றை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பதினாறு வயதுக்கு கீழ் உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும்; இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375ஐ திருத்தம் செய்து சட்டரீதியாக உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயது பதினாறு என ஆக்கவேண்டும்; அனைத்து விதமான மதங்களிலும் திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்வதற்கு ஆணையிட வேண்டும்; இந்து திருமணச் சட்டத்தின் ஷரத்துகளும் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளும் முரண்படாதபடி உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் முதலான யோசனைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை மத்திய, மாநில அரசுகள்  இதுவரை பரிசீலித்ததாகத் தெரியவில்லை.
                                                      *******************
அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில் தமிழக முதல்வர் முன்னூறுக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குண்டர் சட்டத்தை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்கான திருத்தங்கள் செய்யப்படும் என்பது அந்த அறிவிப்புகளில் ஒன்று. தற்போது இருக்கும் வடிவத்திலேயே அதைத் தம் விருப்பம்போல காவல் துறையினர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருவரைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்வது என காவல்துறை முடிவுசெய்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலையே இப்போது இருக்கிறது. ஒரு குற்றம் செய்தாலே போதும் அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என நீதிமன்றங்கள் ஏற்கனவே பல முறை தீர்ப்பளித்திருக்கின்றன. எனவே புதிதாக இந்தத் திருத்தம் தேவையில்லை. இருந்தபோதிலும் இதைச் செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. காரணம், குண்டர் சட்டத்தை ‘ தடா’ ‘பொடா’ போல அது மாற்ற நினைக்கிறது. அதற்கான தேவை என்னவென்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் 2011 இல் 7.19 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டை ஒப்பிட இது 2.5 சதவீதம் அதிகம் என்றாலும் பயங்கரவாதத் தாக்குதல்கள், அசாதாராணமான குற்றங்கள் எவையும் இங்கு நடந்துவிடவில்லை.
       நாட்டிலுள்ள சட்டங்களில் சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் சில இருக்கின்றன. வரதட்சணைத் தடுப்புச் சட்டம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், குழந்தைகள் உரிமைச் சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்  முதலானவை இந்த வகைப்படும். மனித உரிமை ஆர்வலர்களால் ‘ கறுப்புச் சட்டங்கள் என வர்ணிக்கப்படும் தடுப்புக் காவல் சட்டங்கள் சில இருக்கின்றன. தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் முதலியவை இதில் அடங்கும். இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை பலப்படுத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். தற்போது தமிழக அரசு செய்ய உத்தேசித்திருக்கும் சட்டத் திருத்தம் துஷ்பிரயோகத்துக்கே அதிகம் வழிவகுக்கும்.
       நாடகத் திருமணங்களான ‘குழந்தைத் திருமணங்களையும்; நசுக்கும் சட்டங்களான குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பவேண்டியது நாட்டின்மீது அக்கறை உள்ளவர்களின் கடமை. ஆனால் காதல் திருமணங்கள் தான் நாடகத் திருமணங்கள் என்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களில் ஒன்றான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தான் நசுக்கும் சட்டம் என்றும் பா.ம.க நிறுவனர் பேசி வருகிறார். கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 7.19 லட்சம் வழக்குகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் 1391 மட்டும்தான். அதாவது 0.19 சதவீதம்தான். மருத்துவர் அறியாமையால் பேசினால் அதை நாம் மாற்ற முயற்சிக்கலாம். அவரோ அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப் பேசுகிறார்.
         ஒரு காலத்தில் தடா பொடா போன்ற கறுப்புச் சட்டங்களை அவர் எதிர்த்தவர்தான். ஆனல் இப்போதோ சாதிப் பகைமையை வளர்ப்பதில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவரால் திரட்டப்பட்டிருக்கும் சாதிவெறி சக்திகளால் வன்முறை என்பது நாடெங்கும் நச்சுப் புகையாகப் பரப்பப்படும் இன்றைய சூழலில் உண்மையான நாடகத் திருமணங்களைத் தடுக்கவும், நசுக்கும் சட்டங்களை எதிர்க்கவும் ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

Sunday, November 18, 2012

தர்மபுரி எதிரொலிகள்





தர்மபுரி கலவரம் குறித்து அனேகமாக அனைத்து ஊடகங்களும் பதிவு செய்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் துவங்க இருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இனி ஊடகங்களுக்குத் தீனி போட ஆரம்பித்துவிடும் என்பதால் அதன்பிறகு தர்மபுரியை அவை மறந்துவிடும், நாமும் நினைக்கமாட்டோம் என்பது நிச்சயம்.

கலவரம் நடந்த தர்மபுரிக்கு நான் போகவில்லை. நீங்கள் போகவில்லையா என்று நண்பர் ஜவஹர் கேட்டார். நான் அவரிடம் கேட்டேன் ; அங்குபோய் புதிதாக என்ன எழுதப்போகிறேன்? சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான கலவரங்களின்போது நான் எழுதிய கட்டுரைகளில் ஊர் பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதும் இப்போது நடந்த தாக்குதல் பற்றிய கட்டுரையாக அது உருமாறிவிடும். அதே நெருப்பு.அதே சாம்பல், அதே கண்ணீர்.அதே ஓலம்.அதே நிர்க்கதியான நிலை. இப்போது வித்தியாசமே இல்லையா?  இருக்கிறது.  அப்போது இருந்ததுபோல அல்லாமல் இப்போது  சாதிப் பெருமிதத்தை கூச்சமில்லாமல் பேசுகிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதுவொரு வித்தியாசம்.தலித் மக்களுக்கான வெளி மேலும் குறுகிவிட்டது. அது இன்னொரு வித்தியாசம்.

தர்மபுரி - என்ற பெயர் முன்னர் வேறொன்றின் குறியீடாக இருந்தது. அது தமிழகத்தின் ஸ்ரீகாகுளம், அது தமிழகத்தின் நக்ஸல்பரி. 1984 இல் இப்போது வீடுகள் எரிக்கப்பட்ட நாய்க்கன்கொட்டாய்- அப்புவுக்கும் பாலனுக்கும் சிலை எழுப்பி அதைத் திறப்பதற்காக ஆயிரக்கணக்கான தோழர்களும் அந்த எண்ணிக்கையைவிட அதிகமாக போலீஸாரும் நிறைந்திருந்த கிராமம்.அங்கு அன்று ஓங்கி ஒலித்த கத்தரின் குரல் இன்னும்கூட அந்த ஊரின் காற்றில் மீந்திருக்கலாம். அவையெல்லாம் பழங்கதைகள். அப்போதேகூட நக்ஸல்பாரி இயக்கம் சாதியை ஒழித்துவிடவில்லை. சாதியை ஒழிப்பது இருக்கட்டும், சாதி உணர்வைக்கூட அது மட்டுப்படுத்தவில்லை.அந்த இயக்கத்தில் இருந்த பலரும் தங்களது பேரை மறைத்தார்கள், ஊரை மறைத்தார்கள் ஆனால் தமது சாதியை மறைக்கவில்லை. நக்ஸல்பாரி இயக்கம் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த சிலரை ஆயுதபாணிகளாக்கி அதன்மூலம் அவர்களது, அவர்கள் சார்ந்த சாதிகளது பலத்தைக் கூட்டியது என்பதுதான் உண்மை. அதில் பலி ஆடுகளாக அழிந்துபோனவர்கள் தலித் இளைஞர்கள்தான். தர்மபுரி பகுதியில் தேநீர்க் கடைகளில் இருந்த தனிக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததன்மூலம் புகழ்பெற்றவர்தான் தோழர் பாலன்.மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அவர் அப்படி செயல்பட்டதால் அப்பகுதி தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்ப்பதில் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னே நிற்கவேண்டும் என்பதற்கு பாலன் தான் உதாரணம் என பேராசிரியர் கல்யாணி பலமுறை பேசக் கேட்டிருக்கிறேன்.ஆனால் அந்த ‘ பாலன் மாடலை’ நக்ஸல்பாரி இயக்கம் வேறெங்கும் பயன்படுத்தவில்லை. அது பாலனோடு ஆரம்பித்து பாலனோடு முடிந்துவிட்டது.நக்ஸல்பாரி இயக்கத்தில் இருந்த பலர் இப்போதைய தாக்குதலில் முனைப்பாகப் பங்கெடுத்தார்கள் என்று அறிந்தேன், அதில் எனக்கு வியப்பெதுவும் ஏற்படவில்லை.அவர்களது பார்வையில் கஞ்சிக்கு வழியில்லாத , கூலிகளான தலித் மக்கள் நிலப்பிரபுக்களாக, தரகு முதலாளிகளாகத் தெரிந்திருக்கலாம்.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து வெளியான பல கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். போன முறை தேர்ந்தெடுக்கப்பட்டது போலன்றி இம்முறை ஒபாமா வெள்ளை இன ஆண்களின் வாக்குகளை மிகவும் குறைவாகவே பெற்றிருக்கிறார். ஆனால் கறுப்பின மக்களும், இனச் சிறுபான்மையினரும், பெண்களும் பெருமளவில் ஒபாமாவுக்கு வாக்களித்திருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அமெரிக்கா நிற அடிப்படையில் பிளவுபட்டு நிற்கிறது. அதற்குக் காரனம் ஒபாமா, தான் பிறந்த கறுப்பின மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கிவிட்டார் என்பதல்ல. சொல்லப்போனால், அவர் கறுப்பின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வெள்ளையர்கள் விரும்பவில்லை. ஒபாமா எதுவும் செய்யாவிட்டாலும்கூட அவர் அமெரிக்க அதிபராக இருப்பதே கறுப்பின மக்களுக்குத் தெம்பைக் கொடுக்கும். தாமும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். தங்களாலும் ஆள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். இது வெள்ளையர்களுக்குப் புரியாதா என்ன? அதனால்தான் அவர்கள் ஒபாமாவை வெறுக்கிறார்கள். அமெரிக்காவிலேயே இப்படியென்றால் இங்கு சொல்லவா வேண்டும்!

