ஒரு மனிதனின் அகந்தையை அழிக்க வேண்டுமென்றால் அவனை ஒரு நூலகத்துக்குள் அழைத்துச் செல்லவேண்டும்.
நமது நாட்டில், நூலகம் என்ற அமைப்பு எப்போது தோன்றியது? இதற்குச் சரியான பதில் எதுவும் நம்மிடம் இல்லை. நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், 1929&ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ள செய்தி இங்கே நினைவு கூறத்தக்கதாகும். கி.பி.1058&ம் ஆண்டு ஆட்சி புரிந்த சாளுக்கிய மன்னன் ராய நாராயணனிடம் அமைச்சராக இருந்த மதுசூதனன் என்பவர் அமைத்த கல்லூரி ஒன்றில் நூலகர்களாக ஆறு பேர் பணிபுரிந்தனர் என்ற செய்தி, கர்நாடகாவில் நாகை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கோயில் கல்வெட்டிலிருந்து தெரிய வந்திருப்பதாக எஸ்.ஆர். ரங்கநாதன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகில் பொது நூலகம் என்பது துவக்கப்படுவதற்கு முன்பே தனி மனிதர்களுக்குச் சொந்தமான நூலகங்கள் இருந்துள்ளன. அரிஸ்டாட்டிலிடம் ஏராளமான நூல்கள் இருந்ததாகவும், ஒரு நூலகத்தை எப்படி உருவாக்குவது என்பதை எகிப்து நாட்டு மன்னர்களுக்கு அவர்தான் சொல்லித் தந்தார் எனவும் கூறப்படுவதுண்டு.
எகிப்து மன்னர்கள் தமது நாட்டுக்கு வந்த பயணிகளிடம் புத்தகங்களைப் பறிமுதல் செய்து தமது நூலகங்களில் சேமித்து வைத்தார்களாம்.
தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் வாசிக்கும் பழக்கம் எப்படியிருந்தது என்பது பற்றி சரியான விவரங்கள் எதுவும் நம்மிடம் கிடையாது.
பண்டைய தமிழகத்தில் இருந்த பௌத்த, சமணர்களின் நூல்களையெல்லாம் நூல்களையெல்லாம் ஆற்றில் வீசியும், தீயிலிட்டுப் பொசுக்கியும் வைதீக மதத்தவர் அழித்து விட்டார்கள். அனல்வாதம், புனல்வாதம் என்ற பெயர்களில் அந்த அட்டூழியங்கள் நடத்தப்பட்டன. அவற்றால் அறிய பல நூல்களை நாம் இழந்துவிட்டோம். தற்போது நம்மிடம் எஞ்சியிருக்கும் நூல்களில் பல, பிரிட்டிஷ்காரர்கள் பாதுகாத்துத் தந்தவையாகும்.
"இதுவோ எலக்ட்ரானிக் யுகம். இப்போது புத்தகங்களையும் நூலகங்களையும் பற்றிப் பேசுவதில் அர்த்தமிருக்கிறதா?" என்று நீங்கள் கேட்கலாம். கம்ப்யூட்டர்களால் புத்தகங்களை ஒழிக்க முடியவில்லை. ஒரு விஷயத்தைப் படிப்பதற்கு இப்போதும் அச்சு ஊடகம்தான் ஏற்றதாக இருக்கிறது. பில்கேட்ஸ்கூட அப்படித்தான் கூறி உள்ளார். "காகிதத்தில் அச்சிடப்பட்டதை வாசிப்பதைவிடவும், கம்ப்யூட்டர் திரையில் தெரிவதைப் படிப்பது சிரமமானதாவே இருக்கிறது. நான்கைந்து பக்கங்களுக்கு மேல் போனால் நான் பிரிண்ட் அவுட் எடுத்துத்தான் படிக்கிறேன்" என்று பில்கேட்ஸ் சொல்லியிருக்கிறார்.
நூலகங்கள் அமைப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்டதுண்டு. அப்போது, மாட்டு வண்டியில் புத்தகங்களை எடுத்துச் சென்று கிராமங்களில் விநியோகித்தவர் எஸ்.ஆர். ரங்கநாதன். 1930&களில் அவர் விநியோகித்த புத்தகங்கள் இப்போதும் தஞ்சாவூர் தமிழப் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. நூலக இயக்கத்துக்கு அரசாங்க ஆதரவைப் பெற்றுத்தந்தது அவரது தனிமனித சாதனையாகும்.
சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவது பற்றி நமது தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்கால இந்தியாவில் நூலகங்கள் அமைப்பதற்காக பதினான்கு கோடி ரூபாய் செலவிலான மாபெரும் திட்டத்தை எஸ்.ஆர். ரங்கநாதன் முன்வைத்தார். பள்ளிகள், கல்லூரிகளில் ஐந்நூறு சிறிய நூலகங்கள்; பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நூலகங்கள்; வர்த்தக நூலகங்கள்; சிறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்வையில்லாதவர்களுக்கான இல்லங்கள் முதலானவற்றில் அமைக்கப்படும் சிறப்பு நூலகங்கள்; அனைவருக்குமான பொது நூலகங்கள் என ஐந்து விதமான நூலகங்களை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவற்றுக்காகச் செலவிடப்படும் பதினான்கு கோடி ரூபாயில் ஏழு கோடியை உள்ளாட்சி அமைப்புகள் தரவேண்டும், மீதமுள்ள தொகையை அரசு கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
அவரது முயற்சியில் 1948&ம் ஆண்டு நூலகத்துக்காக சட்டமொன்று சென்னை மாகாண சட்டப்பேரவையில் அன்றைய கல்வி அமைச்சர் டி.எஸ். அவினாசிலங்கத்தால் கொண்டு வரப்பட்டது. 1946&47&ல் சென்னை மாகாணத்தில் 1554 நூலகங்கள் இருந்தன. அவற்றில் 11,35,223 புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் மாகாண அரசு, நூலகங்களுக்காக எழுபந்தைந்தாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இப்போதோ சென்னையில் அமையவிருக்கும் ஒரே ஒரு நூலகத்துக்காக நூறு கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, கிராம ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் நூலகங்கள் அமைக்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
நூலகத்துறையில் இப்போது ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை ஓர் அறிவார்ந்த சமூகமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் "தேசிய அறிவு ஆணையம்" (ழிணீtவீஷீஸீணீறீ ரிஸீஷீஷ்றீமீபீரீமீ சிஷீனீனீவீssவீஷீஸீ) ஒன்றை சாம்பிட்ரோடா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். அது தனது அறிக்கையை அண்மையில் பிரதமரிடம் அளித்தது. நமது நாட்டின் முன்னேற்றத்துக்காக நூலகங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது பற்றி அதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் நூலகங்கள் இரண்டு முக்கியமான பணிகளை ஆற்ற வேண்டியிருக்கிறது. தகவல் மற்றும் அறிவு மையங்களாக அவை விளங்குகிற அதே நேரத்தில் அறிவுலகத்தின் வாயில்களாகவும் அவை செயல்பட வேண்டும்.
தேசிய அறிவு ஆணையம் முன்வைத்திருக்கும் யோசனைகளைப் பின்பற்றி மாநில அளவில் நூலகங்களை மேம்படுத்துவதற்கு சில நடவடிக்கைகளைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். மாநில அளவில் உள்ள நூலகங்களைக் கணக்கிடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தனி நபர்களின் புத்தக சேகரிப்புகள், கோயில்கள், மடங்கள் முதலானவற்றில் உள்ள சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றையும் இந்தக் கணக்கெடுப்பில் உள்ளடக்க வேண்டும்.
தற்போது பெருகிவரும் வாடகை நூலகங்களைக் கணக்கிட்டு அட்டவணைப்படுத்த வேண்டும். அவற்றைப் பராமரிப்பவர்களுக்குக் குறைந்த பட்ச நூலகர் பயிற்சி அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம்.
தற்போதுள்ள வாசிப்புப் பழக்கங்களையும், வாசிப்புத் தேவைகளையும் ஆய்வு செய்வது நமது சமகாலப் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியம். இந்தத் துறையில் மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ள சிந்தனையாளர்களான ரோபர்ட் டார்ன்டன், ரோஜெ ஷாத்தியெ ஆகியோரின் கருத்தாக்கங்களை இதற்குப் பயன்படுத்தலாம். மாநில அளவில் நூலக ஆணையம் (ஷிtணீtமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ் சிஷீனீனீவீssவீஷீஸீ) ஒன்றை சட்ட அதிகாரம் கொண்டதாக உருவாக்க வேண்டும். மாநில அளவில் வெளியாகும் அனைத்து விதமான நூல்களும் அனைவருக்கும் கிடைக்கும்படியான ஏற்பாடுகளை மேற்பார்வையிடல், ஆய்வு ரீதியான உதவிகளைச் செய்தல், தகவல் மற்றும் நூலகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை அளித்தல், பண்பாட்டு வளங்களைப் பாதுகாத்தல் முதலான பணிகளை இந்த ஆணையம் செய்யும்.
நூலகங்களைப் பராமரிப்பதற்கான அடிப்படை பயிற்சி கொடுக்கப்படுவதோடு, இந்தத் துறையில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அவ்வப்போது நூலகர்களுக்குப் புத்தொளி பயிற்சியளிப்பதும் அவசியம்.
