Wednesday, February 13, 2013

‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்







திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித்தவர். ‘ ஸ்கூலுக்குப் போகும்போது ஆத்துல தண்ணி அள்ளிக் குடிச்சா , குடியானவங்க ஆத்துல எப்படி நீங்க தண்ணி அள்ளலாம்னு புளிய மிளாரால அடிப்பாங்க ‘ என்று தனது சிறு பிராயத்தை நினைவுகூரும் அவர் , பலருக்கும் தெரிந்த அங்கீகரிக்கப்பட்ட பிரபலமாக ஆகிவிட்டாலும்கூட அந்தக் கொடுமைகள் குறையவில்லை என்கிறார். ‘ சேலத்துக்குப் பக்கத்துல ஒரு கெணத்துல குளிச்சிக்கிட்டிருந்தேன், அப்போ அந்தக் கெணத்துக்குச் சொந்தக்கார அம்மா வந்து நீ என்ன சாதின்னு கேட்டாங்க. நான் சாதிய சொன்னதும் அப்படியே ஈரத் துணியோட என்ன விரட்டிவிட்டுட்டாங்க’ என்று தனது அனுபவத்தைச் சொல்கிறார். மகாத்மா காந்தி, வினோபா பாவே, மார்ட்டின் லூதர் கிங் என்று பலரோடும் பழகி அவர்களோடு சேர்ந்து பணியாற்றியவர். ‘ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்‘ என்ற வள்ளலாரின் வார்த்தைகளை மனதில் ஏந்தி அவரது ‘அருட்பெருஞ்சோதியை‘ தனது வழிகாட்டியாக வரித்துக்கொண்டவர்.‘ எல்லாம் கைகூடும்‘ என்ற வள்ளலாரின் அருட்பா வரிதான் அவரது மன உறுதிக்கான அடித்தளம்.‘ சரியான நோக்கு, சரியான சிந்தனை, சரியான நடைமுறை ‘ இவை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இவரது நம்பிக்கை. தமிழக அரசின் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, மாற்று நோபல் பரிசு என அழைக்கப்படும்  THE RIGHT TO LIVELIHOOD AWARDS (2008) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றாலும் தன்னை நம்பிப் பின்தொடரும் ஏழை விவசாயக் குடும்பத்துப் பெண்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் மிகப்பெரிய விருது என்கிறார் கிருஷ்ணம்மாள். செங்கல்பட்டில் மருத்துவராகப் பணிபுரியும் தனது மகள் வீட்டில் மலைகள் தாவரங்கள் என இயற்கையின் ஆற்றல் மிளிரும் அமைதியான சூழலில் நூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் தனது கணவரைப் பராமரித்தபடி சளைக்காமல் பிரயாணமும் செய்துகொண்டு இப்போதும் ஒரு போராளியாக வாழும் கிருஷ்ணம்மாளைச் சந்தித்துப் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்.

சந்திப்பும் , எழுத்தும் : தேன்மொழி

நீங்க பிறந்த ஊர் எது? அப்பா அம்மா குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...

திண்டுக்கல்லிலிருந்து முப்பத்தாறு கிலோ மீட்டர் அய்யங்கோட்டை. அதுதான் எனது ஊர். என்ன, விவசாயக் குடும்பம் தான். அதுல எப்படின்னா எங்க தாத்தாவுக்கு எப்படியோ பாட்டு எழுதக் கூடிய திறமை,  தாத்தா பேர் கோவிந்தன். அவர் ஓலைச்சுவடியில எல்லா பாட்டையும் எழுதி வச்சிட்டார். ஆனா பாதுகாக்க முடியல. அப்பா இறந்தது 1942. அவருக்கு நாற்பது வயது தான், எல்லோருமே 40,50 வயசு தான் இருந்தாங்க, எங்க அப்பாவுக்கு கேன்சர் வந்துட்டு. ட்ரீட்மெண்ட் எடுத்தாங்க. ஆனா அவரு மருந்து சாப்பிடல. நாற்பது நாள் படுத்த படுக்கையா இருந்தார், தண்ணி கூட கிட்ட கொண்டு வரக் கூடாது, எதுவுமே சாப்பிடாமல், நாற்பது நாள் படுத்த படுக்கையா கிடந்தார். 42 வயசுல அப்பா இறக்கும் போது அம்மாவுக்கு 32 வயசு, மொத்தம் நாங்க 12 பிள்ளைகள், 6 பிள்ளைகள் ஒண்ணு இரண்டு வயசுலயே இறந்து போச்சு. மீதம் ஆறு பேர், மூணு பொண்ணு மூணு ஆணு. நான் 5 வது பெண், 12 வது பெண் அம்பத்தூர்ல டாக்டரா இருக்கு, பேரு டாக்டர் ராஜலெட்சுமி. ராக்கி நர்சிங் ஹோம் ராக்கி தியேட்டர் அவங்களோடதுதான்.

