Monday, January 27, 2014

டைம்ஸ் நவ் டிவியில் ராகுலின் நேர்காணல்



நேற்றிரவு டைம்ஸ் நவ் டிவியில் ஒளிபரப்பான ராகுலின் நேர்காணல் எதிர்காலப் பிரதமராகக் கட்டியெழுப்பப்படும் ராகுலின் பிம்பத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் அவர் கிளிப்பிள்ளைபோல ஆர்டிஐ, பெண்களுக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு அதிகாரம், லோக்பால்- என சில வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது பரிதாப உணர்வே மேலிட்டது. 


அர்னாப் கோஸ்வாமியின் கேள்விகள் மிகவும் சாதாரணமாக, மேலோட்டமாக இருந்தன. ஆனால் அந்தக் கேள்விகளையும்கூட ஆழமான பொருளை நோக்கி இழுத்துச் சென்றிருக்கமுடியும். ஆனால் அதற்கான ஆற்றலும் அறிவும் ராகுலிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 


நமது அரசியல் கட்டமைப்பிலும்,நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென அவர் விரும்புகிறார் எனத் தெரிகிறது.அதற்கான பரிதவிப்பை மட்டுமே அவரிடம் நாம் பார்க்கமுடிகிறது.


கருத்தியல் தெளிவில்லாமல் இப்படியான பரிதவிப்புமட்டுமே கொண்டவர்கள் காலப்போக்கில் வலதுசாரிகளாக வீழ்ச்சியடைவதைத் தவிர்க்கமுடியாது. அதற்கான அறிகுறிகள் ராகுலிடம் தென்படுகின்றன. 


ராகுலின் நேர்காணலை கேலிசெய்துஒதுக்கிவிட்டுப் போக நான் விரும்பவில்லை. அவர் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் முக்கியமானவை:


1. பாஜக அதிகாரத்தை மையப்படுத்த விரும்புகிறது, ஆனால் அதைப் பரவலாக்குவதே முக்கியம்.

2. இந்த நாட்டை வழிநடத்த ஒரு தலைவரை முன்னிறுத்துவது அதிகாரக் குவிப்புக்கே வழிவகுக்கும்.

3. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படாதவரை நாடு முன்னேற முடியாது. 

4. நமது அரசியல் அமைப்பு மூடுண்டதாக இருக்கிறது.அதில் திறப்புகளை ஏற்படுத்தவேண்டும். 


இதற்கெல்லாம் தீர்வுகளை காங்கிரஸ் கட்சியும் ராகுலும் வழங்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம் இந்தக் கேள்விகளைப் பரிசீலித்துத் தீர்வுகளை முன்மொழியவேண்டும்

Sunday, January 26, 2014

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தேன்



இன்று(26.1.2014) பிற்பகல் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைபெற்றுவரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். கடந்த வாரம் பேராசிரியர் பாரதி அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் அவரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டுப் பேராசிரியர் கல்யாணி எனக்கு ஃபோன் பண்ணினார். மிகவும் நலிவுற்ற நிலையில் ராஜம் கிருஷ்ணன் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றி என்னிடம் வருத்தத்தோடு சொன்னார். கல்யாணிக்கு ராஜம் கிருஷ்ணனின் எழுத்தைப் பற்றித் தெரியாது. நீதிபதி சந்துரு அவர்களின் துணைவியார் எழுதிய கட்டுரை என்பதால் ஏற்பட்ட ஆர்வம். 26 ஆம் தேதி திருமணம் ஒன்றுக்காக சென்னை செல்லவேண்டியிருந்ததால் அன்று ராஜம் கிருஷ்ணனைப் பார்ப்பதாகத் திட்டமிட்டுக்கொண்டோம். அதன்படி இன்று அதிகாலை புதுவையிலிருந்து புறப்பட்டு திண்டிவனத்தில் கல்யாணியை அழைத்துக்கொண்டு சென்னை போனேன். திருமணத்தை முடித்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லும்போது சுமார் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கு பணியாற்றும் தம்பி சரவணனை ஃபோன் பண்ணி வரச்சொன்னேன். பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருக்கவில்லை. வார்டில் இருந்த நர்ஸ் ஒருவர் எங்களை அவரது படுக்கைக்கு அருகில் அழைத்துச் சென்றார். துணியாலான ஒரு பந்தைப்போல அவர் படுக்கையில் கிடந்தார். முகம் மட்டும் களையோடு இருந்தது. நாங்கள் எங்களை அறிமுகபடுத்திக்கொண்டோம். ஆனால் அதை அவர் புரிந்துகொண்டதுபோலத் தெரியவில்லை. ஒரு வாக்கியத்தை நாங்கள் பேசி முடித்ததும்  நாங்கள் பேசியதன் கடைசி வார்த்தையை மட்டும் அவர் திருப்பிச் சொன்னார். நர்ஸிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். கால்கள் செயலிழந்துவிட்டன. 

