Saturday, January 24, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலும் தலித் வாக்குகளும் -ரவிக்குமார்



ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல் என்றாலே அதில் ஆளும் கட்சி வேட்பாளர்தான் வெற்றிபெறுவார் என்ற வினோதமான நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றபோதிலும் இந்தத் தொகுதியில் 2001 முதல் அதிமுக தான் வெற்றிபெற்று வருகிறது என்பதால் இந்தத் தேர்தலின்  முடிவு எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமம் இல்லை. இப்போதைக்கு நான்கு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேல் நகரப்பகுதிகளில் வசிக்கிறவர்கள். 

தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டபோது 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 290417 அதில் தலித் வாக்காளர்கள் 49579 அதாவது 17.07%. திருச்சி நகரத்தில் இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஆறு வார்டுகளில் வார்டுகள் 1,4, 6 ஆகிய வார்டுகளில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 முதல் 18 விழுக்காடு வரை இருக்கிறது. 

மல்லியம்பத்து,சோமரசம்பேட்டை,கள்ளிக்குடி கம்பரசம்பேட்டை, குழுமணி, சிறுகமணி, தொப்பம்பட்டி என தலித் மக்கள் அடர்த்தியாக வாழும் ஊர்கள் இந்தத் தொகுதியில் இருக்கின்றன.  

இந்தத் தொகுதியின் வாக்காளர்களில் ஆறில் ஒரு பகுதியினர் தலித்துகளாக இருந்தபோதிலும் அவர்களது வாக்குகளை இங்கே களமிறங்கியிருக்கும் பெரிய கட்சிகளான தி.மு.க,அ.தி.மு.க,பா.ஜ.க ஆகிய கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கின்றனவா எனத் தெரியவில்லை. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்  தலித் ஒருவரை வேட்பாளராக  நிறுத்தியிருக்கிறது. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்துவது பெரிய கட்சிகளுக்கு  வழக்கமில்லை.      அ .தி.மு.க கூட திருச்சி மக்களவை இடைத் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு தலித் எழில்மலையை  நிறுத்தி வெற்றிபெறச் செய்திருக்கிறது. ஆனால் மற்ற கட்சிகள் இதில் கறாராகவே இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் இதில் விதிவிலக்கு. 

வேட்பாளராக தலித்தை அறிவிக்கவேண்டாம். அந்தத் தொகுதியில் இருக்கும் தலித் வாக்குகளைக் கவர்வதற்காக அவர்கள் தொடர்பான வாக்குறுதிகளையாவது பெரிய கட்சிகள் முன்வைக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. அந்த அளவுக்குத்தான் தலித் வாக்குகளுக்கு அங்கே மதிப்பிருக்கிறது. இதே அளவு மக்கள் தொகை ஒரு தொகுதியில் முஸ்லிம்களுக்கோ கிறித்தவர்களுக்கோ இருந்தால் அதன் மதிப்பு எப்படி இருக்கும்  என்பதை சிந்தித்துப் பார்த்தால் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் இன்னும் தலித் இயக்கங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டும் என்பது புரியும். 

No comments:

Post a Comment