Wednesday, February 26, 2014

தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு தெலுங்கானா சொல்லும் செய்தி



பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களுக்கிடையே தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி பிரிக்கப்பட்ட ஆந்திராவில் ஒரு பகுதியில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதன்மூலம் அங்கிருக்கும் தொகுதிகள் அனைத்தையும் அது கைப்பற்றக்கூடும். இவ்வளவு நாட்களாகச் செய்யாமல் தேர்தல் நெருங்கிய நேரத்தில் இதைச் செய்திருப்பது காங்கிரசின் அரசியல் கணக்கையே காட்டுகிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது வெற்றிப் பெருமிதத்தில் இருக்கும் தெலுங்கானா மக்கள் ஒட்டுமொத்தமாகத் தம் வாக்குகளைக் காங்கிரசுக்கு அளிப்பார்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னால் இதைச் செய்திருந்தால்கூட இந்த எழுச்சி வடிந்திருக்கும். நிதானம் வந்துவிட்டால் அவர்கள் காங்கிரசை மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து எடைபோடுவார்கள், பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் அனுபவித்த துயரங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வந்துவிடும். அப்புறம், காங்கிரஸ் நினைத்த அரசியல் அறுவடையைச் செய்யமுடியாமல் போய்விடும். 


தெலுங்கானா விவகாரத்தில் தமிழக காங்கிரசுக்கும் ஒரு செய்தி இருக்கிறது. தற்போது தென் தமிழ்நாட்டில்தான் காங்கிரசுக்கு ஏதோ கொஞ்சம் ஆதரவு இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என சில உதிரிக் கட்சிகள் பேசிவருகின்றன. ஏன் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் கையில் எடுக்கக்கூடாது? இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை. சென்னையை மட்டுமே மையப்படுத்தி செய்யப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் ' வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்ற உணர்வை தென் தமிழகத்து மக்களுக்கு ஏற்படுத்துகிறது. தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற வருத்தமும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்ற பெருமிதமும் ஒன்றிணைந்தால் தனி மாநிலம் என்ற முழக்கமாகவே அது வெளிப்படும். இப்போது காங்கிரஸை எதிர்க்கும் தமிழ்த்தேசியவாதிகளில் சிலர் அப்போது அக்கட்சியுடன் கைகோர்த்தாலும் வியப்பதற்கில்லை. 


தமிழ்நாட்டில் காங்கிரஸ் புத்துயிர் பெற அருமையானதொரு ஆலோசனை தெலுங்கானா பிரச்சனையில் இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment