Showing posts with label thenmozhi. Show all posts
Showing posts with label thenmozhi. Show all posts

Tuesday, April 3, 2012

Book Review : Nerkunjam By Thenmozhi




Thenmozhi is a poet and a writer of fiction. Nerkunjam
(Grain Bunch) is her first collection of stories. In
2008, a poetry collection of hers, Thuravi Nandu
(Hermit Crab) was published. Thenmozhi means honeyed language.
Thenmozhi’s style of writing certainly contains the poetic honey
of the language but the subjects she chooses to write about and
the way she tells her stories have nothing to do with the sweetness
of honey. The stories talk about lives of women and men caught in
the contradictions of everyday life and the irony of existence.
Thenmozhi says in her preface that her stories come out like
mushrooms in the rainy season; during uncertain moments in the
overflow of life. Beginning with the first story which is a monologue
of a dead woman surrounded by wailing relatives, talking to her
lover with the unusual title Kadarkol which means land getting
submerged under the sea and the second story of a farm labourer
who decides to protest against sexual harassment, again with the
deceptive poetic title Nilakudai which means mushroom, used here
as a metaphor for people who are like poisonous mushrooms and
fast spreading fungus in the society, the stage is set for eight other
very deftly narrated stories. The titles of all the stories are abstract
while the stories themselves talk of the brutal reality of life with
controlled emotion and no sentimentality. Thenmozhi has managed
to combine a heady, intoxicating style of writing with the hard
truths of life. The result is a set of ten stories that carry several
layers of meaning.

— C S Lakshmi ( Ambai )
Courtesy: Sparrow Newsletter September 2011
http://www.sparrowonline.org/downloads/SNL22-23.pdf

Friday, March 16, 2012

Interview of Thenmozhi




1. What sort of writing do you like to do? Which of your works has been appreciated the most by the literary community?

I have started my writing with poetry. Now I am doing essays, translations, book reviews and short stories. Among them I feel very comfortable in short story. The literary community also appreciated and recognized it. Mini Krishnan of Oxford University Press also appreciates my short stories. Pechi maram - one of my short stories is going to be published in an OUP anthology of Tamil Dalit writings.

2. When did you start writing? Why?

I have started writing in 1996 when I was a research scholar in Bharathidasan University, Trichirappalli. That time my family situation was not good. My mother left us due to quarrels with my father. My father was a school teacher who had a good knowledge in classical Tamil literature. Being the only child I was his daughter, student and friend. He taught me Ramayana, Cilappathikaram and poems of Bharathi. I have tried poetry to overcome my loneliness.

3. What background do you come from? Was it hard to publish your first book?

I came from a middle class semi rural semi urban dalit background. Yes I have struggled a lot to publish my works. My first book - Thuravi Nandu - was published by kalachuvadu – one of the leading publishers in Tamil, only in 2008.  

4. Where do you live?

I live in Thanjavur where I work as Asst. Commissioner in Commercial Taxes Department.

5. What themes do you like to explore in your works?

I am interested in probing the inner worlds of human lives. I am also trying to register the untold cultural elements and experiences of rural people.

6. What is the state of Tamil literature, according to you? Is there enough encouragement, enough avenues for publication?

Yes, it is encouraging. Many young writers are doing well, particularly women writers. I have struggled a lot to publish my first book. But I did not take any effort to publish my short story collection. Just I sent an unpublished short story to Ravikumar. He immediately called me and appreciated the story. Then he started a new publishing house called Manarkeni Publication to publish my book and invited Arundhati Roy to release it. I am so fortunate.

7. Who are you inspired by?

I am not inspired by anyone. But I love reading short stories of Ambai , novels of  T.Janakiraman , translations and critical writings of Ravikumar.

8. Where do you see yourself ten years from now?

I have planned to finish my first novel in 2012 and my PhD thesis before 2013. My second collection of poems ( Thinai punam ) is going to be published this year along with my second short story collection, both by Manarkeni Publication. I want to be more vibrant and visible.

9. Indira Parthasarathy  have called you 'the future of Tamil literature'. How does it feel to be honored like this? Did you see this coming?

Writer Indira Parthasarathy have mentioned it in the blurb of my short story collection. It is a great honor to a young writer like me. His trust on my writing increases my responsibility.

10. What are you working on right now? Is writing a full-time job?

No I am not a full time writer, but I write at least a paragraph daily. Right now I am working on my novel, simultaneously writing short stories, preparing papers for seminars, translating stories, doing editorial assistance in Manarkeni – a literary bi-monthly.

11. What is it about Tamil that makes such powerful expression possible?

Yes Tamil is a special language with a rich literary heritage. You can not translate everything from Tamil. I try to transcend the barrier between poetry and prose in my writing.

( This Interview was taken by Ms Shoba - a correspondent of Indian Express ) 

Tuesday, January 31, 2012

அருந்ததி ராயுடன் ஒருநாள் - தேன்மொழி







அன்பை இன்னொருவிதமாகப் புரிந்துகொள்ளவைத்தது அந்த ஒரு நாள்.  கும்பகோணத்திற்கு அருகே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழபுரம் கிராமமும் நானும் அரசன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகளும் காத்திருந்தோம்.  அந்த சின்ன கிராமத்துக்கு அப்படியொரு பிரபலம் வந்ததில்லை. வருவதற்கு காரணமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய் அங்கு வருகிறார் என்றால் யார்தான் நம்பமுடியும்? அவர் தனது நாவலில் விவரித்திருக்கும் ஆயிமெனம் கிராமத்திலிருந்து நேரடியாக வருவதுபோல மலர்ச்சியோடு இருந்தார். அவரோடு எழுத்தாளர் ரவிக்குமார் வந்திருந்தார்.  மாணவிகளும் (சட்டமன்ற உறுப்பினர்) ரவிக்குமாரிடம் மனு கொடுப்பதற்காக வந்து காத்திருந்த ராணுவத்தினரும் தங்கள் சந்தோஷத்தைக் கைதட்டி வரவேற்றுப் புதுப்பித்துக்கொண்டார்கள்.  சிறிய கூட்டம்தான் என்றாலும் கள்ளமில்லாத அன்பால் நிறைந்திருந்தது அந்த இடம்.  மணற்கேணி பதிப்பகத்தின் முதல் நூலான நெற்குஞ்சம் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா. நூலை அருந்ததிராய் வெளியிட ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.  அந்த நூலின் ஆசிரியரான எனக்குள் ஒரு சிலிர்ப்பு அடர்ந்து அடங்கியதை மறுக்க இயலவில்லை.  என் வாழ்வின் உன்னதத்  தருணங்களில் ஒன்றாகிப்போனது அது.  வெளியில் இருந்தபடி மழையும் தன் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தது.  மழைக்குள் நானும் எனக்குள் மழையும் கரைந்துகொண்டிருந்தோம்.

நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் போர் விளையாட்டை முடித்துத் தாய் செய்த புண்ணியத்தால் உயிர் பிழைத்து இன்று கண்ணுக்கெட்டாத கிராமங்களில் வாழும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரிடம் பகிர்வதற்கு எராளமாய் கண்ணீர் கதைகள் இருந்தன. அதை ரவிக்குமாரோடு அருந்ததியும் கேட்டுக்கொண்டார்.  மலையாளம், ஹிந்தி. ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் உரையாடல்... மழையும் செறுமாய்க் கலந்து கிடந்தது.  திரும்பிப் பார்க்க இயலாத எல்லைக் கோடுகளைக் கடந்து வந்த அருந்ததியுடன் மாணவிகள் கலந்துரையாடினர்.  கிராமத்தை பூக்கச் செய்யும் மாணவிகள் தங்கள் ஈரம் செறிந்த நிறத்தைக் கேள்விகளாக மாற்றிக்கொண்டனர். "மேடம் உங்களுக்கு பிடித்ததை எங்களுக்குச் சொல்லுங்களேன்" ஒரு மாணவி கேட்டாள்.  "எப்போதும் அப்போது பூத்த பூவைப்போல் சந்தோஷமாய் இரு.  அதற்காக படி, அதற்காகப் போராடு,  தானே தன்னை சந்தோஷப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு முக்கியம் வாழ்வில் இல்லை."  பதிலில் மாணவிகளுக்குள் ஒரு பூ மலர்ந்தது.  கிராமத்து கறுப்புக் காப்பியின் வாசனை எங்களிடையே நுழைந்து வந்தது.  மாணவிகள் அளித்த ரோஜா மாலையை முத்தமிட்டார் அருந்ததி.  பூவாய்ப் பிறந்து பூவாய் மடிவதைப்போல் வேறு வரம் உண்டா.  சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்லவா!

எங்களது பயணம் கீழ்வெண்மணி நோக்கித் துவங்கியது.  ரவிக்குமாரும் அருந்ததியும் நிமிடங்களை இலக்கியத்தை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.  இடைஇடையே நானும் பருகிக்கொண்டேன்.  கோவர்த்தனி ரோஜாக்களை அவருக்குப் பரிசளித்தாள்.  அவற்றை தலையில் செருகிக் கொண்டார்.  ஏற்கனவே பூச்சரம் ஒன்று தலையில் சுற்றப்பட்டிருந்தது.  என் மகளை அணைத்தபடி குனிந்து "அம்மு என் தலையைப் பார் பூந்தோட்டம்" என்றார்.   பூக்களின் காடு சிரிப்பில் ஒளிர்ந்தது.  அருந்ததியையும் ஒரு குழந்தையாக்கி இரண்டு குழந்தைகளை என் மனம் சுமந்து பெருமை கொண்டது.  நர்மதை அணைக்கட்டு போராட்டத்தில் பெண்களின் இரட்டிப்பு துன்பத்தை ஆன்மாவில் இருந்து எடுத்துப் பகிர்ந்து கொண்டார்.  ஆண் மைய உலகம் ஆண் சுதந்திரம் போன்ற எனது கேள்விகளுக்கு தனது நிகழ்கால வாழ்க்கையை பதிலாக அளித்தார்.  "எனக்கு ரவி மாதிரி மிகச் சிறந்த  நண்பர்கள் உண்டு.  பெண்ணடிமையை அதிகபட்சமாக அமல்படுத்திய பெண்களைக் கொண்ட இச்சமூகமும் பெண் அடிமைக்கு முக்கிய காரணம். பெண்களின் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்ல".  பாலினம் கடந்து பறந்து கொண்டிருக்கும் அருந்ததி, கார் சிறிது  வேகமெடுத்தாலும் பதறினார்.  திருவாரூர், கீவளூர் கடந்து தேவூர் வழியாக கீழ்வெண்மணி நோக்கிப் பயணித்தோம்.  இருமருங்கிலும் வாய்க்கால், வயல், குளம் . மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவுகளை அழித்துக்கொண்டோம்.

 வண்ணமேற்றப்படாத உலகம் காலுக்குள் உயிர்ப்பாய் கிடந்தது.  நான் வயல் நண்டுகளை கரையேறி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தேன்.  அருந்ததி நாற்றங்கால் மேற்பரப்பில் பயிர்கள் மீது பறந்து கொண்டிருந்தது தெரிந்தது.  ரவிக்குமார் கோவர்த்தனியின் கனவுகளுக்கு மீன் குஞ்சுகளைப் பரிசளித்துக்கொண்டிருந்தார்.  அருந்ததியின் கண்களில் ஆய்மெனம் மிதந்துகொண்டேயிருந்ததைப் பார்த்தேன். தான் பார்க்கும் காட்சி ஒவ்வொன்றும் அவருக்கு அந்த கிராமத்தை நினைவுபடுத்தியிருக்கவேண்டும்.  அவ்வப்போது அவரோடு நாங்களும் அங்கே சென்று திரும்பினோம். அங்கே அவரது அம்மாவையும் அவர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடத்திவரும் பள்ளியையும் மனதில் வரைந்துகொண்டோம். எனக்குள் ஒரு கிராமம் உருவானது.  அருந்ததி அதில் சிறகுமுளைத்த பெண்ணாய் எல்லோரிலும் வேறுபட்டு நின்றார்.  நினைத்தவற்றை உடனே வார்த்தைகளாய்க் கொட்டினார்.  பின் எவற்றை அவர் எழுதினார் என வியந்து பார்த்தேன். சிறிய உயிர்களின் படைப்புக் கடவுளை அவர் மொழியில் உருவாக்கியது புரிந்தது.  "God Of Small Things" உருவான விதம், புக்கர் பரிசு, பணம் எல்லாவற்றைக் குறித்தும் பேசினார்.  அவரது மனம் எதனோடும் சேராமல் ஒதுக்கப்பட்டவற்றிற்கான கடவுளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது.
மழையின் சிதைவுஎச்சங்களாய் சாலைகள் இருந்தன.  மூக்கொழுக அழுக்குச் சட்டையில் இறுக்கி வைத்திருந்த பொறி அரிசியை கொடுத்து சிறிய கறுப்பழகி ஒருத்தி கீழ்வெண்மணியில் அருந்ததியை வரவேற்றாள்.  சிகப்புத் துண்டணிந்த ஒரு பெரியவர் வாழை மொட்டை அவிழ்ப்பதுபோல்  வெண்மணியின் கோரத்தை அருந்ததியிடம் உதிர்த்துக்கொண்டிருந்தார். புதிதாய் எழுந்துகொண்டிருந்த நினைவுச் சின்னம் சாட்சியாக நின்றது.  "சீக்குப் பிடித்த சமூகம். மனநிலை சரியில்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் இல்லையா ரவி" முகத்தில் வேதனையும் வெறுப்பும் சுருக்கங்களாக மாறியது.  மேலவளவு, வெண்மணி போன்ற வக்கிரங்களின் மூலங்கள் என்னவாக இருக்கும் என்பதாக அவரது கேள்வி அலைந்தது. கீழ்வெண்மணி டிசம்பர் 25க்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தது.  இருள்சூழ நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். " இருள் கிராமங்களில் மட்டுமே இருக்கிறது. கிராமங்கள் இருளை முழுதாய் தரிசிக்கின்றன நகரங்களல்ல" என்றேன்.  அவர் அதை ஆமோதித்ததை இருட்டிலும் பார்க்க முடிந்தது.  எல்லா நிமிடங்களையும் வார்த்தைகளாலும் சப்தங்களாலும் நிரப்பிக்கொண்டிருந்தோம்.  இரவுப் பூச்சிகள் விடை கொடுத்தன.  வெண்மணியில் இருந்து திரும்பும்போது அருந்ததிக்குள் ஒரு மௌனம் அடைந்துகொண்டது.  வளர்பிறையை ரசித்தபடி திருவாரூரில் தேனீர் பருகினோம்.  கும்பகோணம் நெருங்க நெருங்க மனதைப் பிரிவுக்காய் தயார் படுத்தி வைப்பது மிகவும் வலியானதாய் இருந்தது.  சோழபுரம் நெருங்கும்போது கும்பகோணத்தில் இல்லாத அளவு பனி அடர்ந்திருந்தது.  ஒற்றை பனிக்கூட்டுக்குள் நாங்கள் வசிப்பதுபோல் இருந்தோம்.  சோழபுரம் - துவங்கிய இடத்தை தொட்டிருந்தோம்.  வார்த்தைகள் முன்பே மறந்துபோய் இருந்ததால் மௌனமாக வண்டியை விட்டு இறங்கினோம்.  அருந்ததி உடலால் என்னைத் தழுவினார்.  உணர்வுகள் பரிமாறிக்கொண்டன.  கண்களை அசைத்து விடைகொடுத்து வீட்டிற்குத் திரும்பினேன்.  பூந்தோட்டம் கண்களில் இருந்து மறைந்தது.  வீடெங்கும் இருள்,  கோவர்த்தனி கதறி அழ ஆரம்பித்தாள்.  அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்ட  அந்தக் குரல் என்னுடையது.

24.12.2009

கடந்துவரும் குரல்





விடியற்காலை கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலின் பாங்கொலி  கேட்டு விழித்துக் கொள்வோம். பெரியவர்கள் கையில் கதிர் அரிவாளுடனோ அல்லது தோளில் மாட்டிய கலப்பையுடன் ஏர் மாடுகளையும் கூட்டிக் கொண்டு வயல் வேலைக்குப் போவார்கள். குழந்தைகள் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் துவங்குவோம். பாங்கொலிக்குப் பின் சாத்தான்கள் வீதிகளில் அலையாது என்பதால் , பெண்கள் தைரியமாக வெளியே வருவார்கள். வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடுவார்கள்.  கைகளில் தூக்கி நிறுத்தும் குழந்தைகள் நகரா ஒலிக்கு பொக்கை வாயைக் காட்டிய படி நடனமாடுவார்கள். அந்த அதிகாலை வேளையில் , ஏழை முஸ்லீம் பெண்கள் சிலர் கூடையிலும் வாளியிலும் துணிகளை அள்ளிக் கொண்டு பள்ளிவாசல் குளத்திற்கு குளிக்கச் செல்வார்கள்.
எங்கள் ஊரில் இந்துக்களை விட முஸ்லிம்களே நிலம் அதிகம் வைத்திருந்தார்கள்.ஏழை, தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அவர்களிடம் பண்ணைவேலை செய்தார்கள். ஏழை முஸ்லிம்கள் பணக்கார முஸ்லீம்களை அண்டி வாழ்ந்தார்களே அன்றி , ஒரு போதும் பண்ணை வேலை செய்ததில்லை. எங்கள் வீட்டு முதல் அறுவடை நெல்லில் ஒரு மரக்காலை பள்ளிவாசல் வேண்டுதல் நிறைவேற்ற எடுத்து வைத்து விடுவோம். மூன்று நாள் சீம்பாலை  பள்ளிவாசலில் பகிர்ந்து கொடுப்போம். பொட்டுகடலை சர்க்கரை வாங்கி உடல் நலம் அடைந்ததற்காக ஃபாத்தியா ஓதுவோம். ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றவென, இரவு பள்ளி வாசல்களில் தங்குவோம்.  நாய்கடிச்சார், ரெட்டமண்டையார், கருவேப்பில வீடு, ஆனங்காச்சி வீடு, ---என பல பெயர்களில் தங்கள் முதலாளிகளை ஏழைகள் அடையாளம் கண்டு வைத்திருந்தனர்.
பிரியாணி, புலவு, தாளிச்சா, ஆனம், பிர்னி கஞ்சி, பரோட்டா ,சால்னா, இஞ்சி கொத்து பணியாரம் ,முட்டை பணியாரம், ----இன்னும் என்னென்னவோ பலகாரங்கள் எங்கள் வீடுகளிலும் உணவு வரிசையில் இடம் பிடித்தன. ஃபாரின் புடவை, ஃபாரின் தைலம், ஃபாரின் சட்டை , சாக்லேட், லிப்ஸ்டிக் என வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பிய முஸ்லீம் ஆண்களும் பெண்களும் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் இருப்பதால், ஏக்கத்தில் இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு, சங்க கால தோழி போல எங்கள் வீட்டு பெண்கள் ஆறுதலாக இருந்தார்கள். மிகமிகக்  குறைவான கல்வி அறிவுடன், மிக அதிக எழுத்துப் பிழைகளுடன் , வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு, மிக அந்தரங்கமான கடிதங்களை எங்கள் வீட்டுப் பெண்களோடு சேர்ந்து எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பொங்கலுக்கு இவர்கள் பெருமையுடன் கொண்டு செல்லும் கரும்பையும் ,வாழைப் பழங்களையும், பொங்கல் சாதத்தையும், தீபாவளி பலகாரங்களையும், கார்த்திகை அவலையும் விருப்பமுடன் விகல்பமின்றி வாங்கிக் கொள்வார்கள்.
என் அப்பாவுக்குப் பதினெட்டு வருடங்கள், முஸ்லீம் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. அப்பா மிகவும் கண்டிப்பானவர், எனினும்  அப்பாவே அந்தப் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக் கல்வி அதிகாரி வரை சென்று முஸ்லீம் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். வெளி நாடுகளில் தொழில் புரியும் முஸ்லீம் ஆண்கள் , அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், தங்கள் பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டுமென்பதற்காகவும் அதிக நிதி உதவி அளித்தார்கள். பெரும்பாலான பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தார்கள். கொடிக்கால்பாளையம் பகுதிக்கு அப்பாவைத் தவிர வேறு யாரும் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்குச்  செல்ல மாட்டார்கள். அது மிகவும் சிரமமான காரியம். திருமணமான இளம் பெண்கள் கணவர் வெளிநாடுகளில் இருப்பதால் தங்கள் வீட்டைப் பூட்டி விட்டு, தாய் வீட்டிலேயே இருப்பார்கள். கிட்டதட்ட மூன்று நான்கு தலைமுறை பெண்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். அவர்களில் குறைந்தது இரண்டு தலைமுறையினர் அப்பாவிடம் படித்தவர்களாகவும், இளைய தலைமுறை படித்துக் கொண்டும் இருப்பார்கள். அப்பாவுக்கு மட்டுமே விபரங்கள் புரியும் என்பதோடல்லாமல், மிகத் தெரிந்த, பழகிய ஆசிரியர் என்ற வகையில் அப்பா மட்டுமே அவர்கள் வீட்டிற்குள் சென்று வர முடியும். முஸ்லீம் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்விக் காலம் என்பது மிகக் குறுகியதாக இருந்தது. என்னுடைய பள்ளி, கல்லூரி வரையிலுமே ஒன்றிரண்டு பர்தா அணிந்த மாணவிகளைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான்.
தீவிரவாதம் பற்றிப் பேச்சு வரும் போது, ‘ நம்ம முஸ்லீம் ஜனங்களா இருக்காது, அது ஏதோ வெளிநாட்டுக்காரவுங்க வேலையா இருக்கும் . இவ்வளவு வருஷம் தாயா பிள்ளையா பழகுறோம், ஒரு பிரச்சனையும் கிடையாது, நம்ம ஆம்பிள்ளைங்களாவது குடி, அடி தடின்னு இருப்பாங்க, பாவம், அதுங்க பொறுமையா இருக்குங்க’  என்று எங்கள் ஊரே சேர்ந்து பதில் சொல்லும்.

=====================

  ரயில் ஓசை முதன்முதல் எங்கள் கிராமத்தைத் தொட்ட போது , எல்லோரும் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்கள். அதன் ஓசை தொடர்ந்து இவர்களைத் தேடி வந்து கொண்டே இருந்தது. இவர்களும் ஒளிந்து கொண்டே இருந்தார்கள். தெருவில் நடந்தவர்கள் அப்படியே குப்புறப் படுத்துக் கொள்வதும் ,வயலில் வேலை செய்தவர்கள் குத்திட்டு அமர்ந்து கொள்வார்களாம். புகை வண்டியை தூரத்திலிருந்து பார்த்து விட்டு திரும்பிய ஆண்கள் ஆபத்து ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அதன்பிறகு பயம் ஆர்வமாக மாறிப்போனது. ஆண்களும் பெண்களுமாக புகை வண்டியில் ஏறிப் பார்த்து விட்டு ,கொஞ்ச தூரம் பயணித்து விட்டு வருவது என்ற முடிவுடன் ஒருநாள் கிளம்பினார்கள். அவர்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் ஏறி ,மறு நிறுத்தத்தில் இறங்கி விட வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு ஏறினார்கள் . மிகப்பெரிய சத்தம், மரங்கள் பின்னோக்கி ஓட,  தாங்கள் அப்படியே நகராமல் அமர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்த பெண்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு அமர்ந்தபடி கடவுளை வேண்டிக் கொண்டார்கள். காலணா அரையாணாவை விட பண்டமாற்று முறையையே  அதிகம் தெரிந்திருந்த அவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர் பயணச்சீட்டு கேட்டதற்கு பயந்து , அழுது, திட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் புகை வண்டியில் ஏறப் பயந்து , நடந்தே ஊர் வந்தார்கள். அவர்களில் ஒருவராய் இருந்த என் ஆத்தா , புகை வண்டியை , இறக்கும் வரை அதே பயத்துடனும் அதிசயத்துடனும் பார்த்தற்கு நான் சாட்சி. அதே போன்று அடுத்த தெரு, அடுத்த வீடு, வீடு வரை உறவு, பழக்க வழக்கம் என எல்லாமும் நடந்து முடிந்திருந்தாலும் , புகை வண்டியை பார்ப்பது போலவே , முஸ்லீம்களைப் பார்க்கும் போது பயமும் ஆர்வமும் ஒருங்கே எழுவது எங்கள் ஊர் ஜனங்களிடம் இயல்பாகி விட்டது.
  இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் கிறிஸ்தவர்களை விடவும் , முஸ்லீம்களின் வாழ்க்கை ,உணர்வுகள், பழக்கவழக்கங்கள் , குறித்த புரிதல் இன்மை நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, பர்தாக்களுக்குள் மறைத்து வைக்கப்படும் முஸ்லீம் பெண்கள் குறித்த  புரிதலின்மை அவர்களைக் குறித்து  அறிந்து கொள்வதில்  அதிக ஆர்வத்தை நம்முள் தூண்டுகிறது. வெளி உலகத்துக்கு அறிமுகமானாவர்களாக தன்னாட்சியும் ,திறனும் உடைய முஸ்லீம் பெண்களைக் குறித்த சிந்தனை எழும் போது நமக்குள் தோன்றுவது இரண்டு முகங்கள்: பெனாசிர் புட்டோ, தஸ்லிமா நஸ்ரின். தீவிரவாதத்துக்குப் பலியான  பெனாசிர் புட்டோவும், இன்னும் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தஸ்லிமாவும், முஸ்லிம் பெண்கள் மீது திணிக்கப்படும் அதிதீவிர கட்டுபாடுகளையும், வளர்ச்சிப் பாதையில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அதி பயங்கர போராட்டங்களையும் உலகுக்குச் சொல்லும் நிகழ் கால சாட்சிகள்.

================

முஸ்லீம் பெண்களின் கல்வியறிவு ,உலக அறிவு மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவைக் குறித்து சிந்திக்கும்போது , ஒரு ஆளுமையையோ, காலகட்டத்தையோ , வரலாற்றையோ , புரட்சியையோ முன்னிறுத்தி எந்த முடிவையும்  எட்ட முடியவில்லை.முஸ்லீம்கள் சிறுபான்மையினராகவும், தீவிர கட்டுப்பாடுகள் கொண்டவர்களாகவும் இருக்கும் இந்தியாவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முஸ்லீம் பெண்களை கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் , சட்டங்களும் ,மதக்கட்டுபாடுகளும் தாண்ட முடியாத மதிற் சுவராக வளர்ந்து நிற்கும் சூழலில் , ஆட்சியாளரில் இருந்து குடிமக்கள் வரை முஸ்லிம்களாக இருக்கும் பாகிஸ்தான் போன்றதொரு நாட்டில் , பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவு என்னை துளைத்துக் கொண்டே இருக்கும்.
ரவிக்குமார் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் இயக்குநர் திருமதி. மினிகிருஷ்ணனை அறிமுகப்படுத்திய போது ,அவர் ‘அண்ட் த வேர்ல்ட் சேஞ்ச்டு’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பாகிஸ்தான் பெண்கள் ஆங்கிலத்தில் எழுதிய கதை மற்றும் நாவலின் சில பகுதிகளைக் கொண்டு முனிஸ் ஷாம்ஸியால் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.
அதில் ஸெஹ்பா ஸார்வாரால் எழுதப்பட்ட, குழந்தைகளின் உலகம் குறித்துப் பேசும் ‘பிளாக் விங்ஸ்’ என்ற நாவலின் ஒரு பகுதியை படித்த போது அதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ரவிக்குமார் அதற்கான ஊக்கத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
முஸ்லீம் பெண் என்பதைப்பற்றி நம்முள் பதிக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் தகர்த்து , இலக்கியத்தின் வாயிலாகவும் சமூக சேவையின் மூலமாகவும் பலவிதமான சாத்தியப்பாடுகளை முன்வைத்திருப்பவர்  ஸெஹ்பா ஸர்வார். அவரைத் தொடர்பு கொண்ட போது, என் மனதில் என்னை அறியாமல் படிந்திருந்த  முஸ்லிம் பெண்கள் குறித்த கற்பிதங்கள் அகன்றன.
நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட மாயைகள் விலகித் தெளிவு பெறும் போது, பயம் விலகி விடும் போது ,  இன்னொரு புதிய வாசல் திறந்து கொள்ளும் போது , உருவாகும் புரிதலுடனும் ,அது தரும் பூரிப்புடனும் , ஸெஹ்பா ஸர்வார் , மினி கிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றியுடனும், இந்தப் புத்தகத்தை உங்கள்முன் வைக்கிறேன்.

- தேன்மொழி
16.12.2011

( ' கடந்துவரும் குரல் - பாகிஸ்தானிய பெண் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் படைப்புகள் ' என்ற நூலுக்கு அதன் தொகுப்பாசிரியர் தேன்மொழி எழுதியிருக்கும் முன்னுரை )

Monday, January 30, 2012

நாகதாளி – தேன்மொழி




இன்று வரப்போகும் இரவுக்காய் காத்திருக்கிறேன். அது எனக்கான உறக்கத்தை கொண்டு வரும் என்ற உணர்வு என்னுள் விழுதோடிக் கிடக்கிறது. கண்டிப்பாய் உறங்குவேன். பதினைந்து வருட உறக்கத்தை கூவி அழைக்காமலே, அது என்னை வந்து சேரும். யுத்த களத்தில் எதிர்த்துப் போட்டியிடாமல், அனுசரித்தே வாழப் பழகிக்கொண்டு, உயிரைப் பிடித்து வைத்திருந்து தப்பித்த ஒரு மாவீரன் போல, இன்று நான் அயர்ந்த உறக்கம் கொள்வேன். என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை, என் எதிரிகள் வீழ்ந்துவிட்டார்கள். நான் அவர்களை அவமதிக்கவில்லை, அனுசரித்துக் கொண்டேன். நான் எதிர்க்கவில்லை, விட்டுக்கொடுத்தேன். ஒரு கன்னத்தில் அறைந்த போது மறுகன்னத்தைக் காட்டினேன். மறுகன்னத்தில் அறைந்த போதும் நான் எதிர்க்கவில்லை. ஆதரவான கைகளுக்குள் முகம் புதைத்து அடியின் தடம் பதிந்த கன்னத்தை மறைத்துக் கொண்டேன். என் கன்னத்தின் விரல் பதிவுகளைப் பார்க்க எனக்கும் பிடிக்கவில்லை. உன்னால் ஒரு போதும் புரிந்து கொள்ளப்படாத என் மொழிகள் எப்போதும் ஈட்டியானது. உன்னால் உணரப்படாத என் பெண்மை மென்மையைத் தொலைத்தது எப்போது? என் பிரம்ம வாயில் மூடிக்கொண்டது எப்போது? வறன் உறல் அறியா என் தேகம் ஈரம் அற்றுப் போனது எப்போது? விடைகளற்ற வெளியில் நான் திரிந்து கொண்டிருந்தபோது இவையெல்லாம் உன்னை விழுங்கித் தீர்த்திருந்தது. எல்லாவற்றின் பின்பு இன்று வரப்போகும் இரவுக்காய் உறங்கக் காத்திருப்பவள் நான்.
இரவென்பது பொழுதுகள் கூடடையும் அடர்ந்த காடு. காலம் தன் தேகம் விரித்து கந்தர்வ களி நடனம் நிகழ்த்தும் அபூர்வ தருணம். தயக்கம் குடித்து, வெட்கம் தொலைந்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம். உயிர்கள் அந்த காரமான வெளியில், அடிநாதமாய் அடைந்து கிடக்கும் ஒலியை எழுப்பி கெக்கலிக்கும் நேரம். இரவு கறைகள் அற்றது, திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது. இரவுக்குப் பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து, தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது. இரவு குற்றங்களுக்குத் துணைபுரிவதில்லை. இரவோடு போட்டியிடும் மின்மினியின் வெளிச்சம் கூட ஒரு மாபெரும் குற்றம் நிகழ்வதற்குப்  போதுமானதாக இருக்கிறது. ஒளி ஆபத்துக்களாலும் குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது. இரவு உயிர்களின் தாலாட்டு, தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. இரவுகளின் சலனமும், இயக்கமும், சத்தமின்றியே நிகழ்கிறது. சலனங்களாலும், சப்தங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது. இரவு தன்னைத் திறந்து ஒளியை  ஏற்றுக்கொள்கிறது. ஒளியோடு கலக்கும் மிகச் சிறந்த கலவியின் உச்ச நாயகி இரவு. ஒளி தன்னை மூடி இருளை அளிக்கிறது. மேலும் உணர்வுகளை விருந்து வைக்கிறது. இரவு உணர்வை விழுங்கி மறையென துயிலாதொரு சயனத்தில் இருக்கிறது.
வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக் கொண்டிருந்தது. சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறனொருவன் மரணம் குறித்த செய்திகளைத் தாங்கி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும்  உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது.
ஆறடி உயரத்தில் நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாய். வெள்ளை வேட்டியும்,  முழுக்கை வெள்ளைச் சட்டையும், உன் கருத்த முகத்தை எடுப்பாய் காட்டியது. அந்த உடை உனக்கு மிகப் பொருத்தமான உடையாய் இருந்தது. உன்னருகில் ஒரு நாற்காலியில்  அமர வைக்கப்பட்டிருக்கிறேன். நான் அலங்கோலமாய் இருக்கிறேன். அழுது கொண்டிருக்கிறேன். இரு ஜோடிக் கண்கள் பல என்னை வெறுப்பாய் நோக்குவதை என் உடலும் மனமும் அறியும். என்னை மனிதப் போலி போலவும், என் கண்ணீரை நீலிக் கண்ணீராகவும் அவர்கள் பார்க்கிறார்கள். இருந்தபோதிலும் என் அழுகை நிஜம். நான் நிறைய காரணங்களுக்காக அழுகிறேன். என் கண்ணீர் வலிகளின் கலவையாய் வழிந்து கொண்டிருக்கிறது. அது வற்றும் வரை நான் அழத்தயாராய் இருக்கிறேன். தலை வெடித்துவிடும் போல் வலிக்கிறது. கண்கள் பொருள் பொதிந்த வீக்கம் கொள்கிறது. இவர்கள் அறியாத ஒன்று என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, உன் மரணம் தவிர்த்த மற்ற எல்லாவற்றிற்காகவும் நான் அழுது கொண்டிருந்தேன்.
குழந்தைகள் இரண்டும் உன்னையும் என்னையும் சுற்றிச் சுற்றி வருகிறது. “அப்பா, நீங்க வேணும்பா, விட்டுட்டுப் போகாதீங்கப்பா” கதறிக் கதறி உன்னை அழைக்கிறார்கள். மரணத்திற்கு செவிகள் கிடையாது. கண்கள் கிடையாது. புலன்கள் அற்றது மரணம். ஆனால் நவரசங்களை உயிர்களில் நெய்து கொண்டே தான் இருக்கிறது. பெரியவளுக்கு வயது பதிமூன்று. அழுகையின் ஊடே என்னை உற்று உற்று, விட்டு விட்டு பார்க்கிறாள். அவள் கண்ணீரும் சில சமயங்களில் நிறம் மாறியதுபோல் எனக்குத் தோன்றியது.
என் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் கயிறு ஆடிக் கொண்டிருந்தது. பிரிபிரியாய் தனித்திருக்கும் இழைகளைப் பிணைத்து முறுக்கிய கயிறு குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தை நெஞ்சோடு உரசி உரசி உரக்கப் பேசியபடி இருந்தது. நீயும் நானும் எதிரெதிரே புதிராய் நின்றோம். உன்னைக் குறித்த எந்த முன்குறிப்பும் அற்றவளாக நான் நின்றேன். நீ, நான் பெண்ணென்னும் குறிப்பை புத்திக்கு  அனுப்பி விட்டு காத்திருந்தாய். என் முதல் வார்த்தையின் முதல் எழுத்தைக் கூட நிராகரித்துவிட்டாய். உன் அலட்சியத்தால் அது அழிந்தே போனது. மீண்டும் மீண்டும் என் வார்த்தைகள் வற்றி, வறண்ட மணற்படுக்கையென காய்ந்து போனது. வார்த்தைகள் சூறையாடப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலாய் உன் நூலகத்தில் என்னை அடுக்கி வைத்திருந்தாய். மௌனத்தை குத்திக் கிளறிக் கிழித்த ஒரு யுத்தம் என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. “வீட்டின் கடைக்குட்டி, செல்லம், பாத்துக்கப்பா” என் வீடு மாறி மாறி என்னை உனக்கு அறிமுகப்படுத்தியது. எதையும் நீ புரிந்து கொண்டதற்கான அறிகுறி தென்படவில்லை.
நீ முதன் முதலில் என் கன்னத்தில் அறைந்த நிமிடம், இப்போது கூட அழியாமல் பின் வந்து, என் தலையை பலமுறை சுழற்றிப் போகிறது. நீ அறைந்த நொடியில் ஒரு மயக்கத்தோடு சுவரில் சாய்ந்தேன். சில கெட்ட வார்த்தைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு நீ வெளியேறிவிட்டாய். என் உடல் நடுங்கியது. நீ அடிப்பாயா! அடிக்கும் அளவு முரடனா நீ, என் மீது அவ்வளவு வெறுப்பா, என்னை அடிக்க எப்படி மனம் ஒப்பியது. இனிமேலும் இந்த அடி தொடருமா, சொச்ச காலம் எப்படி கழியும், மனம் கதறி நிமிர்ந்தது. நான் யார் தெரியுமா? வீட்டின் செல்லம், ஊருக்கு மிகச் சிறந்த பெண், பள்ளிக் கூடத்தின் முதல் மாணவி, நிறைய படித்தவள், நிறைய சம்பாதிப்பவள், என் சுயம் நீரில் விழுந்த நிழல்போல் தவித்துக் கொண்டிருந்தது. என்னை அடித்ததை  எல்லோரிடமும் தெரிவிக்க விரும்பினேன். மறுகணமே என்னை அடித்ததை எல்லோரிடமும் மறைக்க விரும்பினேன். கதறிக்கதறியழுத என் சுயம் காயம்பட்டுப் போனது. என்னை அடித்தது போல் உன்னை அறைந்துவிட முடியுமா? அடிக்கச் சொல்லி மனம் ஆகாயத்தில் அமர்ந்துகொண்டது. என் முதல் வார்த்தை தொலைந்தபோதே உன்னை அடிக்கச் சொல்லி ஆணையிடாத என் மூளையை அறுத்தறுத்து பெயரிடப்படாத திசைகளிலும்கூட விசிறியடிக்கிறேன்.
என் முதல் பிரசவத்தின்போது என் வீடு நொடித்துப் போயிருந்தது. நீ கொடுத்த வலி மாறிமாறி என் பிரசவ வலியைத் தோற்கடித்தது. நான் மட்டுமல்ல, என் குடும்பமே பிரசவ வலி பட்டுப்போனது, உன்னால். பிள்ளையிடம் பாசத்தோடு நடந்து கொண்டாய். நான் பொதி சுமக்கும் கழுதையாய்த் திரிந்தது உனக்குத் தெரிந்தே இருந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். மனதோடு கூட உடம்பும் வலித்தது. எவனாவது ஒரு விஞ்ஞானி என்னை எந்திரமாக்கி விடக்கூடாதா என ஏங்கியழுதது உடம்பு. அடி, உதை, ஏச்சு, பேச்சு, எல்லாம் அன்றாட உணவின் உப்பு போல அவசியப்பொருளாகி விட்டது உனக்கு. எத்தனை முறை தொட்டாலும் சுருட்டிக் கொள்ளும் மரவட்டையைப் பார்த்து மனம் பொறாமை கொண்டது. தாய் வீட்டு உறவுகள் சுருங்கி இந்த வீடு, குழந்தைகள், நீ என்பது மட்டுமே என் உலகம் ஆனது, விழித்தபடி உறங்கத் தெரிந்தது நம் மூத்த மகளுக்கு. அவள் நம் உள்ளக்கிடக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்தாள்.
நிறையப் பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து போனார்கள். எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி, யாருக்கோ விதிக்கப்பட்ட கட்டளை, என்னையும் அணைத்துக் கொண்டது. பிற பெண்களை நீ வாழ்க்கை ஏட்டில் பதிவு செய்யும்போது, நான் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கை எங்கோ காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லாமல் போக பதிமூன்று ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. பதிமூன்றாவது சீடனாய் வந்து நின்ற ஆண்டு உன்னை எனக்குக் காட்டிக் கொடுத்தது. உனக்கும் எனக்குமிடையில் ஒன்றுமேயில்லா மாயக்கயிறு உன்னையும் என்னையும் பிணைத்திருப்பது தெரிந்தது. அதிலிருந்து விடுபட இல்லாத முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த முட்டாள் நான்.
இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்தது இல்லை. அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது. தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவுகள் வருவதாய்த் தோன்றியது. வீட்டின் கொல்லைப்புறத்தில் சுயம்புவாய்த் தோன்றி, முட்களுடன் கிளைத்து நிற்கும் கற்றாழையை மிக விரும்பினேன். இருத்தலுக்கான ஆவலும், வாழ்வதற்கான போராட்டமும் அதனிடம் முட்களாய் வளர்ந்திருந்தது. முட்களால் கிளைத்திருக்கும் உடல் வேண்டி, மனம் ஒற்றைக்கால் தவம் புரிந்தது. கொல்லையில் கற்றாழைச் செடியை நட்டபோது நீ என்னை திட்டினாய். பாலை நிலத்தாவரமே தண்ணீரை குடிச்சுக்கோ என்று  அதற்கு தண்ணீர் ஊற்றுவேன். இலையின் மென்மையை திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு கைவசப்பட்டிருந்தது. தளதளவென்றிருக்கும் பச்சை மேனியெங்கும் முட்களை, என்னுடலும் வேண்டியபோது, முட்களுடன் கிளைத்துக் கொள்ள விரும்பினேன். ஒரு முறை கோபத்தில் நீ அதை வெட்டி எறிந்துவிட்டாய். தன்னை பெருக்கி எழுப்பும் ராட்சஸி சுரஸா போல அது மீண்டும் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது. நீ என்னை அந்தச் செடியோடு ஒப்பிட்டுத் திட்டும்போது எனக்குப் பெருமையாய் இருக்கும். நம் குழந்தைகள், செடி குறித்து ஆயிரம் வினாக்களைத் தொடுப்பார்கள். நீர் கொண்ட மேகத்தின் மீது தீராத தாகம் கொண்ட மற்ற எல்லாத் தாவரங்களையும்விட, வறண்ட பாலையில் முரட்டுத் தவம் புரியும் இந்தச் செடியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
உறவுக்காய் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும். உன் சக இணை நான். அடிமையாகவும், எதிரியாகவும், உன் வக்ரங்களையும், குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தை காறி உமிழ்கிறேன். உன் இணைப்பறவை நான். கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்க கனவு கண்டவள். என் மரத்தின் இலைகளை உதிர்த்துவிட்டாய். என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டாய். என் மரத்தின் குருவிகளை கொத்திப் போய்விட்டாய்.
என்னைக் கடக்கும் முகங்களில் எதையோ ஏக்கத்தோடு நோக்குகிறேன். அன்பாய் அழைக்கும் ஒரு குரலுக்கு ஆயுள் முழுவதும் கட்டுப்பட்டுக் கிடக்க விரும்புகிறேன். என் வலி துடைக்கும் வார்த்தைகள் எங்கும் அற்றுவிட்டபோதும், புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன். திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன். இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது. மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்று காத்திருக்கிறது.
இரண்டு கைகள் என் முகம் தாங்கியது. என் வலி தேடி மருந்திட்டது. என் மொழி உள்வாங்கப்பட்டது. நான் நிராகரிக்கப்படவில்லை. அன்பின் கதகதப்பை குளிருக்கு பயந்தவளாய் உணரத் தொடங்கினேன். நீ உன் மாய வெளியில் ஏதேதோ உறவுகளைக் கற்பித்து நொந்து கொண்டாய். உடலை மட்டும் உறவுகளுக்கு பிரதானமாய் உன் குறுகிய புத்தி வட்டமிட்டு வைத்திருந்தது. ஆங்காரமும் ஆணவமும் உன்னுள் படமெடுத்தது. உன்னுள் வலி தொடங்கியது. நிராகரிக்கப்பட்டதாய் உணர்ந்தாய். விஷம் குடித்து உன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாய். உன் சாவின் மூலம் என்னைப் பழிவாங்க விரும்பினாய். உலகுக்கு என்னை நடத்தை கெட்டவள் என்று அறிமுகப்படுத்தியதன் மூலம் உன் சாவின் மீது நீயே வெற்றிக் கொடி நட்டுக் கொண்டாய்.
உன் மரணத்தின் வாசனை என்மீது படர்கிறது. என் அகம் புறம் அனைத்தையும் நிறைக்கிறது. என்னை இறுக்கிப் பிணைத்திருந்த அடிமைச் சங்கிலியை அறுக்கிறது. என் இருண்ட உலகில் ஒளிக்கிரணங்கள் போட்டியிட்டு நுழைகிறது. உன் முன் அமர்ந்திருக்கிறேன், அழுகிறேன். மற்றபடி மரணத்தின் வாசனையை நுகர்ந்து, மெல்ல என் மூச்சோடு கலந்து சுவாசிக்கத் தொடங்குகிறேன். பின்பு வெறி கொண்டவளாய் அதை உள்ளிழுத்து என் உடலை, மனதை, மூச்சை நிறைக்கிறேன். எல்லாவற்றினூடேயும் வெறுத்து  ஒதுக்கும் என்னைச் சுற்றி துளையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் கண்கள் அறியாதபடிக்கு, உறக்கம் கொண்டு வரவிருக்கும் இன்றைய இரவுக்காய், காத்திருக்கத் துவங்குகிறேன்.
( தீராநதி இதழில் வெளியான இந்தக் கதை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான 'நெற்குஞ்சம்' நூலில் இடம்பெற்றுள்ளது. )

Tuesday, October 26, 2010

சுனாமியின் நினைவாக


 தாழி 
- தேன்மொழி

அலை புரட்டிப் புரட்டி அழுக்காக்கிப் போன இடங்களும், அலை துவட்டித் துவட்டி சுத்தப்படுத்திப்போன இடங்களுமாய் இருந்தது கடற்கரை.  மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் இடையே பேதமிலாமல் தர்ம அதர்ம யுத்தங்களை ஒருசேர நிகழ்த்திப்போயிருக்கும் கடலின் வல்லமை பெரியது என்பதை அலைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. கத்துக்கடல் சூழ் நாகை காத்தான்சத்திரம் இன்றிருந்திருந்தால் சுனாமியில் இடிந்துபோன கட்டிட அலைவரிசையில் அதுவும் ஒன்றாகி இருக்கும்.  நாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம், பணியின் நிமித்தம் இங்கு வந்திருந்தேன். கடல் இருக்கும் கிழக்கு திசையை ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்.  இரணியவதம் முடித்த நரசிம்மனின் அடங்கா வெறியோடு ஊளையிட்டு காற்றினூடே கடல் மிரட்டிக் கொண்டிருந்தது. காற்றில் கலந்து வரும் கடலின் மூச்சுக்காற்றில் ஏதேதோ உயிர்களின் கவிச்சி வாடை கலந்திருந்தது.  கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் செந்நிறமாய்த் தெரிந்தது காட்சிப்பிழைபோலும்.  அலைகளுக்கு பதிலாக மாமிச அடுக்குகளின் படுக்கை ஒன்று அசைவது போலவும், அது வீறிட்டு அலறுவதுபோலவும் ஒரு பிரம்மை தோன்றிக் கொண்டே இருந்தது.  ஒரு சமயம் பார்த்தால் நீலநிற விழியாய்க் கடல் விரிந்து கிடக்கும்.  மறுசமயம் குட்டிக் குழந்தைகளின் ஆயிரமாயிரம் கண்களாய் விழித்துப் பார்த்து தேம்பித்தேம்பி அழும்.இந்தக் கடல்தானா அத்தனை உயிர்களை அள்ளிச் சென்றது?  
நான் அமர்ந்திருந்த அலுவலகத்தில் மரணத்தையும் கண்ணீரையும் பதிவேடுகளில் பொதித்து வைத்திருந்தார்கள். சுனாமி சுருட்டித் தின்ற உடலகளின் எச்சங்களைப் புதைக்கும் முன் காவலர்கள் அவற்றைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்கள்.  நாகையைச் சுற்றியுள்ள நாகூர், கீழையூர், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இப்படிப் பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தனித்தனியாய் எடுத்த புகைப்படங்களும் அந்த அலுவலகத்தின் கணிணியிலும், ஆல்பங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. உயிர் இழந்தவர்களுக்கு அரசு கொடுக்கும்  நிவாரணத்தொகையைப் பெற, கடலிழுத்துப் போனவர்களின் இரத்த சம்பந்தம் உடையவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தேவையாய் இருந்தது.அதை வழங்குவதுதான் அந்த அலுவலகத்தின் வேலை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒரு புகைப்படத்துடன் அங்கு வரவேண்டும். அந்த அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பொருந்தியிருந்தால் இறந்துவிட்டார் எனச் சான்றளிக்கவேண்டும். அப்படி இறப்புச் சான்று வழங்க உதவும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருத்தர் இறந்துவிட்டார் எனச் சொல்வதைவிடவும் கொடுமையானது வேறென்ன இருக்கமுடியும். என்னிடம் நீட்டப்படும் புகைப் படத்தை வாங்கும்போது இந்தப் படத்தில் உள்ளவர் இறந்திருக்கக்கூடாது என மனசுக்குள் எண்ணிக்கொள்வேன். கணிணியின் திரையில் ஒவ்வொரு முகமாகத் திரும்பும்போது எந்த முகமும் இந்தப் புகைப்படத்தோடு பொருந்தக்கூடாது என்று வேண்டிக்கொள்வேன். புகைப் படத்தைக் கொடுத்துவிட்டு நிற்பவர்களின் மனமும் அப்படித்தான் இருந்திருக்கும். இழப்பின் கணங்கள் வன்மம் மிகுந்தவை.  மரணம் என்பது வலிகளால் அலங்கரிக்கப்பட்ட நிரப்பவே முடியாத குடுவை.  

சான்றிதழ் பெற வருபவர்களில் பலவகை மனிதர்கள் இருந்தார்கள்.குழந்தைகளை இழந்த அம்மா. கணவனைத் தவறவிட்ட மனைவி அல்லது மனைவியைத் தவறவிட்ட கணவன். எல்லாவற்றிலும் கொடுமை பெற்றோரை இழந்த பிள்ளைகள். அரசின் உதவியைப் பெறவேண்டும் என்பதற்காகவே வருபவர்களைப் பார்த்த உடன் சொல்லிவிடலாம். அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள்.சீக்கிரம் போய் பணத்தை வாங்கவேண்டும் என்ற அவசரம் மட்டும்தான் அவர்களிடம் தெரியும். தங்கள் கையிலுள்ள புகைப்படத்தில் இருப்பவர் செத்திருக்கவேண்டும் என்ற விருப்பம் அவர்களின் பேச்சில் கசியும். உருவ ஒற்றுமை கொஞ்சம் இருந்தாலும் அவர்தான் இவர் என்று அடித்துச் சொல்வார்கள். முகம் தெரியவில்லையென்றாலும் உடைகளை வைத்து அடையாளப்படுத்துமாறு வற்புறுத்துவார்கள்.ஆனால் வருபவர் மிகவும் நெருங்கிய சொந்தமாக இருந்தால் அவரது கண்களில் பெருகும் ஈரம் நம்மையும் நனைத்துவிடும்.
தூரத்தில் வயதான நாற்காலி ஒன்றில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். சோகத்தைத் தவிர வேறு உணர்வுகளே அறியாதவர்போல இருந்தது அவர் தோற்றம். சுற்றிலும் இருந்த மனிதர்கள் எவரும் அவருக்கு புலப்பட்டதுபோல் தெரியவில்லை. அடையாளப்படுத்துதல், அதைக் குறித்த ஊர்ஜிதங்கள், அதன் மீதான கேள்விகள், அதன் விளைவான அழுகைகள், அதனாலான தோல்வியின் தேடல்கள் எதுவும் அவரை தொல்லைப்படுத்தவில்லை.  சட்டை போடாத உடலின் சுருக்கங்கள் அவரது தோலை பழுப்பு நிறமாய் காட்டிக்கொண்டிருந்தன. செம்பட்டைத் தலை, பூ விழுந்து பூஞ்சைபடிந்த கண்கள், வெற்றிலை காவியேறிய வாய், அதோடு சேர்த்து அவருக்கு சொந்தமாய் தோள் மீது ஒரு பழைய துண்டு கிடந்தது.  திரையில் தெரியும் புகைப்படங்களைக் கூர்ந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை என்பதை அவரது முக சுருக்கத்திலிருந்தே கண்டுகொள்ள முடிந்தது. முதுமையும் வறுமையும் தனிமையும் சேர்ந்து அவரை முடக்கிப் போட்டிருப்பது நன்கு புரிந்தது.  அழுதபடி செல்பவர்களை பாதி மூடியும், பாதி மூடாத வாயோடும் ஒரு குழந்தை மாதிரி வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலிருக்கும் ஒரு பாலித்தின் உறையை வெகு இறுக்கமாய் பிடித்திருந்தார். அதைப் பார்ப்பவர்கள் அவரது உயிர் அந்த உறையில்தான் இருக்கிறது என எண்ணும்படியாக இருந்தது. யாரிடம் போவது என ஒவ்வொரு இருக்கையாகத் தயங்கி ஏதோ ஒரு நம்பிக்கை வந்ததுபோல அவர் என்னருகே வந்து மிகவும் அடக்கமாய் நின்று என்னைப் பார்த்தார்.  வணக்கம் சொல்லுதல், புன்னகைத்தல் போன்ற எல்லா சம்பிரதாயங்களையும் கடந்து அந்தப் பார்வை என்னிடம் நேர்குத்தி நின்றது. தாலியை மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பதுபோல பொறுப்போடு தன் கையில் இருந்த பாலித்தின்  உறையைப் பிரித்தார். தவறவிட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அதில் குவிந்து கிடந்தது. பாலித்தின் உறையினுள் ஒரு சிறிய காகித உறை இருந்தது. இடை இடையே துண்டை சரிசெய்து தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டார். அந்த காகித உறையிலிருந்து பொக்கிஷத்தைப்போல ஒரு சிறிய புகைப்படத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒல்லியான முக அமைப்புகொண்ட ஒரு பெண்ணின் படம். பெரியவரிடம் தென்பட்ட அதே பழுப்பு நிறம், சற்று மாறுகண், நகரத்து நாகரீகத்தையும் கிராமத்து அறியாமையையும் சேர்த்துப் பூசியிருந்தது அந்த முகத்தில். இழுத்து சீவியிருந்ததில் முன்நெற்றி கொஞ்சம் வழுக்கையாய் தெரிந்தது.  உள்ளடங்கிய கண்கள் என்பதால் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு சற்று துருத்தியிருந்தது, கீழ் தாடை லேசாக அமுங்கியிருந்தது.  புகைப்படத்தைக் கொடுத்துவிட்டு என்னையே பார்த்தபடி நின்றிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. என் உடம்பு மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். இந்தப் பெண் செத்திருக்கக்கூடாது என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும் அவர் மௌனமாக அழத்  தொடங்கிவிட்டார். சூழலை சகஜமாக்க எண்ணி அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். எந்த ஊர் என்று விசாரித்தேன். அதற்குரிய ஆல்பத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதை வாங்கியபோது அவரது கைகள் நடுங்கின. அது முதுமையால் வந்த நடுக்கமல்ல என்பது புரிந்தது. ஆல்பத்தோடு தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிக்கு அவர் போனார்.
நான் மீண்டும் கணிணியில் பார்வையைச் செலுத்தினேன். முகங்களும் உடல்களும் புரள ஆரம்பித்தன. மரணத்தின் குடையின் கீழ் உணர்வுகளைப் பூசிக்கொண்டு கிடந்தன உடல்கள். மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றிற்கான தேடல் இருந்தது.  அளவுக்கு அதிகமாய் தண்ணீரைக் குடித்து இறந்தவர்களின் முகத்தில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய் தாயின் மார்பிற்காக உதடுகளைக் குவித்தபடி ஒருபுறம் கிடக்க தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொருபுறம் திறந்து கிடந்தது. வீட்டை விட்டு ஓடிவந்த காதலர்களை கடல் நிரந்தரமாய் இணைத்து வைத்திருந்தது.  முள்காடுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்துகிடந்தன. ஊதிப்போன முகங்கள் பயமுறுத்தின. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின்கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்துகாட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையைப்போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்கமுடியும்.  எல்லைக் கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து, சாவின் மீது சிரிக்கும் பலவான் அது. இயற்கை நம்மை தூவிச் செல்கிறது.  விதையாக விழும் நமக்கு அதுவே மழையாகவும் இருக்கிறது. இன்னும் முளைக்காத கோடி விதைகள் பூமியில் கிடக்கின்றன,இயற்கையின் அறிதலோடு.
 எந்த முகத்திலும் சாவின் அமைதியை அடையாளப்படுத்த முடியவில்லை. கொண்டுவந்து தரப்படும் புகைப்படங்கள் வேறு உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. அலங்காரத்தோடு சந்தோஷத்தின் பின்புலத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றில் உள்ள துள்ளலோடு, இறப்பின் கைகள் ஏந்திய முகங்களை ஒப்பிடுவது கடினமாய் இருந்தது.  தோடு, வளையல், மூக்குத்தி, கடிகாரம், கொலுசு, கழுத்துநகை இவைகளைக் கொண்டு சில உடல்களையும், உடைகளைக் கொண்டு சில உடல்களையும் அங்க அடையாளங்களைக் கொண்டு சில உடல்களையும் அடையாளப்படுத்தினோம்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு ஆண்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் ஏழுபேரின் மனைவிகளையும் கடல் குடித்து ஏப்பம் விட்டிருந்தது. மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டபோது  அவர்களது முகங்கள் அட்ர்ந்துபோயின. மொழிபெயர்க்க முடியா ஒரு சோகக் கவிதையாய் அவர்கள் நின்றிருந்தார்கள். ஏழு ஆண் விதவைகளை ஒரு சேரக்கண்ட அந்த தருணம் திருகிவிட்ட மீசையாய் வந்து என் கண்களைக் குத்தியதைப் போல் உணர்ந்தேன்.
தாய் மகனை அடையாளம் காணும்போதும், மகன் தந்தையை அடையாளம் காணும்போதும் திடீரென வெடித்தெழும் குரலகள் என்னையும் அவர்களின் உறவாய் மாற்றிக்கொண்டிருந்தன. திரையில் தோன்றிய தனது அம்மாவின் முகத்தைப்பார்த்து விட்டு குழந்தையொன்று ஓடிச்சென்று திரையில் தாவியதைப் பார்த்தபோது மனம் பேதலித்தது. நடுங்கும் தலையோடு உறவுகளைத் தேடும் முதியோர்களைப் பார்த்தேன். கடல் தன் உவர்ப்பை ஊற்றி ஊற்றி அவர்களை நிரப்பி இருப்பது போல் தெரிந்தது. மரித்தும் பிழைத்தும் தவிக்கும் உறவுகளை வாழ்க்கையின் கரங்கள் பிழிந்தெடுத்துக்கொண்டிருந்தன. கைபிடித்து நடைபழக்க அழைத்து வந்த மகனை கடல் இழுத்தபோது போரிட்டுத் தோற்ற தந்தை ஒருவன் ஒவ்வொரு ஆல்பமாக அவனைத் தேடிக்கொண்டேயிருந்தான். தான் பிழைத்த வெற்றியையும், மகனைத் தொலைத்த தோல்வியையும் தவிர்த்து வேறு ஏதோ ஒன்றை அவன் தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. 
அந்த முதியவர் பக்கம் பார்த்தேன். ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி கண்களைச் சுருக்கி கூர்மையாக்கிக்கொண்டு நிதானமாக தேடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தோளில் கிடந்த துண்டை சரி செய்து கொண்டார். அந்த ஆல்பத்தில் அவர் தேடிய பெண்ணின் படம் இல்லை. எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மற்ற ஊர்களின் ஆல்பங்களையும் அவரிடம் கொடுக்கவேண்டும். வேளாங்கன்னியில் கடலால் இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் வேளாங்கன்னி கடற்கரையில் மட்டுமே கரை ஒதுங்காமல் கீழையூர், நாகப்பட்டிணம், நாகூர் போன்ற இடங்களிலும் கரை ஒதுங்கியிருந்தன.   எங்கிருந்தோ இழுத்து  எந்தக் கரையிலோ ஒதுக்கிவிட்டுப் போயிருந்தாள் கடல் அன்னை. வேறு ஊர் ஒன்றின் ஆல்பத்தை அவரிடம் கொடுத்து அதில் தேடிப்பார்க்கச் சொன்னேன். 
 ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றியது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். கடலின் ஆற்றலில் மனம் மிதந்தது. பெரியவர் காட்டிய புகைப்படத்தில் இருந்த பெண் சிரித்தபடி என்னை அழைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் பத்து நூறு ஆயிரமென முகங்கள். அலைகளில் மேலும் கீழுமாய் அவர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரது கைகளும் வா வா என கூப்பிட்டுக்கொண்டிருந்தன. அவ்ர்களின் தலைகளுக்குமேல் பறவைகள் கூட்டமாய் பறந்துகொண்டிருந்தன. நான் அவர்களை நோக்கி நடக்கத்துவங்கினேன். 
"எம் புள்ள இருக்கா, எம் புள்ள இருக்கா’ என்ற கூக்குரல் கேட்டு உடல் அதிர எழுந்தேன். அந்தப் பெரியவர் முகத்தில் அறைந்துகொண்டு கேவிக் கொண்டிருந்தார். அவரது தோளில் கிடந்த துண்டு அந்த ஆல்பத்தின் மீது கிடந்தது.’கண்ணுக்குள்ள வச்சி வளத்தப் புள்ளய இப்படி அம்மணமாய் போட்டு வச்சிருக்கீங்களே’ குற்றச்சாட்டாக பாய்ந்துகொண்டிருந்தது அவரது குரல். ’அள்ளிட்டுப்போன கடலுக்கும் மனசில்ல, என்ன விட்டுட்டுப் போன இவளுக்கும் மனசில்ல, கிழ உசுறு துடிக்கிது தாயி, எம் புள்ளய அம்மணமா காட்டாதிங்க, என் உசுறு போயிடும் தாயி" ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டி, முட்டி அழுதுகொண்டிருந்தார். சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டுவந்தன.

( இந்தக் கதை தேன்மொழியின் ' நெற்குஞ்சம் ' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 
வெளியீடு : மணற்கேணி பதிப்பகம் 
பிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் )