ஒடுக்கப்பட்ட மக்களை சிறுபான்மையினர் என்று அம்பேத்கர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களுக்கு சில சலுகைகளைப் பெற்றுத் தருவதற்காக அம்பேத்கர் கையாண்ட யுக்தி இது. அதன்மூலம் சில காப்புக்கூறுகளை அவரால் பெற்றுத்தர முடிந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த யுக்தி இன்றைக்கும் பயன் தரக்கூடியதா என்பதை நாம் பரிசீலிக்கவேண்டும்.
தலித்துகளை சிறுபான்மையினர் எனக் கூறும்போது அது அவர்களின் உளவியலில் நிகழ்த்தும் தாக்கம் எத்தகையது என்பது கவனிக்கப்படவேண்டும். தம்மை சிறுபான்மையாக எண்ணும் ஒரு மனிதன் பெரும்பான்மையின் தயவிலேயே வாழவேண்டும் என்று நம்புகிறான். பெரும்பான்மை என்பது எதிர்க்கப்பட முடியாதது எனக் கருதுவது மட்டுமின்றி பெரும்பான்மைக்கே எல்லாவித உரிமைகளும் சொந்தம் என்றும் எண்ணிக்கொள்கிறான். இன்னொரு புறத்தில் பெரும்பான்மை என சான்றளிக்கப்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவன் அதிகாரம் அனைத்தும் தமக்கே சொந்தம் எனக் கருதுவதும், சிறுபான்மையினருக்கென்று தனியே உரிமை எதுவும் கிடையாது தாம் மனமிறங்கி ஏதாவது சலுகை வழங்கினால் அதைப் பெற்றுக்கொள்வதுதவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று இறுமாப்பு கொள்கிறான்.
கிறித்தவர்களும் இஸ்லாமியரும் சிறுபான்மை மதத்தினர் எனச் சொல்லப்பட்டாலும் உலக அளவில் அவர்கள் பெரும்பான்மையின் பகுதியாகவே தம்மை உணர்கிறார்கள். அதனால் சிறுபான்மை என்ற பலவீன உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதில்லை. தலித்துகளுக்கு இத்தகைய சர்வதேசப் பிணைப்போ பாதுகாப்போ இல்லாததால் எப்போதும் அவர்கள் பெரும்பான்மை குறித்த அச்சத்திலேயே வாழவேண்டியுள்ளது.
இந்திய அளவில் தீண்டாமை என்ற சமூகக் கொடுமைக்கு ஆளானவர்களை ஒரே பட்டியலின்கீழ் கொண்டுவந்ததன்மூலம் தலித் மக்களுக்கு எண்ணிக்கை அடிப்படையிலான பலத்தை அம்பேத்கர் வழங்கினார். அந்தப் பட்டியலின்கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட மக்கள் ஒரு மாநிலத்துக்குள் வேண்டுமானால் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் இந்திய அளவில் பார்த்தால் எந்தவொரு சாதியைவிடவும் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மைதான்.
இந்திய அளவில் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தாலும் தலித்துகள் தம்மைப் பெரும்பான்மையாகக் கருதிக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு முதன்மையான காரணம் அவர்கள் இன/ மொழி அடையாளத்துக்குள் கட்டுண்டு கிடப்பதுதான்.
கால காலத்துக்கும் தம்மைச் சிறுபான்மையினராக்கி முடக்கிப்போட்டிருக்கும் இன/ மொழி தளைகளிலிருந்து விடுபட்டுத் தம்மைப் பெரும்பான்மையினராகக் கருதுவதன்மூலம் உளவியல்ரீத்தியான உத்வேகத்தை அவர்கள் பெற முடியும். சலுகைகளுக்காகக் கெஞ்சாமல் உரிமைகளுக்காகப் போராடும் சூழல் அப்போதுதான் அவர்களுக்கு வாய்க்கும்.