தூக்கிச் சென்றுதான் குளிக்க வைக்கிறார்கள். திட உணவு சாப்பிட முடிகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர்தான் அவரைப் பராமரிக்கிறார் என்று சொன்ன நர்ஸ் அவரால் படிக்க முடியும் என்றார். கல்யாணி அவரைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருந்த தி இந்து நாளேட்டைத் தனது கைப் பையில் தேடினார். பலவிதமான நாளேடுகளும் இருந்தன. அந்த நாளேடு மட்டும் இல்லை. அது கிடைக்காததால் திகசி எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். கண்ணாடியில்லாமல் கண்களுக்கு நெருக்கமாக வைத்து அதை ராஜம் கிருஷ்ணன் படிக்க முயற்சித்தார். அவரால் படிக்க முடிகிறதா என்பதை அவரது முகபாவத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடியவில்லை. அந்த நூலை அவரிடமே விட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டோம். 


ராஜம் கிருஷ்ணன் சாகித்ய அகாதமி விருது உட்படப் பல விருதுகளை வாங்கியவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவருக்கு மூன்று லட்ச ரூபாய் பரிவுத் தொகைவழங்கப்பட்டது. தனது கணவர் இறந்ததற்குப் பிறகு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார் என அறிந்தேன்.  அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ்ப் புத்தகாலயம் தான் வெளியிட்டிருக்கிறது. அந்த ராஉஅல்டி தொகை மட்டுமேகூட அவர் கௌரவமாக வாழ்வதற்குப் போதுமானதாக இருந்திருக்கும். 


அவரைப் பார்த்தபோது நோயைவிடக் கொடுமையானது முதுமை என்று நினைத்துக்கொண்டேன். அவருக்கு 89 வயதாகிறது. அந்த வயதுடைய பலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது பொது விதி அல்ல. 


பள்ளி ஒன்றை நடத்தவேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. ஆனால் அண்மைக்காலமாக முதியோர் இல்லம் ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கிவருகிறது. ராஜம் கிருஷ்ணனைப் பார்த்தபோது நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும்போதே நாம் இறந்துவிடவேண்டும் என்ற விருப்பம்தான்  ஏற்பட்டது.

Wednesday, January 22, 2014

தீண்டப்படாத தியாகம்

ஜனவரி 25ஐ மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக நினைவுகூர்வது சரியா? 


எந்தவொரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரை நினைவுகூர்வதுதான் வழக்கம். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அந்த வழக்கம் கடைபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் சாதி தான். 


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் களப்பலியானவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த நடராசன். போராட்டத்தில் ஈடுபட்டபோது 1938 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டு ஏழரை மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டதால் உடல் நலிவுற்று 1939 ஜனவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார். 


தியாகத்திலும் தீண்டாமை பார்க்கும் தமிழர்கள் நடராசனின்  மரணத்தை நினைவுகூர்வதில்லை. அவரது பெயரை முதலில் சொல்வதற்குக்கூட மனமற்ற தமிழர்கள் அவருக்குப் பிறகு உயிர்நீத்த தாளமுத்துவின் பெயரை முதலில் சொல்லி அப்புறம்தான் நடராசன் எனக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் தலித்துகளை அவர்கள் தமிழர்களாகவே கருதுவதில்லை. 

இந்த வரலாறு மொழிப்போராட்டம் குறித்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய 'தீண்டப்படாத தியாகம் ' என்ற சிறு நூலில் இடம்பெற்றுள்ளது


Monday, January 20, 2014

தீர்ப்பா ? நீதியா?



வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவித் தமிழர்கள் நால்வர் உள்ளிட்ட 15 மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைப்பது பற்றி நாளை (21.1.2014) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது அமர்வுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கப்போகிறது. 


கருணைமனுக்களின்மீது முடிவெடுக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வாதமும் நிராகரிக்கப்பட்டால் தூக்கிலிடப்படுவது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த வழக்கை கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர் ஜூலியஸ் சற்று முன்னர் என்னிடம் பேசினார். அவருக்குத் தைரியம் சொன்னேன் என்றாலும் இன்னும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறைக் கொட்டடிகளில் அந்த அப்பாவிகள் இந்த இரவை எப்படிக் கடத்திக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. ஒரு நிமிடம் அவர்களாக நம்மைக் கருதிப்பார்த்தால் அந்தக் கொடுமை நமக்குப் புரியும். 


நாளை நண்பகலுக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும். எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனாலும் அவர்களது தண்டனை குறைக்கப்படவேண்டும் என மனதுக்குள் வேண்டிக்கொள்கிறேன். 


தலைமை நீதிபதியாக இருக்கும் திரு சதாசிவம் அவர்கள் இன்னும் சில காலத்தில் ஓய்வுபெறப் போகிறார். அவர் நாளை வழங்கப்போகும் இந்தத் தீர்ப்புதான் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களது விதியையும் தீர்மானிக்கப்போகிறது. அவர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறவராக இல்லாமல் நீதி வழங்குபவராக இருக்கவேண்டும். மரணதண்டனையை ஒழிப்பதுகுறித்து அவர் தனது தீர்ப்பில் உறுதியானதொரு கருத்தை வெளியிட்டால் ஒரு தமிழன் என நானும் பெருமிதம் கொள்வேன்.

Tuesday, January 14, 2014

புகழ்பெற்ற தலித் கவிஞர் நாம்தேவ் தாசல் காலமானார்

புகழ்பெற்ற தலித் கவிஞரும் மகராஷ்டிராவில் தலித் பேந்தர்ஸ் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவருமான நாம்தேவ் தாசல் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். எதிர்ப்பின் கோபத்தை மட்டுமல்ல அழகையும் எடுத்துச் சொல்பவை அவரது கவிதைகள். உலகளாவிய எதிர்ப்புக் கவிதை மரபில் இந்திய தலித் கவிதைகளுக்கென ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தவர் அவர். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான் மொழிபெயர்த்த அவரது கவிதை ஒன்றை இங்கே தருகிறேன்: 


நாம்தேவ் தாசலின் கவிதை


அம்மா! உனது மகன், குழந்தையல்ல

அவன் இந்த யுகத்தின் புரட்சியினுடைய புத்திரன்

அவனால் பார்க்கமுடியும் இந்த அநீதியை, தானே ஒரு 

பாதிக்கப்பட்ட மனிதனாயிருந்து.


அரசாங்க யந்திரத்தை, வாழ்க்கை முறைகளை, உழைப்பின் வலிமையை

நிலக்கரியும், இரும்பும் தரும் சுரங்கங்களை? கிடங்குகளை, தொழிற்சாலைகளை

அங்கே இருக்கும் பாதுகாப்பை.

பணத்துக்கும் உணவுக்கும் கிடைக்கும் உத்திரவாதத்தை.

எனது முகமோ புழுதியில் புதைகிறது

அவை யாவற்றிலுமிருந்து பிரிக்கப்பட்டு.....

பதினெட்டாம் நூற்றாண்டில்

மனிதகுலம் தலைகீழாய்ப் புரட்டிப்போடப்பட்டது.


ஆனால் இன்று அவற்றை நீ அறியமாட்டாய்

உனக்குத்தெரியாது அடிமை

வியாபாரிகளை, அவர்களது நாடுகளை

உனக்குத் தெரியாது


1793ன் ஜனவரி 21ஐ

ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக கில்லட்டின் உயர்ந்து

பதினான்காம் லூயி மன்னனின் தலை உருண்டதை

உனக்குத் தெரியாது

வரலாற்றில் நிகழ்ந்த கொடூரமான கொலைகளை


1848ன் புரட்சிகர யுத்தமும்

உனக்குத் தெரியாது.....


பெபூஃபைத் தெரியாது, கொண்டு வந்த 

சுதந்திரஜோதியையும் உனக்குத் தெரியாது.....


இருபதாம் நூற்றாண்டு

உனது மகனுக்குப்

பார்¬வையைத் தந்துள்ளது....


சுரண்டலைத்தெரியும் எனக்கு, என்னை நான்


இழந்ததும் தெரியும்

நான் ஒரு சாத்தானாகிவிட்டேன்.....




Sunday, January 12, 2014

சிறுமி போட்ட கோலம்




மார்கழி மாதத்திலும் வெறிச்சோடிக்கிடக்கும் வாசல்களைப் பார்க்கும்போது இன்றைய தலைமுறைப் பெண்களுக்குக் கோலம் போடத்தெரியுமா  என்று எனக்கு சந்தேகம் வரும் . இத்துடன் இருக்கும் படம் எனது நண்பரின் மகள் அனுப்பியது. ஆறாம் வகுப்பு படிக்கும் அவர் தான் போட்ட கோலத்தைப் படமெடுத்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனேன். 


கோலம் போடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மார்கழியின் அதிகாலைக் குளிரில் இருள் பிரியா நேரத்தில் கறுத்துத் தெரியும் நீர்தெளித்த வாசலில் விரல்களின் இடுக்கிலிருந்து நூலாய் இழையும் அரிசி மாவில் நெய்யப்படும் கோலம்- அதன் அழகே அழகு. சிறு வயதில் அக்கா கோலம் போட்டு முடிப்பதற்காகக் கையில் பரங்கிப் பூக்களுடன் காத்திருப்பேன். அதிகாலை கருக்கலில் போய் பரங்கிப்பூ பறிக்கும்போது பாம்பு இருக்குமென அம்மா அச்சத்தோடு எச்சரிப்பார். 


இன்று, எங்கள் வீடிருந்த இடம் மண்மேடாய்க் கிடக்கிறது. நூறு ஆண்டுகளைத் தொட்டு சிதிலமடைந்து கிடந்த வீடு பாம்புகளின் வசிப்பிடம் ஆகிவிட்டது. அதனால் பிரித்தேன் கட்டுவதற்குப் பண வசதியில்லை. அண்மையில் ஊருக்குப் போயிருந்தபோது கோலம் போட்ட வாசலும் அலங்கோலமாகக் கிடந்தது. ஒரு சாவுக்காகப் போயிருந்தேன். வீட்டை நினைத்துத்தான் அழுகை வந்தது. வீடும் இல்லை, அக்காவும் இல்லை, கோலமும் இல்லை. 






Saturday, January 11, 2014

UNHRC கூட்டமும் இந்திய பொதுத் தேர்தலும்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 25ஆவது கூட்டம் மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 28 வரை நடக்கவிருக்கிறது. விவாதத்துக்கென நிரல் படுத்தப்பட்டிருக்கும்  74 பொருள்களில் 23 ஆவதாக இலங்கைப் பிரச்சனை இடம்பெற்றிருக்கிறது. அதைவைத்துப் பார்த்தால் 14 ஆம் தேதிக்குமேல் அது விவாதத்துக்கு வரலாம். இந்தக் கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான தயாரிப்பில் இருக்கிறது. 


திருமதி நவநீதம்பிள்ளை குறிப்பிட்ட காலக் கெடு முடியப்போகிறது. அதையேதான் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனும் காமன்வெல்த் மாநாட்டின்போது சொல்லிவிட்டு வந்தார். 

ஆனால் இலங்கை அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே இம்முறை சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை நோக்கியே அமெரிக்கத் தீர்மானம் இருக்கும் எனத் தெரிகிறது. 


ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும் நேரத்தில் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும். தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


அமெரிக்காவை முந்திக்கொண்டு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவே சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்க முடியும். இல்லாவிட்டால் அது தமிழ்நாட்டில் தனது கோஷ்டிகளுக்குள்ளாகவே கூட்டணி அமைத்து திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

சிறைவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்போம்! - ரவிக்குமார்


• உடல் நலிவுற்றிருக்கும் ஆயுள் சிறைவாசி திரு தென்தமிழன் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்
• தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளுக்குத் தணடனை குறைப்பு செய்து பொங்கல் நாளில் விடுதலைசெய்யவேண்டும்!

2013 டிசம்பர் மாதத்தில் ஆந்திர மாநில அரசு 388 ஆயுள் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த ஆண் கைதிகளும் விடுதலை ஆகி உள்ளனர். 65 வயதைத் தாண்டிய அனைத்து கைதிகளும் விடுதலை ஆகி உள்ளனர். இஅரண்டு நாட்களுக்கு முன்னர் கர்னாடக மாநில் அரசு அங்கிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் ஆயுள் சிறைவாசிகளை அதிகமாகக் கொண்ட தமிழ்நாட்டிலோ அவர்களை விடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்திய அளவில் இருக்கும் தண்டனை சிறைவாசிகளில் 54.1சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள் என தேசிய குற்ற ஆவண மைய (என்.சி.ஆர்.பி) புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த தேசிய சராசரியைவிடக் கூடுதலாக 64.1 சதவீத ஆயுள் சிறைவாசிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 

தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர். கடந்த 2006,2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது அவ்வாறு   ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக,  சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்தது. அந்த ஆணையை எதிர்த்து திரு சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்தார். 

2011 இல் ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. 

தி.மு.க ஆட்சி தற்போது இல்லையென்றாலும் அந்த ஆட்சியின்போது 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போதும் செல்லுபடியாகக்கூடியதுதான் என்பதை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. அந்த அரசாணையைக் குறிப்பிட்டு தனது மகனை விடுவிக்கவேண்டும் என சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தொடுத்த வழக்கில் அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, அவரது மகன் இளங்கோ என்ற ஆயுள் சிறைவாசியை 2013 நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்திருக்கிறது. 

திரு. தென்தமிழன் அவர்களுக்கு 2006, 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் அடிப்படையிலேயே விடுதலை கிடைத்திருக்கவேண்டும். ஆனால் சிறை நிர்வாகமும், காவல்துறையும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவர் விடுவிக்கப்படவில்லை. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கை (Madras High Court , W.P.NO.20511 of 2008 ) விசாரித்த நீதியரசர் சந்துரு அவர்கள் திரு தென்தமிழனை விடுவிக்காததற்கு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்ததுடன் அவரை விடுவிப்பதுகுறித்து பரிசீலிக்கவேண்டும் என 2009 நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கினார்(Madras High Court ,Thenthamizhan Alias Kathiravan vs State Of Tamil Nadu on 24 November, 2009,DATED : 24.11.2009) அதன் பின்னரும் கூட திரு.தென்தமிழன் விடுவிக்கப்படாதது வேதனை அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மனித உரிமை அமைப்புகள் இருந்தாலும்கூட சிறைவாசிகளின் உரிமை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அரசியல் கட்சிகளும் சிறைவாசிகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. அதனால்தான் இந்த மோசமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

திரு. தென்தமிழன் அவர்களை விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கும் அதே நேரத்தில் தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் பிற சிறைவாசிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் அவர்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதற்கும் மாநில அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அத்தகைய அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.  
 
( சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து இன்று திருச்சியில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதாக இருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் போக முடியவில்லை. அங்கு வினியோகிப்பதற்கென நான் அனுப்பியிருக்கும் குறிப்பு இது ):

Friday, January 10, 2014

மது வெறியைவிட ஆபத்தானது மதவெறி, மிஸ்டர் மணியன்!



" திமுகவும் அதிமுகவும் வீதிதோறும் மதுவை ஓடவிட்டு இளைஞர்களையும் தமிழ்ச் சமூகத்தையும் சீரழித்துவிட்டன எனவேதான் பாஜகவை ஆதரிக்கிறேன் " எனத் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்குக் கொள்கை நடைமுறையில் இருக்கிறதா? 


மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கும் சௌஹான் இப்போது எடுத்திருக்கும் புரட்சிகர நடவடிக்கை என்ன தெரியுமா? சாராயம் விற்கும் கடைகள் எல்லாவற்றிலும் பிராந்தி விஸ்கி போன்ற IMFL மதுவகைகளையும் சேர்த்து விற்பதுதான்! மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது 2,737 சாராயக் கடைகளும் 937 IMFL மது வகைகள் விற்கும் கடைகளும் உள்ளன. சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு ஐந்து சாராய கடைகள்வீதம் அந்த மாநிலத்தில் உள்ளன. மது விற்பனையை அதிகரிக்கவே அந்த மாநில பாஜக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 


சத்திஸ்கரில் இந்த ஆண்டு 1900 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 500 கோடி அதிகம். ரேஷன் அரிசியை விற்று அங்கே சாராயம் குடிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 


குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதற்கு மோடி காரணம் அல்ல. அது காந்தி பிறந்த மாநிலம் என்பதே காரணம். பாஜக ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அளிப்பார்களா? மணியன் அந்த உறுதிமொழியைப் பெற முடியுமா? மணியன் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்: மதுவெறியைவிட ஆபத்தானது மதவெறி! காந்தியைக் கொன்றவன் ஒரு குடிகாரன் அல்ல! இந்துமத வெறியன்!

மதச் சார்பற்ற தமிழ் அடையாளம் - ரவிக்குமார்


 

    தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகவும் , தை முதல் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாகவும் அறிவித்து தி.மு.க அரசு 2008 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தை இப்போது அ.தி.மு.க அரசு ரத்துசெய்திருக்கிறது.’தி.மு.க அரசின் சட்டம்,  காலம் காலமாக சித்திரை முதல்நாளை புத்தாண்டு தினமாகக் கடைபிடித்துவந்த மக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ’ மக்களின் நம்பிக்கைகளை சட்டங்களால் மாற்றிவிட முடியாது’ என்று கூறியிருக்கிறார். .  

 

‘‘தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!’’ என்று பாடினார் பாரதிதாசன். அவர் அப்படிப் பாடுவதற்கு முன்பே 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழருக்கெனத் தனியே ஒரு காலக்கணக்குத் தேவை என்பதை வலியுறுத்தி திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 31ஆம் ஆண்டைத் துவக்க ஆண்டாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு என ஒன்றை அறிவித்தார்கள். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு பொருத்தமானதல்ல, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

 

திருவள்ளுவர் ஆண்டு என்கிற காலக்கணக்கைத் தமிழக அரசு 1971ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டு விட்டது. அது குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு மட்டும் மாறாமல் சித்திரையிலேயே தொடர்ந்தது. அதைத்தான் 2008 இல் தி.மு.க அரசு மாற்றி அமைத்தது.

