Showing posts with label tamil brahmi. Show all posts
Showing posts with label tamil brahmi. Show all posts

Wednesday, October 16, 2013

திலிப் சக்ரவர்த்தியுடன் ஓர் உரையாடல் - ரவிக்குமார்

Return to frontpage
ஞாயிறு, செப்டம்பர் 22, 2013
Published: September 22, 2013 17:23 IST Updated: September 22, 2013 19:19 IST

இந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத வேண்டும்! - திலிப் சக்ரவர்த்தியுடன் ஓர் உரையாடல்

ரவிக்குமார்
 
திலிப் சக்ரவர்த்தி 
திலிப் சக்ரவர்த்தி 
 
வெறும் புராணங்களாலும் கட்டுக்கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் தொல்லியலாளர்கள்தான். ஆனால், தமது ஆயுட்காலம் முழுவதும் அந்தத் துறையில் பணியாற்றிப் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இங்கே மறக்கப்பட்டுவிட்டனர். தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே. அந்தக் குறையைப் போக்கும் விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்ரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார்: 'இந்தியத் தொல்லியலின் ஐம்பது ஆண்டுகள்' (Fifty Years of Indian Archaeology ( 1960-2010) - Journey of a foot soldier).
ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டு கால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. இது மணற்கேணி ஆய்விதழுக்காக அவருடன் ரவிக்குமார் நிகழ்த்திய ஓர் உரையாடல்.

தொல்லியல் குறித்து இன்னும் அவ்வளவாக விழிப்புணர்வு ஏற்படவில்லையே? தொல்லியல் ஆய்வுகளை இங்கிருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தோடுதானே அணுகுகிறார்கள்... அயோத்திப் பிரச்சினையில் அப்படித்தானே நடந்தது?
 
நமக்கு் தொல்லியல் குறித்த தீவிரமான பார்வை இல்லை. அயோத்தியை எடுத்துக்கொண்டால், அந்த இடம் முழுவதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. எவரும் அதன் தொல்லியல் முக்கியத்துவத்தை 'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அந்த இடத்தின் மிகச் சிறிய பகுதியின் மீதுதான் கவனம் செலுத்தினார்கள். அயோத்தி ஒரு முக்கியமான தொல்லியல் இடம். அங்கு மௌரியர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சிங்க உருவம் பொறித்த தூண் இருக்கிறது. அது சாரநாத் தூணைப் போன்றது. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இந்திய வரலாறு குறித்து மாறுபட்ட பார்வை உருப்பெறக் காரணமாக இருந்த இடதுசாரி சார்பு வரலாற்று அறிஞர்களை நீங்கள் உங்கள் நூலில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கருத்து என்ன? வலதுசாரி வரலாற்று ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது அவர்கள் நல்லவர்கள் என்று தோன்றவில்லையா?
 
அடிப்படையில் அதுவோர் அதிகார விளையாட்டு. இந்திரா காந்தி காலத்திலிருந்து இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மிகப்பெரும் செல்வாக்குடன் இருந்துவருகிறார்கள். குறிப்பாக, தில்லியில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் அதிகார நாட்டம் கொண்டவர்கள். அவர்களுக்கு வரலாற்று ஆராய்ச்சி மீது அவ்வளவாக ஆர்வம் கிடையாது. அவர்களில் பலர் வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவர்கள். வலதுசாரி சார்புகொண்ட வரலாற்றாசிரியர்களும்கூட அப்படித்தான். இந்த நாட்டில் கல்வித் துறையில் நடந்த மிகப் பெரும் அறிவுத்துறை சீர்கேடு வரலாற்று ஆய்வுகளில் நடந்த சீர்கேடுதான். அவர்களோடு அனுசரித்துப்போகாததால் நான் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமாசெய்யுமாறு அவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
தில்லியில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களுக்கு உண்மையான வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபாடு கிடையாது. பல்கலைக்கழகம் என இருந்தால் அங்கே ஒருங்கிணைந்த அருங்காட்சியகம் ஒன்று இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்கூட அப்படியான அருங்காட்சியகம் கிடையாது. அங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு அதில் ஆர்வம் வரவில்லை?

