Friday, October 19, 2012

மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் காலம்





இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த ஆண்டு ( 2012 ) டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  உயிரிழந்திருப்பதாகவும் நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவிய டெங்கு தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இந்த  ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு அதிகரித்திருப்பதாகவும் , தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாடன் ஒப்பிடும்போது கூட தமிழ்நாட்டில் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.



டெங்கு காய்ச்சலில் இரண்டு வகை உள்ளது. சாதாரண காய்ச்சல் (Dengue Fever-DF) ஒன்று, ரத்தக்கசிவை ஏற்படுத்தும் காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF) மற்றொன்று. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ரத்தக் கசிவை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சல் 1963ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இந்தியாவில் அதுவும் கொல்கத்தா பகுதியில் கண்டறியப்பட்டது. 1996ஆம் ஆண்டு இந்த காய்ச்சலுக்கு 423 பேர் இந்தியாவில் பலியானார்கள். அதன்பிறகு ஆறு, ஏழு ஆண்டுகள் அது அடங்கியிருந்தது. பிறகு மீண்டும் அது இந்தியா முழுவதும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இந்தக் காய்ச்சலுக்கு ஆளானவர்களில் ஒன்று முதல் பத்து சதவீதம் பேர் வரை இறந்துபோகிறார்கள். இந்தக் காய்ச்சலை அவ்வளவு சுலபமாக அடையாளம் காணமுடியாது. இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால் மருத்துவர்கள்கூட இதை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு விதமாகவும், பெரியவர்களிடம் வேறு விதமாகவும் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

குழந்தைகளுக்கு வருவது பெரும்பாலும் சாதாரண காய்ச்சல்தான். ஆனால் பெரியவர்களுக்கு வருவதோ ரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்தான இரண்டாவது வகை காய்ச்சலாகும். இந்தக் காய்ச்சல் வந்தால் தலைவலி, மூட்டு வலி, மயக்கம், வாந்தி, குமட்டல் முதலிய அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இத்தகைய அறிகுறிகள் இருப்பவையெல்லாம் டெங்கு காய்ச்சல் என்று சொல்லிவிடவும் முடியாது.
இந்தியாவில் பதினெட்டு மாநிலங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மாநிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 1996க்கும், 2006க்கும் இடையிலான பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிகப்பட்சமாக 1997ல் பதினாறாயிரம் பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு இந்திய அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் 2001ஆம் ஆண்டு இந்திய அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3306 பேர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 816 பேர். அதுபோலவே அந்த ஆண்டு அந்தக் காய்ச்சலால் இறந்தவர்கள் 53 பேர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 8 பேர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தலா எட்டு பேர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகி இருப்பதாக 2006ஆம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்கான வைரஸைப் பரப்புவது ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு வகைதான். ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசு வகையும்கூட இந்த நோயைப் பரப்புகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பகல் நேரத்தில்தான் இந்தக் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கின்றன. சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தகர டின்கள் முதலானவற்றில் தேங்கும் மழை நீர் இந்தக் கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. எனவே அத்தகைய பொருட்களை திறந்த வெளிகளில் போட்டு வைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். இதில் கூடுதலாக நாம் இதுவரை எண்ணிப்பார்க்காத இன்னொரு சிக்கலும் இப்போது உலக சுகாதார நிறுவனத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்புக்கான அமைப்புகளை அலுவலகங்கள், வீடுகள் எல்லாவற்றிலும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று நமது அரசாங்கங்கள் வலியுறுத்தி வந்ததை நாம் அறிவோம். அந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளே இப்போது ஆபத்தாக மாறியிருக்கிறது. அந்த அமைப்புகளை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டதால் அவை இந்த ஆபத்தான கொசுக்களின் பிறப்பிடமாக மாறி உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது-.

டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தபடியாக நமது நாட்டைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது சிக்குன் குனியா காய்ச்சலாகும். சமீப காலமாக அதிக அளவில் இதன் பாதிப்பை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது.  டெங்குக் காய்ச்சலைப் போலவே அறிகுறிகள் இருந்தாலும் சிக்குன் குனியாவின் பாதிப்பு வேறுபட்டதாகும். இது மூட்டுகளைத் தாக்கி மனிதர்களை முடக்கிப்போட்டு விடும். இந்தக் காய்ச்சல் விரைவாக குணமடைந்து விட்டாலும், இதன் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதற்கான தடுப்பூசி என்று எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் இதற்கான ஒரே பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