 

திருவிழாக்கள், பண்டிகைகள் என்பவை மக்களால் காலம்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருபவை. பல பண்டிகைகள் வழக்கொழிந்து போவதும், புதிது புதிதாக பண்டிகைகள் அறிமுகமாவதும் நாம் அறிந்தவைதான். ஆடிப் பெருக்கு என்ற பண்டிகை இன்று தமிழர்களால் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. (அதன் இடத்தை ஆடித் தள்ளுபடி கொண்டாட்டங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. ஆற்றங்கரைகளை நோக்கிச் சென்ற கூட்டம் இப்போது துணிக்கடைகளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது )ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு இப்போது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காட்சி ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தும் இன்றைய நாளில் கிரிக்கெட் போட்டிகள் திருவிழாக்களாக மாறிவிட்டதை நாம் பார்க்கிறோம்.

 

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தி.மு.க அரசு அறிவித்தபோது அதைத் தமிழ் உணர்வாளர்கள் பலர் பாராட்டி வரவேற்றார்கள். அப்போது  அதை விமர்சித்தவர்களும் உண்டு. மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவது சரியல்ல என்பது அவர்களில் ஒருசிலரின் வாதம். காலம்காலமாக இருந்துவரும் வழக்கத்தைத் திடீரென்று மாற்றச்சொல்வது சரியா? என்பது அவர்களின் கேள்வி. அதைதான் இன்றைய முதல்வரும் கேட்டிருக்கிறார். நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதாலேயே ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டு விடமுடியாது. சாதி ஏற்றத்தாழ்வுகள்கூட வெகுகாலமாக இருந்துவருவதுதான். அதை ஜனநாயகம், சமத்துவம் என்ற கருத்தாக்கங்கள் கோலோச்சுகிற இன்றைய நாளில் நாம் கடைபிடிக்க முடியாது அல்லவா? மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற வாதமும்கூட பிற்போக்கான ஒன்றுதான். உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்திய மக்களின் பண்பாடாக ஒருகாலத்தில் இருந்தது. அதுபோலவே பால்ய விவாகமும் நடைமுறையில் இருந்தது. மனித நாகரீகத்துக்கு விரோதமான இவற்றையெல்லாம் அரசின் குறுக்கீடுகள்தான் இப்போது ஒழித்துக்கட்டியிருக்கின்றன. எனவே மக்களின் நம்பிக்கைகளைச் சட்டத்தால் மாற்றிவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

ஆண்டைக் கணக்கிடுவது பற்றிய சிக்கல் நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பி வந்தபோது நீங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 13 ஆண்டுகளைத்தான் கழித்திருக்கிறீர்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உங்கள் வனவாசம் முடியவில்லை. எனவே திரும்பிப் போங்கள் என்று துரியோதனன் சொல்ல, அங்கிருந்த பீஷ்மரோ அவனை சமாதானப்படுத்தி சூரியனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் 13 ஆண்டுகள் முடிந்துவிட்டது. துரியோதனன் சொல்கிற காலக்கணக்கு தவறானது என்று வாதிட்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது.

 

தற்போது பின்பற்றப்படடு வருகிற காலமுறையும்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடுவதற்கு தென்னாசிய நாடுகளில் இருவிதமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்டது ஒன்று. மற்றது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கணக்கிட்டு வந்த இதுவரையிலான காலக்கணக்கு சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். புத்தாண்டு துவக்கமும், மாதங்களின் ஆரம்பமும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டாலும், இப்போது பயன்படுத்தப்படும் தமிழ் மாதங்களின் பெயர்கள் சந்திரனை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இந்தியாவின் காலக்கணக்கை நிர்ணயிப்பதற்கு ‘காலண்டர் சீர்திருத்த கமிட்டி’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அது அளித்த பரிந்துரைகள் 1957ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. சூரியன், சந்திரன் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்கை அந்தக் கமிட்டி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ள கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் லீப் வருடம் என்ற கணக்கையும் உள்வாங்கிக் கொண்டது.

 

‘‘தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்’’ என்று பாடிய பாரதிதாசன் அதற்கு சமஸ்கிருத எதிர்ப்பைத்தான் அடிப்படையாக முன்வைத்திருந்தார். இங்கு நடைமுறையில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுமுறை ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே அவருடைய குற்றச்சாட்டு. தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் ஆண்டுமுறை என்பது தொடர்ச்சியற்றதாக சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பது பலவித குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி புத்தாண்டு தொடர்பான புராணக்கதைகளும் ஏற்கும்படியாக இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம். ‘சமஸ்கிருத காலக்கணக்கை நிராகரித்து தனித்துவம் கொண்ட தமிழ் முறையை உருவாக்க எண்ணியவர்கள் சங்ககாலத்தில் எந்தமுறை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஆண்டுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரின் கூற்றுப்படிப் பார்த்தால் தமிழ் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிவதாகவே தெரியவருகிறது. ஆனால், தமிழறிஞர்களோ திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படும் நாளையும், ஆண்டையும் வைத்து காலக்கணக்கை முடிவு செய்யவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். இதுவும்கூட ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட்ட ஒரு கணக்கு அல்ல’ என்பது தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்க முடியாது என்பவர்கள் முன்வைக்கும் வாதம்.

