Sunday, January 18, 2015

கும்பலாட்சி: கொடுங்கோன்மையின் முன்னறிவிப்பு - ரவிக்குமார்



’சமூகம்’ என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தமக்குள் கலந்துறவாடி பொதுவாழ்வில் பங்கேற்று, பகிர்ந்து வாழ்வதைக் குறிக்கும் ஒரு சொல். ஆனால், இந்தியாவிலோ அது சாதியைக் குறிப்பதற்கான இன்னொரு சொல்லாகவே புழங்கிவருகிறது. இதை பெருமாள்முருகன் நாவல் தொடர்பான ஊடக விவாதங்களிலும் நாம் பார்க்க முடிகிறது.

 ” நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அப்படியே பல்வேறு சாதிகளும் சுயநலம் கருதிப் பிறரோடு உறவின்றி வாழ முற்படுகின்றன. இந்தச் சுயநலம், சமூக உணர்வுக்கு ஏதிரானதாகச் செயல்படுவதால் சமூக விரோதத் (Anti Social ) தன்மையைக் கொண்டுள்ளது.” என அம்பேத்கர் குறிப்பிட்டார். இதன் காரணமாக ’இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை, சாதிகளின் தொகுப்புதான் இருக்கிறது’ என அவர் விளக்கமளித்தார். ஆனால், இதற்கு மாறாக, எதிராகச் செயல்படுகிறது இலக்கியம். யதார்த்தத்தில் இல்லாத ’சமூகத்தை’ இலக்கியம் உருவாக்க முயற்சிக்கிறது. அதனால் இயல்பாகவே அது சமூகச் சார்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெருமாள் முருகனின் இந்தக் குறிப்பிட்ட நாவலில் மட்டுமல்ல, படைப்பு குணத்தோடு விளங்கும் எந்தவொரு எழுத்திலும் இதை நாம் உணரலாம்.
சாதியை நேரடியாக விமர்சிக்காவிட்டாலும்கூட சமூக சார்புத் தன்மை கொண்டதாக இருக்கும் இலக்கியப் படைப்பை சமூக விரோதத்தன்மையை உள்ளீடாகக் கொண்டிருக்கும் சாதிய மனம் ஒருபோதும் ஏற்காது. தன் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை எதிரியாகவே பார்க்கும். இதற்கு பெருமாள் முருகன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் ஒரு உதாரணம். பாரதி முதற்கொண்டு இப்படி சாதிய மனங்களால் நிந்திக்கப்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பலரை நாம் பட்டியலிட முடியும்.

இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்தை “சமூகங்கள் இல்லாத அரசுகள்” என பர்ட்டன் ஸ்டெய்ன் என்ற வரலாற்றறிஞர் வகைப்படுத்தினார். காலனிய அரசு தனது அதிகாரத்தை மையப்படுத்திக்கொள்ள உள்ளூரில் ஆதிக்கம் பெற்று விளங்கிய சமூக நிறுவனங்களை பலமிழக்கச் செய்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்கள் மெள்ள மெள்ள வலுவடைந்து இப்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன.வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் சென்று “ சாதி / மத நிறுவனங்களும் அரசும் ஒத்திசைந்து செயல்பட்ட நிலையை “ மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றன. இப்போதிருக்கும் மக்களாட்சி முறையை உருக்குலைத்து சர்வாதிகார முறையைக் கொண்டுவரப்பார்க்கின்றன.

மக்களாட்சியிலிருந்து சர்வாதிகாரத்துக்கு மாறிச்செல்வதற்கு இடையில் உருவாவதுதான் ‘ கும்பலாட்சி’ என கிரேக்க தத்துவ அறிஞர் பாலிபியஸ் கூறினார். கும்பலாட்சி என்பது சட்டபூர்வமான நிறுவனங்களை செயலிழக்க வைக்கும்; உணர்ச்சியால் பகுத்தறிவைப் பதிலீடுசெய்யும்; பெரும்பான்மைவாதத்தை ஊக்குவிக்கும். பெருமாள் முருகன் பிரச்சனை எழுத்து, இலக்கியம் தொடர்பானது மட்டுமல்ல. அது மக்களாட்சிக்கு வந்திருக்கும் ஆபத்தின் வெளிப்பாடு. கொடுங்கோன்மையை விரும்புகிறவர்கள் மட்டும்தான் இதைக்கண்டு மௌனமாக இருக்க முடியும். 

நன்றி : இந்தியா டுடே 

No comments:

Post a Comment