Monday, December 6, 2010
அம்பேத்கர் - ’ தோல்வியடைந்த குடும்பத் தலைவர்’
இன்று அம்பேத்கரின் நினைவு நாள். மகராஷ்டிர அரசு வெளியிட்டிருக்கும் அவரது கடிதங்களின் தொகுப்பை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். 2006 ஆம் ஆண்டில் அவருடைய எழுத்துகள் மற்றும் பேச்சுகளின் 21 ஆவது தொகுதியாக அது வெளியிடப்பட்டது. அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் வலி நிறைந்ததாக இருந்திருக்கிறது. அவரை ஒரு ’ தோல்வியடைந்த குடும்பத் தலைவர்’ என்று சொல்லலாம். அவருக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவந்த சவீதாவை 1948 ஆம் ஆண்டில் அம்பேத்கர் திருமணம் செய்துகொண்டபோது தனது வாழ்க்கை இன்னும் எட்டு ஆண்டுகளில் முடிந்துவிடுமென்று அவருக்குத் தெரிந்திருக்காது.
இந்தக் கடிதத்தொகுப்பில் கடைசியாக வைக்கப்பட்டிருப்பது அம்பேத்கர் தனது மகன் யஷ்வந்த்துக்கு எழுதிய கடிதம். புத்த பூஷண் பிரிண்டிங் பிரஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனிமேல் தலையிடக்கூடாது, அதன் பொறுப்புகள் எல்லாவற்றையும் திரு. உப்ஷம் என்பவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என அதில் அம்பேதகர் கூறியிருக்கிறார். அந்த அச்சகத்தைத் தனதுக்கு உரிமையாக்கிக்கொள்ள யஷ்வந்த் முயற்சிப்பதாக அதில் அம்பேதகர் குற்றம் சாட்டியிருக்கிறார். “ நான் உன்னை எச்சரிப்பதற்காகவே இதை எழுதுகிறேன். அந்த அச்சகம் ஒரு பொதுச் சொத்து. உனக்கோ எனக்கோ உரிமையானதல்ல. ஒரு தனி நபர் ஒரு பொதுச்சொத்தை அபகரித்துக்கொள்வதை அனுமதிக்கவே முடியாது” என்று அம்பேத்கர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். “ நான் உன்னையோ உனது குடும்பத்தையோ பராமரிப்பதற்கு பொறுப்பேற்க முடியாது . நீ உனது பங்கைக்காட்டிலும் அதிகமாகவே பெற்றுக்கொண்டுவிட்டாய்” என அந்தக் கடிதத்தில் அம்பேத்கர் கூறுகிறார். இப்படியான ஒரு தந்தையை எந்த மகன் தான் விரும்புவான்?
மம்முட்டி நடித்த அம்பேத்கர் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிவிட்டது. தமிழக அரசும் அதற்காக பத்து லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டது. எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் இந்தப் படத்தைப்பற்றி எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment