Monday, November 1, 2010

'ரௌடி லிஸ்ட்' 'கேடி லிஸ்ட்' என்பவற்றில் இருப்பவர்கள் யார் ?29-8-2006
காவல் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம்

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்களின்கீழ் இருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த மானியக் கோரிக்கைகளின்மீது  பேச வாய்ப்பளித்த உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிரடிப் படையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு, சதாசிவா கமிஷன் அறிக்கையின் அடிப்படையிலே இழப்பீடு வழங்குவதற்கு, மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்வந்ததை, இங்கே நான் பாராட்டி, வரவேற்கின்றேன்.  நீதிபதி சதாசிவா அவர்கள், தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, இழப்பீடு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை அளித்து, அந்தத் தொகையைக் குறிப்பிட்டுத் தரும்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பினார்கள்.  கடந்த 3 ஆண்டுகளாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிசீலனையிலே, அது கிடப்பில் கிடந்தது.  மனித உரிமைகள் ஆணையம் செய்யாத ஒன்றை, நம்முடைய  மாண்புமிகு முதல்வர் அவர்கள்  செய்ய முன்வந்ததற்கு (மேசையைத் தட்டும் ஒலி) மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  அந்த இழப்பீட்டை அறிவிக்கும்போது, அந்த சதாசிவா கமிஷன் முன்னாலே சாட்சியம்  அளித்த பல பேர்களுடைய பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.  அவர்களையும் கணக்கிலேகொண்டு, அவர்களுக்கும் அந்த இழப்பீடு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமாய் உங்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  இதற்கு முன்னாலே அமைக்கப்பட்ட இரண்டு போலீஸ் கமிஷன்களினுடைய பரிந்துரைகளிலே,  முதலிலே வந்த கோபாலசாமி கமிஷனுடைய 18 பரிந்துரைகளும்,  அதன்பின் அமைக்கப்பட்ட சபாநாயகம் கமிஷனுடைய 25 பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன.  அவற்றையும் பரிசீலித்து, அவற்றில் தகுதியான பரிந்துரைகள் இருந்தால், நடைமுறைப்படுத்த வேண்டுமாய் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நாடெங்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துவரும் இன்றையச் சூழலிலே,  உளவுத் துறையினுடைய செயல்பாடு, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   இன்றைக்கு நம்முடைய உளவுத் துறையானது அந்தச் சவாலையேற்று, சமாளிக்குமா என்கின்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.   ஏனென்று சொன்னால், சமீபத்திலே கோவையிலே மனித நீதி பாசறை என்ற அமைப்பினர்மீது தவறுதலாகப் போடப்பட்ட வழக்குகள், இந்த ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன.  எனவே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாக உளவுத் துறையை உருவாக்க வேண்டும்.  அதற்குப் பணியமர்த்துதல் செய்யும்போதும், ஏற்கெனவே காவல் துறையில் இருப்பவர்களை எடுக்காமல், நேரடியாகச் சிறப்புக் கவனம் செலுத்தி, சிறப்புத் தகுதிகள் வாய்ந்தவர்களை பணியமர்த்துதல் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  காவல் துறையில் பணியாற்றுவோருக்கு ஓய்வு என்பது, மிக மிக முக்கியமானது.  ஆனால், அந்த ஓய்வு நேரத்திலே அவர்கள் பணியிலே  இருப்பதற்காகExtra Time  Remuneration-(E.T.R )என்று ஒரு தொகை தரப்படுகிறது.  அந்தத் தொகையை வாங்க வேண்டும் என்பதற்காகவே, ஓய்வு இல்லாமல் காவல் துறையினர் பணியாற்றுகின்றார்கள்.  ஆகவே, காவல் துறையின் பணியிலே பல இடையூறுகள், பல குறைபாடுகள் ஏற்படுகின்றன.  எனவே, அந்த E.T.R. என்பதை இரத்து செய்து, வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு என்பதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.  காவலர்களுக்கு என்று பல நலத் திட்டங்கள் இருந்தபோதிலும், போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இருப்பதுபோல, காவல் துறையைச் சேர்ந்தவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கென்று பொறியியல் கல்லூரி ஒன்றை நமது அரசே உருவாக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