அயல்நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் நூலில் எழுதியிருக்கிறீர்களே, ஏன்?
 
இந்தியாவின் தொல்பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளில் எனக்கிருக்கும் அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன். முதலாம் உலகம் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைப் பார்க்கும் விதம் அப்படி இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமது சொந்த நாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. அடிப்படையில் அவர்கள் இனவாதப் பார்வை கொண்டவர்கள். நான் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். தெற்காசியத் தொல்லியல் ஆய்வுகளுக்கென ஒரு ஐரோப்பிய அமைப்பு உள்ளது. அதில் தெற்காசியாவைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. கேம்ப்ரிட்ஜில் அதைப் போலவே ஓர் அமைப்பு இருக்கிறது. அது வெளிப்படையாகவே ஐரோப்பியர்களுக்கென செயல்பட்டுவருகிறது. அதிலிருந்து நிதி முதலான உதவிகளைப் பெறுபவர்களாகவே இந்தியத் தொல்லியலாளர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து அவர்களுக்கு முக்கியமில்லை.

இது அவர்களின் இனவாதப் பார்வையின் விளைவா அல்லது வேறு காரணங்களும் இருக்கின்றனவா?
 
பெரும்பாலும் இனவாதப் பார்வைதான் காரணம். அதைவிடவும் இது மூன்றாம் உலக நாடுகள் மீதான அதிகாரம் தொடர்பான விஷயமாகவும் இருக்கிறது. அறிவே அதிகாரம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்களது அறிவே மிகப்பெரும் அறிவு என அவர்கள் மற்றவர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.

இதேமாதிரியான குற்றச்சாட்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்த ஆய்வுகள் தொடர்பாகவும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது... 

அவர்களுக்கு உள்ளூர் அறிஞர்கள் ஒரு பொருட்டே இல்லை. நாம் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களை எச்சரிக்கையோடு பார்க்கத் தொடங்கினால்தான் அவர்கள் இங்கிருப்பவர்களுக்கு மரியாதை தர முன்வருவார்கள். அதை நாம் செய்யவில்லை. அது நம் தவறு.

தொல்லியல் துறை சார்ந்து மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்களா? 

கலை வரலாற்று ஆராய்ச்சியில் நடப்பதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. தொல்லியல் துறையில் நடப்பதைத்தான் சொல்கிறேன். அதில் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பேராசிரியர் ராஜன் அவர்கள் மேற்கொண்டு இருக்கும் பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
 
பேராசிரியர் ராஜன் மேற்கொண்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. அவர் தனது அகழாய்வில் கண்டெடுத்தவை சாதாரண மக்களும் கல்வியறிவு பெற்றிருந்ததைக் காட்டுகின்றன. அப்படியான எழுத்துப் பொறிப்பைச் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு மொழி வளர்ச்சியடைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே அங்கு எழுத்தறிவு இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த மக்கள் பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
வட இந்திய வரலாற்றுக்கும் தென்னிந்திய வரலாற்றுக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இதுவரை இந்திய வரலாறு வடக்குப் பகுதியிலிருந்து ஆரம்பித்தது என்றே என்ணப்பட்டுவந்தது. இனி நாம் இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் தொடங்கி ஆராய வேண்டும்.

தென்னிந்தியாவில் நெல் பயிரிடப்பட்டதன் வரலாற்றை எவ்வளவு முயற்சித்தாலும் கி.மு.3000க்கு முன்னே கொண்டுபோக முடிய வில்லை என உங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?
 
துரதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கும் சான்றுகள் அப்படி இருக்கின்றன. அதைப் பற்றி இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்பட வேண்டும். அப்போது ஒருவேளை இந்த நிலைப்பாட்டை மாற்றக்கூடிய சான்றுகள் நமக்குக் கிடைக்கக்கூடும்!

