Wednesday, July 6, 2011

அஞ்சலி: கார்த்திகேசு சிவத்தம்பி: நூர்ந்து அவிந்த ஒளி - ரவிக்குமார்


                                 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932- 2011)

 சிவத்தம்பி இறந்துவிட்டார் என்ற செய்தியைத் தாங்கி மின்னஞ்சல் ஒன்றை திரு.எம்.ஏ.நுஃமான்  அனுப்பியிருந்தார் . இன்று ( 06.07.2011) இரவு பத்தேகால் மணிக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மின்னஞ்சல் எனக்கு இன்னொரு மரணத்தை நினைவுபடுத்தியது.சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த  கவிஞர் வில்வரத்தினத்தின் மரணம். அதையும் நுஃமான்தான் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிவித்திருந்தார்.

சிவத்தம்பி நீண்டகாலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்புச் செய்திருக்கிறார். எண்பது வயதில் ஒருவர் மரணிப்பது துக்கத்துக்குரியது அல்லதான் என்றாலும் சிவத்தம்பியின் மரணத்தை நாம் வயதைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஈழத்தின் நீண்ட சிந்தனை மரபில் முக்கியமான கண்ணியாகத் திகழ்ந்தவர் சிவத்தம்பி. அவரைப்போல பல பரிமாணங்களைக்கொண்ட ஆளுமையாக நாம் இன்று எவரையும் சுட்ட முடியாது. ஒரு குறிப்பிட்டத் துறையில் அவரைக்காட்டிலும் ஆழமான ஆய்வுகளைத் தந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அவரைப்போல பல்வேறு துறைகளையும் உற்றுநோக்கி, எல்லாவற்றின் உள்தொடர்புகளையும் புரிந்துகொண்டு தனது பார்வையை முன்வைத்தவர் என ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இன்று வேறு எவரையும் சுட்டிக்காட்ட முடியாது. அந்த வகையில் சிவத்தம்பியின் மரணம் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை , யாழ்ப்பாணம் பகுதியில் கரவெட்டி என்னுமிடத்தில் 1932 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி சிவத்தம்பி பிறந்தார் . ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஷாகிராக் கல்லூரியில் கற்றார். இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புகளை முடித்த அவர் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தைப் பெற்றார். 1978 ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டு காலம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

சிவத்தம்பி மேடை நாடகங்களில் நடித்ததோடு வானொலி நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவரது நாடக ஈடுபாடு குறித்து பேராசிரியர் சி மௌனகுரு கூறியிருப்பவை கவனத்துக்குரியவையாகும் “ மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளைத் தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. ..... பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்” என்கிறார் மௌனகுரு ( சிவத்தம்பியின் 75 ஆம் பிறந்தநாளையொட்டி ஆற்றிய உரை).

தமிழகத்தைச் சேர்ந்த  மார்க்சிய சிந்தனையாளர்களிலிருந்து வேறுபட்ட கோணத்தில் மதம் என்ற நிறுவனத்தையும் மதச் சார்பான இலக்கியங்களையும் அணுகியவர் சிவத்தம்பி. ” சித்தர் பாடல்கள் தமிழில் இன்னும் முற்றுமுழுதாக ஆராயப்பெறவில்லை. அவற்றினுடைய இலக்கிய முக்கியத்துவம் பற்றிய இரு குறிப்புக்களை ஏ.வி.சுப்பிரமணிய ஐயரும் (The Philosophy of the Siddha), காமில் ஸ்வெலபில்லும் (The Poets of Power) எழுதியுள்ளனரே தவிர அவை பற்றிய விரிவான ஆய்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறு மேற்கொள்ளப்படும் பொழுதுதான் மறைஞானக் கருத்துடைய பாடல்களின் வளர்ச்சி தமிழிற் சித்தர் பாடல்களுக்கு முன்னரேயே தொடங்கிவிட்டதென்பது தெரியவரும். குறிப்பாக, தேவாரப் பாடல்களின் பின்னர் தோன்றிய திருவிசைப்பாப் பாடல்களிலே காணலாம். ( மதமும் கவிதையும்-தமிழ் அநுபவம்) என்கிறார் சிவத்தம்பி.

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளசிவத்தம்பி மொழி, சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் குறித்து ஆராய்ந்திருக்கிறார். திராவிட இயக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்திருக்கும் சிவத்தம்பி,” திராவிடக் கருத்துநிலை (ideology) என்பது ஒரு கருத்து நிலையா அல்லது குறிப்பிட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஏற்பட்ட சமூக/ பொருளாதார/ பண்பாட்டு/ அரசியல் மாற்றங்கள் யாவற்றையும் சுட்டிநிற்கின்ற ஒரு கருத்துநிலைத் தொகுதியா (Cluster of ideologies)? “ என்று கேள்வி எழுப்பினார். “இது பற்றிய ஓர் உன்னிப்பான விவாதம் அவசியம் என்று கருதுகிறேன். திராவிடக் கருத்துநிலையின் உருவாக்கக்கூறுகளைப் பிரித்து நோக்கும்பொழுது, அவற்றுட் சில தமது வரலாற்றுப் பயன்பாட்டைப் பூர்த்திசெய்துவிட்டனவாகவும் சில அவற்றினுள்ளே கிடந்த அகமுரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளனவாகவும், ஆனால் சில இன்னும் வரலாற்றுத் தேவையுடையனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். இதன் காரணமாகவே, இந்தக் கருத்துநிலை பற்றிய சிந்திப்புக்களில் ஒரு தேக்கமிருப்பதை உணரக்கூடியதாகவிருக்கிறது ” என்று கூறிய அவர் ,”இந்தத் தேக்கநிலையிலிருந்து வெளிவருவதற்கு நாம் சில முக்கிய வினாக்களுக்கு விடை இறுக்க வேண்டியவர்களாகிறோம் என்று குறிப்பிட்டு அந்த வினாக்களையும் முன்வைத்தார்:” (i) இது ஓர் ஆய்வு முறைமைப் பிரச்சினை--நாம் இதன் பரிமாணங்கள் யாவற்றையும் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இதன் ஓர் உள்ளக அம்சமாக இருக்கிறோமா? (ii) இன்றைய எமது உண்மையான இரசியல் சமூகப் பிரச்சினைகள் யாவை? அவை பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா?” என்று அவர் எழுப்பிய வினாக்கள் இன்றளவும் பதில்சொல்லப்படாமலேயே இருக்கின்றன.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அவர் வருவாரா மறுத்துவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்த சமயம். நான் அப்போது தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மா. ராஜேந்திரன் அவர்களைப் பார்ப்பதற்குப் போயிருந்தேன். அவர் அந்த நேரத்தில் சிவத்தம்பிக்குப் ஃபோன் செய்து மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார் . என்னையும் அவரோடு பேசச் சொன்னார். நானும் அவரை வலியுறுத்தினேன். ஆனால் அந்த  மாநாட்டில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

