Monday, December 6, 2010

வெள்ளத்தில் கரையும் வீடுகள்


சிதம்பரம் புறநகரில் அமைந்துள்ள சகஜாநந்தா காலனியில் இருக்கும் வீடுகள் இவை. நான் 06.12.2010 அன்று அந்தப் பகுதியைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினேன். இரண்டு நாட்கள் முன்புவரை இடுப்பளவு தண்ணீரில் இந்தப் பகுதி தத்தளித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் வெள்ளம் வடிந்தது. பெரும்பாலான வீடுகள் வெள்ளம் புகுந்து சேறும் சகதியுமாய் ஆகிவிட்டன. மண் தரை கரைந்துவிட்டது. பல வீடுகளில் சுவர்கள் இடிந்துவிட்டன. இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட வீடுகளின் கதி குடிசைகளைவிட மோசமாக இருக்கிறது. 

பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் இந்தியா பாதிப்படையவில்லை என்று அவர்கள் பெருமை பேசுகிறார்கள். வல்லரசுகளோடு போட்டிபோடுவதாக அவர்கள் சொல்லும்போது நாமும் அதை நம்பிவிடுகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாள நண்பர் என்னிடம் மிகவும் கவலையோடு ஒன்றைக் கேட்டார்: “ இப்படி வெள்ளம் வரும்போது ஏன் நகரங்கள் பாதிக்கப்படுவதில்லை? இன்றுகூட சென்னையில் மழை பெய்கிறது. ஆனால் எங்களுக்கு அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. காலையில் வாக்கிங் போவதுகூட நிற்கவில்லை” என்றார். “ அப்படிச் சொல்ல முடியாது. புற நகர்களைப் போய்ப் பாருங்கள். சென்னையில் மட்டுமல்ல எல்லா நகரங்களிலுமே புறநகர்கள் கிராமங்களைவிட மோசமாக இருக்கின்றன” என்று நான் பதில் சொன்னேன். அப்போது ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். புறநகர்களிலும் சேரிப்பகுதிகள் உள்ளன. அவற்றின் நிலைமை இன்னும் மோசம் “ என்று நான் அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்தப் படங்களை அந்த எழுத்தாள நண்பருக்கு சமர்ப்பிக்கின்றேன்( இவை என் மொபைல் போனில் எடுக்கப்பட்டவை )









No comments:

Post a Comment