ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் பற்றிய புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் waking is another dream என்ற நூலை வெளியிட்டுள்ளோம். அதுகுறித்த தகவலை மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டபோது நான் பெரிதும் மதிக்கும் ஈழத்துக் கவிஞரும் மொழியியல் அறிஞரும் ஆன எம்.ஏ .நுஃமான் தனது கவிதை ஒன்றை எனக்கு அனுப்பித் தந்தார்.அதை வாசித்த நான் அவருக்கு எழுதிய மடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்:
"தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் இந்தப் பிரச்னையை மிகவும் கவனமாக அணுகவேண்டியுள்ளது. ' தோற்றவர்களைப் பழித்தல் ' என்ற நிந்தனைக்கு நாங்கள் ஆளாகிவிடக் கூடாது . அங்கிருக்கும் நீங்கள் விமர்சனத்தோடு அணுகும் உரிமையைப் பெற்றிருப்பதுபோல நாங்கள் பெற்றிருக்கவில்லை.......
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட நிகழ்வு பலவற்றை மாற்றி அமைத்துவிட்டது. அந்த நிகழ்வுக்கு முன் , ஜனநாயகம் என்பதைப் பெயரளவிலாவது ஏற்றுக்கொண்டிருந்த அரசுகள் வெளிப்படையாகப் பயங்கரவாதத்தை கைக்கொள்ள முடியாமல் தவித்து வந்தன. அத்தகைய நாடுகளில் செயல்பட்ட ஆயுதக் குழுக்கள் ஒரே சமயத்தில் ஒரு அரசாகவும் எதிர்ப்புக் குழுவாகவும் செயல்பட்டு எவ்வித கேள்விமுறையும் அற்ற அதிகாரத்தைச் செலுத்தி வந்தன. அவற்றைக் கட்டுப்படுத்த எவ்வித ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. அதாவது அரசுக்கு இருந்த கட்டுப்பாடுகள்கூட ஆயுதக் குழுக்களுக்கு இல்லை. எனவே ஒப்பீட்டளவில் அரசைவிடவும் ஆபத்தான அதிகார அமைப்புகளாக ஆயுதக் குழுக்கள் செயல்பட்டுவந்தன. ஆனால், செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு நிலைமை மாறியது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் ஆட்சியாளர்கள் வரம்பற்ற அதிகாரத்தைக் கையிலெடுத்தார்கள். ஜனநாயக முகமூடிகள் தேவையற்றுப் போயின. ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதாகச் சொல்லி தமது மக்கள் மீதே வெளிப்படையான வன்முறையை அரசுகள் ஏவின. ஆயுதக் குழுக்கள் சொந்த நாடுகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அவற்றை மட்டுப்படுத்த ஐ .நா முதலான் சர்வதேச அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. அதாவது , அரசு மீண்டும் வலிமை பெற்று கொடுங்கோல் வடிவம் எடுத்தது. ஆயுதக் குழுக்கள் யாவும் பயங்கரவாதக் குழுக்கள் என்ற முத்திரையைப் பெற்றன.
இனிமேல் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது. ஈழத்தில் நடந்த நிகழ்வுகளிலிருந்து நாம் அனைவருமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு ஆழமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது முன்தேவையாக இருக்கிறது. "அதற்கு அவர் எழுதிய பதிலில்
"ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய சரியான ஒரு விமர்சனம் இல்லாமல்தமிழர்களின் அரசியல் தொடர்ந்தும் தற்கொலை அரசியலாகவே இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன். ஆயுதப் போராட்டங்கள் பற்றி மீள் பரிசீலனை செய்யவேண்டிய ஒரு வரலாற்று நிர்ப்பந்தமும் நமக்கு இருக்கிறது. துப்பாக்கிக் குழாயில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று மாவோ சொன்னார். ஆனால் அதே குழாயில் இருந்துதான் அடிமைத்தனமும் பிறக்கிறது."
என்று குறிப்பிட்டிருந்தார் . இந்தக் கவிதையின் நிலைப்பாட்டில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. எனினும் இந்தக் கருத்து விவாதிக்கப்படவேண்டும் என்ற விதத்தில் இக்கவிதையை அவரது ஒப்புதலோடு இங்கே தருகிறேன்.
மரித்தோரின் ஆன்மா
- எம்.ஏ .நுஃமான்
சிங்கமும் புலியும்
கடித்துக் குதறிய
மனிதத் தசையும்
குருதியும்
எலும்புக் குவியலும்
சிதறிக் கிடக்கின்றன களமெங்கும்
தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது
இதயம் கிழிந்துபோயிற்று
உணர்வு மரத்துவிட்டது
நீ கேட்கிறாய்
யார் போர்க் குற்றவாளி என்று
கடவுளே,
இந்த விலங்குகளிடமிருந்து
எங்களை ஏன் உன்னால் காப்பாற்ற முடியவில்லை
என்று புலம்புகின்றது
மரித்தோரின் ஆன்மா
No comments:
Post a Comment