இந்த ஆண்டு(2011)  மே மாதத்தில் எனது நண்பரொருவர் இலங்கைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் சிவத்தம்பி அவர்களைச் சந்தித்தார். அவர் அருகில் இருந்தபடி என்னோடு அலைபேசியில் தொடர்புகொண்ட நண்பர் அதை சிவத்தம்பியிடம் தந்தார். என்னிடம் உற்சாகமாகப் பேசிய அவர், தான் இப்போது கம்ப ராமாயணம் குறித்து நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் கவித்துவம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் சொன்னார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக நானும்  அவரோடு உரையாடினேன். நண்பரிடம் ஒரு வேண்டுகோளையும் முனவைத்தேன். பத்திரிகைத் துறையைச் சார்ந்த அந்த நண்பர் ராமாயணத்திலும் நாட்டம் உள்ளவர். உடனடியாக சிவத்தம்பி அவர்களிடம் அவரது ராமாயண நூல் திட்டம் குறித்து நேர்காணல் ஒன்றைப் பதிவு செய்யுமாறும் அதை நான் நடத்திவரும் மணற்கேணி இதழில் வெளியிடலாமென்றும் அந்த நண்பரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அந்த நேர்காணலைப் பதிவு செய்தார். அவர் ஊருக்குத் திரும்பியதும் அதுகுறித்துக்கேட்டேன். தனது புத்தகங்கள் , குறிப்புப் புத்தகங்கள் அடங்கிய பையை வேறொரு நண்பர் எடுத்து வந்திருப்பதாகவும் அது சென்னையில் இருப்பதாகவும் சொன்னார். அதன்பிறகு நான் அதுபற்றி மறந்துபோனேன். சிவத்தம்பி அவர்கள் மறைந்த செய்தியைக் குறுந்தகவல் மூலம் பலருக்கும் அனுப்பிவிட்டு அந்தப் பத்திரிகையாள நண்பரைத் தொடர்புகொண்டு அந்த நேர்காணல் குறித்துக் கேட்டேன். அனேகமாக சிவத்தம்பியிடம் பதிவுசெய்யப்பட்ட கடைசி நேர்காணலாக அதுவே இருக்கும் எனத் தோன்றியது. ” என்னுடைய லக்கேஜ் அதிகமாக இருந்ததால் என்னுடன் வந்த பதிப்பாளர் ஒருவரிடம் என் பை ஒன்றைக் கொடுத்தேன். அந்த நேர்காணல் எழுதிவைத்த குறிப்புப் புத்தகம் , மற்றும் பல பொருட்கள் அடங்கிய அந்தப் பை தொலைந்துவிட்டது என்று சொல்லிவிட்டார் அந்தப் பதிப்பாளர்”என்றார் அந்த பத்திரிகையாள நண்பர்.சிவத்தம்பியின் இழப்பை அந்த கணத்தில் நான் இன்னும் அதிகமாக உணர்ந்தேன்.

ஈழப்பிரச்சனையில் குறிப்பாக விடுதலைப் புலிகள் குறித்த அவரது நிலைப்பாட்டில் அதிருப்தி கொண்டவர்கள் பலர் அவரைக் கடுமையாக விமர்சித்ததை நான் கேட்டிருக்கிறேன். நிறப்பிரிகை பத்திரிகையை நானும் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரும் இணைந்து நடத்திக்கொண்டிருந்தபோது இலங்கையிலிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. கே.டி.குலசிங்கத்தின் கடிதம் அது. சிவத்தம்பியை மிகவும் கடுமையாக விமர்சித்து அதில் எழுதப்பட்டிருந்தது. அவரை விமர்சித்தவர்கள் அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றனர். இலங்கை போன்றதொரு நாட்டில் உயிரோடிருப்பவர்கள் எல்லோர்மீதும் இத்தகைய விமர்சனத்தை வீசிவிடமுடியும். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும்கூட பேசவேண்டிய தருணத்தில் மௌனம் காத்த குற்றத்தைச் செய்யாத எவரும் இன்று உயிர்வாழமுடியாது.இன்று செத்துப் போனவர்கள் மட்டுந்தான் மாவீரர்கள்.எனவே சிவத்தம்பியின்மீதான அத்தகைய விமர்சனங்கள் என்னைக் கவர்ந்ததில்லை. சிவத்தம்பியின் எழுத்துகளைக்கொண்டு அவரைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன்மூலம் ஈழத்தை, தமிழகத்தை நாம் மேலும் துலக்கமாகப் புரிந்துகொள்ள முடியும் .அதற்கு வசதியாக நிறையவே எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர்.


2 comments:

  1. சிவத்தம்பியின் எழுத்துகளைக்கொண்டு அவரைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன்மூலம் ஈழத்தை, தமிழகத்தை நாம் மேலும் துலக்கமாகப் புரிந்துகொள்ள முடியும் .அதற்கு வசதியாக நிறையவே எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர்.

    ReplyDelete
  2. உங்கள் அஞ்சலிக்குறிப்பைப் பார்த்தேன்.
    உடனடியாக விரிவான தகவல்களுடன் எழுதிய குறிப்பைப் பார்த்ததும் வியப்படைந்தேன். என்னால் இவ்வளவு விரைவாக இப்படிச் செயற்பட முடியாது. பத்திரிகையாளராகச் செயற்படும் பயிற்சி உங்களுக்கு உதவுகின்றது என நினைக்கிறேன்.
    -எம்.ஏ.நுஃமான்

    ReplyDelete