* ரவிக்குமார், எழுத்தாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

Sunday, November 25, 2012

தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்


Ancient Monuments and Archaeological Sites and Remains Rulesக்கு ஏற்ப The Tamil Nadu Minor Minerals  (Concession) Rules, 1959 திருத்தப்பட்டதா ? 


தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குறித்து 2010 மே மாதத்தில் ரவிக்குமார்  சட்டப் பேரவையில் வினா எழுப்பிப் பேசியது  : 




6-5-2010
வினாக்கள்-விடைகள்
147-
கல்வெட்டுகள்
*121584-திரு. து. ரவிக்குமார்:
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள இடத்தில் 400 மீட்டர் வரை கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் விலக்கியதால் கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள மலைப் பகுதிக்கு அருகில் 300 மீட்டர் வரையுள்ள பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு பேரவைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.
திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே 31 ஊர்களில் 90 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன. இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தினுடைய காலத்தை வரையறுப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களாக இருப்பவை இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான். இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 1966 ஆம் ஆண்டிலே கொண்டு வந்த சட்டத்தில், 300 மீட்டர் வரையிலே கல் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது, கட்டடங்களை எழுப்பக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தாலுங்கூட, அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே, அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தொன்மைவாய்ந்த அந்த இடங்கள் அழிகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.  இதனால், தமிழினுடைய தொன்மையே கேள்விக்குறியாக மாறுகின்ற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகின்ற இந்த நேரத்திலே, அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன். 
முற்பகல் 10-15
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள். 
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே இந்த மன்றத்திலே இதுசம்பந்தமான ஒரு துணைக் கேள்விக்கு நான் விரிவாக விடையளித்திருக்கின்றேன்.  அரசைப் பொறுத்தமட்டில், இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளிலிருந்து 100 மீட்டர் வரையிலும் prohibited area, அதற்கு மேலே ஒரு 200 மீட்டர் regulated area  என்ற வகையிலே, protected areaவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிடுவதைப்போல, கோர்ட் தீர்ப்பு இப்போது அரசுக்குச் சாதகமாக இல்லை.  இருந்தாலுங்கூட, அதன் தொடர்பாக appeal செய்வதற்காக நமது Director of Geology and Miningசார்பில் அதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலே குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டு, அத்தகைய பகுதி முழுவதுமாக, அந்த entire site  முழுவதுமாக protected monument  ஆக நாம் அறிவித்தால்தான் இதைக் காப்பாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று குழுவினுடைய சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.  இவற்றையெல்லாம் கருத்திலேகொண்டு நம்முடைய அரசு துறை ரீதியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார். 
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற திருவாதவூர், கழுகுமலை, கீழவளவு, மேலகுயில்குடி, முத்துப்பட்டி, பொங்கார் புளியங்குளம் போன்ற எல்லா இடங்களிலுமே இன்றைக்குக் கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்டு, அந்தக் கல்வெட்டுகளில் சிதைவு ஏற்படுகிற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இப்போது அந்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கல் குவாரியை நடத்துகிறவர்கள் இந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிற ஓர் ஆபத்து இருக்கிறது. எனவே, இந்த ஆபத்தை உணர்ந்து, உடனடியாக இதிலே செயல்படுமாறு தங்கள் வாயிலாக நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். 
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள். 
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசும் அந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறது. நான் இன்னும் இந்த அவைக்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய மதிப்பிற்குரிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய தலைவி, பெருமதிப்பிற்குரிய அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்கள், இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், இத்தகைய சமணப் படுக்கைகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு அவர்களே நேராக எடுத்துச் சென்று, தலைவர் கலைஞர் அவர்கள் அவர்களுக்கு நேரடியாகக் கடிதமும் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய விஷயங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அம்மையார் அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  The Tamil Nadu Minor Minerals  (Concession) Rules, 1959 - â¡ð¶AMASAR â¡Aø Ancient Monuments and Archaeological Sites and Remains Rules என்ற அந்தத் துறையினுடைய சார்பாக இருக்கக்கூடிய விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. It is not in conformity with AMASAR Rules எனவே, இந்த நிலையில் அதற்குத் தேவையான திருத்தங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  நம்முடைய உயர் கல்வித் துறையின் சார்பாக ஒரு குழுவும் அதற்காக அமைக்கப்பட்டு, அத்துறையும் அதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.  தேவையான நடவடிக்கைகளை அரசு இந்த விஷயத்தில் உறுதியாக எடுக்கும் என்பதை நான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ் பிராமியா ? தமிழியா ?



தமிழக சட்டப்பேரவையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்தும் அவற்றைக் காப்பாற்றவேண்டியதன் தேவை குறித்தும் 2010 ஆம் ஆண்டில் நான் பேசியது: 

28-4-2010

                          வினாக்கள்-விடைகள்

வினா வரிசை எண் 119-க்கான துணை வினா

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தளவிலே, இந்தப் பெயர் ஒரு பிரெஞ்ச் அறிஞரால் சொல்லப்பட்டு, அதுவே இன்றைக்கு நடைமுறையிலே இருக்கிறது. திரு. சே. ராசு போன்ற கல்வெட்டு அறிஞர்களெல்லாம் இதை தமிழிக் கல்வெட்டுகள் என்றும், பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும்தான் அழைக்க வேண்டும்; தமிழ்ப் பிராமி என்று அழைப்பது சரியல்ல என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக, இந்தக் கல்வெட்டுகள் குகைகளிலும், அதிலும் குறிப்பாக சமணப் படுக்கைகள் இருக்கும் இடங்களிலே அமைந்திருக்கின்ற நிலையில், இன்றைக்கு சுரங்கத் துறையின் அனுமதி பெற்று கல் குவாரி எடுப்பவர்கள், அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற இடங்களுக்கு மிக அருகில் கல் குவாரிகளை எடுக்கும்போது, அந்தக் கல்வெட்டுக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை இருக்கிறது.  இன்றைக்கு இந்தியத் தொல்லியல் துறை, 400 மீட்டர் தூரத்திற்கு அருகிலே அந்தக் கல் குவாரிகளை அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.  ஆனால், 50 மீட்டர் அளவு வரை எடுக்கலாம் என்று ஓர் அரசு உத்தரவு இருக்கின்ற நிலையைச் சுட்டிக்காட்டி, கல் குவாரி உரிமையாளர்கள் அந்தக் கல்வெட்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்ற நிலை இருக்கிறது.  அண்மையிலே உயர் நீதிமன்றத்திலேகூட அந்த வழக்கு வந்திருக்கிறது.  இதைக் கவனத்தில் கொண்டு நம்முடைய அரசு, இந்தியத் தொல்லியல் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள உத்தரவுப்படி 400 மீட்டர் வரைக்கும், அந்தக் கல்வெட்டுகள் இருக்கின்ற இடங்களுக்கு அருகிலே கல் குவாரிகளை அனுமதிப்பதில்லை என்ற ஒரு நிலையை எடுக்க முன்வருமா என்பதைக் கேட்டு அமைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிராமி எழுத்துகளைப் பொறுத்தமட்டில், சிந்து எழுத்துக்களுக்குப் பிறகு இந்திய எழுத்துகளில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்ற வகையில், அவை பிராமி எழுத்துகள் என்ற வகையில் அழைக்கப்படுகின்றன.  அவற்றில் அசோகன் காலத்தில் உருவாக்கப்பட்ட அசோகன் பிராமி, அதற்குப் பிறகு மௌரிய பிராமி, பட்டுப் புரோலு பிராமி என்று வருகிறபொழுது, தமிழகத்தில் இருக்கக்கூடிய பிராமிக் கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.  அவர் சொன்னதைப்போல, அதைத் தமிழி என்று அழைக்க வேண்டும் என்று சில அறிஞர்களிடத்திலே கருத்து இருப்பது உண்மை.  இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமண, பௌத்த நூல்களான ‘லலித வஸ்தர’, ‘பண்ணவான சுத்த’ போன்ற பல்வேறு நூல்களிலேகூட, இது தமிழி அல்லது திராவிடி என்று அழைக்கப்பட வேண்டுமென்று குறிப்புகள் இருக்கின்றன.  இருந்தாலும், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் தமிழ்ப் பிராமி என்றே அழைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் நிறுவியிருக்கிறார்கள்.  எனவே, நம்முடைய அறிஞர்களின் அந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் தொடர்ச்சியாக தமிழ்ப் பிராமி என்ற முறையிலேயே தொல்லியியல் துறையிலும் அழைப்பதை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 
அடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  பல்வேறு பிராமி’ கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களிலே, கனிமத் துறையின்மூலமாக அங்கே சுரங்கங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறபோது, அந்தப் பிராமிக் கல்வெட்டுகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  1966 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீட்டர் தள்ளியிருக்கக்கூடிய பகுதி prohibited area அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு மேலே 200 மீட்டர் என்பது, regulated area  என்று கொடுத்திருக்கிறார்கள்.  அதற்குள்ளாக எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது.  ஆனால், சில இடங்களிலே இதற்கு மேலாகச் செய்யக்கூடிய கல் குவாரி பணிகளினால், மொத்தமாக இந்தப் பிராமி கல்லெழுத்துகள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு,  அங்கே இருக்கக்கூடிய கற்சிலைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது.  எனவே, இதைத் தடுக்க வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில், கடந்த 19–6–2009 அன்று நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையிலே ஒரு முக்கியமான கூட்டம் கூட்டப்பட்டு, பல்வேறு துறைத் தலைவர்களோடு இது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகள், சிலைகள் அமைந்திருக்கக்கூடிய முழு மலைப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தால், இவற்றைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கக்கூடிய காரணத்தினால், தொல்லியல் துறையின் சார்பாக அதைச் செய்வதற்கு முழுமையான முயற்சிகளை இப்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையைப் பெற்று அவற்றைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தத் துறை மேற்கொண்டிருக்கிறது. 

