Wednesday, September 14, 2011

எழுதா எழுத்து


எழுதா எழுத்து - என்ற எனது பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :

நூறு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளை நடத்தி நூல்களைப் பதிப்பித்து தனி முத்திரையைப் பதித்த தலித்களின் இன்றைய நிலை என்ன?  ஆறுகோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் சர்க்குலேஷனைக் கொண்ட இந்திய நாளிதழ்களில் அவர்களின் எவ்வளவுபேர் பணியாற்றுகின்றனர்?  இதுபற்றி அரசியல் விஞ்ஞானியான ராபின் ஜெஃப்ரி குறிப்பிட்டுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருந்தும்:
“இந்திய மொழி செய்தியேடுகளைப் பற்றிக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்துவருகிறேன்.  இருபது வாரங்களுக்கு மேல் பயணம் செய்த, இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் தங்கி டஜன் கணக்கான பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்றுள்ளேன்.  250க்கும் மேற்பட்டவர்கள¬ப் பேட்டி கண்டிருக்கிறேன்.  இதுவரைக்கும் நான் மைய நீரோட்ட பத்திரிகைகளில் பணியாற்றும் தலித் பத்திரிகையாளர் ஒருத்தரையும் சந்தித்ததில்லை.  இதில் தலித் பத்திரிகை ஆசிரியர், தலித் பத்திரிகை உதிமையாளரைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.  என்னுடன் பணியாற்றும் நண்பரான ஆலிவர் மெண்டல்ஷோன் ஒரு தகவலைத் தந்தார்.  கர்னாடகாவில் டெக்கான் ஹெரால்டு, ப்ரஜாவாணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவரும் அதன்பிறகு1985ல் சங்காதி (Suddi Sangaati) என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தவருமான இந்துதாரா ஹொன்னபுரா என்ற தலித் பத்திரிகையாளரைப் பற்றிச் சொன்னார்.  அந்த வாரப்பத்திரிகை 1987ல் 44 ஆயிரம் பிரதிகள் விற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.21
இந்திய மக்கள் தொகையில் கால்பங்கினராக இருந்தபோதிலும், தினசரிகளில் ரிப்போர்ட்டர்களாகவோ, சப்&எடிட்டர்களாகவோ ஒரு தலித்தும் இல்லை எனக் கூறும் ராவின் ஜெஃப்ரி, “தலித்துகள் நடத்துகிற நாளேடு ஒன்றுகூட இல்லை.  அவர்கள் நடத்தும் தலித் பத்திரிகைகளோ சிறு பத்திரிகைகளாக, இலக்கியத்துக்கு அதிக அழுத்தம் தருபவையாக, வரையறைக்குட்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துபவையாக அவற்றை உற்பத்தி செய்யும் வட்டத்தைத் தாண்டி மற்றவர்கள் அறியாதவையாக உள்ளன” என்கிறார்.  அவர்  சந்தித்த ஒரேயொரு தலித் பத்திரிகையாளர் டி.எஸ். ரவீந்திரதாஸ்.  அவர் சென்னையில் இருப்பவர்.  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) தலைவரான அவர் எந்தவொரு வணிகப் பத்திரிகையிலும் பணியாற்றியது இல்லை.  800 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சங்கத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இந்திய பத்திரிகையாளர்கள் எவரிடமாவது, தலித் பத்திரிகையாளர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டால் “எனக்கு இரண்டொருநாள் அவகாசம் தரமுடியுமா?” என்றுதான் பதில் வரும்.” என்று குறிப்பிடும் ஜெஃப்ரி இந்தியாவின் மிகப்பெரிய நாளிதழான மலையாள மனோராமாவில் ஒரு சில தலித்துகள் இருப்பதாகவும் ஆனால் அவர்கள் சிறிய வேலைகளில்தான் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.  ஆப்ரிக்க & அமெரிக்கர்கள் என அழைக்கப்படும் கறுப்பின மக்கள் குறித்த செய்திகளுக்காக அமெரிக்க பத்திரிகைகள் 1920கள் முதற்கொண்டே தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளன.  அத்தகைய நடவடிக்கை இங்கு அவசியம் என்பதை இந்திய பத்திரிகைகள் உணரவே இல்லை என்கிறார் அவர்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் கறுப்பின மக்கள் 13 சதவீதம் உள்ளனர்.  அதைவிட அதிகமான சதவீதத்தில் தலித்துகள் இருந்தபோதிலும் இந்திய நிலைமை அமெரிக்க நிலைமைக்கு நேரெதிராக உள்ளது.  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் 1827ல் பத்திரிகையை ஆரம்பித்துள்ளனர்.  ஏறத்தாழ அதே காலத்தில் இங்கும் தீண்டாதார் பத்திரிகை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகம்.  