Thursday, December 30, 2010

கடிதங்கள் வரலாற்று ஆவணங்கள்



கடிதம் எழுதும் பழக்கம்  கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடையே குறைந்து வருவதை நாம் அறிவோம் . கடிதங்கள் வரலாற்று ஆவணங்கள் மட்டுமல்ல அவை அக கால கட்டத்தின் கலாச்சார நடவடிக்கைகளின் பதிவுகளாக இருப்பதால் மானுடவியல் நோக்கிலும் முக்கியமான தரவுகளாக உள்ளன. 
மனித அபிலாஷைகள் அதில் பதிவாகின்றன . ஒரு மகன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் பாசத்தின் கவிதையாக இருக்கிறது. தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் அறிவுரைகளின் தொகுப்பு. நண்பர்கள் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் பிரத்யேகமான உலகங்களின் வாசல்கள் . காதல் கடிதங்கள் பற்றி சொல்லவே வேண்டாம் . ஆசைகள் நிராசைகள் வாக்குறுதிகள் பொய்கள் என எல்லாவற்றின் பதிவுகளாகவும் இருக்கின்றன கடிதங்கள் . 
கொஞ்சமே படித்த கிராமத்து மனிதன் தன்னை கடிதத்தின் மூலம் தான் வெளிப்படுத்தி வந்தான் . ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் எழுத்தாளனை வெளிக் கொண்டு வர கடிதம் தான் வாய்ப்பேற்படுத்தித் தந்தது. கடிதம் எழுதுவது மொழியில் தன்னை எப்படித் திறந்து வைக்க முடியும் என்ற பயிற்சியை நமக்கு அளிக்கிறது. கடிதத்தைவிடவும் சிறந்த படைப்பு என்ன இருக்க முடியும்? 

இன்றைய உலகம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. இங்கு நேசம், பாசம், நட்பு,  ஏன் காதல் கூட தற்காலிகமானதுதான். எல்லாமே எஸ் எம் எஸ்ஸில் முடிந்துவிடுகிறது. இன்றைய இளைஞர்களால்  காதலிக்கு ஒரு நல்ல கடிதத்தை எழுதமுடியுமா தெரியவில்லை.  மிஞ்சிப்போனால் ஒரு போன் கால் அவ்வளவுதான். மின்னஞ்சல் இருக்கிறதே என்று கேள்வி எழலாம் . மின்னஞ்சலின் வேகம் பிரமிக்க வைப்பதுதான். ஒரு சில நொடிகளில் உலகின் எந்தப் பகுதிக்கும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களை அடைந்துவிட முடியும் என்ற அதன் சாத்தியம் அபாரமானதுதான். ஆனால் அது வியாபாரத்துக்கு வேண்டுமானால் பயன்படலாம்.   மகனிடமிருந்து வரும் கடிதத்தை தனது மகனாகவே எண்ணி தடவி உச்சி முகரும்  தாயின் மன நிலை தெரியாதவர்கள் வேண்டுமானால் மின்னஞ்சலை கொண்டாடலாம . காதலியிடமிருந்து வந்த முதல் கடிதத்தை புதையலாகப் பாதுகாக்காதவர் யார் இருக்க முடியும்?  நேசம் என்பது 'வர்ச்சுவல் ரியாலிட்டி' அல்ல. அது யதார்த்தத்தைவிடவும் ஆழமானது. வரலாற்றைவிடவும் நீண்டகாலம் வாழக் கூடியது .

நம் இளைய தலைமுறையிடம் கடிதம் எழுதும் வழக்கத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பாசத்தைக் கொண்டாடும் மனிதாபிமானம்  சார்ந்தது மட்டுமல்ல. மொழி, படைப்பாற்றல், வரலாற்றுணர்வு , கலாச்சார அறிவு என பல பரிணாமம் கொண்டது. ஒரு ஆயிரம் பேரிடமாவது நாம் அந்த பழக்கத்தை தூண்டிவிட்டோமேனில் அது மகத்தான சாதனைதான். 

திட்டம்:


தமிழில் கடித இலக்கியம் என்று ஒரு தனித் துறையே உண்டு.மிகச்  சிறந்த எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளைப் போலவே அவர்களது கடிதங்களும் அற்புதமான அனுபவத்தை தருகின்றன. கி ராவின் கரிசல் காட்டுக் கடுதாசியை  மறக்க முடியுமா? எந்த ஒரு எழுத்தாளரையும் கேளுங்கள் அவரிடம் நல்ல புத்தக  சேமிப்பு இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் சில அபூர்வ கடிதங்கள் இருக்கும். அப்படி உங்களிடம்  அபூர்வமான கடிதம் இருந்தால் அதன் ஒளிப்பட நகலை மணற்கேணி முகவரிக்கு அனுப்புங்கள் . அத்துடன் உங்களைப் பற்றிய விவரத்தையும் எழுதுங்கள் . பிரசுரிக்கப்படும் கடிதத்தை அனுபபுகிறவருக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் அனுப்பப்படும். 


அனுப்பவேண்டிய முகவரி :


மணற்கேணி இலக்கிய இதழ் 
அறை எண் 2, நோபிள்  மேன்ஷன் 
ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரில் 
டாக்டர் நடேசன் சாலை 
திருவல்லிக்கேணி
சென்னை 600005




அன்புடன்
ரவிக்குமார் 

No comments:

Post a Comment