Sunday, December 5, 2010
மழை வெள்ளம் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனோபாவம்
மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டால் அவற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்படுவதை நாம் அறிவோம் . இந்த நிவாரணத்தை மாநில அரசுகள் வழங்கினாலும்கூட அதற்கான தொகையை மத்திய அரசு மாநில அரசு இரண்டும்தான் பகிர்ந்தளிக்கின்றன. இதற்காக பேரிடர் மேலாண்மை நிதி என ஒன்றை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.
பேரிடர் மேலாண்மை நிதி (calamity relief fund) என்பது மத்திய உள்துறை அமைச்சரின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படுவதாகும்.அதுகுறித்த அரசாணையில் இயற்கைப் பேரிடர்கள் எவையெவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றுக்கு எந்த அளவுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பதையும் வரையறை செய்திருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டில் எழுபத்தைந்து விழுக்காட்டை மத்திய அரசும் இருபத்தைந்து விழுக்காட்டை மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வதென ஏற்பாடு. ஆனால் மத்திய அரசு போதுமான நிதியை மாநிலங்களுக்கு அளிப்பதில்லை. ஒரு ஆண்டில் ஏற்படும் நட்டத்தில் சுமார் பத்து விழுக்காடு அளவுக்கே மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதுகுறித்து கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகள் அதிருப்தியை வெளியிட்டன. அதுமட்டுமின்றி பேரிடர் காலத்தில் வழங்கவேண்டிய இழப்பீட்டின் அளவை உயர்த்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. குறிப்பாக பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மழை வெள்ளத்தால் சேதமடையும் பயிர்களுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்று கேட்டார். தற்போது ஏக்கருக்கு ஆயிரத்து அறுநூறு ரூபாய் மட்டுமே வழங்கவேண்டும் என மத்திய அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசு தற்போது ஏக்கருக்கு மூவாயிரம் ரூபாய் வழங்குகிறது. அதாவது ஹெக்டேருக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுக்கிறது. மாநில அரசுகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பேரிடர் நிவாரண நிதி மட்டுமின்றி அவசர காலத்தில் உதவுவதற்கென தேசிய பேரிடர் அவசர நிதி ( national calamity contingency fund) என ஒன்றையும் மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ளது. அந்த நிதியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருமழையின் போது 1132 கோடி வழங்கப்பட்டது. அப்போதிருந்த அ.தி.மு.க அரசு அதைக்கொண்டுதான் வெள்ளப்பகுதிகளில் குடும்பத்துக்கு இரண்டாயிரம் என வழங்கியது.
அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் தமிழகத்தைத் தாக்கிய நிஷா புயலால் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பன்னிரெண்டு கரையோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் பன்னிரெண்டு லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஆறு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சேதமடைந்தன. இருநூற்று ஐந்து பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு பேரிடர் அவசர நிதியிலிருந்து 3789 கோடி வழங்கவேண்டும் எனக் கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. உள்துறை அமைச்சக இணைச் செயலர் தலைமையில் மத்திய அதிகாரிகள் குழு நேரடியாக வந்து சேதங்களைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு 523 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பீகாருக்கு 1000 கோடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
வடமாநிலங்களில் ஏற்படும் சேதம் குறித்து மத்திய அரசு காட்டுகிற அக்கறையைத் தமிழகத்தின்மீது எப்போதும் காட்டுவதில்லை. அங்கு வெள்ளம் என்றால் உடனே பிரதமர் போவார், முக்கிய அமைச்சர்கள் போவார்கள். ஆனால் இங்கு வந்து அவர்கள் பார்வையிட்டதில்லை. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனோபாவத்துடனேயே அவர்கள் அணுகுகிறார்கள். இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குறைகூறுவதில் காட்டும் அக்கறையை இப்படியான பிரச்சனைகள் மீது காட்டுவதில்லை. குறிப்பாக தமிழ்த் தேசிய இயக்கங்கள் இவைகுறித்து போதுமான கவனம் செலுத்துவதில்லை. தற்போது இந்திய உள்துறை அமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இருக்கிறார்.அவராவது தமிழகத்துக்குக் கூடுதல் நிதி தேவை என்ற நியாயத்தை எடுத்துச் சொல்லக்கூடாதா?
இந்த ஆண்டாவது இந்த பாரபட்சம் மாறுகிறதா எனப் பார்ப்போம்.
(இந்தப் புகைப்படங்கள் நந்திமங்கலம் என்ற கிராமத்தில் நான் எனது மொபைல் போன் மூலம் எடுத்தவை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment