Tuesday, December 21, 2010

கூட்டாட்சியா? கூட்டணி ஆட்சியா? - ரவிக்குமார்

(விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 26.12.2010 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் ' தமிழர் இறையாண்மை மாநாட்டு மலரில் இடம்பெறும் கட்டுரை )


‘மாநில சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி’ என்ற முழக்கத்தைத் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது. 1970ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் உருவெடுத்த இந்த முழக்கம் தமிழக எல்லையைத் தாண்டி இந்திய அளவில் எதிரொலிகளை எழுப்பியது. இந்தித் திணிப்பையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதாக வெளிப்பட்ட இந்தக் குரல், தமிழுக்கான அங்கீகாரத்தைக் கோருவதாகவும், மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கேட்பதாகவும் அமைந்திருந்தது. அன்று, அதற்குத் தெளிவான கருத்தியல் வடிவத்தை வழங்கியவர் முரசொலி மாறன் ஆவார்.அவர் மாநில சுயாட்சி குறித்து எழுதிய நூல் இன்றும் பொருந்தக்கூடியதாகும்.
ஆட்சி அதிகாரத்தை திமுக பிடித்தது முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலம் வரை தமிழ்நாட்டில் இந்த மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலித்ததை நாம் அறிவோம். ராஜமன்னார் குழு பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974ஆம் ஆண்டில்தான், சுதந்திர தினத்தன்று கோட்டையிலே தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்திய அளவில் ஒரு முன்னுதாரணத்தைக் கலைஞர் உருவாக்கினார்.
இப்படி மாநில மக்களின் உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ள வேண்டும் என்ற நாட்டம் அன்றைய பிரதமர் இந்திராவின் கண்களை மறைத்தது. மாநில உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்படுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டபோது பிரிவினை முழக்கங்கள் எழுந்தன. பஞ்சாப்பிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ரத்த ஆறு பெருக்கெடுக்க அதுவே காரணமாய் அமைந்தது.
இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனையை ஆராய்கிறவர்கள் அதன் வேர் 1947ஐத் தாண்டியும் ஆழ்ந்து செல்வதை அறிவார்கள். மொழியால், இனத்தால் வேறுபட்டுக் கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்தியாவை நிர்வகிப்பதற்கு பிரிட்டிஷ்காரர்களும், படாதபாடுபட்டதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்ட அவையின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தத்தமது மாநிலங்களின் பிரதிநிதிகளாக அதில் பங்கேற்கவில்லை. எனவே மத்திய மாநில உறவுகள் குறித்த ஆழமான விவாதம் அந்த அவையில் நடைபெறவில்லை. நாட்டுப் பிரிவினையின் ரணம் ஆறாமல் இருந்த சூழலில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் பிரிவினைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் அன்றைய அரசியல் தலைவர்களிடம் மேலோங்கி இருந்தது. அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அம்பேத்கரும் அதற்கு விதிவிலக்காக இல்லை. அதனால்தான் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கினாலும் தேவைப்படும்போது அந்த அதிகாரங்களை மத்தியில் மாற்றிக் கொள்வதற்குத் தோதாக நமது அரசியலமைப்புச் சட்டத்தை அவர் உருவாக்கினார்.
சுதந்திர இந்தியா சந்தித்த முதல் சிக்கலாக மொழிவாரி மாநில உருவாக்கப் பிரச்சனையைக் குறிப்பிடலாம். இது மாநில நலன்களுக்கான கோரிக்கையின் ஒரு வடிவம் தான். மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற யோசனை 1928 ஆம் ஆண்டு நேரு தலைமையிலான கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோதிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அதை காங்கிரஸ் கைவிட்டு விட்டது. 1948 ஜூன் 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட தார் கமிஷன், மாநிலங்களை மொழியின் அடிப்படையில் அமைப்பது நல்லதல்ல என்று கூறிவிட்டது. பூகோள அமைப்பு, பொருளாதாரத் தற்சார்பு, நிர்வாக வசதி, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநிலங்களைப் பிரிக்க வேண்டுமென அது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதே ஆண்டு காங்கிரஸால் அமைக்கப்பட்ட நேரு, பட்டேல், பட்டாபி ஆகியோர் அடங்கிய குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை கோரிக்கையை வலுப்படுத்திவிடும் என்று எச்சரித்தது. இதனால் இந்தப் பிரச்சனையை மத்திய அரசு ஒத்திப்போட்டது.
தெலுங்கு பேசும் மக்களுக்கென தனி மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு 1952 அக்டோபர் 19ஆம் நாள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கினார். ஐம்பத்தாறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர் டிசம்பர் பத்தாம் நாள் இறந்தார். அதைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழலின் காரணமாக மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. எனவே 1954ஆம் ஆண்டில் மத்திய அரசால் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதற்குத் தலைவராக நீதிபதி ஃபஸுல் அலியும் உறுப்பினர்களாக இருதயநாத் குன்ஸ்ரு மற்றும் கே.எம்.பணிக்கர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். அந்த ஆணையம் பதினாறு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1956ஆம் ஆண்டு பதினான்கு மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அத்துடன் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடவில்லை. 1971க்கும் 1987க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் பல புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 
2000த்தில் மூன்று மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. பீகாரின் தென் பகுதியிலிருந்த மாவட்டங்களைச் சேர்த்து ஜார்கண்டும், மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களை ஒருங்கிணைத்து சட்டீஸ்கரும், உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களை இணைத்து உத்தராஞ்சலும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டன. இவையெல்லாவற்றையும் சேர்த்து தற்போது இருபத்தெட்டு மாநிலங்களும் ஏழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவில் அமைந்துள்ளன. இப்போது மேலும் பல மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தெலுங்கானா, விதர்பா மட்டுமல்லாது ஹரித் பிரதேஷ், பூர்வாஞ்சல், கோண்டுவானா, கொடகு முதலான மாநிலங்களை உருவாக்கவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தைப் பிரித்து ஹரித் பிரதேஷ் பூர்வாஞ்சல் என்று இரண்டு புதிய மாநிலங்களை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதில் ஹரித் பிரதேஷை உருவாக்கும் திட்டத்துக்கு மாயாவதியும் முன்னர் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியின் தலைவர் அஜீத்சிங் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீரட், ஆக்ரா, ஷஹ்ரன்பூர், பரேலி மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருபத்திரண்டு மாவட்டங்களைப் பிரித்து ஹரித் பிரதேஷ் மாநிலத்தை உருவாக்கவேண்டுமென்ற அஜீத் சிங்கின் கோரிக்கையை அந்தப் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆதரிக்கின்றன. அப்படியொரு மாநிலம் உருவாக்கப்பட்டால் அதில் சுமார் முப்பது சதவீதம் முஸ்லீம்கள் இருப்பார்களென்பதே அவர்களது ஆதரவுக்குக் காரணம். உத்தரப்பிரதேரசம் முழுமைக்கும் பதினேழு சதவீதம் உள்ள முஸ்லீம் மக்கள் தொகை அம்மாநிலத்தின் மேற்குப்பகுதியில்தான் அடர்த்தியாக உள்ளது. எனவே அந்த மாநிலத்தின் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க முடியும் என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர்.பூர்வாஞ்சல் என்பது வாரனாசி, மிர்சாபூர், கோரக்பூர் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களைக் கொண்ட பகுதியாகும்.

புதிய மாநிலங்களை உருவாக்குவது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பிரிவுகள் இதை உறுதி செய்துள்ளன.  கடந்த காலங்களில் மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதற்குப் பின்னணியில் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களே வலுவாக செயல்பட்டுள்ளன. மைய நீரோட்டத்திலிருந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் உணரும்போது இந்தத் தனி மாநில கோரிக்கை மேலும் தீவிரம் பெறுகிறது. சிறிய மாநிலங்கள் ஒப்பீட்டளவில் ஜனநாயகத்துக்கு உகந்ததாகவே இருக்கின்றன என்பதைப் புதிதாக உருவான மாநிலங்கள் நிரூபிக்கின்றன. மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை எண்ணத்தை வலுப்படுத்திவிடும் என்று நேரு முதலான தலைவர்கள் தெரிவித்த அச்சம் இப்போது தவறென்று ஆகிவிட்டது. அம்பேத்கரும் கூட துவக்கத்தில் இந்த எண்ணத்தைத்தான் வெளிப்படுத்தினார். ஆனால் 1955ல் தனது கருத்தை அவர் மாற்றிக்கொண்டார்.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை எதிர்காலத்தில் மேலும் பல மாநிலங்களாகப் பிரியும் என அம்பேத்கர் கூறினார். உத்தரப்பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். பீகாரை இரண்டாகப் பிரிக்க வேண்டும். மத்திய பிரதேசத்தையும் இரண்டு மாநிலங்களாக்க வேண்டும் என்றார். ஏறத்தாழ அவர் பிரித்துக் காட்டிய விதத்தில் தான் இன்றைய உத்தராஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருப்பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்களை உருவாக்கும்போது அங்கே உள்ள சிறுபான்மை மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். மொழி மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மட்டுமின்றி சாதி அடிப்படையிலான சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் கூடுதல் அழுத்தம் தந்தார். சிறிய மாநிலங்கள் பெரும்பான்மை சாதியினரின் கொடுங்கோன்மையாக மாறிவிடக்கூடாது என்று அவர் எச்சரித்தார். அது இப்போதும் பொருத்தமான ஒரு எச்சரிக்கை ஆகும்.

      தேசிய முன்னணி அரசு உருவானபோது அதில் மாநிலக் கட்சிகள் பல பங்குபெற்றன. அதிலிருந்து கூட்டணி ஆட்சி என்பது மத்தியில் தொடர்கதையாகிவிட்டது. அதை சனநாயகமாக்கலின் ஒரு வெளிப்பாடு எனப் பலரும் பாராட்டினர். ஆனால்,  ‘‘கூட்டணி ஆட்சி’’யை ‘‘கூட்டாட்சி’’ எனத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் அதுவே வழிவகுத்துவிட்டது. இந்திய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டையொட்டி இந்து ஆங்கில நாளேட்டில் தமிழக முதல்வர் கலைஞர் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில் இந்தப் பிரச்சனையை மிகவும் நுட்பமாக அவர் தொட்டுக் காட்டியிருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் அமையும் ஆட்சிகளில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பது தொடர் நிகழ்வாகிவிட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள கலைஞர், மத்தியில் அதிகாரத்துவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு செய்யப்பட்ட முயற்சிகளையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அரசில் பிராந்திய கட்சிகள் பங்கேற்றாலும் கூட மாநில உரிமைகள் புறக்கணிக்கப்படும் அவலத்தை கலைஞர் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். மத்திய மாநில உறவுகளை மாற்றியமைப்பது பற்றிய சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததால் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் தொடர்ந்து மைய அரசிடம் குவிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள கலைஞர் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சியை ஏற்படுத்திட இதுவே சரியான தருணம் என்று அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.ஆதிக்க உணர்வும், தாமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் கூட்டாட்சிக்கு உதவாது கூட்டுறவே அதற்கு வழிவகுக்கும் எனக்கூறியிருக்கும் அவர் மாநில அரசுகளைக் கலைப்பதற்கு வகை செய்யும் அரசியல் சட்டப்பிரிவு 356ஐக் கண்டித்திருக்கிறார்.
கலைஞரின் கட்டுரையை இன்றைய பிரச்சனைகளோடு வைத்துப் படிக்கும் போது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. தற்போது தமிழகம் எதிர்கொள்கிற பிரச்சனையை மத்திய மாநில உறவுகள் தொடர்பான பிரச்சனையாக மட்டுமே பார்க்க முடியுமா? மாநிலக் கட்சிகள் பங்கேற்பதாலேயே மத்தியில் இருப்பது கூட்டாட்சி ஆகிவிடுமா? மத்திய அரசில் மாநிலக் கட்சிகள் கடந்த பல ஆண்டுகளாகப் பங்கு பெற்றாலும் கூட மாநில உரிமைகளை மீட்பதற்கு அவை பெரிய அளவில் முயற்சி செய்யாதது ஏன்?


மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி அவசர நிலைக்காலத்தின் போதுதான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இன்று மருத்துவக் கல்லூரிகளை, பொறியியல் கல்லூரிகளைத் தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாமல் போவதற்குக் கல்வி மாநிலப்பட்டியலில் இல்லாததே முக்கிய காரணமாகும். தமிழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான மத்திய அரசு நிறுவனம் எதுவும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் துவக்கப்படவில்லை . சி.எல்.ஆர்.ஐ. மற்றும் சிக்ரி ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்கள் 1948ல் துவக்கப்பட்டவை. திருச்சியில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரிக்குப்பிறகு அத்தகைய கல்வி நிறுவனம் எதுவும் தமிழகத்தில் துவக்கப்படவில்லை. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கூட ஒரு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போதுதான் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட், இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இல்லை. 

       உயர் கல்வியைச் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட யஷ்பால் கமிட்டி தனது பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்ளப்போவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கின்றார். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்துவது குறித்து அந்தக் கமிட்டி கூறியிருக்கின்ற கருத்துகள் மிகவும் முக்கியமானவை. இனிமேல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ள அந்தக்கமிட்டி தற்போது இருக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றிவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இவையெல்லாம் வரவேற்கப்படவேண்டியவைதான். ஆனால் உயர் கல்வியை சீரமைக்க சுயேச்சையான அதிகாரம் கொண்ட உயர் அதிகார அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்குள்ள அதிகாரம் தேர்தல் கமிஷன் அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும் என்று யஷ்பால் கமிட்டி கூறியிருப்பதைத்தான் நாம் ஐயத்தோடு பார்க்கவேண்டி இருக்கிறது. இது மேலும் மத்திய அரசின் கையில் அதிகாரத்தைக் குவிக்கவே வழிவகுக்கும். உயர்கல்வி மட்டுமல்ல நூலகங்களை மேலாண்மை செய்யும் அதிகாரத்தையும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றவேண்டும் என தேசிய அறிவுசார் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. தற்போது மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை அந்த நோக்கத்தை நிறைவேற்றும் ஒன்றுதான்.  
       உயர்கல்வியைப்போலவே சுகாதாரத் துறையையும் முழுமையாக மத்திய அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்கான முயற்சியும் இப்போது மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கிற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தையும் கலைத்து விட்டு மையப்படுத்தப்பட்ட ஒரேயொரு அமைப்பை உருவாக்குவது என்பதுதான்  சுகாதார அமைச்சகத்தின் முடிவு. நேஷனல் கவுன்சில் ஃபார் ஹியூமன் ரிசோர்சஸ் இன் ஹெல்த்(என்.சி.ஹெச்.ஆர்.ஹெச்) என்பதுதான் அந்த அமைப்பின் பெயர். இதற்காக சட்ட மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு தற்போது அது விவாதத்திற்கென சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