அம்மா தான் வளர்த்தாங்களா? வளர்ப்பு முறை பற்றி?

எங்க அம்மா பட்ட கஷ்டத்த சொல்ல முடியாது, பேரு நாகம்மா, அப்பா ராமசாமி. அம்மா படிக்கல, எங்க தாத்தா தன்னோட மூணு பசங்களையும் கூப்பிட்டு, ஆளுக்கு ஒரு கம்பு, தனித்தனியா நூறு ஆடு கொடுத்து பிழைச்சுக்கச் சொன்னார், எங்கப்பா கடைசி பையன், அவருக்கு ரொம்ப அவமானமா---- ஆயிடுச்சு, அதனால எங்கள இந்த கம்ப தொடாத, மண்ண தொடாத, எங்கப்பன் என்ன கண்ணகுத்திக் கெடுத்துட்டான், எனக்குக் கண்ணு இல்ல இப்போ, அப்படின்னுட்டு எங்கள படிக்க வைக்கிறதுல ஆர்வமா இருந்தார், பேனா வாங்கிக் கொடுத்து எழுதச் சொல்லி படிக்கச் சொல்லி, அடி தான் மிலிட்டரி ட்ரெயினிங் மாதிரி தான், வீட்டுக்கு வெளியில அரிக்கன் லைட்டைத் தொங்க விட்டு , பெரிய பெரிய எழுத்து கொண்ட புத்தகங்கள வாசிக்கச் சொல்வார், இல்லனா அடி, அண்ணன் கிட்ட கேட்டு படிப்பேன்.

உங்க ஊரைப் பற்றிச் சொல்லுங்க? உங்க ஊர்ல பள்ளிக்கூடம் இருந்ததா?
ம்,  நாலாவது வரைக்கும் அங்க படிச்சேன். எங்க அண்ணன் தீவிரமான ஆளு, கம்யூனிஸ்டு, வக்கீல். முக்குலத்தோர் முப்பது குடும்பம் தலித் முன்னூறு குடும்பம், பட்டி வீரம்பட்டி பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது மத்த ஜாதிக்காரவுங்க வம்பிழுத்தா எங்க அண்ணன் அடிச்சிப் போட்டுட்டு வந்துடுவார். அந்த ஆட்கள் ராத்திரியெல்லாம் எங்க வீட்டு மேல கல் எறிவாங்க, கே.ஆர். முனியாண்டி, கிரிமினல் லாயர், இறந்து மூணு வருஷம் ஆகுது.

பள்ளிக்கூடத்துல சாதி பாகுபாடு இருந்ததா?

எண்ணிக்கையிலும் ஒற்றுமையிலும் அதிகமா தலித்துகள் இருந்ததால், அவர்களிடம் பயம் இருந்தது, எங்க பொம்பளைங்க தைரியமா சண்டைக்குப் போவாங்க, பெரியவர் ரத்தினசாமி, சாதி வெறியில அவரை  வெட்டிட்டாங்க, அம்மா கஷ்டப்பட்டதால பள்ளிக் கூடம் போகவேண்டாம்னு சொல்லிடுச்சு, ஆனா எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்ல.

அப்புறம் எப்படிப் படிச்சீங்க?

ஓரே ஒரு பஸ் எங்க ஊருக்கும் மதுரைக்கும் போகும், 75 கி.மீ. ஏழாவது முடிச்சிட்டு சந்தோஷமா இருந்தேன், கணக்கு நல்லா போடுவேன், அப்பா பள்ளிக்கூடத்துக்கு வெளியிலே நிப்பார், வயல்ல எல்லோரும் கதிர் அறுப்பாங்க, பள்ளிக்கூடம் விட்டு நேரா வயலுக்குப் போவோம், ஊருக்குள்ள எல்லோரும் உறங்கின பிறகு தான் அழச்சிட்டு வருவார், எனக்கு எங்க ஊர் , நிலா, நிலாவுல மின்னுற பகவதி அம்மன் கோயில் எல்லாத்தையும் பார்க்க ஆசை. எந்தப் பிள்ளைங்களோடவும் விளையாடக்கூடாது, மஞ்சள் கனகாம்பரம் பூ வைக்க ஆசை, ஆனா வச்சுக்கக் கூடாது.

 அம்மா காலையில எழுந்திருச்ச உடனே ,விடிவெள்ளி, அத கூட்டிட்டு போய் சாமின்னு காமிப்பாங்க, சித்திரை அழகர் விழா, நாங்க வைஷ்ணவர்கள் மாதிரி ராமா கோவிந்தா, ஆதிநா£ராயணான்னு கத்துவோம், அதனால தான் பேரு கிருஷ்ணம்மா. குளிச்சி விபூதி நிறைய இட்டு, அம்மா எழுந்த உடனே கண்ணாடிய தேடி முகத்தப் பாத்துட்டு தான் மறுவேலை, நாங்க கண்ணாடிய ஒளிச்சி வச்சுட்டு திட்டு வாங்குவோம், எல்லோர் கையிலும் நிலம் இருந்தது. பட்டிவீரன்பட்டி நாடாருங்க காமராசருக்கு சொந்தக்காரவுங்க, அவங்க கருப்பட்டி விக்க விருதுநகர்ல இருந்து இங்க வருவாங்க, கருப்பட்டி கொடுத்துட்டு இந்த ஆளுங்ககிட்ட இருந்து நிலத்தை வாங்கிட்டாங்கன்னு சொல்லுவாங்க. இப்போ எல்லாம் --- ஆயிட்டாங்க, நிலம் இருந்தவரை பணிஞ்சு நடக்கமாட்டாங்க, எல்லாமே கிடைத்தது, உப்பு, மிளகு, சீரகம் மட்டும் வெளியில் வாங்குவோம், தொம்பரையில நெல்லு கிடக்கும், நாங்க இறங்கி நெல்லு எடுப்போம், ஒவ்வொரு வீட்டுலயும் மூணு, நாலு மாடு., பால யாரு வாங்குவா, எங்கம்மா என்ன சொல்லும்னா வெள்ளை பண்டத்தை விக்கக் கூடாது, யாருக்கு வேணா கொடுங்க, சாப்புடுஙக, ஆனா விக்காதீங்க, உரியில மண்சட்டியில வெண்ணெய் ஒரு ஒரு கை கொடுப்பாங்க, ராத்திரியெல்லாம் நெல்லு குத்துவாங்க, அப்பா செத்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டாங்க , எண்பத்திநாலு வயசு வரைக்கும் இருந்தாங்க, எருமை மாட்டு பாலாக்கும், ஊக்கம்.

    வயல் காட்டுக்கு அப்பாவுக்கு  சாப்பாடு கொண்டு  ப்போவோம். ஒருமுறை கீழே கொட்டிடுச்சி. அப்பா, அடின்னா அடி. நானும் முனியாண்டி அண்ணணும் பன்னிரெண்டு அணா எடுத்துகிட்டு மதுரைக்குக் கோவிச்சுகிட்டு போய்ட்டோம். ட்ரெய்ன அப்பதான் முதல் முறையா பாக்குறேன், அண்ணன் அங்க ஹாஸ்டல்ல முன்னாடியே தங்கி இருந்ததால, நானும் தங்கிகிட்டேன், சின்னக்கடையில் ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தில் அண்ணன் எட்டாவது சேர்த்து விட்டது, அங்க எல்லோரும் இங்கிலீஷ்ல படிச்சாங்க, எனக்குத் தமிழ்---தான் தெரியும்.  பயந்துகிட்டு ஊருக்குப் போயிடலாம்னு சொன்னேன். ஆனா அண்ணன் இங்லீஷ் புக் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்தது. அப்புறம் எல்லாத்துலயும் ஃப்ர்ஸ்ட் மார்க்,அந்த டீச்சர் நல்லா பாத்துகிட்டாங்க, ஒரு டாக்டர் அம்மா உதவியோடு என்னை --- தல்லாகுளத்துல ஒன்பதாவது சேத்துவிட்டாங்க, அந்தப் பள்ளியை ஒரு வெள்ளைக்கார அம்மா  வச்சு நடத்தினாங்க. அப்போது தான் படிப்பு, சமூகம், தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் புரிய ஆரம்பித்தது, --  நான் தான் முதலில் எங்க ஊர்ல பாஸ் பண்ணினேன், மதுரை வீரனுக்கு ஒரு ஆடு ரெண்டு மூட்டை அரிசிவடிச்சி விருந்து வச்சாங்க, காலேஜுக்கு அப்ளிக்கேஷன் போடத் தெரியல, அப்போ பிரின்சிபாலா இருந்த ரஞ்சிதம் தான் உதவி பண்ணினாங்க

கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது?

 1944, --- எக்கனாமிக்ஸ். அப்போது தான் எனக்குள் சில தீர்மானங்கள் உருவானது, அந்தக் கல்லூரியில் 4000பேர் , வெறும் 35 பேர் மட்டுமே பெண்கள். செப்டம்பர் 11 முதன்முதலா பாரதியார் விழாவுல பேசுவதற்கு பேர் கொடுத்துட்டேன், மற்றதோழிகள்  பயமுறுத்தினார்கள், ஆனாலும் நான் தைரியமா தீண்டாமை பற்றிப் பேசினேன்.

உங்களோடு படித்தவர்களில் தலித் பெண்கள் யாராவது இருந்தாங்களா?
நம்ம பெண்கள் மற்ற பெண்கள்னு பிரித்துப் பார்ப்பதில் எனக்குப் போதாமை இருந்தது, பொதுவா மற்ற பெண்கள் யாரும் என் கூட சேரலை. எட்டாவதிலேயே ராமலிங்க சுவாமியை கும்பிட ஆரம்பிச்சுட்டேன். நான் வெள்ளை தான் உடுத்துவேன், என்னிடம் இரண்டு செட் புடவை தான் இருக்கும், தலையில கருப்பு சட்டிய கவுத்துகிட்டு போறா பாருன்னு மற்ற பெண்கள் கிண்டல் பண்ணுவாங்க. ஓரே ஒரு பொண்ணு , லீலா, மலையாளத்துப் பொண்ணு. அவ மட்டும்தான் என் கூட சேருவா. அவங்க அக்கா ஈரோடுல டாக்டர். அவளிடம் ஒரு வருடத்துக்கான பணத்தை கொடுத்துடுவாங்க. அவ எனக்கு செலவு பண்ணுவா. --- படிக்கிற வரையிலும் 10 பைசாவுக்கு புக் வாங்கினது இல்லை, லீலா கிட்ட வாங்கித்தான் படிச்சேன். மெல்ல மெல்ல பெண் உரிமை பற்றிய கருத்துக்கள் வந்து சேர்ந்தது, எல்லோர் வீட்டிலிருந்தும் தீனி வரும். நான் இரவெல்லாம் படிப்பேன், செம்பில் தண்ணீர் ஊற்றி சோற்றை அள்ளிப் போட்டு வைத்திருப்பேன், பசி வரும்போது எடுத்து சாப்பிடுவேன், வீட்டிலிருந்து காசு வாங்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன், இரண்டு புடவையையும் தினம் துவைப்பதற்காக நாகர்கோயில் வார்டன் மோசமா திட்டுவாங்க.

காந்தீயப் பாதையைத் தேர்ந்தெடுத்தது எப்போது?

சோமசுந்தர பாரதி வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாங்க,  நான் அவங்களோடு இணைந்து கொண்டேன். வாரத்தில் இரண்டு நாட்கள் ராட்டை நூற்பது என முடிவெடுத்து செய்தோம், பிறகு, தல்லாகுளம் பக்கத்தில் இருந்த குழந்தைகளில் ஒண்ணு கூட படிக்கல. அங்க போயி 52 குழந்தைகளை ஒன்று திரட்டிப் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். ஒரு டாக்டர், பேரு வைணவப்பிள்ளை, அவங்க மனைவி காலேஜ்ல லெக்சரர். அவங்க வீட்டில் சமையல் வேலை செய்து கிடைத்த வருமானத்தில்  52 பிள்ளைகளையும் படிக்க வைத்தேன். ஆண்கள் என்னை பார்க்க வந்ததால ஹாஸ்டலில் இருந்து என்னை விரட்டி விட்டார்கள். இத்தனைக்கும் நான் ஹாஸ்டலில் சமையல் அறையில் வேலை ஆட்களுக்கு உதவி செய்வேன், மற்ற நேரங்களில் அருட்பா, பாரதி இரண்டையும் படிப்பேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருக்கீங்களா?

முதலில் அம்மாதான் அந்தக் கோயிலுக்கு என்னை அழைத்துக் கொண்டு சென்றது, ஆனா இந்தக் கோயில் உள்ள நாம போனா அதோ சுத்துதுல அந்த ஃபேன் அது நம்ம தலையில விழுந்து நம்மாளோட கழுத்தை அறுத்துடும் , கிளிகிட்ட போனா சாதியைச் சொல்லிவிடும் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு. அதை எனக்கும் சொல்லும்.பள்ளிக்கூடம் படிக்கும் போது மீனாம்பாள் சிவராஜ்  வர்ராங்கன்னு பெரிய மீட்டிங்  ஏற்பாடு பண்ணி இருந்தாங்க, அம்பேத்கர் இயக்கத்தைச் சார்ந்திருந்ததால் எங்க அண்ணனை அடிச்சாங்க.
 1946ல காந்தி மதுரைக்கு வந்தார், ஆந்திராவில் இருந்து கூர்மய்யா வந்திருந்தார். கக்கன் அண்ணன் என் மேல பிரியமா இருப்பார். மேலூர்ல இருந்து கூட்டம் கூட்டமா ஜனங்கள அழச்சிட்டு வருவார். வைத்யநாத ஐயர் சாப்பாடு போடுவார், மீனாட்சி ஹாஸ்டலுக்கு வந்து ஆங்கில பாடம் சொல்லித்தருவார். கொடி பிடிப்போம், கதர் விற்பனை எல்லாம் பண்ணுவோம், போலீஸ்காரங்க எல்லாம் விரட்டுவாங்க. ஆனா ஸ்டுடண்ட அரஸ்ட் பண்ணமாட்டாங்க. 

முதுகுளத்தூர் கலவரம் பற்றிச் சொல்லுங்க?

நான் காலேஜ் முடிச்சிட்டு கல்யாணமும் முடிச்சிருந்தேன். இப்ப ஸ்ரீலங்காவுல என்ன நடந்ததோ  அது தான் அங்கேயும் நடந்தது. இமானுவேலை வெட்டிய இடத்துக்கே நாங்க போனோம். நாடார்களுக்கும் தேவர்களுக்கும் தான் எப்பவும் பிரச்சனை இருக்கும். நாடார்கிட்ட எந்த சாமானும் வாங்கக் கூடாதுன்னு தேவர் சொல்லிட்டாங்க. விருதுநகர்ல இருந்து நாடாருங்க கத்தி அருவா எல்லாத்தையும் வண்டிகள்ல அடியில போட்டுக் கொண்டு வந்தாங்கன்னு சொல்லுவாங்க. சில இடங்கள்ல அவங்களுக்கு ட்ரெயினிங் நடந்துச்சுன்னும் கேள்விப்பட்டிருக்கேன். முக்குலத்தோரும் தலித்துங்களும் அப்பா மகன் உறவுசொல்லிப் பேசிக்குவாங்க. கலெக்டர் தலைமையில  மீட்டிங் நடந்தது, அவரு ஒற்றுமையா இருக்கணும்னு கேட்டுகிட்டார், மீட்டிங்ல இம்மானுவேல் தேவர எதிர்த்துப் பேசிட்டாராம். உடனே, தேவர் திருமகன எதிர்த்துக் கேள்வி கேட்டவன விடலாமானு, இமானுவேல் பரமக்குடி வர்றதுக்குள்ள அவர் கழுத்தை அறுத்துட்டாங்க. உடனே காமராஜ் கடுமையா நடவடிக்கை எடுத்தார். ஆனா வன்முறை தொடர்ந்து கிட்டே இருந்துச்சு, தேவர்களுக்கும் தலித்துகளுக்குமாக போராட்டம் உருவானது. குடிசைகள் கொளுத்தப்பட்டன .எல்லோரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க, இங்க என் கணவர் சாப்பிடல, உடனே அங்கே போறேன்னு சொன்னார், நானும் வர்ரேன்னேன், அவரு ஒத்துக்கல, பிறகு அவர் மட்டும் தனியா போனார், போயி தேவர பாத்திருக்காரு, தேவரு மாடியில உட்கார்ந்துகிட்டு” பிரதர் நீங்க நடக்காத காரியத்தைப் பேசாதீங்க’’ அப்படின்னு சொல்லிட்டார். காந்திகிராமம் ஃப்வுண்டர் சந்திரா கைலாசம் எனக்கு ஃபோன் பண்ணி , காந்தி கிராமம் போயி பெண்கள கூட்டிட்டு வான்னாங்க. ராமனாதபுரத்துல இருந்து மதுரை வரை போலிஸ் நின்னது. எப்படியோ ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஐந்து பெண்கள் ஒரு ஆண் என குழு குழுவா பிரிஞ்சி  போயி ஊரைவிட்டுப் போயிருந்த பெண்களையெல்லாம் திரும்பவும் ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டோம். பிள்ளை பெத்த பெண்கள் கூட மரத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தாங்க, மனித இனமே மறக்க முடியாத ஸ்ரீலங்கா கொடுமை மாதிரி தான். அந்த வயசுல அதை எல்லாம் எதிர்த்துப் போராட எனக்கு சக்தி இல்ல.

உங்கள் திருமணம் பற்றிச் சொல்லுங்க.

திருமணத்துக்கு  முன்ன அவர பத்தின கேள்விப்பட்டதுதான். 1950 ல கல்யாணம் , எனக்கு 24 வயசு, அவருக்கு 37. இரண்டு பேருக்கும் 13 வயசு வித்தியாசம், சௌந்திரா ராமச்சந்திரன்தான் ஏற்பாடு பண்ணினாங்க. காந்தி கிராமத்துல உள்ளவங்க வற்புறுத்தி இன்விடேஷன் அடிச்சிட்டாங்க. நான் எல்லா இன்விடேஷனையும் எடுத்துகிட்டு எங்க ஊருக்குப் போய்ட்டேன், துர்க்காபாய் தேஷ்முக், சௌந்திரா, வைஷ்ணவப்பிள்ளை வைஃப் எல்லாரும் என்ன பாக்க ஊருக்கே வந்துட்டாங்க. அய்யா கிட்ட விளக்கேத்தி வச்சு உத்தரவு வாங்கிகிட்டு அப்புறமா தான் சம்மதிச்சேன். வெள்ளை சேலை தான் கட்டுவேன், பூ வைக்க மாட்டேன், பொட்டு வைக்க மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். எங்க உறவுக்காரவுங்க யாரும் வரலை. சுதந்திர இந்தியாவில்தான் கல்யாணம் பண்ணனும். அதுவும் ஒரு ஹரிஜன பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனுங்றது அவரோட தீர்மானம், ’’ ஏன் அவரு ஒரு படிக்காத பொண்ணை கட்டிக்க வேண்டியது தானேன்னு ‘‘எங்க வீட்ல யாரும் வரல.அவரு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். 18 வயசுல காந்தி கூட போனவரு தான், மொட்டை அடிச்சிருந்தார், முழங்காலுக்கு மேல வேட்டி. காய்கறி தான் சாப்பிடுவார், இவர பாத்தாலே எல்லோரும் பயப்படுவாங்க.

கல்யாணம் உங்க செயல்பாடுகளுக்குத் தடையா இருந்ததா?

    அவரு இல்லன்னா இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது, உன்னுடைய மூளையை அடுப்புல போடக்கூடாது அப்புறம் நான் இந்த சமூகத்துக்குத் துரோகி ஆயிடுவேன்னு சொல்வார், கோபம் இருக்காது, வாடி போடின்ற வார்த்தை இருக்காது, கிருஷ்ணா கிருஷ்ணான்னு தான் கூப்பிடுவார்.குழந்தைகள் ரெண்டு பேர் , செங்கல்பட்டில் பொண்ணு டாக்டரா இருக்கா, பையன் கம்போடியாவுல டாக்டரா இருக்கான், ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கல, ஹாஸ்டல்ல விட்டு தான் வளர்த்தேன்,
     நான் பீகார் போனேன் அங்க ஜெய்ப்ரகாஷ் நாராயணன சந்திச்சேன், புத்த கயாவுல ஒரு சாமியார் 30 ஏக்கர் நிலம் வச்சி இருந்தார், கால்லகூட தங்க செருப்பு, விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி , பல வகையிலும் போராட்டம் பண்ணி நிலத்தை வாங்கினேன்
     கல்யாணம் முடிச்சி உடனே அவர் வினோபா கிட்ட போய்ட்டார், கொஞ்ச நாள் ஸ்கூல்ல டீச்சர் வேல பாத்தேன் , பிடிக்கல, நானும் கூடவே போயிட்டேன், தாயுமானவர், பட்டினத்தார், பாரதி இவங்க கிட்டேயெல்லாம் ஈடுபாடு இருந்தது, வினோபாவை பனாரஸ்ல சந்திச்சேன், அப்போ என்னோட கணவர் தமிழ் நாடு வந்துட்டார், காலையில ரெண்டு மணி முதல் நாலு மணி வரை   நடக்கனும் 4-6 பிரார்த்தனை,திரும்பவும் நடக்கனும், அவ்ரு அங்க அங்க நின்னு பேசுவார், நிலத்தை தானமாக கேட்பாரு, உங்க வீட்ல ஐந்து பேர் இருந்தா நான் ஆறாவது, எனக்கு ஆறில் ஒரு பாகம் நிலம் வேண்டும் என்பார், 1956ல மதுரை வந்தார், என்.எம்.ஆர் .சுப்புராயன் எல்லா நிலத்தையும் முழுசா கொடுத்தார், பட்டிவீரன்பட்டி சந்திரசேகர் நாடார் போன்றோர் நிலத்தை தானமா கொடுத்தாங்க.

வெண்மணி பற்றிச் சொல்லுங்க

        1968 டிசம்பர் 25 ராத்திரி,------எனக்கு தூக்கம் வரல, காந்திகிராமத்துல எங்க வீட்டுக்காரர் ஒரு சின்ன ஆசிரமம் கட்டி இருந்தார், நாங்க அங்க இருந்தோம், காலையில செய்திய பேப்பர்ல பாத்துட்டு குன்றக்குடி அடிகளார்ட்ட ஓடினேன், அவர்கிட்ட சொல்லிட்டு , 26 காலை 4 மணிக்கு வெண்மனி போய் சேர்ந்துட்டேன், போயி முதல்ல பார்த்தது ஒரு குழந்தைய வீசி எரிஞ்சிருக்காங்க அது தென்னமரத்துல மோதி இறந்து கிடந்தது, தென்னமரத்த சுத்தி ரெத்தம் கிடந்தது, இனிமே இந்த இடத்த விட்டு போகக் கூடாதுன்னு  முடிவு பண்ணிட்டேன் --- ஆல் இண்டியா சர்வோதய சங்க தலைவரா இருந்தேன், கம்யூனிஸ்டுகள் உள்ளிருந்து மக்களுக்கு உதவி செஞ்சிகிட்டு இருந்தாங்க, என்னக் கண்டா ஆகாது, வந்துட்டா காங்கிரஸ்காரின்னு திட்டுவாங்க, இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்கற தீர்மானத்துல எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா அங்கிருந்த பெண்களோட பழக ஆரம்பிச்சேன், 5 மணிக்கே ஆண்டை வீட்டுக்குப் போயி வேல செஞ்சிட்டு பழைய சோறு வாங்கிகிட்டு வருங்க, அதுல கொஞ்சம் தைரியமான பெண்கள தேர்வு செஞ்சி அவங்ககிட்ட பேசுவேன், அவங்க தர்ற ஐந்து ரூபாய்க்கு பதிலா முப்பது ரூபாய் தர்றேன் அவங்க வீட்டுக்கு வேலைக்கு போகாதிங்க அப்படின்னு சொல்வேன், அப்புறம் அவங்க பிள்ளைங்கள வெளியில கூட்டிட்டு போயி மரத்தடியில வச்சு பாடம் சொல்லி கொடுக்கிறது, தலைவர்கள் என்ற பேர்ல சிலர் வருவாங்க உடனே  அங்கிருக்கிற பெண்கள் என்ன ஒளிஞ்சுக்க சொல்வாங்க. நானும் ஒளிஞ்சுக்குவேன், சீர்காழி ரவி என்பவர் தான் எங்களுக்கு காசு பணம் உதவி செய்தார்.