 

          தமிழக அரசு இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழ் உணர்வுகொண்டவர்கள் தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள் என முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியிருக்கிறார். அது அவரது அக விருப்பமாகத்தான் இருக்கப்போகிறது. தமிழ் அடையாளம் என்பது இன்னும் மதச்சார்பற்ற அடையாளமாக மாறவில்லை, தமிழ் அடையாளத்தைச் சாதியற்ற அடையாளமாகக் கட்டியமைக்க அயோத்திதாசப் பண்டிதர் (1845- 1914) முயற்சித்தார். தமிழின் பௌத்த வேர்களைக் கண்டறிந்து; பழந்தமிழ் இலக்கியங்களையும், பண்டிகைகள்,திருவிழாக்கள் போன்றவற்றையும் பௌத்த நோக்கில் வியாக்கியானம் செய்து அதற்காக அரும்பாடுபட்டார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாதிய சகதிக்குள் மூழ்கிக்கிடந்த தமிழகம் அவரை ஆதரிக்கவில்லை. அவருடைய முயற்சிகள் கடுமையான எதிர்ப்புகளைத்தான் சந்தித்தன. அயோத்திதாசருக்குப் பிறகு வந்த பெரியார் தமிழ் அடையாளத்தை மதச்சார்பற்ற அடையாளமாகக் கட்டியமைக்க முயன்றார்.அதுவும்கூட முற்றுப்பெறாத பணியாகத்தான் இருக்கிறது. அதைத்தான் இப்போது பார்க்கிறோம். தமிழ் அடையாளத்துக்குள் இன்னும்கூட மதச் சிறுபான்மையினரும், தலித்துகளும் உள்வாங்கப்படவில்லை. அவர்களைப் புறந்தள்ளியே அது கட்டப்படுகிறது.

 

 தமிழ்ப்புத்தாண்டு எந்த நாளில் துவங்குகிறது என்பதல்ல இங்கு பிரச்சனை, அதைவிடவும் தமிழ் அடையாளம் எதனை உள்ளீடாகக்கொண்டு இயங்குகிறது எனப் பார்ப்பதே இன்று முக்கியம். மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தைக் கட்டியமைக்க விரும்புகிறவர்கள் பயணிக்கவேண்டிய தூரம் மிக நீண்டது என்பதைத்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.            

 

       

( 2011 ஆகஸ்டு மாதத்தில் வல்லினம் இணைய இதழில்எழுதியது)

Tuesday, January 7, 2014

இரண்டு ' நாய்க்குட்டிகள்'



இன்று சே குவேராவின் Reminiscences of the Cuban Revolutionary War ( Harper Perennial,2006 ) என்ற நூலைத் திரும்பவும் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அதில் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா எழுதிய சிறிய முன்னுரை ஒன்று இருக்கிறது. அந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ' The Murdered Puppy' என்ற தலைப்பிலான பகுதியைப்பற்றி தனது முன்னுரையில் அலெய்டா குறிப்பிட்டிருப்பார். சட்டென்று எனக்கும் அந்தப் பகுதி நினைவுக்கு வந்தது. உடனே அந்தப் பக்கத்தைத் திருப்பி அதை மீண்டும் வாசித்தேன். 


