Monday, February 3, 2014

முட்டை ஏற்றுமதியைத் தடைசெய்யவேண்டும்! - ரவிக்குமார்


நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்  நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் கணிசமான முட்டைகள் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஆப்கானிஸ்தான், ஈரான் முதலான அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டை வணிகம் சார்ந்து ஏராளமானோர் உள்ளனர். கணிசமான வேலை வாய்ப்புகளையும் அன்னிய செலாவணியையும் இந்தத் தொழில் ஈட்டித் தந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இந்தத் தொழிலே பிரதான காரணியாக அமையப்போகிறது. 


தமிழகத்தின் நீர்வளம் குறைந்துகொண்டே வரும் இன்றைய சூழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க முடியும். இந்த சிக்கலின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள நாம் புலப்படாத் தண்ணீர் ( virtual water) குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். 


நெல் விளைவிப்பதற்கு மட்டுமல்ல கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளை உற்பத்தி செய்யவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி உற்பத்தி செய்யப்படும் பொருளை நாம் ஏற்றுமதி செய்யும்போது அந்தப் பொருளோடு அதற்குப் பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்தே ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் அந்தத் தண்ணீர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை அதனால்தான் அதை புலப்படாத் தண்ணீர் என்கிறோம். 


ஒரு நாட்டின் நீர் மேலாண்மை என்பது பாசனம், குடிநீர் ஆகியவற்றை நிர்வகிப்பது மட்டுமல்ல. கழிவுநீர், புலப்படாத் தண்ணீர் ஆகியவற்றை நிர்வகிப்பதும்தான். 


இந்தப் புலப்படாத் தண்ணீர் பிரச்சனை குறித்துத் தமிழக சட்டமன்றத்தில் நான் 2006 இல் பேசினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே காலச்சுவடு இதழிலும் அதன் பின்னர் ஜூனியர் விகடனிலும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். 


இந்த புலப்படாத் தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்ததால்தான் வளர்ச்சிபெற்ற நாடுகள் பல இப்போது ஆப்ரிக்க நாடுகளைத் தமது விளைநிலங்களாக மாற்றி வருகின்றன. முன்பு காலனிகளாக மாற்றித்தான் இந்த சுரண்டலை செய்ய முடிந்தது. இப்போது அதற்கு அவசியமில்லை. நவகாலனிய வணிகமுறை அதை எளிதாக்கியுள்ளது. 


தமிழக அரசு தொலைநோக்கோடு இந்தப் பிரச்சனையை அணுகவேண்டும். நமது மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பொதிந்திருக்கும் புலப்படாத் தண்ணீரின் அளவு என்ன என்பதைக் கணக்கிட்டு அதை மேலாண்மை செய்யும் நோக்கில் ஏற்றுமதிக் கொள்கையை மறு ஆக்கம் செய்யவேண்டும். 


ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 126 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் உற்பத்தியாகும் ஒன்றரை கோடி முட்டையில் எவ்வளவு ஏற்றுமதியாகிறது எனப் பாருங்கள். அதன்மூலம் எவ்வளவு நீர்வளத்தை நாம் இழக்கிறோம் என்பதைக் கணக்கிடுங்கள். அப்போதுதான் இந்த முட்டை உற்பத்தித் தொழிலால் ஏற்படப்போகும் ஆபத்து உங்களுக்குப் புரியும். 


பிற மாநிலத்தவர் மீதான வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய அமைப்புகளும், பெரிய திட்டங்களை எதிர்ப்பதில் மட்டும் அக்கறைகாட்டும் சூழலியலாளர்களும் இந்த புலப்படாத் தண்ணீர் சிக்கலில் கவனம் செலுத்தினால் தமிழ்நாட்டுக்கு நல்லது. 


No comments:

Post a Comment