தர்மபுரி கலவரம் சொல்லும் செய்தி என்ன ? இந்த நாட்டில் சமூகம் என ஒன்று இல்லை, ஜனநாயகத்துக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னதைத்தான் இந்தக் கலவரம் உறுதிப்படுத்தியிருக்கிறது.சாதி அமைப்பை எதிர்த்த  போராட்டத்தில் தலித்துகளுக்கு சமூகக் கூட்டாளி என எவருமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னார், அது இப்போதும் பொருந்துகிற ஒன்றுதானா என்பதை மனசாட்சி உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
photo courtesy : the hindu

Tuesday, October 23, 2012

வீ.எஸ்.ராஜம் அவர்களுக்கு ரவிக்குமாரின் மறுமொழி

அன்பு ராஜம் அம்மா
நீங்கள் இப்படி  மடல் எழுதுமளவுக்கு உடல் நலத்தோடு இருப்பது கண்டு மகிழ்ச்சி . தமிழகத்தில் மட்டுமல்ல மனிதகுலம் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் ( ஒபாமாவின் அமெரிக்கா உட்பட ) அடிப்படையான தேவைகளுக்கானப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதனால் மற்ற விஷயங்கள் தேவையில்லை என அர்த்தமாகாது. நீங்கள் குறிப்பிடும் சுகாதாரப் பிரச்சனைகளைவிடவும் ஏராளமான உயிரிழப்புகளுக்குக் காரணமாகியிருக்கிறது இந்த சாதி என்ற வைரஸ் .
சாதிக்கேற்ற உணவுகள் இருக்கின்றன, அவற்றை  அந்தச் சாதியினரால் மட்டுமே சிறப்பாகத்  தயாரிக்க முடியும் என்ற வாதம் இன்று பொருந்தாது. செட்டிநாடு உணவகம் என்ற பெயரில் நடத்தப்படும் எந்தக் கடையிலும் ஆச்சிமார்கள் சமைப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் கூட இப்போது Pizza Huts பிரபலம் , சீன உணவான நூடுல்சை நம்ம ஊரில் தெருவோரக்   கடைகளில் கூடப்  பிய்த்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .
தனது சாதியை சொல்லிக்கொண்டால்  என்ன ? என்ற கேள்வி, சாதி அமைப்பின் குரூரத்தை மறந்துவிட்டுக்  கேட்கப்படும் ஒன்றாகத்தான் இருக்கும். இப்படியொரு கேள்வியை அந்த அமைப்பால் நசுக்கப்படும் ஒருவர் ஒருநாளும் கேட்கவே முடியாது.
அன்புடன்

ரவிக்குமார்