Saturday, September 10, 2022

கே.டி.லிஸ்ட், ரௌடி லிஸ்ட் - சீராய்வு செய்க

 கே.டி.லிஸ்ட், ரௌடி லிஸ்ட் - சீராய்வு செய்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நான் அளித்த கடிதம் :


வணக்கம் ! 

 

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருக்கும் காவல்துறை நிலை ஆணை (PSO) பிரிவு 746 முதல் 749 வரை ஒரு நபரை கேடி லிஸ்டில் ( Known Depredator) சேர்ப்பதற்கும் ரௌடி லிஸ்டில் சேர்ப்பதற்குமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரிவு 749 உட்பிரிவு 2 இல் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

 

(a) Persons, who habitually commit, attempt to commit or abet the

commission of offences involving a breach of peace.

(b) Persons bound over under Sections 106 and 107 Criminal Procedure Code.

(c) Persons who have been convicted under Section 75 of the Madras City

Police Act or twice in two consecutive years under Section 3 Clause 12 of the Town Nuisance Act.

(d) Persons who are illicit distillers and known purveyors of liquor.

(G.O.Ms. No. 3461, Home 10th Dec, 1956.)

(e) Persons either convicted under Section 49-A of the Madras City Police Act, 1888 (Madras Act III of 1888) or under Section (4) of The Madras Gaming Act,

1930, (Madras Act III of 1930), or reasonably suspected to be habitually committing or abetting the commission of such offences.

அதுபோல ஒருவரது பெயரை அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் / நீக்குவதற்குமான வழிகாட்டுதல்களும் அதில் உள்ளன. காவல்துறை நிலை ஆணை பிரிவு 748 உட்பிரிவு 4 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

 

The Hon‘ble High Court of Madras in their judgment dated 17.06.2013 in

W.P.No.44548 of 2002 pointed out that opening of History Sheet or rowdy sheet attaches an indelible stigma on the concerned person, which in turn, likely to cause serious violation of Fundamental rights and such restriction can only be on reasonable grounds. All SDOs or other authorized officers shall pass detailed orders reflecting application of mind as and when a history sheet or rowdy sheet is opened or when the period is extended. SHOs must justify the necessity for opening History Sheet in terms of PSO 746 and 749. At the end of the prescribed period, the retention must be ordered only if there is sufficient material recorded in the ‗current doings‘ and when the person continues to meet the norms mentioned in the relevant PSO

- DGP‘s standing instruction No.57/2013, Dated: 29.11.2013. ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் காவல் நிலையங்களில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக காவல் நிலையங்களில் ஆய்வாளர் மட்டத்திலுள்ள அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் செயல்படுவோரை அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மக்களுடைய நலன்களுக்காக செயல்படும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களை மனம் போன போக்கில் இந்த பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்படிருப்பதைப் போல குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்த பட்டியலை சீராய்வு செய்வதோ,  பெயர்களை நீக்குவதோ அல்லது அந்த பெயர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அதற்காக உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதோ கிடையாது.  இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை WP (Md) No.19651 Of 2017 Vs The Assistant Commissioner Of Police, Madurai ... on 26 September, 2018  என்ற தீர்ப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டி இருக்கிறது:

 

”28.It can be seen from all the above cases that there is a general pattern adopted trend by the Police to continue to retain the names of the persons in the history sheet showing them as rowdies without any justifiable reasons. The Police did not realise that the purpose of opening a history sheet is to keep surveillance and check on hardened and habitual criminals in order to maintain peace and tranquility in the society.

 

29.As mentioned above, it also becomes the duty of the Police to keep reviewing the history sheet regularly to ensure that the persons, who are no longer required to be retained in the list are removed from the list, since it involves the dignity and public image of a person which is guaranteed under Article 21 of the Constitution of India.”

 

 அந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்ட பிறகும் கூட பழைய நிலையே நீடிப்பது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த Nageswara rao Vs The Superintendent of Police, Kallakurichi என்ற வழக்கில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 06.07. 2022 அன்று ஆணை ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறைக்கு அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் தங்களது மேலான  தலைமையின் கீழ்  காவல்துறை இப்போது சிறப்பாக பணியாற்றி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் 2018 இல் வழங்கிய ஆணைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் உள்ள கேடி லிஸ்ட், ரௌடி லிஸ்ட் ஆகியவற்றை சீராய்வு செய்து பொருத்தமற்றவர்களின் பெயர்களை அந்தப் பட்டியல்களிலிருந்து நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி                                                                                                        இவண்

                                                                                         

                                                                                                 முனைவர் து.ரவிக்குமார்


( இதே போன்ற கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி க்கும் அனுப்பியுள்ளேன். டிஜிபி அவர்களுக்கு இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது )

Friday, September 9, 2022

தமிழ் ஆய்வுகள் மேம்பட

 

 

 தமிழ் ஆய்வுகள் மேம்படுவதற்குத் தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் 

 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கென்று தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முக்கியமானதொரு  நடவடிக்கை குறித்துத் தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அச்சுத் தொழில்நுட்பத்தின் பரவல் காரணமாக ஒவ்வொரு நாளும் தமிழில் ஏராளமான நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அவற்றின் விவரங்களைத் தொகுத்து அட்டவணைப் படுத்துவது தமிழ் ஆய்வுகளை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு பணியாகும்.

தமிழில் வெளியான நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தும் முயற்சி 1961 ஆம் ஆண்டு துவங்கியது. வே.கண்ணையன் என்பாரை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு முதல் தொகுதி வெளியானது. 1867 முதல் 1900 வரையில் வெளியான நூல்களின் விவரப் பட்டியல்  ஐந்து பாகங்களாக வெளிவந்தன ;                            

 திரு அ.ச.ஞானசம்பந்தன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக்கொண்டு இரண்டாம் தொகுதியின்முதல் பகுதி 1965 இல் வெளியானது. 1901 முதல் 1910 வரையிலான காலத்தில் வெளியான நூல்களின் பட்டியல் அதில் இடம்பெற்றது.1931 முதல் 35 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்களின் பட்டியல் ஏழாம் தொகுதி முதல் பகுதி என 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்ககவெளியீடாக பேராசிரியர் டாக்டர் மா. நன்னன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியானது. அதன்பின்னர் தமிழ் நூல் விவர அட்டவணைத் தொகுதிகள் தொடர்ந்து வெளிவந்தனவா எனத் தெரியவில்லை.


இவ்வாறு விவர அட்டவணை வெளியிடுவதால் ஏற்படும் பயன் யாது என்பதை 1961 இல் நிதி அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். “இந்த நூல் விவர அட்டவணை நான்கு பயன்களைச் செய்யும்: முதலாவது தமிழ் மொழியில் ஒரு நூற்றாண்டில் எத்துணை நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய இது ஒரு வாய்ப்பு; இரண்டாவது ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான விஷயங்கள் பலவற்றை இந்த அட்டவணை தருகிறது; மூன்றாவது 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமானால் இந்த அட்டவணையின் பூரண பயனை அடைய முடியும்; நான்காவதாக இந்த ஒரு நூற்றாண்டில் தமிழ் மொழி, அதன் இலக்கியம், தமிழ் நூல்களுக்குப் பெயரிடும் விதம், தமிழ் நூல்களை அச்சிட்ட அச்சு எந்திர சாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியை அறியவும் இந்த அட்டவணை உதவும்”  என்று அவர் எழுதியிருக்கிறார்.
 

’1867 ஆம் ஆண்டில் தான் நூல் உரிமையைப் பதிவு செய்வதற்குரிய சட்டத்தை இந்திய அரசாங்கம் இயற்றியது. அதன் பின் புத்தக உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு நூலாசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் தமது நூல்களை அரசாங்கத்தில் பதிவு செய்து வந்துள்ளனர், 1867 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பற்பல நூல்கள் உரிமையைக் காக்கப் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட நூலின் பிரதியும் சட்டத்தில் கண்டவாறு பதிவாளருக்கு வரலாயின. இங்ஙனமாக வந்த நூற்படிகள் அரசாங்கத்தின் சென்னை ஆவணக் களரி நூலகத்தில் (Madras record office library section ) கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அவ்வகையில் சென்னை மாநிலத்தில் அச்சிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட பல்வேறு மொழி நூல்களும் இந் நூலகத்தின் கண் உள. உரிமைப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் பற்றிய குறிப்புகளை அச்சு இதழில் (gazette) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டும் வந்துள்ளனர்.

தமிழ் நூல் விவர அட்டவணை வெளியிடுவதற்கு முன்பாக ஆங்கிலத்தில் சில விவர அட்டவணைகள் வெளியாகி இருக்கின்றன. அதை இந்த விவர அட்டவணை முதல் தொகுதியின் முன்னுரையில் பதிப்பாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தத் தமிழ் நூல் விவர அட்டவனை வெளியிடும் முயற்சி எவ்வாறு தொடங்கியது என்பதையும் அவர் விவரித்து இருக்கிறார்:

" இப்பொழுது தொகுத்து வெளியிடப்பெறும் இந்த தமிழ் நூல் விவர அட்டவணை தயாரிப்பதற்கு முன்பு நிகழ்ந்த முயற்சி ஒன்றினையும் ஈண்டு குறிப்பிடுதல் 
பொருத்தமாகும். சென்னைபுத்தகாலயப் பிரச்சார சங்கத்தார் சென்னை ஆவணக் களரி நூலகத்தே உள்ள பதிவு செய்யப்பட்ட நூல்களுக்கு விபரங்கள் தொகுக்க சிலரை நியமித்து பெரும்பாலும் எழுதித் தொகுத்தனர். ஆனால் பின்னர் அவற்றை முறையாக மேற்பார்வையிட்டுப் பரிசோதித்து ஒழுங்குபடுத்தி செப்பம் செய்து வகைப்படுத்தும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் விவரம் எழுதிய சீட்டுகளை அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தாருக்கு விற்று விட்டனர். முதற்கண் அந்த சீட்டுகளைப் பெற்று விவர அட்டவணையை வெளியிடலாம் என்று கருதி அதுபற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினரைஅரசாங்கம் கேட்டது. அவர்கள் எவ்வகையான திருத்தமும் இன்றி சீட்டுகளை வெளியிடவும், திருத்தம் செய்து வெளியிடவும் செலவாகும் தொகை பற்றிய குறிப்பைக் கொடுத்தனர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால்இச்சீட்டுகளை முறைப்படுத்தி வெளியிடுவதிலும் , அவர்களுக்கு சென்னை அரசாங்கம் பழைய நூற்படிகளைக் கொடுத்து உதவுவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதனால் தனிப்பட்ட முறையில் விவரம் தயாரித்து அரசாங்க வாயிலாக வெளிப்படுத்துதல் நலம் என்று எண்ணி தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தில் அப்பணியை செய்ய அரசாங்கம் வழிவகை செய்தது. இதன் விளைவாகவே இந்த தமிழ் நூல் விவர அட்டவணை இன்று வெளிவரத் தொடங்குகிறது” என பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்..


தமிழ் நூல் விவர அட்டவணை 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி இருக்கிறது. அதே காலகட்டத்தில் தனிநாயகம் அடிகளார் அவர்கள் தமிழ் இலக்கியம், பண்பாடு குறித்துப் பிற மொழிகளில் வெளியான ஆய்வு நூல்களின் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஆசிரியராக இருந்து 
நடத்தி வந்த ’தமிழ் கல்ச்சர்’ ( Tamil Culture, Vol IX, No 4,   என்ற இதழின்  அக்டோபர் - டிசம்பர் 1961  இதழில் இது தொடர்பாக அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தத்திட்டத்துக்கு மலாயா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். தமிழ் அல்லாத பிற மொழிகளில் வெளியிடப்பெற்ற அச்சில் வெளிவந்த நூல்கள் குறித்த விவரங்களைத் தொகுப்பது அவரது நோக்கமாக இருந்துள்ளது. ஆங்கிலம்,பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களின் அட்டவணையைத்தயாரிக்க இத் திட்டத்தின் மூலம் அவர் முயன்றிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமிழ் மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நூல்களின்அட்டவணையைத் தொகுக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும்; அதுபோல தனிநாயகம் அடிகளார் அவர்கள் ஆங்கிலம் பிரெஞ்சு இத்தாலி லத்தீன் மொழிகளில் வெளியாகி இருக்கும் செவ்வியல் தமிழ் இலக்கியம் மற்றும் அகராதி இயல் குறித்த நூல்களின் பட்டியலைத் தயாரிப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் எஸ். அரசரத்தினம் தமிழ் வரலாறு தொடர்பான நூல்களின் பட்டியலைத் தொகுப்பது என்றும்; பிரஞ்சு மொழியில் வெளியாகி இருக்கும் தமிழாய்வுகள் குறித்த நூல்களின் பட்டியலை ழான் ஃபிலியோசா மற்றும் எஸ். சர்வானே ஆகியோரிடம் பெறுவது என்றும்; கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹல்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் அர்னோ லெஹ்மன் அவர்கள் ஜெர்மன் மொழியில் வெளியான தமிழ் ஆய்வு நூல்களின் பட்டியலைத்தொகுப்பதெனவும்; செக் மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை காமில் ஸ்வலபில் அவர்கள் தொகுப்பது என்றும்; ரஷ்ய மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை லெனின்கிராடைச்சேர்ந்த டாக்டர் ருடின் அவர்கள் தொகுப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி. எச். கில்லிங்லி தமிழில் வெளியாகி உள்ள கல்வெட்டியல், கலை, கட்டடக்கலை, இசை, நடனம் முதலானவை குறித்த நூல்களின்பட்டியலைத் தொகுப்பது என்றும் பொறுப்புகள் பகிரப்பட்டு , அந்த நூல் அட்டவணை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் விவரமும்எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவு நிறைவேறியது என்று தெரியவில்லை.


தமிழ் மொழியின் வளர்ச்சியை, மேம்பாட்டை மனதிற்கு கொண்டு அரும்பாடு படும் தாங்கள் 1961 இல் தொடங்கப்பட்டு 1981 ஆம் ஆண்டோடு நின்று போயிருக்கும் தமிழ் நூல் விவர அட்டவணைத் திட்டத்தை உயிர்ப்பித்து அதன்மூலம் தொடர்ந்து விவர அட்டவணைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வெளியான தொகுதிகள் தற்போது அச்சில் கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவற்றை மறு பதிப்பு செய்வதும் அவசியமாகும். அதுபோலவே, தனிநாயகம் அடிகளார் துவக்கிய திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். 

இவண்

 

முனைவர் து.ரவிக்குமார்


எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கை

                                                                                                                                                             

எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துதல் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதம் : 

வணக்கம்!  

இந்திய ஒன்றிய அரசால் மணடல் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டது எல்.இளையபெருமாள் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு ஆகும். ’Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes’  என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக  ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. பட்டியல் சாதிகளின் நலன்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் ( Central Advisory Board for Harijan Welfare) செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசு அந்தக் குழுவை அமைத்தது ( Resolution No 14//554-SCT.II Dated April 27, 1965 ) அந்தக் குழுவின் உறுப்பினர்களோடு அவர்  இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து பட்டியல் சாதிகள், பழங்குடி மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் அடங்கிய 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையை  1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இந்திய ஒன்றிய அரசில், சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த திரு பி.கோவிந்த மேனன் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

 

இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை, அதை செயல்படுத்தவுமில்லை. ஆனால், அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் சிறப்புவாய்ந்த  சட்டம் ஒன்றை 1970 ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அதை எதிர்த்து அர்ச்சகர்கள்,மடாதிபதிகள் சார்பில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதித்துறை வரலாற்றில் ’சேஷம்மாள் மற்றும் இதரர் எதிர் தமிழக அரசு’ என அந்த வழக்கு அறியப்படுகிறது. சேஷம்மாள் வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ’இளையபெருமாள் கமிட்டியின்’ பரிந்துரையின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது மேலான பார்வைக்காக அதை கீழே தந்திருக்கிறேன்:

 

”The Principal Act of 1959 was amended in certain respects by the Amendment Act of 1970 which came into, force on January 8, 1971. Amendments were made to sections 55, 56 and 116 of the Principal Act and some consequential provisions were made in view of those amendments. The Amendment Act was enacted as a step towards social reform on the recommendation of the Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes.


The Statement of Objects and Reasons which are reiterated in the counter-affidavit filed on behalf of the State of Tamil Nadu is as follows :

 

"In the year 1969 the committee on untouchability, Economic and Educational

Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary priesthood in the Hindu Society should be abolished, that the system can be replaced by an ecclesiastical Organisation of men possessing the requisite educational qualifications who may be trained in recognised institutions in priesthood and that the line should be open to all candidates irrespective of caste, creed or race. In Tamil Nadu, Archakas, Gurukkals and Poojaries are all Ulthurai servants in Hindu temples.

 

 The duties of Ulthurai servants relate mainly to the performance of poojas, rituals and other services to the deity, the recitation of mantras, vedas, prabandas, the varams and similar invocations and the performance of duties connected with such performance and recitations. Sections 55 and 56 of the Tamil Nadu Hindu Religious and Charitable, Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959) provide for appointment of office holders and servants in the religious institutions by the trustees by applying the rule of hereditary succession also. As a step towards social reform Hindu temples have already been thrown open to all Hindus irrespective of caste.......”.

 

In the light of the recommendations of the Committee and in view of the decision of this Court in Gazula Dasaratha Rama Rao v. State of Andhra Pradesh & Ors.(1) and also as a further step towards social reform the Government considered that the here- ditary principle of appointment of all office holders in the Hindu temples should be abolished and accordingly it proposed to amend sections 55,56 and 116 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Tamil Nadu

Act XXII of 1959).”

சனாதனவாதிகள் ஏற்படுத்திய தடைகளையெல்லாம் தகர்க்கும் விதமாக ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆவதற்கு வகைசெய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இந்தத் தீர்ப்பு இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரைகள் பல இப்போதும் பொருந்தக்கூடியவை தான் என்பதை உணர்த்துகிறது.

 

இந்தச் சூழலில் இளையபெருமாள் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பொருத்தமான, மாநில அரசால் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள் எவையெவை எனக் கண்டறிந்து அவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் தாங்கள் முன்வர வேண்டுமெனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிறந்த திரு எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ’இளையபெருமாள் கமிட்டி’ அறிக்கையை செயல்படுத்துவது அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிட மக்களுக்குச் செய்யும் பேருதவியாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகநீதி சாதனைகளில் ஒன்றாகவும் அமையும்.

- ரவிக்குமார் 



 

நன்றி                                                                                                                                                                                                                  இவண்

 

முனைவர் து.ரவிக்குமார்

Tuesday, September 6, 2022

1947 இன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்




இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல. ஆனால் அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட அனுபவங்களைப் பின்புலமாகக் கொண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை ஆராய்கிறது இந்த நூல். 


இதில்  இருக்கும் மன்மோகன் சிங் குறித்த ஒரு சிறிய கட்டுரை அவரைப்பற்றி அளப்பரிய மரியாதையை உருவாக்குகிறது. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டே படித்த மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக உயர்வதற்கு இடையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் என்பது மிக சுருக்கமாக இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நினைவு தெரியாத சிறுவயதிலேயே  அம்மாவை இழந்த அவரை அவரது தாத்தா , பாட்டிதான் வளர்க்கிறார்கள். நாட்டுப் பிரிவினையின்போது மூர்க்கமான மதவெறி வன்முறைக்கு அவரது தாத்தா பலியாகிறார். மன்மோகன் சிங்கின் அத்தையும் அவருடைய அம்மாவும் மதவெறி வன்முறைக் கும்பலிடமிருந்து தங்களது கற்பைக் காத்துக்கொள்ள தீக்குளித்துத் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். அவரது அப்பா பாகிஸ்தானில் இருந்த தொழிலையும், சொத்துக்களையும்  இழந்து நிர்க்கதியாக இந்தியா திரும்பி மளிகைக் கடை ஆரம்பித்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதைப் படிக்கும்போது மனம் கசிகிறது. 


வறுமையும் துயரமும் அலைக்கழித்த குடும்பப் பின்னணியில் கல்வி ஒன்றே மன்மோகன் சிங்கைக் காப்பாற்றி கரைசேர்த்து இருக்கிறது. மன்மோகன் சிங்கின் திறமையை உணர்ந்த அவரது ஆசிரியர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு ஊக்குவித்து அவர் அங்கே சேர்வதற்குக் காரணமாக அமைகிறார்.  அங்கு படிக்கும் போதும் அப்பாவிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யக்கூடாது என பல முறை அவர் பட்டினியாகவே இருந்திருக்கிறார். 


இந்த நூலில் ஜின்னா பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் ஜின்னா மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.  பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு இன்றைய பாகிஸ்தானின் ஆட்சியாளர்களால் எப்படி சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணரும் போது,  நேருவின் லட்சியங்களையும் இன்று இந்தியாவில் அவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் கதியையும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. 


இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது கொண்டாடப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். ‘ புல்புல் பறவைகளில் ஏறி பறந்தவரைப் பற்றியும், முதலைக்குட்டியைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுசென்ற சிறுவனைப் பற்றியும் படித்து திகைத்துப் போயிருக்கும் மாணவர்கள் இந்த நூலில் உள்ள கதைகளைத் தெரிந்துகொண்டால் சுயநினைவு பெறுவார்கள்.


- ரவிக்குமார்

ஜேஎன்யு வில் தமிழ்த்துறை

 ஜே என் யுவில் தமிழ்த்துறை 


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU)  தமிழ்த்துறை அமைப்பதற்காக நானும் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்ற துணைவேந்தர் சாந்திஶ்ரீ பண்டிட் அவர்களுக்கும்,10 கோடி நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் , விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கைகளை எடுத்த பேராசிரியர் அறவேந்தன் (எ) தாமோதரனுக்கும் நன்றி 🙏🏿🙏🏿



நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

 மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்

‘நிகரி சமத்துவ ஆசிரியர் விருது ’

=============

 

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணத்தால் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020, 2021 ஆண்டுகளுக்கான விருதுகளும்; 2022 ஆம் ஆண்டுக்கான விருதும் இப்போது அறிவிக்கப்படுகின்றன. 

 

2020 ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு. க.பாரி , அரசு மேல்நிலைப்பள்ளி, விராட்டிக்குப்பம்

கல்லூரி பேராசிரியர் - திருமதி இரா.தமிழரசி சற்குணம், அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆட்டுப்பாக்கம், ராணிப்பேட்டை

 

2021 ஆம் ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு சு.அருணகிரி, அரசு உயர்நிலைப்பள்ளி, சென்னகுணம்

கல்லூரி பேராசிரியர் - முனைவர் இரா.செங்கொடி , சர் தியாகராயா கலைக்கல்லூரி, சென்னை

 

2022 ஆம் ஆண்டுக்கு 

பள்ளி ஆசிரியர் - திருமதி கே.வி.ஜெயஸ்ரீ , அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோயிலூர்

கல்லூரி பேராசிரியர் - திரு த. ரமேஷ் , அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்

 

 

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

 

2019 ஆம் ஆண்டுக்கான விருது தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு அ.அன்சார் அலி அவர்களுக்கும்; தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, முதல்வர் முனைவர் வெ.செந்தமிழ்ச் செல்வி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

 

2018 ஆம் ஆண்டு விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இரா.மோகனசுந்தரம்; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் வரலாறு மற்றும்கடல்சார்தொல்லியல் துறையின் பேராசிரியர் சு.இராசவேலு ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2017 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் திரு அறவேந்தன், நெல்லை மாவட்டம் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய  பள்ளி ஆசிரியர் இளங்கோ கண்ணன் ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2016 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி ந.சாந்தி ; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு சா.உதயசூரியன் ஆகியோர் விருதுபெற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை இராமச்சந்திரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2015 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை க.பாஸ்கரன் விருதுகளை வழங்கினார். 

 

2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும்; கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப் பள்ளியின் முதல்வர்  'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். கல்வி உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணி விருதுகளை வழங்கினார். 

 

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் ,  கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். கல்வியாளரும் ,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கினார்.

 


முனைவர் து.ரவிக்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர்

ஆசிரியர், மணற்கேணி ஆய்விதழ்

Sunday, May 19, 2019

மீளும் வரலாறு

நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை.  நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும்.  தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள்.  டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள்.  அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்.  உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு.  அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும்.  அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும்.  அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன்.  "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன்.  தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும்.  அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை.  எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம்.  என்னுடைய உறவினர் கலியபெருமாள் என்பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார்.  வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள்.  அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன்.  சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம்.  அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான்.  அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.  சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன.  அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும்.  சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன்.  தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது. 

தமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது.  தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.  அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார்.  2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன்.  பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.  அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது.  அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.  நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம்.  ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை.  அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன்.  அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார்.  ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது.  நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு.  அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று

அதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார்.   உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை.  உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.
( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )

உலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன்



தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புதிய சிந்தனைகளை, கோட்பாடுகளை, அரிய நிகழ்வுகளை, ஆளுமைகளைத் தமிழ் வாசகருக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இன்னொன்று அனைவரும் அறிந்த (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்கிற) விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரவிக்குமாரின் எழுத்துக்களில் இந்த இரட்டை அம்சத்தைத் தவறாமல் பார்க்க முடியும். ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும் என்னும் இந்த நூல் அதற்கான சிறந்த உதாரணம்

இலக்கியம், திரைப்படம், உள்ளூர் அரசியல், சர்வதேச அரசியல், பயங்கரவாதம், உடல் நலம், பெண்களின் வாழ்நிலைசூழியல், காட்சி ஊடகங்கள், தொல்லியல், பொருளாதாரம், தகவல் பெருக்கம்சாதிப் பெரும்பான்மைவாதம், ஈழப் பிரச்சனை, ரஜினியின் அரசியல் எனப் பல விஷயங்களைப் பற்றியும் ரவிக்குமார் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். எந்த விஷயத்தையும் பிறர் கண்ணுக்குப் படாத அலாதியான ஒரு கோணத்தில் பார்ப்பதும், விரிவான பின்புலத்தில் வைத்து அதை அலசுவதும் ரவிக்குமாரின் அணுகுமுறை. அறிவியல், உளவியல், இலக்கியம் முதலான துறைகள் சார்ந்த பார்வைகளின் துணையுடன் எதையும் நுணுகி ஆராய்வது அவருடைய தனித்தன்மை. 
ரஜினிகாந்த் சொன்ன பாபா கதையையும் புதுமைப்பித்தன் எழுதிய உபதேசம் கதையையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை இத்தகைய நுட்பமான அணுகுமுறைக்கான சிறந்த உதாரணம், குஷ்புவின் ‘கவர்ச்சி’  குறித்த அலசல் இன்னொரு உதாரணம். இவற்றை அலசும் அவர், தேர்ந்துகொண்ட பொருளின் வரையெல்லைகளுக்குள் நிற்காமல் அவற்றை வாழ்வின் விரிந்த பரப்புக்கு எடுத்துச்சென்று அலசுகிறார். இதன் மூலம் மேற்பரப்பில் தெரியாத பல விஷயங்களை உணர்த்துகிறார். ஒசாமா பின் லேடன் கொலையை முன்னிட்டு எழுதும்போது அமெரிக்காபிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும்பயங்கரவாதத்தின்கருத்தியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம் என்பதை அவர் நிறுவும் விதமும் இத்தகையதுதான். அசல் சிந்தனையாளரின் பண்பு இது. 
அணு உலை, மாவோயிஸ்டுகளின் வன்முறை, பேட்ட திரைப்படம், கூகுளைசேஷன், ஈழத்து நிலவரம், தொல்லியல், மொழி, குரு வணக்கம், காட்சி ஊடகங்கள், தொழில்நுட்பத்தின் ஆபத்து, கனவுகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய பயணம் நிகழ்வதைக் கானலாம். 
கட்டுரைக்கான பொருள் என்பது சிலருக்குக் கட்டுரையின் கருவாகவும் மையமாகவும் இருக்கும். ரவிக்குமாருக்கோ அது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அதை முன்னிட்டு அரசியல், தத்துவம் வாழ்வியல் எனப் பல்வேறு அம்சங்களையும் தழுவி விரிவது அவருடைய அறிவுசார் பயணத்தின்  இயல்பு. 
அத்தகைய பயணத்தின் தடங்களை அழுத்தமாகக் கொண்ட இந்தத் தொகுப்பு நம்மையும் அத்தகைய பயணத்தை மேற்கொள்ளச் உதவக்கூடியது. இந்தக் கட்டுரைகளைக் கவனமாகப் படிக்கும் யாரும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிட முடியாது. இந்த நூலின் ஆகப் பெரிய பலன் இதுதான்.

( ‘ ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை ) 

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்…

ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளிழுக்க எதைச் செய்யவும் தயங்காத திரையிசைப் பாடல்கள். இலக்கிய வடிவங்களில் கதை, கவிதை போல கட்டுரைக்கும் பிரதான இடமுண்டு. கட்டுரையின் வகைமைகளில் ஒன்றான பத்தி எழுத்தின் சாத்தியங்களோ நாளும் பொழுதும் வளர்ந்துகொண்டே இருப்பது. ஆய்வு, பத்தி என்று இருவகை எழுத்துமே ரவிக்குமாருக்கு இயல்பாக கைவருகிறது. 

கடைசியாய் நான் படித்த ரவிக்குமாரின் புத்தகம், ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’. கல்விப் புல ஆய்வு முறைமைகளின் அடியொற்றி அத்துறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு அது. ‘ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ அதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பத்தி எழுத்துக்குரிய சுதந்திரத்தையும், அது அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யத்தையும் அனுபவித்து மகிழ முடிகிறது. கோட்பாட்டு விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருவர் இறுக்கமான மொழிநடைக்குள் உறைந்துபோய்விடாமல், நாம் பார்க்கும் சினிமாவை, நாம் ரசிக்கும் நடிகர்களை, நாம் தினந்தோறும் கடந்துபோகும் நிகழ்வுகளை முற்றிலும் வேறு கோணங்களிலிருந்து அணுகுகிறார், அதற்கான காரணங்களை நமக்குப் புரியும் மொழியில் எழுதுகிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் சிறப்பு. 

ரஜினியின் நடிப்புத் திறமையை வியந்து, அவர் சொன்ன அபத்தக் கதைகளைப் பரிகசித்து, அங்கிருந்து புதுமைப்பித்தனின் உபதேசம் கதைக்குப் போய், நவீன மருத்துவ வரலாற்றில் சஞ்சரித்து, மாந்தரீக எதார்த்தவாத அழகியல் பேசி மீண்டும் ரஜினிக்கே திரும்பிவந்து முடிகிறது கட்டுரை. ஒரு நான்கு பக்கக் கட்டுரைக்குள் நடப்புச் செய்திகள், இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று வெவ்வேறு துறைகளுக்கிடையில் பயணம். இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைப் போல சரணங்களுக்கு இடையில் எங்கெங்கோ பயணித்துவிட்டு, தொடங்கிய இடத்துக்குத் திரும்பிவருகிறார் ரவிக்குமார். வாசிப்பு ஒரு குதூகலமாகவே மாறுகிறது.

ஆடி மாத தள்ளுபடியிலிருந்து கிராமத்து அப்பாவியின் கதைக்குப் போய் அங்கிருந்து ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மையை நினைவுபடுத்தி இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை, அதை விமர்சிப்பதில் உள்ள அப்பாவித்தனமான மனோநிலையை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. ஆமி வைன் ஹவுஸின் மரணத்தில் பாப் மார்லியை நினைவுகூர்ந்து அவன் பாடிய காதலுக்குப் பின்னாலிருந்த சமூக நிலையைப் பேசுகிறது இன்னொரு கட்டுரை. 

சொற்பிறப்பியல், பண்பாட்டு அரசியல், பொருளாதாரம், உளவியல், தொல்லியல், கல்வெட்டியல், மருத்துவம், கலை இலக்கியம் என்று துறைவிட்டு துறை தாவும் வினோதங்கள் வெகு இயல்பாய் நடந்திருக்கின்றன இக்கட்டுரைகளில். நினைவுகள், நகைச்சுவைகள், உவமைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக அறிமுகங்கள், வாசகர்களுடனான நேரடி உரையாடல்கள் என்று வாய்ப்புள்ள அனைத்தையும் தன்வயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ழாக் தெரிதா, ஸ்லாவோஸ் சிசேக், சிக்மண்ட் ஃபிராய்டு, ழான் போத்ரியா, அஸ்கோ பர்போலோ, டேவிட் ஷுல்மேன், பியர் பூர்தியூ என்று ஏகப்பட்ட அறிவாளுமைகள் பொருத்தமான இடங்களில் தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே வாய்திறக்கிறார்கள். மேற்கோள் என்பது படித்ததைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, பேசுகிற விஷயத்தின் மீது ஒரு அழுத்தமான பார்வையை உருவாக்குவதற்காகத்தான். ரவிக்குமார் அதற்கு ஒரு உதாரணமாகவே இருக்கிறார். 

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நமது சமகாலத்தின் முதன்மையான அறிவாளுமைகளில் ஒருவரான ஸ்லாவோஸ் சிசேக்கையும்கூட ரவிக்குமார் போன்று ஒரு சிலரே பேசுகிறார்கள் என்பதுதான் தமிழின் நிலை. ஸ்லாவோஸ் சிசேக் தனது கட்டுரைகளில் ஆல்பர்ட் ஹிட்சாக்கின் திரைப்படக் காட்சிகளிலிருந்து லக்கானின் உளப் பகுப்பாய்வைப் பற்றி பேசுவதுபோல ரவிக்குமாரும் தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளிலிருந்து சமூகப் பகுப்பாய்வை நோக்கி நகர்கிறார். பதினாறு வயதினிலே படத்திலிருந்து தொடங்கி முன்கூட்டியே பூப்படையும் பிரச்சினையையும் கருவாய்ப் புற்றுநோய்ப் பரவலையும் கவனப்படுத்துகிறார். குண்டுவெடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளிலிருந்து தொடங்கி இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பின் பின்னாலிருக்கும் நோக்கத்தைச் சுட்டுகிறார். குஷ்புவிலிருந்து தொடங்கி உடற்கூறு சார்ந்த உளவியலையும் உடைசார்ந்த பண்பாட்டு நிலைகளையும் பேசுகிறார். கவுண்டமணியிலிருந்து தொடங்கி இந்தியாவின் சுகாதாரச் சவால்களை விவரிக்கிறார். 
அரசியலை மட்டுமல்ல, அறிவியலையும்கூட பத்தி எழுத்தால் சுவை கூட்டலாம் என்பதற்கு இத்தொகுப்பின் ‘கனவு எந்திரம்’ ஒரு உதாரணம். காட்சி ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கவிஞர் கே.சச்சிதானந்தம், வரலாற்றறிஞர் கா.ராஜன், அணு விஞ்ஞானி மேக்நாத் சாஹா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம், பயங்கரவாதத்துக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கும் இடையிலான வேறுபாடு, குரு உத்சவ், இந்தித் திணிப்பு, சிறைவாசிகளின் உரிமைகள் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே தங்களது பேசுபொருளால் முழுவதும் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 

ஈழப் பிரச்சினைகளையும் போர் அவலங்களையும் குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வைகளைப் பேசுகின்றன சில கட்டுரைகள். எல்லோரும் ஈழத் தமிழர்களைக் கைவிட்டுவிட்ட நிலை. “சொற்களில் சிந்திய ரத்தம் மட்டும்தான் பிசுபிசுப்போடு இருக்கிறது. அதைத் தொட்டுணர விழையின் பிம்பங்களை விடுத்து ஈழத்துப் படைப்பிலக்கியங்களை நோக்கிச் செல்லுங்கள்” என்கிறார் ரவிக்குமார். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஷோபாசக்தி ஆகியோரின் படைப்புகளைப் பற்றிய விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது அவரது முந்தைய தொகுப்பான ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’.

அகராதியைப் போல ரஜினியில் தொடங்கி ரஜினியில் வந்து முடிகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பு, கவன ஈர்ப்புக்காக மட்டுமில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதம் என்பது தொடங்கி போராட்டங்கள், காவல் துறை தொடர்பாக அவர் யாருடைய குரலை எதிரொலிக்கிறார் என்பதையும் பேசுகின்றன இறுதிக் கட்டுரைகள்.  ‘எந்திரன்’ போலவே ‘பேட்ட’யும் எங்கெங்கு சொதப்பிவிட்டது என்பதையும் ஒரு ரசிகராக பகிர்ந்துகொள்கிறார். நல்ல நடிகர், திரைப்படத்தில் அவருக்குக் கிடைப்பதோ மோசமான வாய்ப்புகள், அரசியலில் கிடைத்திருப்பதோ அபாயகரமான வாய்ப்பு. 

மொத்தத்தில், தமிழின் பத்தி எழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு இது. பத்தி எழுத்தைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களின் பங்களிப்பு செய்தி விமர்சனங்களிலேயே முடிந்துபோகிறது என்றால், மொழிநடை கைவரப்பெற்ற எழுத்தாளப் பெருந்தகைகளுக்கோ சொல்வதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை. வறண்டுகிடக்கும் பாலைவனத்தின் ஊற்று இத்தொகுப்பு. நீர்நிலைகள் பெருகட்டும். 

Tuesday, November 6, 2018

96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்


சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்ட 96 திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தேன். காதல்
நிறைவேறாமல் போவதற்கு சாதி, மதம், வர்க்கம் என்பவைதான் காரணம் என்பதாக ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த தர்க்கமும் இல்லாமல்கூட அது நடக்கலாம் எனச் சொல்கிறது இந்தப் படம்.

எந்தக் காரணமும் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிற காதலர்கள்
22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், போராட்டங்களும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. விரும்பியிருந்தால் கடந்திருக்கக்கூடிய எல்லைகள், நினைத்திருந்தால் விலக்கியிருக்கக்கூடிய மனத்திரைகள்- ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கதாநாயகனின் உறுதி கதாநாயகிக்கு மீள முடியா குற்ற உணர்வை உண்டாக்குகிறது. அவள் அதை கற்பனையில் கடக்க முயற்சிக்கிறாள். யதார்த்தத்தில் தவறிய நிகழ்வை கற்பனைக்குள் நேர்செய்து தன்னை அவனது காதல் மனைவியாக சொல்லிக்கொள்கிறாள். ஆனால் எல்லாம் ஒரு கணம்தான். அவனுக்கு கடந்தகால நினைவுகள் ஒரு பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவளோ எஞ்சிய காலத்தை கிளறப்பட்ட புண் போன்ற நினைவுகளோடு வாழ சபிக்கப்படுகிறாள். இது தோற்றுப்போன காதலில் மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. மனித மனம் அளக்கவே முடியாத ஆழங்களைக்கொண்டது. அதற்குள் எத்தனையோ நிலவறைகள், ஒவ்வொன்றிலும் இந்தக் கதாநாயகன் வைத்திருப்பதைப்போல எத்தனையோ பெட்டிகள்.

கதைக்கு நடுவில் தனது கணவர் இறந்துவிட்டதாகவோ, விவாகரத்து ஆகிவிட்டதாகவோ நாயகி சொல்லிவிடமாட்டாரா என எதிர்பார்க்கிறோம். அந்த அளவுக்கு களங்கமற்றதாக தீவிரமானதாக நாயகனின் காதல் இருக்கிறது.
படத்தின் இறுதியில் த்ரிஷா ஊருக்குப் போகாமல் தங்கிவிடுவாரோ என்று பார்வையாளர்களை அலைபாயச் செய்திருக்கிறார் இயக்குனர். எதிர்பார்க்கும் இத்தகைய நிகழ்வு எதுவும் இல்லாமல் முடித்திருப்பது மனதை கனக்கச் செய்கிறது.

நாயகி சாப்பிட்டு எஞ்சிய உணவை நாயகன் உண்பது; அவனது சட்டையின் வாசனையை நாயகி
ஆழ முகர்ந்து தேக்கிகொள்வது போன்றவை அவர்களுக்குள் ததும்பிக்கொண்டிருக்கும் பாலியல் விழைவுகளை சுட்டுவதாக இருந்தாலும் ஒரு இடத்திலும் ‘பிசகாமல்’ கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். பள்ளிப் பருவக் காதலைக்கூட பாலியல் மீறல்கள் இல்லாமல் காட்டமுடியாது என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் அதையும்கூட நெருடல் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

த்ரிஷா மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிந்த திறமையான நடிகை என்பதை இந்தப் படத்திலும் மெய்ப்பித்திருக்கிறார். அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் நினைவில் வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை.

விஜய் சேதுபதியின் பாத்திரம் பார்வையாளர்களின் இரக்கத்தைக் கோருவதாக அமைக்கப்பட்டிருப்பதால் அவர் சிரமப்படாமலே நன்றாக நடித்திருக்கிறார் என்ற பாராட்டு கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர் இதில் அவ்வளவு திறமையாக நடிக்கவில்லை என்பது என் கருத்து. இதே மாதிரி சிச்சுவேஷனில்  ஜானி திரைப்படத்தில் ரஜினி பின்னி எடுத்திருப்பார். அவரது உருவமும் முகத்தோற்றமும் அதற்கு பிரமாதமாக ஒத்துழைத்திருக்கும்.

இம்மாதிரி படங்களுக்கு இசை ஒரு பலம். அது ஜானி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு படங்களுக்கும் வாய்த்திருந்தது.

அவதாரம் படத்தின் பாடல் வரிகள் பொருத்தமான முறையில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளையராஜா  இசையின் மயக்கத்திலிருந்து தமிழ் இளைஞர்கள் விடுபடாதிருந்த காலம்தான் அது. இன்னும்கூட அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

கதாநாயகியைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நாயகன் அவளது காதலை அறிந்துகொள்ளவில்லை என்பதும், கல்லூரிக்குப் போய் கேட்டதோடு  அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையென முடிவெடுத்து விலகிக்கொண்டு தூர இருந்தே ஆராதித்துக்கொண்டிருந்தான் என்பதும் கதையின் பலவீனமான அம்சங்கள். ஆனால் அதைக் கவனிக்கமுடியாதபடி காட்சிகள் நகர்கின்றன. ஒரே இரவில் நடக்கும் கதை என்பது படத்தின் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

யதார்த்தம் என்கிற பெயரில் பாதி நேரம் மதுக் கடைகளிலேயே எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் , தமிழ்நாட்டில் ரௌடிகள் மட்டும்தான் வாழ்கிறார்களோ என்று எண்ணதோன்றுகிற படங்களுக்கு நடுவில்
நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்தப் படம். அதற்காக இந்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

Tuesday, October 30, 2018

மொழி - நிலம் - புலப்பெயர்வு - ரவிக்குமார்



மொழிவாரி மாநிலம் உருவான நாள் - நவம்பர் 1.  அம்பேத்கர் மொழிவாரிமாநிலம் குறித்து பேசியவற்றை இந்த நாளில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கும் நிலையான ஆட்சி நடப்பதற்கும் ஒரு மொழி ஒரு மாநிலம் என இருப்பது நல்லது என அம்பேத்கர் தெரிவித்தார். பல மொழிகள் பேசப்படும் நாடுகள் உள்ளனவே என சிலர் கூறக்கூடும் அத்தகைய நாடுகளின் அடிப்படைக்கருத்தாக்கம் இணைப்பு என்பதாக இருக்கும்போது இந்தியாவின் அடிப்படை கருத்தாக்கம் பிளவு படுத்துதல் என்பதாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். அவர் இந்தியாவிலிருக்கும் சாதி அமைப்பைத்தான் அர்த்தப்படுத்தினார் என்பது வெளிப்படை. மொழியின் அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்படும்போது அதன் ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தின் மொழி இருக்கக்கூடாது. இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி தேவை. அது இந்தியாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்கும்வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்றார்.

மாநில மொழியே ஆட்சி மொழியாக இருந்தால் பிரிவினை உணர்வு மேலோங்கும் என்பதே அவரது அச்சம். ஒரு மாநிலத்துக்குள் பல மொழிகளைப் பேசுவோர் இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிற இன அடிப்படைவாதிகள் ஒரு நாட்டுக்குள் தம் மாநில மொழிக்கான உரிமையை வலியுறுத்தும் உரிமையை வலியுறுத்தமுடியாது என்பதே இதன் உட்கிடை.

மொழியின் அடிப்படையில் மாநிலம் என்பதைப்பற்றி விவாதிக்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனதில் மொழி, நிலம் என்ற படிமங்கள் என்ன பொருளில் தொழிற்படுகின்றன என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும். அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் கலை வெளிப்பாடுகள் குறித்து பேசும் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹேஜியா அமெரிக்க கோயில்கள் பெரும்பாலும் தென்னிந்திய கலைமரபையொட்டி கோபுர அமைப்போடு கட்டப்பட்டிருப்பதையும் கணபதி ஸ்தபதி முத்தையா ஸ்தபதி ஆகியோர் அவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மக்கள் மொழி என்பதைக் கடந்து தமது பண்பாட்டு அடையாளத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறார்களா? ஈழத் தமிழரிடையே புத்தியிர்ப்பு பெற்றுள்ள இந்து மத அடையாளத்துக்கான நியாயம் புலப்பெயர்வில் இருக்கிறதா?

Sunday, October 28, 2018

குருபூஜை அரசியல் ! - ரவிக்குமார்



குரு பூஜை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன். அரசியல் தலைவர்களும்,தமிழக அரசும் அவற்றை ஏற்று நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும்.

’குரு பூஜை அரசியல்’ ஆபத்தான பரிமாணங்களை எடுத்துவருகிறது. அதை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே நான் வலியுறுத்திவந்தேன். இப்போது அந்தக் கருத்து நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் அலட்சியம் செய்யாது என நம்புகிறேன்.

மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டவுடன் கலவரம் மூண்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்டதும் வரலாறு. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறது என்றாலும் குருபூஜைகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

இந்தியாவெங்கும் மதக் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாடு அமைதிகாத்தது. ஆனால், அண்மைக்காலமாக இங்கே சாதி வெறிப் பிரச்சாரம் அதிகரித்து பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவெறியின் பின்னால் போலியான தேசியவாதமாவது முன்வைக்கப்படுகிறது. ஆனால் சாதிவெறியோ மக்களைத் துண்டு துண்டாக்கிச் சிதறடிக்கிறது. அந்தவிதத்தில் மதவெறியைவிடவும் சாதிவெறி ஆபத்தானதாகக் கருதப்படவேண்டும்.

’நமது சட்டங்கள் தீண்டாமையைத் தான் குற்றமாக அறிவித்துள்ளன. சாதி நம்பிக்கையைத் தவறு என்று சொல்லவில்லை’ என்பது உண்மைதான். ஆனால், சாதி நம்பிக்கை என்பது சாதிப் பெருமிதமாக மாறி, சாதி வெறியாக வெளிப்படும்போது அது சமூக சமத்துவத்தை அச்சுறுத்துகிறது,  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. குருபூஜை விழாக்கள் சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும் அவை கலவரங்களுக்கு வழிவகுப்பது இதனால்தான். எனவே ஒருபுறம் சாதிப் பெருமிதத்தை ஊக்குவித்துக்கொண்டு இன்னொருபுறம் சாதிக் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்..

குருபூஜைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதும் தேவையா என தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.”இந்திய சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள், தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றியவர்கள் – அவர்களது வாழ்க்கையையும், சாதனைகளையும் தற்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு” இந்த விழாக்கள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. சுமார் ஐம்பது விழாக்கள் இப்படி தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. அந்தப் பட்டியலை சமூகரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் பாரபட்சம் வெளிப்படுமென்பது ஒருபுறமிருக்க, அரசே இப்படி விழாக்களைக் கொண்டாடுவதுதான் சாதி அமைப்புகள் குருபூஜைகளை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைகிறது. எனவே அவற்றையும் தமிழக அரசு கைவிடவேண்டும்.
( செப்டம்பர் 20 , 2013 புதிய தலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)

Friday, October 26, 2018

மீண்டும் ராஜபக்ச- இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவு? - ரவிக்குமார்



இலங்கையில் ராஜபக்ச திடீரெனப் பிரதமராகப் பதவியேற்றிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நண்பராகக் கருதப்படும் ரணில் தூக்கியெறியப்பட்டிருப்பதன் பின்னணியில் சீனாவின் கை இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அரசியலில் அண்மையில் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துவந்தன. இலங்கை அதிபர் மைத்ரி பாலாவையும் ராஜபக்சவின் சகோதரர் கொத்தப்பாயவையும் கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா திட்டமிடுகிறது என்ற ஒரு தகவலை மைத்ரியே தெரிவித்து அது தி இந்து ஆங்கில நாளேட்டால் அம்பலமானது. அந்தச் செய்தி தவறு என இலங்கை அரசு ஒருபுறம் மறுத்துக்கொண்டே மறுபுறம் அந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு போலிஸ் அதிகாரியையும் இந்தியர் ஒருவரையும் கைது செய்தது.

சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு சொந்தமான Eastern Container Terminal ஐ இந்தியாவுக்கு விற்றுவிடலாம் என ரணிலுக்கு வேண்டிய அமைச்சரான மாலிக் சமரவிக்கிரம ஒரு திட்டத்தை முன்வைத்ததாக செய்தி வெளியானது அதை மைத்ரிபாலா நிராகரித்துவிட்டதாகவும் ஶ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையில் வந்த  செய்தி குறிப்பிட்டிருந்தது. ரணில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை மகிழ்விக்க அவர் விரும்பினாரெனவும் அதை வைத்து 2020 ல் நடக்கவுள்ள தேர்தலில் இந்தியாவின் ஆதரவைத் தனக்கு உறுதிசெய்துகொள்ள முயன்றார் எனவும் அந்தச் செய்தி கூறியது. ரணிலுக்கும் மைத்ரிக்குமான உறவு நசிந்து ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதையும் அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவோடு அவர் வெற்றிபெற்றதையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும். .

இந்தச் சூழலில்தான் ராஜபக்ச பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார். இது இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் பாஜக அரசு சொதப்புகிறது என்பதற்கு இதுவொரு உதாரணம். இது தமிழ் மக்கள் பிரச்சனையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை இனிவரும் நாட்களில் நாம் அறியலாம்

Tuesday, October 23, 2018

சபரிமலை: சனாதன பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் - ரவிக்குமார்



சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களும் நவம்பர் 13க்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழிபடுவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பெண்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். 

தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள பெண்கள்’ சபரிமலை கோயிலில் 1950 க்கு முன்பு அனைத்து வயது பெண்களும் வழிபட்டதாகக் கூறியுள்ளனர். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களது மனுவில் கூறப்பட்டுள்ளது. கேரள அரசு கேரள - கொச்சி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1950ஐ இயற்றுவதற்கு முன்பு சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடவே செய்துள்ளனர். நெரிசல் அதிகமாக இருக்கும் மண்டலம், மகரவிளக்கு, விஷு ஆகிய காலங்களைத்தவிர பெண்கள் அக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர். 

திருவாங்கூர் மகாராஜாவும் மகாராணியும் திவானுடன் சென்று அங்கு வழிபட்டதற்கு ஆதாரம் உள்ளது என கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட எஸ்.மகேந்திரன் எதிர் திருவாங்கூர் தேவசம் போர்டு (1991) என்ற வழக்கில் கேரள அரசே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அது மட்டுமின்றி, ‘குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்ச்சியை சபரிமலை கோயிலில் செய்வது வழக்கம். அப்போது எல்லா வயதுப் பெண்களும் வருவார்கள். அந்த சடங்கு செய்ய கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பது வழக்கம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக
கொடிமரம் நடப்பட்டதையும், 18 படிகளில் தேங்காய் உடைத்து 
பூஜை செய்வதில் மாற்றம் செய்யப்பட்டு தேங்காய் உடைக்க தனி இடம் அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, சபரிமலை கோயில் நடைமுறைகளில் எப்படி தந்திரியின் ஆலோசனையின்படி மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதையும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. 

கால காலமாக அங்கு 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அங்கு வழிபட்டதே இல்லை எனக் கூறும் சனாதன பயங்கரவாதிகள் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஆதாரத்தோடு மறுக்க முன்வருவார்களா?

சனாதன பயங்கரவாதமும் கல்வித்துறையில் அதன் வெளிப்பாடுகளும் - ரவிக்குமார்


தோழர்களே! 

கல்விப்பிரச்சனையை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் தமிழ்நாட்டில் திண்டிவனத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. அதற்குக் காரணம் பேராசிரியர் கல்யாணி திண்டிவனத்தில் இருப்பதுதான். இன்று நேற்றல்ல 1980 களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்கள் பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் கோச்சடை போன்றவர்கள். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வீதி நாடகங்களைப் போட்டோம். என் திருமணத்திலேயேகூட அந்த நாடகத்தை நடத்தினோம். பேராசிரியர் கோ. கேசவன் அருமையான விமர்சன நூலை எழுதினார். கல்வி தனியார் மயமாவதால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என அப்போது நாங்கள் என்னவெல்லாம் சொல்லி எச்சரித்தோமோ  அதெல்லாம் இப்போது நடக்கின்றன. 

 ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் சொன்னவரே கல்யாணிதான். அப்படி வைத்தால்தான் ப்ளஸ் டூ படிப்பில் இரண்டு ஆண்டுகளிலும் ஒரே பாடத்தை நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மோசடியைத் தடுக்கமுடியும் என அவர்தான் எங்களுக்கு எடுத்துக்கூறினார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த கோரிக்கையை சட்டமன்றத்திலும் எழுப்பினேன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு தங்கம் தென்னரசு அவர்களிடமும் வலியுறுத்தினேன். திரு செங்கோட்டையன் கல்வி அமைச்சராக வந்தபிறகு நல்வாய்ப்பாக திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அங்கு செயலாளராக இருந்தார். பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை அவர்கள் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் கல்யாணியை, என்னை இன்னும் பல கல்வியாளர்களை அழைத்து அவர் கருத்துகளைக் கேட்டார். நான் என் கருத்துகளை எழுத்து வடிவில் கொடுத்தேன். அப்போது ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்பதை கல்யாணி வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு எனத் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான காரணங்களை விரிவாக விளக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. 
ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக இப்போது அதை நீர்த்துப்போகச்செய்யும்விதமாக இன்னொரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அதை எதிர்த்துதான் இங்கு கூடியிருக்கிறோம். 

ப்ளஸ் டூ படிப்பில் 
இரண்டாம் ஆண்டுக்கான பாடத்தையே இரண்டு ஆண்டுகளும் நடத்தி நூறு சதவீத வெற்றி , அதிக மதிப்பெண் என்று தனியார் பள்ளிகள் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்படி வெற்றிபெறும் தனியார் பள்ளி மாணவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். ப்ளஸ் ஒன் பாடங்கள் சரியாக போதிக்கப்படாததால் தொழிற்கல்வியில் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் தோல்வி அடைய நேரிடுகிறது. இது தனியார் பள்ளிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்களுக்கு லாபம் சேர்ப்பது மட்டுமல்ல உயர்கல்வியின் தரத்தையும் சீரழிக்கிறது. 

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைபாட்டை அரசு மாற்றக்கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இப்படியான மாநாடுகளை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாம் நடத்தவேண்டும். தொடர்ந்து போராடினால் நிச்சயம் நமது கோரிக்கையில் நாம் வெற்றிபெறுவோம். அரசு தனது நிலைபாட்டை சரிசெய்துகொள்ளவில்கையென்றால் நாம் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெற முடியும். அரசு வெளியிட்ட அரசாணையே அதற்கு உதவியாக இருக்கும். 

மேனிலைக் கல்வியென்பது பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் இணைக்கும் பாலம். அது சரியாக இல்லாவிட்டால் உயர்கல்வி பாதிக்கப்படும். இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அந்த வளர்ச்சி தரத்தில் இல்லை. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் பேர் பிஎச்டி பட்டம் பெறுகிறார்கள். அதிலும்கூட தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். ஆனால் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த அவலநிலைக்குக் காரணங்களில் ஒன்று ப்ளஸ் டூ படிப்பை நாம் பள்ளிக் கல்வியின் அங்கமாக வைத்திருப்பது ஆகும். புதிய கல்விக்கொள்கை அறிமுகமானபோது ப்ளஸ் டூ படிப்பை கல்லூரியின் அங்கமாக வைப்பதா அல்லது பள்ளியின் அங்கமாக வைப்பதா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவை ப்ளஸ் டூவை கல்லூரிப் படிப்பின் அங்கமாக மாற்றி ஜூனியர் காலேஜ்களை உருவாக்கின. ஆனால் இங்கிருந்த ஆசிரியர்களின் வற்புறுத்தலால் தமிழ்நாட்டில் மட்டும் பள்ளிக் கல்வியின் அங்கமாக அது வைக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாகத்தான் பியுசி இருந்தது. ஆனால் ப்ளஸ் டூ படிப்பு பள்ளிக்கல்வியின் பகுதியாக  ஆக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாக இருந்திருந்தால் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களின் தரமும் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு 
இங்கே பாழடிக்கப்பட்டது. மேனிலைக் கல்வியில் சரியான அடித்தளம் இடப்படாததால் உயர்கல்வியும் தரமற்றதாக உள்ளது. எனவே பள்ளிக்கல்வி குறித்து நாம் காட்டுகிற அக்கறை உயர்கல்வி குறித்ததும்தான். அவற்றுக்கிடையிலான உள் இணைப்புகளை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மக்கள் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டபோது பாவ்லோ ஃப்ரேய்ரின் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி என்ற நூலை முன்வைத்து நாம் விவாதித்தோம். அவர் வலியுறுத்திய ஜனநாயகத்தை கல்வியில் மட்டுமின்றி அரசியல் இயக்கச் செயல்பாடுகளிலும் சோதித்துப் பார்த்தோம். கூட்டங்கள் நடத்தியபோது மேடை அமைத்து எதிரில் மற்றவர்கள் உட்கார்ந்தால் அதிகார படிநிலை உருவாகும் என்பதால் வட்டமாக அமர்ந்து விவாதித்தோம். கட்சியின் முன்னணிப் பாத்திரத்தை கேள்விக்குட்படுத்தினோம். அரசு அமைப்புக்கும் கல்வி போதிக்கும் முறைக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டினோம். இப்போது அதிலிருந்து விலகிப்போய்விட்டோம். அந்த அணுகுமுறையை, விமர்சன நோக்கை புதுப்பிக்கவேண்டிய நேரம் இது. 

‘நாங்கள் சொல்வதை ஏன் என்று கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என ஒரு அரசாங்கம் ஆணையிட்டால் அதை சர்வாதிகாரம் எனச்சொல்லி உடனே எதிர்ப்பு தெரிவிக்கும் நாம், பள்ளியில் ஆசிரியர் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என நம் குழந்தைகளிடம் கூறுகிறோம்; அப்பாவை எதிர்த்துப் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வீட்டிலும் பள்ளியிலும் கேள்வி கேட்பதைத் தடைசெய்வதன்மூலம்தான் அரசாங்கத்துக்கு அடிபணிந்து செல்லும் குடிமக்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதை நாம் காணத் தவறுகிறோம். எங்கெல்லாம் கேள்விகள் அகற்றப்பட்டு மௌனம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரத்தின் கொடி பறக்கிறது என்று அர்த்தம். நாம் கல்வியைப்பற்றிப் பேசும்போது இந்த பரந்த பின்புலத்திலிருந்துதான் பேசுகிறோம். அதன் உள் இணைப்புகளைப்பற்றிய புரிதலோடுதான் பேசுகிறோம். 

ராஜிவ்காந்தி ஆட்சியின்போதுதான் திறந்த பொருளாதாரக்கொள்கை அறிமுகம் ஆனது. அதற்கு ஏற்பத்தான் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டது. ஒரு நாட்டில் உள்ள அரசின் வடிவத்துக்கும் அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்கிறது. இப்போது நாட்டை ஆளும் சனாதனிகள் தமக்கு ஏற்ற கல்வி முறையைக் கொண்டுவரப்பார்க்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முரளிமனோகர் ஜோஷி கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சியை ஆரம்பித்தார். இப்போது அது தீவிரமாகி  இருக்கிறது. பாடத் திட்டங்கள் மட்டுமல்ல உயர்கல்விக்கூடங்களான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சமூக நீதிக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள். அங்கே இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தை அடிப்படை அலகாக basic unit ஆக வைத்துதான் இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிப்பார்கள். ஆனால் மோடி அரசாங்கம் யுஜிசியின் ஒரு உத்தரவு மூலம் அதை மாற்றிவிட்டது. இப்போது ஒரு துறையை - departmentஐ அடிப்படை அலகாக ஆக்கிவிட்டார்கள். ஒரு மத்திய பல்கலைக்கழகம் இருந்தால் அதில் நூறு துறைகள் இருக்கும் அந்த நூறு துறைகளுக்கும் பேராசிரியர்கள் இருப்பார்கள். அதில் எஸ்சி பிரிவுக்கு 15 சதவீதம் எஸ்டிக்கு 71/2 சதவீதம் ஓபிசிக்கு 27 சதவீதம் என ஒதுக்க வேண்டும் என இருந்தது. ஆனால் இப்போது ஒரு துறையை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும்போது ஒரு துறையில் ஒரு பேராசிரியர் பதவிதான் பெரும்பாலும் இருக்கும். அதில் எப்படி இட ஒதுக்கீடு தர முடியும்? இனிமேல் மத்திய பல்கலைக்கழகங்களில் எந்தவொரு பேராசிரியர் பதவிக்கும் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போக முடியாது. இந்தக் கொள்கை இப்போது ஆட்சி செய்யும் சனாதனவாதிகளின் வர்ணாசிரமக் கொள்கையோடு பொருந்திப்போவதைக் கவனியுங்கள். 

யுஜிசி இப்போது இன்னும் ஒரு மோசமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான civil servants களுக்கான நடத்தை விதிகள் இனி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளை விமர்சிக்கவோ, விமர்சித்துப்பேசும் கூட்டங்களில் பங்கேற்கவோ கூடாது. அப்படிச்செய்தால் அவர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதற்கான சுற்றறிக்கை எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் போன்றவை உடனடியாக அமல்படுத்தப்போவதாகக் கூறியுள்ளன. யுஜியிடம் நிதி பெறுகின்ற அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் அது பொருந்தும் என்றுசொல்லப்பட்டிருக்கிறது. எனவே மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் அது நடைமுறைக்கு வந்துவிடும். அப்படி நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையைப்பற்றிக்கூட ஆசிரியர்கள் பேச முடியாத நிலை ஏற்படும். இது  சனாதன பயங்கரவாதத்தின் வெளிப்பாடு. அது ஏற்படுத்த விரும்பும் சர்வாதிகார ஆட்சிக்கான ஒத்திகை. 

இந்திராகாந்தி அம்மையாரைப்போல எமர்ஜென்சியை வெளிப்படையாக 
அறிவிக்காமல் ஒரு நெருக்கடிநிலையை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கும்  மோடி அரசு, இந்த நாட்டை இந்து ராச்சியம் என்று அறிவிக்காமலேயே சனாதன பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கவனித்து எதிர்ப்பு தெரிவிக்கக்கூட இப்போது எவரும் இல்லை. பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆசிரியர் சங்கங்கள்கூட வாய்மூடி மௌனம் காக்கின்றன. அரசியல் கட்சிகளும் இப்படியான பிரச்சனைகளைப் பேசுவதில்லை. எங்கு பார்த்தாலும் பயம், பயத்தால் திணிக்கப்படும் அமைதி. இதுதான் சனாதன பயங்கரவாதத்தின் வெற்றி. இது பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைவிட ஆபத்தானது. 

இங்கே நாம் பள்ளிக்கல்வியைப் பற்றிப் பேசுவதற்காகக் கூடியிருந்தாலும் உயர்கல்வியைப்பற்றியும் அக்கறைகாட்டவேண்டும். இன்று ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்படும் 
சனாதன பயங்கரவாதத்துக்கும் கல்வி முறைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் நமது போராட்டங்களை வடிவமைக்கவேண்டும். கல்வியை ஒருங்கிணைந்த முறையில் பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளைப் பேசியாகவேண்டும். அதற்கான துவக்கமாக இந்த மாநாட்டைக் கருதுகிறேன். 

நன்றி வணக்கம்

( 21.10.2018 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் )