தற்போது அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும நூலகங்களுக்கு நிரந்தர நூலகர்கள் நியமிக்கப்படுவது அவசியம். அந்த நூலகங்களை கணினி மூலம் தற்போது சென்னையில் அமைய உள்ள நூலகத்தோடு இணைக்க வேண்டும்.
அரிய நூல்கள் அனைத்தையும் "டிஜிட்டல்" முறையில் படியெடுத்து இணையத்தில் படிக்கவும், பிரதியெடுத்துக் கொள்ளவும் வசதி செய்து தரவேண்டும். அயல் நாடுகளின் நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் நூல்கள் மற்றும் தமிழகம் தொடர்பான அனைத்து விதமான ஆவணங்கள் முதலானவற்றின் "டிஜிட்டல்% பிரதிகளைப் பெற்று இங்கே உள்ள ஆய்வாளர்களுக்கு எளிதில் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும்.
வாசகர்களைக் காட்டிலும் நூலகர்களுக்கே இப்போது நூல்களின் மதிப்பு பற்றிக் கூறவேண்டி உள்ளது. ஓர் ஆசிரியரின் பணியைவிட பலவிதங்களில் நூலகர்களின் பணி உயர்ந்தது. இதை அவர்களில் பலர் உணர்ந்திருப்பதில்லை. படிப்பதை ஊக்குவிப்பதற்கு மாறாக, வாசகர்களை விரட்டியடிப்பதிலேயே பல நூலகர்கள் குறியாக உள்ளனர்.
நூலக இயக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் பதிப்பாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தற்போது தமிழ் பதிப்புலகில் மலிந்துள்ள சீர்கேடுகள் களையப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நூலகங்களை அதிகரித்தல், அரசு விழாக்களில் சால்வைகளுக்குப் பதிலாக நூல்கள், சென்னையில் நூறு கோடி ரூபாயில் நூலகம், பதிப்பாளர்களுக்கு நிரந்தரமாகப் புத்தகப் பூங்கா அமைக்க சென்னையில் இலவசமாக இடம், அரசு சார்பில் வாங்கும் நூல்களின் படிகள் ஆயிரமாக உயர்வு & இவை அனைத்துக்கும் மேலாக சொந்தப் பணத்திலிருந்து பதிப்பாளர்களுக்கு ஒரு கோடி என இப்போது முதல்வர் எடுத்துவரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு தமிழ் பதிப்பாளர்கள் எப்படி பதில் மரியாதை செய்யப் போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.
தரமற்ற முறையில் அச்சிடுவது, பதிப்பு விவரங்களை, வேண்டுமென்றே மறைப்பது, நூல் ஆசிரியர்களுக்கு "ராயல்டி" தராமல் ஏமாற்றுவது போன்ற குறைபாடுகள் தமிழ் பதிப்புத் துறையில் நிறைந்துள்ளன. இதையெல்லாம் சேர்த்துத்தான் சீர்கேடு என்று சொல்ல வேண்டியதாகிறது. நல்ல நூல்கள் வெளிவருவதற்கு இத்தகைய விஷயங்கள் தடையாக உள்ளன. பிற மொழிகளில் நடந்துவரும் நல்ல மாற்றங்களைத் தமிழில் பார்க்க முடியாததற்குப் பதிப்பாளர்களே பெரிதும் காரணம். ஒரு தொழிலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய வணிக நேர்மைகூட பதிப்புத்துறையில் அரிதாகிவிட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல்களைப் பார்க்கும்போது அவற்றின் தரம் இப்போது இல்லையே என்று வருத்தப்பட வைக்கிறது. அச்சுத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி நமது புத்தகங்களைக் கவர்ச்சியாகத் தயாரிப்பதற்கு மட்டுமே இங்கே பயன்படுத்தப்படுகிறது என்கிற எண்ணத்தை தோற்றுவித்தால், அதனை பதிப்புத் துறையின் வளர்ச்சி என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
தேசிய அறிவுசார் ஆணையம் செய்துள்ள முக்கியமானதொரு பரிந்துரையைப் பற்றி இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். நூலகத்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கி பொதுப்பட்டியலில் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt லிவீst) சேர்க்க வேண்டும் என்று தேசிய அறிவு சார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மாநில உரிமையைப் பாதிக்கும் இந்தப் பரிந்துரையைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திவரும் வேளையில், அதிகாரத்தை மையப்படுத்தும் இத்தகைய முயற்சிகளை நாம் ஒருபோதும் ஏற்கத் தேவையில்லை!
ஜூனியர் விகடன்
11-04-2007
No comments:
Post a Comment