Thursday, October 18, 2012

' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 '





அன்புடையீர் வணக்கம் 

தமிழ் நாடு தொல்லியல் துறை துவக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன ( 1961 - 2011). அந்தத் துறையாலும் அத்  துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாலும் தமிழகத்தில் பல்வேறு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டு அவற்றில் பல  பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகளின் விளைவாகத் தமிழின் தொன்மை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு இவை பெருமளவில் பங்களிப்பைச்  செய்திருக்கின்றன. 

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் அறியப்பட்டிருந்தாலும்  போதுமான நிறுவன ஆதரவுகளைப் பெறுவதிலும் புதிய ஆய்வாளர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு சிக்கல்களை இத் துறை சார்ந்த அறிஞர்கள் சந்தித்து  வருகின்றனர். 
 
தொல்லியல் துறையில் நிகழ்ந்துவரும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பிற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத காரணத்தால் இந்தத் துறைகளுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழவில்லை. இதனால் ஒருங்கிணைந்த விதத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு , பண்பாடு முதலானவற்றை ஆராய்வதில் பின்னடைவு காணப்படுகிறது. புதிய ஆய்வாளர்கள தொல்லியல் துறை நோக்கி வராமல் போவதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது. 

இந்த நிலையை மாற்றி தமிழகத் தொல்லியல் , கல்வெட்டியல் துறைகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மணற்கேணி எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. இத் துறையைச் சேர்ந்த அறிஞர்களான  திரு. நடன. காசிநாதன், பேராசிரியர் விஜய வேணுகோபால் , பேராசிரியர் கா.ராஜன், பேராசிரியர் சு.ராஜவேலு உள்ளிட்டப் பலரது கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் குறித்தும் பதிவுகளைச் செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 
'  தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 ' என்னும் தலைப்பில்  ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது . 24.11.2012  சனிக்கிழமை அன்று  பாண்டிச்சேரியில் இந்த ஆய்வரங்கு நடைபெறும். 

இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்  தங்களது ஒப்புதலை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எனது அலைபேசியில் ( எண் 9443033305 ) தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 

அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 


காலை துவங்கி மாலை வரையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு  ஆய்வுரை  வழங்கிச்  சிறப்பிக்குமாறு அழைக்கப்பட இருப்பவர்கள் : 

திரு.ஐராவதம் மகாதேவன்  , திரு.ஒய் .சுப்பராயலு , திரு.இரா.நாகசாமி , திரு.எஸ்.ராசு   , திரு.விஜய வேணுகோபால் , திரு.நடன.காசிநாதன் , திரு.கா.ராஜன் , திரு.தயாளன் , திரு.சு.ராஜவேலு ,திரு. எஸ் . சாந்தலிங்கம் , திரு. கலைக்கோவன் 

Saturday, October 1, 2011

மணற்கேணி 8 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது.

மணற்கேணி 8 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி சங்க காலத்தை வரலாறு இலக்கியம் தொல்லியல் ஆகிய தளங்களில் ஆராய்கிறது .

புகழ்பெற்ற வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்ன் அவர்கள் தமிழக வரலாறு குறித்து எழுதிய கட்டுரை ; புதிய நோக்கில் சங்க இலக்கியப் பிரதிகளை ஆய்வுசெய்யும் ராஜ் கௌதமனின்  கட்டுரை; தமிழகத்தில் நடந்த அகழ்வாய்வுகளின் பின்னணியில் ' தமிழ் பிராமி ' வரலாற்றை ஆராயும் முனைவர் ராசவேலுவின் ஆய்வுக் கட்டுரை; பொருந்தல் அகழ்வாய்வு குறித்த பேராசிரியர் கா .ராஜனின் நேர்காணல் ; அங்கு கிடைத்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு பற்றி நடன காசிநாதன் அவர்களின் கட்டுரை; 'வயிர' என்பது பிராகிருதச் சொல்லின் மொழிபெயர்ப்பா என்று ஆராயும் பேராசிரியர் கார்த்திகேயன் அவர்களின் புதிய நோக்கிலான ஆய்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஈழத்துப் படைப்பாளிகள் சித்தாந்தன் , தவ.சஜிதரன் ஆகியோரது கவிதைகள்; பழந்தமிழ் இலக்கியம் , இலக்கணம் குறித்து பண்டிதர் நாகலிங்கம் அவர்களின் நீண்ட நேர்காணல் ; சிவா சின்னப்பொடியின் தனவரலாற்றுத் தொடர் ஆகியவற்றோடு பரமக்குடியைப் பற்றிய ரவிக்குமாரின் மூன்று கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. 

நினைவு தப்பிப் போன அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைக் கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் நுட்பமாக விவரிக்கும் தேன்மொழியின் சிறுகதை இந்த இதழின் சிறப்பு அம்சங்களில் ஓன்று. 

புதுச்சேரியில் இருக்கும் கல்லறைகளில் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டுகளைப் பற்றி முனைவர் விஜய  வேணுகோபால் அவர்களும்; தாராசுரம் கோயிலில் இருக்கும் புத்தர் சிலை குறித்து ரவிக்குமாரும் எழுதியிருக்கும் கட்டுரைகள் புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பவை. 

நம் காலத்தில் எதிர்ப்பு என்பது சாத்தியம்தானா என்ற கேள்வி நம்  எல்லோரது மனதிலும் எழுந்துள்ள இன்றைய சூழலில் அதற்குப் பதில் சொல்லும் விதமாக மிஷேல் பூக்கோ எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது. 

தனி இதழ் : 40 ரூபாய் 
ஆண்டு சந்தா :  240 ரூபாய் 
இதழ்  வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com