Saturday, January 31, 2015

தமிழகத்தைச் சூழும் பெரும்பான்மைவாத ஆபத்து -ரவிக்குமார்


( 29.01.2015 அன்று நெல்லிக்குப்பம் நகரில் விசிக வின் துணை அமைப்பான ‘தியாகி முத்துக்குமார் பாசறை’ சார்பில் நடைபெற்ற ஈகி முத்துக்குமாரின் 6 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சிறப்புரையின் சுருக்கம்)

 

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் முத்துக்குமார் தீக்குளித்தார்.அன்று சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது என நினைவு. முத்துக்குமார்தீக்குளித்த செய்தியைக் கேட்டதும் தலைவரும் நானும்மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்எரிந்துகரிக்கட்டையாய் கிடத்தப்பட்டிருந்த அவரது உடலைப்பார்த்து திகைத்து நின்றோம்இப்போதும் அந்தக் காட்சிஎன் கண்ணில் தெரிகிறதுதனது மரணச்செய்தியை தலைவர் திருமாவளவனிடம் கூறுங்கள் என அவர் எழுதிவைத்துவிட்டுப்போன கடிதம் அப்புறம்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அந்த அளவுக்கு நம் தலைவர்மீதும் இந்தக் கட்சியின்மீதும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். 

 

முத்துக்குமார் தன்னை எந்த லட்சியத்துக்காகஎரியூட்டிக்கொண்டாரோ எதற்காக தனது இன்னுயிரை ஈகம் செய்தாரோ அதை ஈடேற்றவேண்டிய கடமை நமக்குஇருக்கிறதுசிங்களப் பேரினவாதக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஈழம் உருவாகவேண்டும்ஈழத் தமிழர்கள்சுயமரியாதையோடு சமத்துவத்தோடு அதில் வாழவேண்டும்என்பதே அந்த லட்சியம்

 

இலங்கையில் இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறதுஆனால் தமிழர்களின் வாழ் நிலையில் மாற்றம் வரவில்லைஇறுதிப்போரின்போது ராணுவத்தால்பிடித்துச்செல்லப்பட்டவர்கள்ராணுவத்திடம் சரணடைந்தஆயிரக்கணக்கான தமிழர்கள்- அவர்களின் கதி என்னஆனதென்று தெரியவில்லை. ஓராண்டுக்குள் சொல்கிறோம் என்கிறார் இன்றைய அதிபர் மைத்ரிபால. ராஜபக்சவும் போர் முடிந்தபோது அப்படித்தான் சொன்னார். இப்போதையதிபரும் அதைத்தான் சொல்கிறார்

 

ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள்ஒப்படைக்கப்படவில்லைசிங்களக் குடியேற்றங்களோதமிழர் பகுதிகளில் ஆத்திரமூட்டும் விதத்தில்உருவாக்கப்பட்டிருக்கும் பௌத்த ஆலயங்களோஅகற்றப்படவில்லைவெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை.ராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 

 

தமிழர் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகளை இப்போதும் ராணுவம் செய்கிறது. தமிழ்நாட்டில் அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது.அதை நாம் விமர்சிக்கிறோம். ஈழத் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம்தான் மதுக் கடைகளை நடத்துகிறது. போராளிகளின் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதிகள் இருந்தபோது இல்லாத சமூகச் சீர்கேடு இன்று அங்கே தலைவிரித்து ஆடுகிறது. இயக்கங்களுக்குப்போன இளைஞர்கள் இறந்தால் போராளி என்ற கௌரவம் இருந்தது. ஆனால் தமிழ் இளைஞர்கள் குடிகாரர்கள் என்ற கேவல நிலைக்கு ஆளாகிவருகிறார்கள். தமிழர்களின் நிலை முன்னைவிடவும் மோசமாகிக்கொண்டிருக்கிறது என்று இதனால்தான் சொல்லுகிறோம்.

 

13 ஆவது சட்டத் திருத்தம் குறித்துப் பேசுகிறார்களே ஒழியஅதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லைஇப்போதுஅதிபராகியிருக்கும் மைத்ரிபாலாவும் ராஜபக்சவின்அமைச்சரவையில் பங்கு வகித்தவர்தான்தமிழர்கள்மீதானதாக்குதல்களுக்குத் துணைபோனவர்தான்எனவேதமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்நாம் விழிப்போடு இருந்து குரல் கொடுத்தால்தான் அங்கிருக்கும் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கும். 