கூத்தூர்ல உங்க பணிகள -- எப்போ தொடங்கினீங்க?

  கீவளூர், வெண்மனியில இருந்த போது எங்க இருட்டுதோ அங்கயே படுத்துக்குவேன், ரூரல் செகரட்டரியா டெல்லியில இருந்த சரளா கோபாலன் பெங்களூர் கனரா வங்கி மூலமா எனக்குக் கூத்தூர்ல அலுவலகம் ஆரம்பிச்சு தந்தாங்க

நாகை மாவட்டம் கீவளூர்ல நீங்க நடத்திய போராட்ட அனுபவங்கள் குறித்துச்  சொல்லுங்கள்?

     முதல் போராட்டம் ஆலத்தம்பாடியில நடந்தது, அங்க கே.டி.ஆர் இருந்தார், சர்வோதயத்துல ஈடுபாடு உடையவர், பக்தவச்சலம் கோழிவளர்ப்புக்காக நாலு ஏக்கர் நிலம் கொடுத்தார், கலெக்டர் மூலமா கொத்தங்குடியில கைப்பற்றிய  நிலம் தான் முதல் படி, மணலியில சிலரோட ( பெயர் வெளியிடவில்லை) போராட்டம் நடத்தினோம், போராட்ட சமயங்களில் கருணாநிதி எனக்கு ஹெல்ப் பண்ணினார், மன்னை நாராயணசாமியை அழைத்து அவங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா உடனே எனக்குத் தாமதமில்லாம  எலக்ட்ரானிக் மெஸேஜ் தான் அனுப்பணும் என்றார், இருந்தாலும் போலீஸ் தொந்தரவு தாங்க முடியாது, ஜனங்களும் டையர்டு ஆயிட்டாங்க,    உதயத்தூர்ன்னு ஒரு இடம் , அங்க இருக்குற நிலம் கரம்பேஸ்வரர்  கோயில் போகும் வழியில அந்த கோயில் பேர்லே இருந்த்து  , ஒருத்தன் பெட்டிக்குள்ள நாராயணன் சிலைய வச்சி அது பேர்ல நிலம் எழுதி வச்சிருந்தான், நாங்க போராட்டம் நடத்தினோம், அரஸ்ட் பண்ணினாங்க, இது நடந்தது 1972 ல , நான் மட்டும் தப்பிச்சு ஒளிஞ்சுகிட்டு இருந்தேன், புதுபத்தூர்ல பெரிய வெள்ளைப் பிள்ளையார் கோயில்ன்னு இருந்தது , பிள்ளையாருக்குப் பாயாசம் கொடுக்கணும் என்பதற்காகக் கோயில் பேர்ல 380 ஏக்கர் நிலமும் அவன் பெயரில் 1000 ஏக்கர் நிலமும் இருந்தது, வலிவலத்துல இருந்த முதலாலிகள் வீட்டு வழியா காலையில மூனு மணிக்குப் பெண்களை அழைச்சிட்டு பஜனை பாடிக்கிட்டு போவோம், ஒன்பது நாள் அது மாதிரி போனேன், அவங்க எங்கிருந்து வர்ரீங்கன்னு கேட்டா, மதுரை சேலம்னு பொய் சொல்வோம், கடைசியில நாங்க பிரச்சனை பண்ணத்தான் போறோம்ங்றத அவங்க புரிஞ்சிகிட்டாங்க , அதனால நிலம் உழுவதற்கு முதுகுளத்தூர்ல இருந்து ஆட்களை அழைச்சிட்டு வந்திருந்தாங்க, அவங்களும் வயல்ல இறங்கினாங்க , நாங்களும் இறங்கினோம், சண்டை வந்தது , நான் சொன்னபடி நம்ம ஆளுங்களும் பெண்களும் கலப்பைய தூக்கித் தோள்ல வச்சிகிட்டு போலிஸ் ஸ்டேஷன் போய்ட்டோம், ஆனா போலிஸ் ஸ்டேஷன்ல எங்கள அடச்சி வச்சிட்டாங்க, சின்ன இடம் , கொஞ்சம் பேர் நிப்போம், கொஞ்சம் பேர் உட்கார்ந்துக்குவோம், ஆம்பிள்ளைங்களுக்கு அடியான அடி, அப்புறம் திருச்சி கூட்டிட்டுப் போய் 52 நாள் சிறையில இருந்தோம்.
  நேஷனலஸ்டு பேங்க்ல லோன் கேட்டேன், ஆனா ரிசர்வ் பேங்ல----- ரூல் வச்சிருக்காங்களாம், ஒரு ஏக்கர் இன்னொரு ஏக்கர் தராது, மாடுன்னா கன்னு போடும்னு சொல்லி ஒரு சுற்றறிக்கை நீடாமங்கலம் வந்தது, நான் அதை எதிர்த்து பாம்பே டெல்லி எல்லாம் போய் சரி பண்ணிட்டு வந்தேன், ராஜீவ் காந்தி பஜாஜ் அவார்டுன்னு ஒரு அவார்டு கொடுத்தார், அதுல பேசின என் கணவர் ஏழைகளுக்குப் பணம், நிலம் , தனி டிபார்ட்மெண்ட் கேட்டுப் பேசினார், கிடைச்சது, ஆனா அதிகாரிகள் தராம வச்சிருந்து மார்ச் மாசம் திருப்பி அனுப்பிடுறாங்க, பாவம் அவுங்க ட்ரை லேண்ட் வெட் லேண்ட்னு சர்டிஃபிகேட் வாங்கவே ரொம்ப நாள் ஆயிடுது, சீர்காழியில தண்ணியெல்லாம் உப்பாகுதுன்னு சொல்லி பெண்கள் சேர்ந்து போராடி சுப்ரீம் கோர்ட் வரை போனேன், ஆனா இவனுங்க ரிட் பெட்டிஷன் போட்டுட்டானுங்க.