1891 வாக்கில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் கறுப்பினத்தவரால் நடத்தப்பட்டுள்ளன.  வர்த்தகத் துறையில் ஈடுட்ட கறுப்பினத்தவரும் கிறித்தவ மதப் பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்த கறுப்பர்களுமாக இரு தரப்பினரிடமிருந்து பத்திரிகைகள் வெளியாகியுள்ளன.  இந்தியாவிலோ கறுப்பினத்தவரைப் போல தலித்துகளுக்கு மத அமைப்புகளோ, கல்வி அமைப்புகளோ இல்லை என்கிறார் ஜெஃப்ரி.  ஆனால் அயோத்திதாசர் அந்த இரண்டையும் உருவாக்கினார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் நாளேடுகளாக இருக்கும் தினமலர், தினகரன், தினத்தந்தி முதலியவற்றில் தலித்துகள் பத்திரிகையாளர்களாக உள்ளார்களா என்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.  தினத்தந்தி பெரும்பாலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாடார்களையே தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் பத்திரிகையாளர்களாக அனுப்பிவருகிறது.  தினகரனும் கூட அப்படித்தான்.  தினமலர் நாளேட்டில் அவ்வப்பகுதிகளைச் சேர்ந்த எண்ணிக்கை பலம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
தலித் பத்திரிகையாளர்கள் பற்றி கேட்டபோது, “அது ஒரு பிரச்சினையே அல்ல.  ஒருத்தரை நியமிக்கும்போது நாங்கள் அவரது சாதி என்னவென்று கேட்பதில்லை... அவர்களில் தலித்துகள் எவ்வளவுபேர் என்பது சரியாகத் தெரியாது.  ஆனால் நிச்சயம் சில தலித்துகள் இருக்கக்கூடும்“ என்று தினகரனின் மேனேஜிங் எடிட்டர் ரி. குமரன் கூறியுள்ளார்.  (18-01-1999) தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தியு-ம் இதே போன்றுதான் பதிலளித்துள்ளார்.  “ஆமாம், நிறையபேர் இங்கு இருக்கிறார்கள் அச்சிடும் இடத்தில்,,,,, எட்டிடோரியல் சைடிலும் சிலர்.... இரண்டு மூன்றுபேர்... இருக்கலாம்.  நாங்கள் சாதி அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதுமாதிரியான விஷயங்களில் எனக்குக் கவலையுமில்லை.  தகுதி. திறமை இவைதான் எனக்கு முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார் (19-01-1999) தினமணி ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம் தனது பத்திரிகையில் ஒரு போட்டோகிராபரும், ஒரு சப்&எடிட்டரும் தலித்துகள் எனப் பெருமையோடு கூறியிருக்கிறார் (19-01-1999) இந்தத் தகவல்கள் யாவும் ராபின் ஜெஃப்ரியின் கருதுகோளை நிரூபிக்கும் விதமாகவே உள்ளன.
புதுதில்லியில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் (Acredited to PIB) ஒருத்தர் கூட தலித் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சிதரும் தகவலாக பி.என். உனியாலுக்கு இருந்தது.  அவர் இதுபற்றி “பயனீர்” நாளேட்டில் (16-11-1996) எழுதியதைத் தொடர்ந்து, தலித் சிந்தனையாளர்களான சந்த்ரபான் பிரசாத் மற்றும் ஷியோராஜ் சிங் பெச்சாய்ன் இருவரும் சேர்ந்து கோரிக்கை மனு ஒன்றை எடிட்டர்ஸ் கில்டுக்கும், ப்ரஸ் கவுன்சிலுக்கும் அளித்தனர்.  அமெரிக்காவின் அனுபவத்தைப் பின்பற்றி இந்தியாவில் தலித் பத்திரிகையாளர்களை நியமிக்கவேண்டும்.  2005 ஆண்டை விட அதற்கான இலக்காக நிர்ணயிக்க வேண்டும்“ என அவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.  அதற்குப்பிறகு ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் அது பற்றி இந்திய பத்திரிகை முதலாளிகளோ, பத்திரிகை அமைப்புகளோ கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.  அந்த நிலையிலும் ஒரு மாற்றமும் நிகழவில்லை.
இந்தியாவில் வெளியாகும் பத்திரிகைகளில் கணிசமானவை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகின்றன.  நாளேடுகளைப் பொருத்தவரை பிராமண ஆதிக்கம் அகற்றப்பட்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன.  காட்சி ஊடகத்தை எடுத்துக்கொண்டாலும் அதுவே உண்மை.  ஆனால் மற்ற மாநிலங்களை விடவும் கேடான நிலையைத்தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் கடைப்பிடித்து வருகின்றன.  அவர்களைப் பொருத்தவரை சமூகநீதி என்பது சாதி நீதியாகவே உள்ளது.

No comments:

Post a Comment