சேவும் அவரது தலைமையிலான கொரில்லா குழுவினரும் சான்ஷே மாஸ்குரா என்பவனின் படையணியை ரகசியமாகப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். சரிவான மலைப் பகுதி.அந்தப் படையணி வழி நெடுகக் கண்ணில் தென்படும் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்கிக்கொண்டு செல்கிறது. அதை குறிப்பிட்டதொரு இடத்தில் சுற்றிவளைத்துத் தாக்கவேண்டுமென்பது கொரில்லாக்களின் திட்டம். அவர்கள் பிந்தொடர்வது தெரிந்தால் அழிவு நிச்சயம். சிறு சலனமும் பேரிரைச்சலாக மாறிவிடும் வனத்தின் மௌனத்துக்குள் ஊர்ந்து செல்கிறது கொரில்லா குழு. அப்போது நாய்க் குட்டி ஒன்று குரைக்கும் சப்தம் கேட்கிறது. கொரில்லா குழு தங்கியிருந்த மறைவிடத்தில் இருந்த நாய்க்குட்டி. அவர்களோடே வந்திருக்கிறது. அதை திரும்பிப்போக வைக்க அவர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை. தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அது குரைத்துக்கொண்டே ஓடிவந்துகொண்டிருந்தது. யாரோ ஒருவர் அதைக் கையில் தூக்கிக்கொள்கிறார். சற்றே அமைதி. எதிரிப் படையணியின் நகர்வை உன்னிப்பாகக் கவனித்தபடி கொரில்லா வீரர்கள் பாறைப் பிளவு ஒன்றில் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். அப்போது மீண்டும் அந்த நாய்க்குட்டி குரைக்க ஆரம்பிக்கிறது. எப்படியாவது அதை நிறுத்து என சே ஆணையிடுகிறார். ஃபெலிக்ஸ் என்ற கொரில்லா வீரர் அந்த நாய்க்குட்டியை நிரந்தரமாக அமைதிப்படுத்திவிடுகிறார். அன்று இரவு அவர்கள் வழியில் கைவிடப்பட்ட ஒரு குடிசையில் தங்குகிறார்கள். அவர்கள் சாப்பிடும்போது அங்கிருக்கும் நாயொன்று ஓடிவருகிறது. அதன் கண்களில் கொல்லப்பட்ட நாய்க்குட்டியின் பார்வையை உணர்ந்து சே திடுக்கிடுகிறார். 


சில நேரங்களில் கொரில்லா வாழ்வு சுமத்தும் ஈவிரக்கமற்ற தருணங்களை அந்த நூலில் நாம் பார்க்கலாம். ஒரு கொரில்லா வீரனாக எத்தனையோபேரை சே கொன்றிருப்பார். ஆனால் தனது உத்தரவால் பறிபோன ஒரு நாய்க்குட்டியின் உயிர் அவரைக் குற்றவுணர்வில் துடிக்கச் செய்திருக்கிறது. 


இந்த நிகழ்வைப் படித்துக்கொண்டிருந்தபோது குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் பற்றி நரேந்திர மோடி சொன்னது நினைவுக்கு வந்தது. ' நாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும்போது காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி விழுந்து அடிபட்டு செத்துவிட்டால் நாம் வருத்தமடையத்தானே செய்வோம்' என அவர் கேட்டிருந்தார். 


ஒரு காலத்தில் சே குவேராவை ஆதர்சமாகக் கருதி அவரது உருவப்படம் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிந்துகொண்டனர் இளைஞர்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை இப்போது அருகிவிட்டது. இன்றோ மோடியை மாற்றத்தின் குறியீடாகப் பார்க்குமாறு இளைஞர் கூட்டத்துக்கு வெறியூட்டப்படுகிறது! 


சே குவேராவுடன் ஒப்பிடத்தக்கவரல்ல மோடி. ஆனால் இந்த இளைஞர்கள், அவர்களின் மனநிலை- அச்சமாக இருக்கிறது......

Thursday, January 2, 2014

மீனவர் பிரச்சனையில் திமுக அறிவிக்கப்போகும் நேரடி நடவடிக்கை என்ன?



தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கைக் கடற்படை இன்று கைது செய்திருக்கிறது. வலைகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 29 ஆம் தேதி 22 மீனவர்களும் மறுநாள் 18 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று கைது செய்யப்பட்ட 32 பேரை சேர்த்து கடந்த நான்கு நாட்களில் மட்டும் 62 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 


டீசல் விலை உயர்வை மத்திய அரசு அறிவிப்பதும் அதை எதிர்க்கட்சிகள் கண்டிப்பதும் எப்படி வாடிக்கையாகிவிட்டதோ அப்படியே இந்த விஷயமும் ஆகிவிட்டது. முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவார், கட்சிகளுக்கு அறிக்கை, ஊடகங்களுக்கு செய்தி- மீனவ மக்களுக்கோ இது உயிரின் வாதை. 


கடந்தமுறை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டபோது திமுக தலைவர் கலைஞர் அவர்கள் மிகுந்த கோபத்தோடு அறிக்கை விடுத்திருந்தார். இனி மத்திய அரசை நம்பிப் பயனில்லை. நேரடியாகப் போராட்டத்தில் இறங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் போராட்ட அறிவிப்புக்கான காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 


ஆமாம், தமிழ் இந்து ஏன் இந்தப் பிரச்சனையில் சும்மா இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர்கள் செய்வது சரியல்ல என்று விக்னேஸ்வரனிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிடலாமே! அவர் கிடைக்கவில்லையென்றால் திரு ராம் அவர்களிடமேகூட இன்னுமொரு பேட்டி எடுக்கலாம்.