வெண்மணி சம்பவத்தின் போது அண்ணா முதலமைச்சராக இருந்து என்ன நடவடிக்கை எடுத்தார்?

அரஸ்ட் பண்ணினாங்க , ஆனா அரசு ஒண்ணும் செய்யல , அந்த ஊர் மக்களே ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகளை அழைச்சிட்டு வந்து கோபால கிருஷ்ணன 16 துண்டா வெட்டிப் போட்டுட்டாங்கன்னு போலீஸ் சொன்னாங்க, கோர்ட்ல ப்ருவ் பண்ண முடியல.

அரசாங்கத்தில் இருந்து ஏதாவது உதவிகள் செய்தார்களா?

 நான் தான் முதலில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தேன், 3 ஏக்கர் இருந்தா தான் வீடு கட்ட முடியும் , நிலம் வாங்குறது ஈசியான வேலையில்லை, குறைந்தது 5 மாதமாவது போராடித்தான் வாங்கணும், நாகப்பட்டினம் தமயந்தி நாடார் பள்ளி சொந்தக்காரர் கிட்ட போராடி நிலத்தை வாங்கி அடுத்த நாளே எல்லோரையும் அழச்சி அவங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணினேன், அங்கிருந்த தலைவர்கள் அரசு 2 ஏக்கர் கொடுக்குது நீ ஏன் 1 ஏக்கர வாங்குறன்னு மக்களை திசைதிருப்பி விட்டுட்டாங்க, 70,000 ரூபாய்க்கு நிலத்தை வாங்கிட்டு பொறுமையா இருந்தேன், மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் நிலத்தை அவங்க எடுத்துகிட்டாங்க, எவ்வளவோ கொடுமைகளைப் பொறுத்துக்கிட்டேன் ஆனா அவங்க பேசின கொச்ச வார்த்தைகளத்தான் இன்னும் பொறுத்துக்க முடியல.
நான் பெண்களுக்குச் சொல்றது என்னன்னா, ‘ உங்களோட சக்திய நீங்க உணருங்க. உங்களால எதையும் சாதிக்க முடியும்’ .அதனால பெண்கள், கூட்டத்துக்கு வரும்போது கையில ஒரு விளக்கையும் கொண்டு வரச் சொல்வேன், வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும்னு நான் நம்பறேன்.  

நன்றி : மணற்கேணி  , ஆகஸ்டு - செப்டம்பர் 2011 






1 comment:

  1. அன்பு நண்பர் இரவிகுமார் அவர்களுக்கு எமது டிவிட்டரில் இஃது பகிர்ந்து கொள்ளப்பட்டது. நன்றி.

    ReplyDelete