Sunday, November 18, 2012

தர்மபுரி எதிரொலிகள்

தர்மபுரி கலவரம் குறித்து அனேகமாக அனைத்து ஊடகங்களும் பதிவு செய்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் துவங்க இருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இனி ஊடகங்களுக்குத் தீனி போட ஆரம்பித்துவிடும் என்பதால் அதன்பிறகு தர்மபுரியை அவை மறந்துவிடும், நாமும் நினைக்கமாட்டோம் என்பது நிச்சயம்.

கலவரம் நடந்த தர்மபுரிக்கு நான் போகவில்லை. நீங்கள் போகவில்லையா என்று நண்பர் ஜவஹர் கேட்டார். நான் அவரிடம் கேட்டேன் ; அங்குபோய் புதிதாக என்ன எழுதப்போகிறேன்? சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான கலவரங்களின்போது நான் எழுதிய கட்டுரைகளில் ஊர் பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதும் இப்போது நடந்த தாக்குதல் பற்றிய கட்டுரையாக அது உருமாறிவிடும். அதே நெருப்பு.அதே சாம்பல், அதே கண்ணீர்.அதே ஓலம்.அதே நிர்க்கதியான நிலை. இப்போது வித்தியாசமே இல்லையா?  இருக்கிறது.  அப்போது இருந்ததுபோல அல்லாமல் இப்போது  சாதிப் பெருமிதத்தை கூச்சமில்லாமல் பேசுகிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதுவொரு வித்தியாசம்.தலித் மக்களுக்கான வெளி மேலும் குறுகிவிட்டது. அது இன்னொரு வித்தியாசம்.

தர்மபுரி - என்ற பெயர் முன்னர் வேறொன்றின் குறியீடாக இருந்தது. அது தமிழகத்தின் ஸ்ரீகாகுளம், அது தமிழகத்தின் நக்ஸல்பரி. 1984 இல் இப்போது வீடுகள் எரிக்கப்பட்ட நாய்க்கன்கொட்டாய்- அப்புவுக்கும் பாலனுக்கும் சிலை எழுப்பி அதைத் திறப்பதற்காக ஆயிரக்கணக்கான தோழர்களும் அந்த எண்ணிக்கையைவிட அதிகமாக போலீஸாரும் நிறைந்திருந்த கிராமம்.அங்கு அன்று ஓங்கி ஒலித்த கத்தரின் குரல் இன்னும்கூட அந்த ஊரின் காற்றில் மீந்திருக்கலாம். அவையெல்லாம் பழங்கதைகள். அப்போதேகூட நக்ஸல்பாரி இயக்கம் சாதியை ஒழித்துவிடவில்லை. சாதியை ஒழிப்பது இருக்கட்டும், சாதி உணர்வைக்கூட அது மட்டுப்படுத்தவில்லை.அந்த இயக்கத்தில் இருந்த பலரும் தங்களது பேரை மறைத்தார்கள், ஊரை மறைத்தார்கள் ஆனால் தமது சாதியை மறைக்கவில்லை. நக்ஸல்பாரி இயக்கம் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த சிலரை ஆயுதபாணிகளாக்கி அதன்மூலம் அவர்களது, அவர்கள் சார்ந்த சாதிகளது பலத்தைக் கூட்டியது என்பதுதான் உண்மை. அதில் பலி ஆடுகளாக அழிந்துபோனவர்கள் தலித் இளைஞர்கள்தான். தர்மபுரி பகுதியில் தேநீர்க் கடைகளில் இருந்த தனிக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததன்மூலம் புகழ்பெற்றவர்தான் தோழர் பாலன்.மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அவர் அப்படி செயல்பட்டதால் அப்பகுதி தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்ப்பதில் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னே நிற்கவேண்டும் என்பதற்கு பாலன் தான் உதாரணம் என பேராசிரியர் கல்யாணி பலமுறை பேசக் கேட்டிருக்கிறேன்.ஆனால் அந்த ‘ பாலன் மாடலை’ நக்ஸல்பாரி இயக்கம் வேறெங்கும் பயன்படுத்தவில்லை. அது பாலனோடு ஆரம்பித்து பாலனோடு முடிந்துவிட்டது.நக்ஸல்பாரி இயக்கத்தில் இருந்த பலர் இப்போதைய தாக்குதலில் முனைப்பாகப் பங்கெடுத்தார்கள் என்று அறிந்தேன், அதில் எனக்கு வியப்பெதுவும் ஏற்படவில்லை.அவர்களது பார்வையில் கஞ்சிக்கு வழியில்லாத , கூலிகளான தலித் மக்கள் நிலப்பிரபுக்களாக, தரகு முதலாளிகளாகத் தெரிந்திருக்கலாம்.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து வெளியான பல கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். போன முறை தேர்ந்தெடுக்கப்பட்டது போலன்றி இம்முறை ஒபாமா வெள்ளை இன ஆண்களின் வாக்குகளை மிகவும் குறைவாகவே பெற்றிருக்கிறார். ஆனால் கறுப்பின மக்களும், இனச் சிறுபான்மையினரும், பெண்களும் பெருமளவில் ஒபாமாவுக்கு வாக்களித்திருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அமெரிக்கா நிற அடிப்படையில் பிளவுபட்டு நிற்கிறது. அதற்குக் காரனம் ஒபாமா, தான் பிறந்த கறுப்பின மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கிவிட்டார் என்பதல்ல. சொல்லப்போனால், அவர் கறுப்பின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வெள்ளையர்கள் விரும்பவில்லை. ஒபாமா எதுவும் செய்யாவிட்டாலும்கூட அவர் அமெரிக்க அதிபராக இருப்பதே கறுப்பின மக்களுக்குத் தெம்பைக் கொடுக்கும். தாமும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். தங்களாலும் ஆள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். இது வெள்ளையர்களுக்குப் புரியாதா என்ன? அதனால்தான் அவர்கள் ஒபாமாவை வெறுக்கிறார்கள். அமெரிக்காவிலேயே இப்படியென்றால் இங்கு சொல்லவா வேண்டும்!

தர்மபுரி கலவரம் சொல்லும் செய்தி என்ன ? இந்த நாட்டில் சமூகம் என ஒன்று இல்லை, ஜனநாயகத்துக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னதைத்தான் இந்தக் கலவரம் உறுதிப்படுத்தியிருக்கிறது.சாதி அமைப்பை எதிர்த்த  போராட்டத்தில் தலித்துகளுக்கு சமூகக் கூட்டாளி என எவருமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னார், அது இப்போதும் பொருந்துகிற ஒன்றுதானா என்பதை மனசாட்சி உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
photo courtesy : the hindu

No comments:

Post a Comment