போலீஸ் கேண்டீன்-களை ஒப்பந்தத்துக்கு விடும்போது, அந்த ஒப்பந்தப் பணிகளுக்கு ஓய்வுபெற்ற காவலர்கள், காவல் துறையைச் சேர்ந்த குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போதுள்ள, போலீஸ்-பொதுமக்கள் விகிதம், Police Public Ratio என்பது போதுமானதாக இல்லை.  இது 788 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில்தான் இருக்கிறது.  தமிழ்நாட்டிலே 95,000 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்திலே 88,000 பேர்தான் இருக்கிறார்கள்.  குறிப்பாக, பெண் காவலர்களுடைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது.  National Crime Record Bureau வினுடைய புள்ளிவிவரப்படிப் பார்த்தால், 52 ஆண் போலீஸ் இருந்தால், ஒரு பெண் போலீஸ் என்ற விகிதத்தில்தான் இருக்கிறது.  எனவே, இதைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
காவல் துறையினருக்குப் பாலின சமத்துவம்பற்றியும், ஆதி திராவிட பழங்குடி மக்கள் பிரச்சினைகள்பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, கடந்த ஆட்சியிலே இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.  அந்த நல்ல திட்டங்களை, இந்த ஆட்சியும் தொடர்ந்து நடத்திட வேண்டுமாய் நான் உங்களைப் பணிவோடு வேண்டுகிறேன்.  ஏனென்று சொன்னால், பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.  நம்முடைய கொள்கை விளக்கக் குறிப்பிலே கொடுக்கப்பட்டிருக்கின்ற புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ஏறத்தாழ நாளொன்றுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றார் என்று தெரிய வருகிறது.  அதுமட்டுமல்லாமல், நாள் ஒன்றுக்கு ஏழு குற்றங்கள் அவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன என்பது தெரிய வருகிறது.  இவற்றைக் குறைக்க வேண்டுமென்று சொன்னால், பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வைக் காவல் துறையினரிடம் மட்டுமல்லாமல், சமூகத்தின் பிற பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.  எனவே, இந்த பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை ஒரு தனித் திட்டமாகவே செயல்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும்.
1977-ல் அமைக்கப்பட்ட தேசிய போலீஸ் கமிஷன், 8 அறிக்கைகளை இங்கே சமர்ப்பித்திருக்கிறது.  அந்த அறிக்கைகளில் பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டன.  குறிப்பாக,  (மணியடிக்கப்பெற்றது) புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்க வேண்டுமென்கின்ற ஒரு பரிந்துரை.  அதை அடிப்டையாகக் கொண்டு, தமிழ்நாட்டிலே ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.  அந்தக் குழு என்ன ஆனது என்று தெரியவில்லை.  இந்த 1861 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய போலீஸ் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
காவல் நிலையங்களிலே ரௌடி லிஸ்ட் என்றும் கேடி லிஸ்ட்  என்றும் வைத்திருக்கின்றார்கள்.  அந்தப் பட்டியல்களிலே அதிக அளவிலே ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுடைய பெயர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.  அதுபோல, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுடைய பெயர்களும் சேர்க்கப்படுகின்றன.  எந்த அடிப்படையிலே இந்தப் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.  அதனாலே இதைக் கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைத்து, அதுபற்றி விசாரிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். (மணியடிக்கப்பெற்றது) ஆதி திராவிட மக்களைப் பொறுத்த அளவிலே. இரண்டு விதங்களிலே காவல் துறையினருடைய அணுகுமுறையால் பாதிக்கப்படுகிறார்கள்.  ஒன்று, அவர்களுக்கான பாதுகாப்பான சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  இன்னொன்று, அவர்கள்மீது உண்மைக்கு மாறான, பல்வேறு வழக்குகள் போடப்படுகின்றன.  ஏற்கெனவே உறுப்பினர்கள் குறிப்பிட்டதுபோல, இங்கே இருக்கின்ற எங்களுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வம் அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் அதற்கு உதாரணம்.  எங்களுடைய இயக்கத்தினுடைய பொதுச் செயலாளர் திருமாவளவன் அவர்கள் மீதும்கூட பல்வேறு உண்மைக்கு மாறான வழக்குகள் பதியப்பட்டன.  திட்டக்குடியிலே அவர், 'தேடப்படும் குற்றவாளி' என்று பத்திரிகைகளிலே விளம்பரப்படுத்தப்பட்டு,  அவமானப்படுத்தப்பட்டார்.  அதுபோல, இன்றைக்குப் பல்வேறு வழக்குகள், இந்த மக்கள்மீது  போடப்பட்ட வழக்குகள் எல்லாம் 10 ஆண்டுகளாக விசாரணையின்றி கிடக்கின்றன.  1997 ஆம் ஆண்டு வள்ளியூரிலும், மதுரையில் சுப்பிரமணியபுரம், பந்தல்குடி, மீனாம்பாள்புரம் ஆகிய இடங்களிலும் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு, அவை தொடர்பாக நடந்த கலவரத்திலே 200 வீடுகள் எரிக்கப்பட்டன.  அப்போது பதியப்பட்ட வழக்குகள் எல்லாம், பின்னால் எந்தவிதக் காரணமும் காட்டப்படாமல் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன.  அவற்றையெல்லாம் மறுபடியும் விசாரித்து,  குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல், காவல் துறையினர் தமது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பதாலும், முறைகேடாகப் பயன்படுத்துவதாலும் பாதிக்கப்படுகிறவர்கள் காவல் துறைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதபடி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 132 மற்றும் 197 ஆகியவற்றின் பாதுகாப்பு,  காவல் துறைக்கு இருக்கிறது.  அந்தச் சட்டப் பிரிவுகளின் பாதுகாப்பை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, எந்த ஒரு துறையிலும் பணி புரிகிறவர்கள்,  தமது உரிமைகளைப் பெற, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை என்பது, ஓர் அடிப்படை உரிமையாகும்;  அந்த உரிமை காவல் துறையினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன்.  வணக்கம்.

1 comment:

  1. Recent encounters(in three years) Mr.Manalmedu Sankar,Mr Kora Natarajan,Mr Korangu Senthil all are from sirkazhi taluk by police conspired by politician(s)and politically motivation please bring this matter also.It to be abolished

    ReplyDelete