      தற்போது சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ‘ சீர்திருத்தங்களுக்கு’ விதை போட்டது தேசிய அறிவுசார் ஆணையம் ஆகும். மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது பிரதமரிடம் வழங்கிவிட்டது. தனது ஆலோசனைகளை உருவாக்குவதற்கு முன்னால் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக மருத்துவக் கல்வி குறித்தும் சுகாதார வசதிகள் குறித்தும் ஆராய்ந்திருந்த பல்வேறு கமிட்டிகளின் அறிக்கைகளையும் அது பரிசீலித்திருந்தது. போரே கமிட்டி (1946), முதலியார் கமிட்டி (1961), பட்டேல் கமிட்டி (1971), ஸ்ரீவத்ஸவா கமிட்டி (1975), பஜாஜ் கமிட்டி (1989) ஆகியவை வழங்கிய அறிக்கைகள் எல்லாம் அறிவுசார் ஆணையத்தால் பரிசிலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் கமிட்டிகள் யாவும் கிராமப்புற மருத்துவ சேவைகள் பற்றியே அதிகம் பேசியிருந்தன. ‘ சமூக அளவிலான மருத்துவம்’ என்பதற்கே அவை அதிக அழுத்தம் கொடுத்திருந்தன. தேசிய அறிவுசார் ஆணையமும் அந்த நோக்கிலேயே பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தால் நிச்சயம் அது நல்ல பல பரிந்துரைகளை அளித்திருக்க முடியும். ஆனால் அதிகார வர்க்கத்தினரும், டெக்னோகிராட்டுகளும் நிறைந்திருந்த அதனால் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க முடியாமல் போய்விட்டது. மத்தியில் அதிகாரத்தைக் குவித்துவிட்டால் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என நம்பும் அந்த ஆணையம் அதன் அடிப்படையில் தெரிவித்த ஆலோசனைதான்  மருத்துவக் கல்விக்கென்று சுயேச்சையான உயர் அதிகார அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையாகும்.அதுதான் இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 
நமது உயர்கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ள ‘யஷ்பால் கமிட்டி’ மருத்துவக் கல்வியை உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று கூறியிருந்தது. அப்போதுதான் மற்ற உயர் கல்வித் துறைகளோடு மருத்துவக் கல்விக்கு ஒரு உள்ளார்ந்த பிணைப்பு ஏற்படும் என்று அது வற்புறுத்தியிருந்தது. ஆனால், ‘பொன்முட்டை இடும் வாத்தான’ மருத்துவக் கல்வியை தனது கட்டுப்பாட்டிலிருந்து 
மாற்றுவதை சுகாதார அமைச்சகம் விரும்பவில்லை. அதனால், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்து மருத்துவ துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குமாறு பணித்தது. ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த நிபுணர் குழுவும் தன்னுடைய பரிந்துரைகளை இப்போது வழங்கியிருக்கிறது. அதன் விளைவுதான் என்.சி.ஹெச்.ஆர்.ஹெச். என சுருக்கமாக அழைக்கப்படும் சுகாதாரத் துறை உயர் அதிகாரக் கவுன்சில். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால் மருத்துவக் கல்வியின் தரம் பெருமளவில் உயர்ந்துவிடும் என்று ஒருசாரார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதுபோலவே மருத்துவ மேல் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இந்த மசோதாவை மகிழ்ச்சியோடு அவர்கள் வரவேற்கின்றனர். ஆனால், பொதுமக்களின் சுகாதாரத் தேவைகள் என்ற கோணத்திலிருந்து பார்த்தால் இது மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தற்போது உருவாக்கப்படும் சுகாதாரத் துறை உயர் அதிகார தேசிய கவுன்சிலுக்கு முழு நேரத் தலைவர் ஒருவரும், முழு நேர உறுப்பினர்களாக நான்கு பேர்களும் இருப்பார்கள். இதன் தலைமையகம் புதுடில்லியில் இருக்கும். இவர்களை மத்திய அரசு செலக்ஷன் கமிட்டி ஒன்றின்மூலம் தேர்வு செய்து நியமிக்கும். அந்த செலக்ஷன் கமிட்டியில் கேபினட் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறையின் செயலாளர் ஆகியோரோடு மேலும் இரண்டு செயலாளர் மட்டத்திலான நபர்கள் இருப்பார்கள்.  இந்த கவுன்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடித் தமது பணிகளை முடிவு செய்யும். இந்த கவுன்சிலின்கீழ் ஏழு துறைகள் உருவாக்கப்படும். மருந்து, நர்சிங், பல் மருத்துவம், பார்மஸி, பிசியோதெரபி, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை, மருத்துவத்தோடு தொடர்பு கொண்ட பிற துறைகள் ஆகியவையே அந்த ஏழு துறைகளாகும். அந்தத் துறைகளின் இயக்குனர்களை தேசிய கவுன்சிலே நியமனம் செய்யும்.
புதிதாக மருத்துவ கல்லூரிகளை துவக்குவது, மருத்துவ படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை கூட்டவோ, குறைக்கவோ செய்வது போன்ற அதிகாரங்கள் யாவும் இந்த தேசிய கவுன்சிலுக்கே உரியதாகும். மருத்துவ கல்லூரிகளால் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்கின்ற அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கே உண்டு. மருத்துவ மேல் படிப்பு முடித்து பட்டம் பெறும் மருத்துவர்கள் இந்த கவுன்சில் நடத்தும் தேர்வு ஒன்றை கட்டாயம் எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் அனைவரும் இந்த மருத்துவ கவுன்சிலின் கீழ் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படியான பதிவுகளின் தொகுப்பு ஒன்றை இந்த மருத்துவ கவுன்சில் பராமரிக்கும். அதை இணைய தளத்தில் மக்களின் பார்வைக்காக வெளிப்படையாக அது வெளியிடும். தற்போது இருக்கும் மாநில அளவிலான மருத்துவ கவுன்சில்கள் யாவும் முற்றாக ஒழிக்கப்படும். அவற்றுக்குப் பதிலாக மாநில அளவிலான ‘பதிவு மற்றும் ஒழுங்குகள் வாரியம்’ என ஒன்று புதிதாக உருவாக்கப்படும். அந்த வாரியத்துக்கு ஒரு தலைவர், துணைத் தலைவர், பத்துக்கும் குறையாத உறுப்பினர்கள் இருப்பார்கள். மாநில அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவரும் அதில் இருப்பார். இந்த மாநில வாரியத்தின் பணி மாநில அளவிலான மருத்துவர்களின் பட்டியலைத் தயாரித்துப் பராமரிப்பது ஆகும். 
என்.சி.ஹெச்.ஆர்.ஹெச் மசோதாவின் மையமான அம்சங்கள் இவைதான். தேசிய அறிவுசார் ஆணையம் விவாதித்த  சுகாதாரத் துறையின் பிரச்சனைகளுக்கும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய கவுன்சிலின் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கிற அவலங்களை எடுத்துச்சொல்வது அவற்றைத் தீர்ப்பது போன்று பாவனை செய்து முன்னிலும் மோசமானத் தீர்வு ஒன்றைப் பரிந்துரைப்பது என்பதுதான் அண்மைக்காலமாக இந்திய அதிகார வர்க்கத்தின் அணுகுமுறையாக இருக்கிறது. அதன் உச்சபட்ச வடிவமாக தேசிய அறிவுசார் ஆணையம் திகழ்கிறது. சுகாதாரத் துறை குறித்த அதன் பரிந்துரைகளும் அதைத்தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 
       மாநில அளவில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ கவுன்சில்கள் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாகும். சுகாதாரம் என்பது தற்போது மாநில அதிகாரப் பட்டியலின்கீழ் தான் உள்ளது. எனவே, தமக்கான மருத்துவ கவுன்சில்களை அமைத்துக்கொள்ளக் கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. அந்த அதிகாரத்தை மறைமுகமாக பறிப்பதுதான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கவுன்சிலின் நோக்கமாகும். தேசிய அளவிலான கவுன்சிலின் உறுப்பினர்களை நியமிப்பதிலோ, அந்தக் கவுன்சில் உருவாக்கும் கொள்கைகளை தீர்மானிப்பதிலோ எந்த விதத்திலும் மாநிலங்களுக்கு தற்போது பங்கு வழங்கப்படவில்லை. அதுபோலவே, மாநில அளவிலான வாரியத்திலும் ஒரேயொரு உறுப்பினரை நியமிப்பது தவிர, வேறு எந்த அதிகாரமும் மாநில அரசுகளுக்குக் கிடையாது. 
       சுகாதார பிரச்சனை என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக்கூடியதாகும். தமது மாநிலத்துக்கு எத்தகைய சுகாதாரத் தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற எப்படியான நடவடிக்கைகளை எடுப்பது என்பவற்றையெல்லாம் மாநில அரசுகள்தான் சிறப்பாக முடிவு செய்ய இயலும். ஆனால், இந்த யதார்த்தத்தை முற்றாகப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு இந்தத் தேசிய கவுன்சிலை தற்போது உருவாக்க முயற்சிக்கிறது. கல்வி, வேளாண்மை போன்ற துறைகளில் எப்படி மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரங்களை மையப்படுத்தும் விதத்தில் புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றனவோ, அப்படித்தான் சுகாதாரத்துறையிலும் முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கும் முடிவுசெய்திருக்கிறார்கள். இதைத் தமிழக முதல்வர் எதிர்த்துள்ளார் என்றபோதிலும் மற்ற மாநில அரசுகள் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது மிகப்பெரிய சோகமாகும். 
  
      மாநில அரசின் முழுமுதலான கட்டுப்பாட்டில் இருப்பது காவல் துறையாகும். ஆனால் அதற்கு உலை வைக்கும் வேலையிலும் மத்திய அரசு இறங்கிவிட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு( என்.ஐ.ஏ) ஒன்றைத் துவக்குவதற்கான சட்டத்தையும், ஏற்கனவே இருந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தம் செய்து புதிய சட்டம் ஒன்றையும் இதற்காக அது உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் குறுக்கிடுவதாக இருக்கிறது. இப்போது கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி பயங்கரவாதச் செயல் ஒன்று நிகழுமேயானால் உடனடியாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் அந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். அதுகுறித்த விவரங்களை மாநில அரசுக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மாநில அரசு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் அதன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு அந்த அமைப்பு இதுபற்றிய விசாரணையை மேற்கொள்ளும். சம்பவம் அவ்வளவு தீவிரமானதாக இல்லையென்றால் மாநில அரசின் காவல்துறையே அதை விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பு கேட்டுக்கொள்ளும். இந்த அம்சம் மாநில அரசின் அதிகாரத்துக்குள் தலையிடுவதாக இருக்கிறது என்பதே உண்மை. சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க முடியாது. ஆனால் இந்தச் சட்டமோ மாநில அரசை வெறும் தகவல் சொல்லும் அமைப்பாக மாற்றிவிட்டது. வழக்கை விசாரிப்பதற்கு மாநில அரசின் சம்மதம் இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. மாறாக மாநில அரசு மத்திய புலனாய்வு அமைப்பிடம் தகவல் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உள்ள சட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அம்சம் இது. அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்கள் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமிப்பது, அந்த நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கும். இந்த சிறப்பு நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்குதான் செய்ய வேண்டும்.
தேசிய புலனாய்வு அமைப்புக்கான சட்டத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டம் இதற்குமுன் இருந்த பொடா சட்டத்தின் மோசமான பல கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 268ல் செய்யப்பட்டிருக்கும் திருத்தம் மாநில அரசின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது. இந்தச் சட்டத்தில் மாநில அரசு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த இடங்களிலெல்லாம் மத்திய அரசு அல்லது மாநில அரசு என திருத்தம் செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மத்திய அரசு விருப்பம்போலத் தலையிடுவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 
      இப்படி மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுவதற்கான சான்றுகளை அடுக்கிகொண்டே போகலாம். இத்தனை மோசமாக நிலமை இருந்தும்கூட முன்போல மாநில அரசுகளும் மாநிலங்களில் வலிமையோடு இருக்கும் அரசியல் கட்சிகளும் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கின்றன என்ற வினா நம்முள் எழும். மாநிலக் கட்சிகள் தங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் போதும் என்ற சுயநலச் சகதியில் அமிழ்ந்து கிடக்கின்றன என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் தற்போது மாநிலங்களுக்கிடையே நல்லுறவு இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். மத்திய அரசு தலையிட்டுத் தீர்த்துவைக்கவேண்டிய நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் அது உரிய விதத்தில் பங்காற்றாமல் மாநிலங்களுக்கிடையேயான கசப்புணர்வு அதிகரிக்கும்படி விட்டுவிடுகிறது. மாநில அரசுகள் தம்மிடையே ஒற்றுமை இல்லாமல் மோதிக்கொள்ளவெண்டும் என்பதே மத்திய அரசின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கிறது. காவிரிப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு, பாலாறு முதலான பிரச்சனைகளிலும் இந்த பொறுப்பற்ற அணுகுமுறையைத்தான் நாம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் மாநில உரிமைகளை மீட்கவும், காக்கவும் புதிய போராட்டக் களங்களை ஏற்படுத்தவேண்டிய வரலாற்றுக் கடமை நம்மை அழைக்கிறது. 

No comments:

Post a Comment