டெங்கு, சிக்குன் குனியா தவிர மலேரியாவின் அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மலேரியாவை ஒழித்து விட்டதாக சொல்லிக்கொண்டாலும், அந்த நோயின் புதிய அவதாரங்கள் இந்த நாடுகளை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மலேரியாவைப் பரப்பும் கிருமிகள் அதற்கான மருந்துகளைத் தாண்டி பரவக்கூடிய வகையில் தம்மை இப்போது தகவமைத்துக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத புதிய வகை மலேரியா அண்மையில் தாய்லாந்து - கம்போடிய எல்லை பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என்ற ஆபத்தை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொசுக்களால் பரவும் இந்த ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கங்கள் அதற்கு முனைப்போடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நோய்களுக்கான மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்வது மட்டுமல்லாமல் இத்தகைய நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும், அதுபோலவே போதுமான சுகாதாரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவதில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் குறை கூறியிருக்கிறது. தற்போதுள்ள மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத புதிய வகை வைரஸ்கள் தோன்றியிருப்பதைப் பற்றியும் அது கவலை தெரிவித்திருக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்காக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மஹிடோல் பல்கலைக்கழகம் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனைகள் முடிந்து விட்டன. இந்த மருந்து மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கப்படும். அது வெற்றிகரமாக இருந்தால் அதன் பிறகு அது மார்க்கெட்டுக்கு வரும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனமும் பெருமளவில் ஆதரவு அளித்து வருகிறது. இப்படியான ஆராய்ச்சிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். இதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

கொசுக்களால் பரவும் இந்த வியாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கங்களின் பங்கு மட்டுமே போதுமானதல்ல. இதில் பொதுமக்களின் ஈடுபாடு மிக மிக அவசியம். இத்தகைய கொசுக்கள் பரவாத வண்ணம் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாக தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ள வேண்டியது பொதுமக்களாகிய நம்முடைய பொறுப்பு. அதுபோலவே கொசுக்கள் கடிக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடாது. குறிப்பாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுநல அமைப்புகள் இதில் முனைப்போடு பங்காற்ற வேண்டும்.
இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் நல்வாழ்வுத்துறையோடு சேர்ந்து மற்றத் துறைகளும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கல்வித்துறை, பொதுப்பணித்துறை, தொழில்துறை, சுற்றுலாத்துறை போன்றவையும் இதில் பங்களிபபு செய்வது அவசியம். மாணவர்களிடம் இந்த நோய்கள் பற்றியும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்குப் பலன் இருக்கும். விடுதிகளில் தங்கிப்படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கொசுவலைகளை அளிப்பது மிக மிக அவசியமாகும். அதுபோலவே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதற்கு பொதுப்பணித்துறையின் பங்களிப்பு அவசியம் தேவை. அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் இதை நிறைவேற்ற முடியாது.

கொசுக்களால் பரவுகின்ற இந்த நோய்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளின் விளைவு ஆகும். எனவே இவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியம்தான். அதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

( ஜூனியர் விகடன் இதழில் 29.05.2008 அன்று வெளியான  கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது  )

4 comments:

  1. 2001ல் எனக்கு இரத்தக் கசிவு தரும் இடெங்கு வந்து அவதிப்பட்டேன். 2/3 நாளில் இது இடெங்கு வகை என்று கண்டு பிடித்து மருத்துவம் பார்த்தார்கள். 3/4 ஆம் நாளிலேயே உடலில் அங்கங்கு வெடிப்பு வந்து இரத்தம் கசியட்டுமா என்ற நிலை வந்தது. கையில் மிகச் சில இடங்களில் இரத்தம் மெல்லியதாகப் பட்டது. பயந்துதான் போனேன். இரத்ததில் இருந்து பிளேட்லெட்டு என்ற ஒன்றை பிரித்து வைத்திருக்கிறார்கள். அதனை ஏற்றியதும் நோய் குறைகிறது. எனக்கு 4 உறை ஏற்றினார்கள்.

    நோய் குறைந்ததும் விளையாட்டாக எழுதிய கவிதை இது :)
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=30112153&format=print&edition_id=20011215

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஜனவரியில் எனது மூத்த மகனுக்கு டெங்குக் காய்ச்சல் வந்து ஆபத்தான கட்டம்வரை சென்று மீண்டார். அப்போது அவருக்கு ரத்தம் அளித்த நல்ல உள்ளங்களை இப்போது நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

      Delete
  2. டெங்கு என்பது தவறான உச்சரிப்பு ஆகும். 'டெஙுகி' என்பதே சரி.

    சரவணன்

    ReplyDelete
  3. திருத்தம்- மேற்கண்ட மறுமொழியில் 'டெங்கி' என்ற சொல்லை 'டெஙுகி' எனத் தவறாக டைப் செய்துவிட்டேன். தயவுசெய்து திருத்தி வாசிக்க.

    சரவணன்

    ReplyDelete