Tuesday, October 26, 2010

சுனாமியின் நினைவாக


 தாழி 
- தேன்மொழி

அலை புரட்டிப் புரட்டி அழுக்காக்கிப் போன இடங்களும், அலை துவட்டித் துவட்டி சுத்தப்படுத்திப்போன இடங்களுமாய் இருந்தது கடற்கரை.  மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் இடையே பேதமிலாமல் தர்ம அதர்ம யுத்தங்களை ஒருசேர நிகழ்த்திப்போயிருக்கும் கடலின் வல்லமை பெரியது என்பதை அலைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. கத்துக்கடல் சூழ் நாகை காத்தான்சத்திரம் இன்றிருந்திருந்தால் சுனாமியில் இடிந்துபோன கட்டிட அலைவரிசையில் அதுவும் ஒன்றாகி இருக்கும்.  நாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம், பணியின் நிமித்தம் இங்கு வந்திருந்தேன். கடல் இருக்கும் கிழக்கு திசையை ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்.  இரணியவதம் முடித்த நரசிம்மனின் அடங்கா வெறியோடு ஊளையிட்டு காற்றினூடே கடல் மிரட்டிக் கொண்டிருந்தது. காற்றில் கலந்து வரும் கடலின் மூச்சுக்காற்றில் ஏதேதோ உயிர்களின் கவிச்சி வாடை கலந்திருந்தது.  கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் செந்நிறமாய்த் தெரிந்தது காட்சிப்பிழைபோலும்.  அலைகளுக்கு பதிலாக மாமிச அடுக்குகளின் படுக்கை ஒன்று அசைவது போலவும், அது வீறிட்டு அலறுவதுபோலவும் ஒரு பிரம்மை தோன்றிக் கொண்டே இருந்தது.  ஒரு சமயம் பார்த்தால் நீலநிற விழியாய்க் கடல் விரிந்து கிடக்கும்.  மறுசமயம் குட்டிக் குழந்தைகளின் ஆயிரமாயிரம் கண்களாய் விழித்துப் பார்த்து தேம்பித்தேம்பி அழும்.இந்தக் கடல்தானா அத்தனை உயிர்களை அள்ளிச் சென்றது?  
நான் அமர்ந்திருந்த அலுவலகத்தில் மரணத்தையும் கண்ணீரையும் பதிவேடுகளில் பொதித்து வைத்திருந்தார்கள். சுனாமி சுருட்டித் தின்ற உடலகளின் எச்சங்களைப் புதைக்கும் முன் காவலர்கள் அவற்றைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்கள்.  நாகையைச் சுற்றியுள்ள நாகூர், கீழையூர், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இப்படிப் பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தனித்தனியாய் எடுத்த புகைப்படங்களும் அந்த அலுவலகத்தின் கணிணியிலும், ஆல்பங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. உயிர் இழந்தவர்களுக்கு அரசு கொடுக்கும்  நிவாரணத்தொகையைப் பெற, கடலிழுத்துப் போனவர்களின் இரத்த சம்பந்தம் உடையவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தேவையாய் இருந்தது.அதை வழங்குவதுதான் அந்த அலுவலகத்தின் வேலை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒரு புகைப்படத்துடன் அங்கு வரவேண்டும். அந்த அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பொருந்தியிருந்தால் இறந்துவிட்டார் எனச் சான்றளிக்கவேண்டும். அப்படி இறப்புச் சான்று வழங்க உதவும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருத்தர் இறந்துவிட்டார் எனச் சொல்வதைவிடவும் கொடுமையானது வேறென்ன இருக்கமுடியும். என்னிடம் நீட்டப்படும் புகைப் படத்தை வாங்கும்போது இந்தப் படத்தில் உள்ளவர் இறந்திருக்கக்கூடாது என மனசுக்குள் எண்ணிக்கொள்வேன். கணிணியின் திரையில் ஒவ்வொரு முகமாகத் திரும்பும்போது எந்த முகமும் இந்தப் புகைப்படத்தோடு பொருந்தக்கூடாது என்று வேண்டிக்கொள்வேன். புகைப் படத்தைக் கொடுத்துவிட்டு நிற்பவர்களின் மனமும் அப்படித்தான் இருந்திருக்கும். இழப்பின் கணங்கள் வன்மம் மிகுந்தவை.  மரணம் என்பது வலிகளால் அலங்கரிக்கப்பட்ட நிரப்பவே முடியாத குடுவை.  

சான்றிதழ் பெற வருபவர்களில் பலவகை மனிதர்கள் இருந்தார்கள்.குழந்தைகளை இழந்த அம்மா. கணவனைத் தவறவிட்ட மனைவி அல்லது மனைவியைத் தவறவிட்ட கணவன். எல்லாவற்றிலும் கொடுமை பெற்றோரை இழந்த பிள்ளைகள். அரசின் உதவியைப் பெறவேண்டும் என்பதற்காகவே வருபவர்களைப் பார்த்த உடன் சொல்லிவிடலாம். அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள்.சீக்கிரம் போய் பணத்தை வாங்கவேண்டும் என்ற அவசரம் மட்டும்தான் அவர்களிடம் தெரியும். தங்கள் கையிலுள்ள புகைப்படத்தில் இருப்பவர் செத்திருக்கவேண்டும் என்ற விருப்பம் அவர்களின் பேச்சில் கசியும். உருவ ஒற்றுமை கொஞ்சம் இருந்தாலும் அவர்தான் இவர் என்று அடித்துச் சொல்வார்கள். முகம் தெரியவில்லையென்றாலும் உடைகளை வைத்து அடையாளப்படுத்துமாறு வற்புறுத்துவார்கள்.ஆனால் வருபவர் மிகவும் நெருங்கிய சொந்தமாக இருந்தால் அவரது கண்களில் பெருகும் ஈரம் நம்மையும் நனைத்துவிடும்.
தூரத்தில் வயதான நாற்காலி ஒன்றில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். சோகத்தைத் தவிர வேறு உணர்வுகளே அறியாதவர்போல இருந்தது அவர் தோற்றம். சுற்றிலும் இருந்த மனிதர்கள் எவரும் அவருக்கு புலப்பட்டதுபோல் தெரியவில்லை. அடையாளப்படுத்துதல், அதைக் குறித்த ஊர்ஜிதங்கள், அதன் மீதான கேள்விகள், அதன் விளைவான அழுகைகள், அதனாலான தோல்வியின் தேடல்கள் எதுவும் அவரை தொல்லைப்படுத்தவில்லை.  சட்டை போடாத உடலின் சுருக்கங்கள் அவரது தோலை பழுப்பு நிறமாய் காட்டிக்கொண்டிருந்தன. செம்பட்டைத் தலை, பூ விழுந்து பூஞ்சைபடிந்த கண்கள், வெற்றிலை காவியேறிய வாய், அதோடு சேர்த்து அவருக்கு சொந்தமாய் தோள் மீது ஒரு பழைய துண்டு கிடந்தது.  திரையில் தெரியும் புகைப்படங்களைக் கூர்ந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை என்பதை அவரது முக சுருக்கத்திலிருந்தே கண்டுகொள்ள முடிந்தது. முதுமையும் வறுமையும் தனிமையும் சேர்ந்து அவரை முடக்கிப் போட்டிருப்பது நன்கு புரிந்தது.  அழுதபடி செல்பவர்களை பாதி மூடியும், பாதி மூடாத வாயோடும் ஒரு குழந்தை மாதிரி வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலிருக்கும் ஒரு பாலித்தின் உறையை வெகு இறுக்கமாய் பிடித்திருந்தார். அதைப் பார்ப்பவர்கள் அவரது உயிர் அந்த உறையில்தான் இருக்கிறது என எண்ணும்படியாக இருந்தது. யாரிடம் போவது என ஒவ்வொரு இருக்கையாகத் தயங்கி ஏதோ ஒரு நம்பிக்கை வந்ததுபோல அவர் என்னருகே வந்து மிகவும் அடக்கமாய் நின்று என்னைப் பார்த்தார்.  வணக்கம் சொல்லுதல், புன்னகைத்தல் போன்ற எல்லா சம்பிரதாயங்களையும் கடந்து அந்தப் பார்வை என்னிடம் நேர்குத்தி நின்றது. தாலியை மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பதுபோல பொறுப்போடு தன் கையில் இருந்த பாலித்தின்  உறையைப் பிரித்தார். தவறவிட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அதில் குவிந்து கிடந்தது. பாலித்தின் உறையினுள் ஒரு சிறிய காகித உறை இருந்தது. இடை இடையே துண்டை சரிசெய்து தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டார். அந்த காகித உறையிலிருந்து பொக்கிஷத்தைப்போல ஒரு சிறிய புகைப்படத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒல்லியான முக அமைப்புகொண்ட ஒரு பெண்ணின் படம். பெரியவரிடம் தென்பட்ட அதே பழுப்பு நிறம், சற்று மாறுகண், நகரத்து நாகரீகத்தையும் கிராமத்து அறியாமையையும் சேர்த்துப் பூசியிருந்தது அந்த முகத்தில். இழுத்து சீவியிருந்ததில் முன்நெற்றி கொஞ்சம் வழுக்கையாய் தெரிந்தது.  உள்ளடங்கிய கண்கள் என்பதால் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு சற்று துருத்தியிருந்தது, கீழ் தாடை லேசாக அமுங்கியிருந்தது.  புகைப்படத்தைக் கொடுத்துவிட்டு என்னையே பார்த்தபடி நின்றிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. என் உடம்பு மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். இந்தப் பெண் செத்திருக்கக்கூடாது என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும் அவர் மௌனமாக அழத்  தொடங்கிவிட்டார். சூழலை சகஜமாக்க எண்ணி அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். எந்த ஊர் என்று விசாரித்தேன். அதற்குரிய ஆல்பத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதை வாங்கியபோது அவரது கைகள் நடுங்கின. அது முதுமையால் வந்த நடுக்கமல்ல என்பது புரிந்தது. ஆல்பத்தோடு தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிக்கு அவர் போனார்.
நான் மீண்டும் கணிணியில் பார்வையைச் செலுத்தினேன். முகங்களும் உடல்களும் புரள ஆரம்பித்தன. மரணத்தின் குடையின் கீழ் உணர்வுகளைப் பூசிக்கொண்டு கிடந்தன உடல்கள். மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றிற்கான தேடல் இருந்தது.  அளவுக்கு அதிகமாய் தண்ணீரைக் குடித்து இறந்தவர்களின் முகத்தில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய் தாயின் மார்பிற்காக உதடுகளைக் குவித்தபடி ஒருபுறம் கிடக்க தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொருபுறம் திறந்து கிடந்தது. வீட்டை விட்டு ஓடிவந்த காதலர்களை கடல் நிரந்தரமாய் இணைத்து வைத்திருந்தது.  முள்காடுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்துகிடந்தன. ஊதிப்போன முகங்கள் பயமுறுத்தின. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின்கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்துகாட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையைப்போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்கமுடியும்.  எல்லைக் கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து, சாவின் மீது சிரிக்கும் பலவான் அது. இயற்கை நம்மை தூவிச் செல்கிறது.  விதையாக விழும் நமக்கு அதுவே மழையாகவும் இருக்கிறது. இன்னும் முளைக்காத கோடி விதைகள் பூமியில் கிடக்கின்றன,இயற்கையின் அறிதலோடு.
 எந்த முகத்திலும் சாவின் அமைதியை அடையாளப்படுத்த முடியவில்லை. கொண்டுவந்து தரப்படும் புகைப்படங்கள் வேறு உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. அலங்காரத்தோடு சந்தோஷத்தின் பின்புலத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றில் உள்ள துள்ளலோடு, இறப்பின் கைகள் ஏந்திய முகங்களை ஒப்பிடுவது கடினமாய் இருந்தது.  தோடு, வளையல், மூக்குத்தி, கடிகாரம், கொலுசு, கழுத்துநகை இவைகளைக் கொண்டு சில உடல்களையும், உடைகளைக் கொண்டு சில உடல்களையும் அங்க அடையாளங்களைக் கொண்டு சில உடல்களையும் அடையாளப்படுத்தினோம்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு ஆண்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் ஏழுபேரின் மனைவிகளையும் கடல் குடித்து ஏப்பம் விட்டிருந்தது. மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டபோது  அவர்களது முகங்கள் அட்ர்ந்துபோயின. மொழிபெயர்க்க முடியா ஒரு சோகக் கவிதையாய் அவர்கள் நின்றிருந்தார்கள். ஏழு ஆண் விதவைகளை ஒரு சேரக்கண்ட அந்த தருணம் திருகிவிட்ட மீசையாய் வந்து என் கண்களைக் குத்தியதைப் போல் உணர்ந்தேன்.
தாய் மகனை அடையாளம் காணும்போதும், மகன் தந்தையை அடையாளம் காணும்போதும் திடீரென வெடித்தெழும் குரலகள் என்னையும் அவர்களின் உறவாய் மாற்றிக்கொண்டிருந்தன. திரையில் தோன்றிய தனது அம்மாவின் முகத்தைப்பார்த்து விட்டு குழந்தையொன்று ஓடிச்சென்று திரையில் தாவியதைப் பார்த்தபோது மனம் பேதலித்தது. நடுங்கும் தலையோடு உறவுகளைத் தேடும் முதியோர்களைப் பார்த்தேன். கடல் தன் உவர்ப்பை ஊற்றி ஊற்றி அவர்களை நிரப்பி இருப்பது போல் தெரிந்தது. மரித்தும் பிழைத்தும் தவிக்கும் உறவுகளை வாழ்க்கையின் கரங்கள் பிழிந்தெடுத்துக்கொண்டிருந்தன. கைபிடித்து நடைபழக்க அழைத்து வந்த மகனை கடல் இழுத்தபோது போரிட்டுத் தோற்ற தந்தை ஒருவன் ஒவ்வொரு ஆல்பமாக அவனைத் தேடிக்கொண்டேயிருந்தான். தான் பிழைத்த வெற்றியையும், மகனைத் தொலைத்த தோல்வியையும் தவிர்த்து வேறு ஏதோ ஒன்றை அவன் தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. 
அந்த முதியவர் பக்கம் பார்த்தேன். ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி கண்களைச் சுருக்கி கூர்மையாக்கிக்கொண்டு நிதானமாக தேடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தோளில் கிடந்த துண்டை சரி செய்து கொண்டார். அந்த ஆல்பத்தில் அவர் தேடிய பெண்ணின் படம் இல்லை. எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மற்ற ஊர்களின் ஆல்பங்களையும் அவரிடம் கொடுக்கவேண்டும். வேளாங்கன்னியில் கடலால் இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் வேளாங்கன்னி கடற்கரையில் மட்டுமே கரை ஒதுங்காமல் கீழையூர், நாகப்பட்டிணம், நாகூர் போன்ற இடங்களிலும் கரை ஒதுங்கியிருந்தன.   எங்கிருந்தோ இழுத்து  எந்தக் கரையிலோ ஒதுக்கிவிட்டுப் போயிருந்தாள் கடல் அன்னை. வேறு ஊர் ஒன்றின் ஆல்பத்தை அவரிடம் கொடுத்து அதில் தேடிப்பார்க்கச் சொன்னேன். 
 ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றியது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். கடலின் ஆற்றலில் மனம் மிதந்தது. பெரியவர் காட்டிய புகைப்படத்தில் இருந்த பெண் சிரித்தபடி என்னை அழைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் பத்து நூறு ஆயிரமென முகங்கள். அலைகளில் மேலும் கீழுமாய் அவர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரது கைகளும் வா வா என கூப்பிட்டுக்கொண்டிருந்தன. அவ்ர்களின் தலைகளுக்குமேல் பறவைகள் கூட்டமாய் பறந்துகொண்டிருந்தன. நான் அவர்களை நோக்கி நடக்கத்துவங்கினேன். 
"எம் புள்ள இருக்கா, எம் புள்ள இருக்கா’ என்ற கூக்குரல் கேட்டு உடல் அதிர எழுந்தேன். அந்தப் பெரியவர் முகத்தில் அறைந்துகொண்டு கேவிக் கொண்டிருந்தார். அவரது தோளில் கிடந்த துண்டு அந்த ஆல்பத்தின் மீது கிடந்தது.’கண்ணுக்குள்ள வச்சி வளத்தப் புள்ளய இப்படி அம்மணமாய் போட்டு வச்சிருக்கீங்களே’ குற்றச்சாட்டாக பாய்ந்துகொண்டிருந்தது அவரது குரல். ’அள்ளிட்டுப்போன கடலுக்கும் மனசில்ல, என்ன விட்டுட்டுப் போன இவளுக்கும் மனசில்ல, கிழ உசுறு துடிக்கிது தாயி, எம் புள்ளய அம்மணமா காட்டாதிங்க, என் உசுறு போயிடும் தாயி" ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டி, முட்டி அழுதுகொண்டிருந்தார். சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டுவந்தன.

( இந்தக் கதை தேன்மொழியின் ' நெற்குஞ்சம் ' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 
வெளியீடு : மணற்கேணி பதிப்பகம் 
பிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் )

2 comments:

 1. உள்ளத்தை உருக்கும் கொடுமையான கதை.

  ReplyDelete

 2. உருக்கமான சிறுகதைப் பதிவு.
  என் அலுவலகத் தோழியார் தன் மூன்று வளர்ந்த குழந்தைகளை நாகப்பட்டிணம் சுனாமியில் பறிகொடுத்தார். அதிலிருந்து தேறி அலுவலரான தன் கணவருடன் பெற்றோரை இழந்த சுமார் 30 குழந்தைகளைத் தத்தெடுத்துத் தாயாக வாழ்கிறார் என்று அறிந்து நெகிழ்ந்தேன்.
  போற்றப்பட வேண்டிய செயல். நிகழ்ந்த படைப்பு.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  ReplyDelete