 

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது ‘ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமதுபிரச்சனையில் தலையிடவேண்டாம்’ எனக் கூறினார். அது ராஜபக்ச ஆட்சி நடந்த காலம். பாராளுமன்றத்தில் பேசினாலே உளவுத்துறையின் விசாரணைக்கு ஆளாக நேர்ந்த காலம். முதலமைச்சர் ஒரு இடத்துக்குப் போவதென்றால்கூட ராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று கெடுபிடி செய்யப்பட்ட காலம். எனவே அவர் சொன்னது ஏன் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் அவர் அப்படி சொல்லக்கூடும். அப்படி அவர் பேசினாலும்கூட நாம் ஈழத் தமிழர்களைப்பற்றிப் பேசித்தான்ஆகவேண்டும்தமிழ்நாட்டுத் தமிழர்கள் அழுத்தம்கொடுத்ததால்தான் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில்இந்திய அரசு இலங்கைக்கு எதிராக முன்னர் வாக்களித்ததுஎனவே இப்போதும் நாம் அந்தக் கடமையிலிருந்துவிலகக்கூடாதுஇன்றும்கூட அவர்களுக்குக் குரல் கொடுக்க தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட்டால் வேறு யாரும் கிடையாது. ஆட்சி மாறிவிட்டது இனிமேல் நாம் ஈழத் தமிழரைப்பற்றிப் பேசத் தேவையில்லை என நாம் ஒதுங்கிவிடக்கூடாது. 

 

இங்கு அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என இப்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக டெல்லியிலே கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்கள். ஆனால் அகதிகளை இப்போது திருப்பி அனுப்பக்கூடாது என தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்காக அவரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நிலைபாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அங்கு இருக்கும் தமிழர்களுக்கே இன்னும் அச்சம் நீங்கவில்லை. அதற்குள் இங்கு இருப்பவர்களையும் அனுப்ப நினைப்பது அநீதியானது. 

 

அகதிகள் குறித்த ஐநா ஒப்பந்தம் எதிலும் இந்தியா இதுவரைக் கையெழுத்திடவில்லை. இங்கிருக்கும் அகதிகளின் நிலையை உலகுக்கு எடுத்துச் சொன்னது நாம் தான். அவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கின்றன என்பதை நாம்தான் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். தலைவரும் நானும் முகாம்களைப் பார்வையிட்டு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அகதிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அன்றைய முதல்வர் கலைஞரால் அவர்களுக்கான பணக்கொடை இரு மடங்காக உயர்த்தப்பட்டது. இங்கிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களெல்லாம் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. டிவி முதல் திருமண உதவித் திட்டம் வரை அவர்களுக்குக் கிடைப்பதற்கு நாம் தான் காரணம். தற்காலிக முகாம்களில் இருந்தவர்கள் இன்று நிரந்தர வீடுகளில் வசிப்பதற்கு நாம் அளித்த அறிக்கைதான் காரணம். இப்போதைய அரசும் நலத் திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.முதியோர் உதவித் தொகை அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் உரிமைகள் இந்தியாவில் இல்லை என்றபோதிலும் மாநில அரசு தனது நிதியில் அவர்களுக்குப் பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஆனால் இந்த உதவிகள் அவர்களுக்கு நிரந்தர தீர்வாகிவிட முடியாது. அவர்கள் விரும்பினாலன்றி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்பதுதான் நமதுநிலைபாடு.

 

இலங்கை அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு நாடுகளிலுமே பெரும்பான்மைவாதத்தை முன்னெடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. இது இந்திய அரசியலில் ஒரு புதிய பரிமாணம். பண்பு ரீதியான மாற்றம். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை, தலித் வாக்குகள் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்திருக்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. 

 

பாஜகவின் கொள்கையை எதிர்ப்பதாகச் சொன்னாலும்கூட தமிழ்நாட்டிலிருக்கும் பெரிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதே பெரும்பான்மைவாத அணுகுமுறையை நோக்கி நகர்கின்றன என்பதைத்தான் அவர்களது அண்மைக்கால அணுகுமுறைகள் காட்டுகின்றன. அது 2016 சட்டமன்றத் தேர்தலில் மிகவும் துலக்கமாக வெளிப்படும். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். சாதிப் பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு மதப் பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. இதை தமிழ்நாட்டிலிருக்கும் சிறுபான்மை மக்களும், தலித்துகளும், ஜனநாயக சக்திகளும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. 

 

முத்துக்குமாரின் ஈகம் ஈழத் தமிழர்களுக்கானது என்று பொத்தாம் பொதுவாக மட்டும் நாம் புரிந்துகொள்ளக்கூடாது. பெரும்பான்மை சிங்கள இனத்தின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மை தமிழ் இனத்தின் உரிமைக்கானது என அதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் இங்கும் நாம் பெரும்பான்மைவாதத்தை எதிர்க்கவேண்டியதன் முக்கியத்துவம் புரியும். முத்துக்குமாரின் இந்த நினைவு நாளில் மதப் பெரும்பான்மைவாதத்தையும், சாதிப் பெரும்பான்மைவாதத்தையும் எதிர்த்துப் போராட உறுதி ஏற்போம்.    

 

 

 

No comments:

Post a Comment