தமிழர் இறையாண்மை மாநாட்டில்
தொல்.திருமாவளவன் ஆவேசம்!
மாலை 6 மணியளவில் மாநாட்டுக் கொடியை தொல்.திருமாவளவன் ஏற்றி வைத்ததையடுத்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு சிறப்பு மலரை தொல். திருமாவளவன் வெளியிட,
கி. வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐ.நா. அவை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழர்க் கொடியை கி.வீரமணி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
லட்சக் கணக்கானோர் திரண்டிருந்த தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நெருங்குகிற சூழலில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாக தமிழகமெங்கும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இந்த மாபெரும் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். தனித்தமிழ்நாடு வேண்டுமென்று கோருகிற மாநாடாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறார்கள் என்று சிலர் கருத்துப் பரப்பி உள்ளனர். எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்பதும், விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் சிலருடைய விருப்பமாக இருக்கிறது. அதனால் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைத் திசைதிருப்புகிற வகையில் இவ்வாறு வதந்திகளைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. ஆனால் அவ்வாறு கோருவதற்கு காரணங்களும் தேவைகளும் இருப்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், ""கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்று கூறினார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கோரிக்கையை கைவிடவுமில்லை. கோருவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த உலகில் தமிழருக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்றும், அதனைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோருவதே இம்மாநாட்டின் முதன்மையான நோக்கம். ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களது பூர்வீகத் தாயகமாகும். அதனை அங்கீகரிக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில்தான் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற கொள்கை முழக்கங்களை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அதனை உலகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது. அதன் வெளிப்பாடாகவே இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்.
தமிழீழம் வேண்டுமென்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரிய கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குமான கோரிக்கை. இந்திய இறையாண்மை என்கிற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழ்த் தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டுமென்பதே நமது கோரிக்கையாகும். தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையையும் மதிக்கிறோம் என்றே பொருளாகும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுகிறவர்களும் கணிசமாக வாழ்கின்றனர். குறிப்பாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழி உரிமை, கலாச்சார உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடுதான் அவர்களுக்குத் தாயகமும் ஆகும். இந்நிலையில் தமிழர் இறையாண்மை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையாகும். என்றாலும் தமிழகத்தில் வாழும் அனைவருக்குமான இறையாண்மையாகவும் அமையும். அதாவது தமிழக அரசின் இறையாண்மையையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.
மாநில அரசுகளின் அதிகாரங்களிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகளும் தலையீடுகளும் இருக்கக் கூடாது. இன்று நிலைமை அவ்வாறு இல்லை. மாநில அரசுகளின் உரிமைகளை இந்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசின் ஏஜெண்டுகளாகவே மாநில அரசுகளை இந்திய அரசு நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநில அரசுக்குமான இறையாண்மையோடு மத்தியில் ஒரு கூட்டாட்சியை இங்கு உருவாக்க வேண்டும். இந்திய அரசு தற்போது பல கட்சிகளின் கூட்டணி அரசாக இயங்குகிறது. ஆனால், அது கூட்டரசாக இயங்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையாகும். ஆனால், காவல்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளிலும் இந்திய அரசின் மேலாண்மையே மேலோங்கி இருக்கிறது. அண்மையில் தேசியப் புலனாய்வுக் கழகம் என்ற ஓர் அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. இது மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும். மருத்துவக் கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிக்கிற வகையில் இந்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதுவும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இந்த அமைப்பையும் உடனடியாகக் கலைக்க வேண்டும் என்பதுடன் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறபோதே மாநில அரசுகள், மத்திய அரசின் ஏஜெண்டுகளாக இருக்க முடியாது என்று புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதிகாரங்களை மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என்று வகைப்படுத்தியிருக்கிறார். பொதுப்பட்டியல் என்றால் அவை முழுவதும் மத்திய அரசுக்கே உரியது என்று இந்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில் பொதுப்பட்டியல் என்ற பட்டியலையே நீக்கிவிட்டு அதிலுள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ளதுபோல் மாநில அரசுக்கு என்று மாநிலக் கொடி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் மாநிலக் கொடிகளை கோட்டையில் ஏற்ற வேண்டும். சனவரி 26 குடியரசு நாளில் மட்டும் இந்திய அரசின் கூட்டரசாக தேசியக் கொடியை ஏற்றலாம். ஆளுநர் பதவியை இந்திய அரசு, மாநில அரசுகளைக் கண்காணிக்கும் ஒரு கங்காணியாகவே நடத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களே பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையிலும் தேசிய இனச் சிக்கல் தொடர்பான பிரச்சினைகளிலும் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்துபேசித்தான் முடிவெடுக்கவேண்டும். ஈழ விவகாரத்தில் தமிழக அரசுடன் அல்லது தமிழக மக்களுடன் கலந்துபேசாமல் இந்திய அரசு முடிவுகளை எடுத்தது. சிங்கள வெறியர்களை ஆதரித்தது. இது தமிழர் இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.
இவ்வாறு மாநில அரசுகளின் உரிமைகளைக் கோருவது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டின் மூலம் தோழமையுடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். உழைக்கும் ஏழை எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கிற டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணற்ற நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக நடத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். அதே வேளையில் இளைய தலைமுறையினரைப் பாழ்படுத்துகின்ற மதுக் கடைகளை மூட வேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழகத்தின் நீர்வளத்தை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் காரணத்தால் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மணல் பயன்பாட்டிற்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழக நிலவளங்களைப் பாதிக்கச் செய்வதுடன் நீர் ஆதாரத்தையும் பாதிக்கிற வகையில் தமிழகமெங்கும் வேலிக் கருவைக் காடுகளை முற்றிலுமாக ஒழித்திடச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
காந்தியடிகளை தேசத் தந்தை என்று போற்றும் காங்கிரசார் மதுவிலக்குக் கொள்கையை ஏன் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்கக் கூடாது. மதுவிலக்குத் தொடர்பாக தேர்தல் முடிந்த கையோடு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இந்தத் தேர்தலில் திமுகவுடன் தேர்தல் கூட்டணி தொடரும். விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றாக வேண்டும். 2011ஆம் ஆண்டை விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்று நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். தை முதல் நாள் அன்று 2011ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே இனிப்புகள் வழங்க வேண்டும். கடந்த 6 மாத காலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை 45 இலட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களைத் தீவிர உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். தமிழகமெங்கிலும் 20 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பேரியக்கமாக நாம் வளர்ந்திருக்கிறோம். தலித்துகளின் விடுதலையும் தமிழீழ விடுதலையும் நமது முதன்மையான இலட்சியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி களப்பணியைத் தொடருவோம்.
நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment