Monday, September 23, 2013

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

Published: September 24, 2013 09:25 IST Updated: September 24, 2013 09:25 IST

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

ரவிக்குமார்
 
படம்: டி.சிங்காரவேலு
 
 
வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்றார் கார்ல் மார்க்ஸ். அதை நமது நாட்டுக்குப் பொருத்திப்பார்த்தால் ‘இந்திய வரலாறு என்பதே சாதிப் போராட்டங்களின் வரலாறு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு இந்திய சமூகத்தை நிர்ணயிக்கும் அம்சமாக இன்றும் சாதி என்பது செயல்பட்டுவருகிறது. நாம் கௌரவக் கொலைகளின் காலத்தில் வாழ்கிறோம்.
சாதிப் போராட்டங்களின் தொகுப்பாக விளங்கும் இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் தவறாமல் இடம்பெற வேண்டிய நிகழ்வு பூனா ஒப்பந்தம். 1932- செப்டம்பர் 24-ம் தேதி பூனாவில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைதான் ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.
தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகுக்கும் வகுப்புவாரி உரிமையை தலித் மக்கள் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வாதாடிப் பெற்றனர். முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் முதலானோருக்கு அதற்கு முன்பே அத்தகைய உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தலித் மக்களுக்கு அதை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசின் முடிவை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். "இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என இந்தியாவில் மூன்று வகுப்பினரை மட்டும்தான் அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்க வேண்டும். கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய மற்ற மூன்று பிரிவினருக்கும் அரசியல் சட்டத்தில் எந்த இடமும் வழங்கப்படக் கூடாது. அவர்கள் மற்ற பிரிவினரோடு கலந்துவிட வேண்டும்" என்பதுதான் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸார் கலவரச் சூழலை ஏற்படுத்தினார்கள். ஆங்காங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டார்கள். தலித் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய ரத்தக் களறி நடக்கும் என்ற அச்சத்தின் காரணமாக காந்தியைச் சந்தித்துப் பேச்சு நடத்த அம்பேத்கர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே ‘பூனா ஒப்பந்தம்’.
பூனா ஒப்பந்த நாளை தமது உரிமை பறிக்கப்பட்ட துரோக நாளாக தலித் மக்கள் கடைப்பிடிப்பது வழக்கம். தலித் மக்கள்தமது உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அந்த ஒப்பந்தம் பறித்துக்கொண்டது உண்மைதான் என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் தலித்துகளை ஒரு தரப்பாக அங்கீகரித்து அவர்களோடு இந்துக்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள் என்ற விதத்தில் அதுவொரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படவேண்டும்.
பூனா ஒப்பந்தம் பெரும்பாலும் தேர்தல் தொடர்பான அம்சங்களையே கவனத்தில் கொண்டிருந்தது என்றாலும் பிறப்பின் அடிப்படையில் பேதம் பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிற ஒரு பிரிவும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. "ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அரசுப் பதவிகளில் நியமிக்கப்படும்போதோ உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போதோ எந்த விதமான இடையூறும் ஒருவருக்கு செய்யப்படக் கூடாது. அவற்றிலெல்லாம் நியாயமான அளவில் அவர்கள் இடம்பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியின் ஆலோசனையின்படி 1932 செப்டம்பர் 30-ம் தேதி மும்பையில் மாநாடு ஒன்றுகூட்டப்பட்டு ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் மையக் குழுவில் அம்பேத்கரும், தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். அந்த அமைப்பு உண்மையிலேயே பயனுள்ள வேலைகளைச் செய்யும் என அம்பேத்கரும் மற்றவர்களும் எதிர்பார்த்தனர். அந்த நேரத்தில் அம்பேத்கர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததால் ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ செய்ய வேண்டியவை குறித்த தெளிவான செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ஏ.வி. தக்கருக்கு அனுப்பிவைத்தார்.
காந்தியோ தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பிற உறுப்பினர்களோ அம்பேத்கரின் திட்டம் குறித்துக் கருத்தெதுவும்சொல்லவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட எழுதவில்லை. அதனால் அம்பேத்கரும் எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து விலகினார்கள். அந்த அமைப்பின் பெயரை ‘ஹரிஜன சேவா சங்கம்’என காந்தி மாற்றியமைத்தார். அது தீண்டாமையை ஒழிப்பதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்கள் சிலருக்குப் பதவி வழங்குவதற்கான ஏற்பாடாகச் சுருங்கிப்போனது.
காந்தி காலத்தில் மட்டுமல்ல; தலித் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் காலங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தலித் மக்கள் மீதான தமது கரிசனையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், நெருக்கடி முடிந்ததும் அந்தத் திட்டங்களும் குப்பைக்குப் போய்விடும். தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதில் உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு அக்கறையிருந்தால் அதற்கான திட்டத்தைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். அம்பேத்கர் 1932-ல் தயாரித்தளித்த திட்டம் இப்போதும்பொருத்தமாகவே இருக்கிறது.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பிரச்சார இயக்கம், சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்தல், சமூகக் கலந்துறவாடுதல், தொண்டர்களை உருவாக்குதல் - இந்த நான்கு அம்சங்களைக் கொண்டதே அம்பேத்கர் தயாரித்தளித்த அந்தத் திட்டம். அதில் முதல் அம்சத்தை மட்டும் நிறைவேற்றினாலே போதும், வன்கொடுமைகள் பெருமளவில் குறைந்துவிடும்.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுதல் தொடர்பாக அம்பேத்கர் முன்வைத்தது இதுதான்: " தீண்டாமை எதிர்ப்புக் கழகத்துக்குக் கிராமப் பகுதிகளில் தொண்டர்களை உருவாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராட நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்தத் தொண்டர்கள் உதவ வேண்டும்."
இப்படியொரு வேலைக் கிராமங்களில் நடந்தால், "இந்து சமூகத்தில் புரட்சி நடக்கும். அத்தகைய சமூகப் புரட்சி நடக்காமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அந்தஸ்து பெறுவது ஒருபோதும் கைகூடாது" எனக் கருதிய அம்பேத்கர், "சாதி இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களிடம் பரிவோடுஇருப்பவர்கள், தேவைப்பட்டால் தமது உற்றார் உறவினர்களை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
அம்பேத்கர் முன்வைத்த திட்டம் ஓர் அமைப்பு செய்ய வேண்டிய பணிகளை மட்டுமின்றி ஒவ்வொரு தனிமனிதரும் செய்ய வேண்டிய பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் சாதியிலிருந்து விடுபட வேண்டும், தான் பிறந்த சாதியின் நலனைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்த தீர்வு. சுருக்கமாகச் சொன்னால் ‘சொந்த சாதியின் நலனுக்குத் துரோகம் செய்யும் ஒருவர்தான் ஜனநாயகத்துக்குக் காவலராக இருக்க முடியும்.’
பூனா ஒப்பந்தத்தால் பறிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனச் சிலரும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் எனச் சிலரும் இப்போது வலியுறுத்திவருகின்றனர். தலித் மக்களின்உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் விதமாக நமது நாட்டின் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியம்... தலித் மக்களுக்கான குடிமை உரிமைகளை வென்றெடுப்பது!
ரவிக்குமார், எழுத்தாளர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

Sunday, September 22, 2013

குருபூஜை அரசியலுக்கு முடிவுகட்டுவோம்!


குரு பூஜை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன். அரசியல் தலைவர்களும்,தமிழக அரசும் அவற்றை ஏற்று நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும்.
’குரு பூஜை அரசியல்’ ஆபத்தான பரிமாணங்களை எடுத்துவருகிறது. அதை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே நான் வலியுறுத்திவந்தேன். இப்போது அந்தக் கருத்து நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் அலட்சியம் செய்யாது என நம்புகிறேன்.

மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டவுடன் கலவரம் மூண்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்டதும் வரலாறு. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறது என்றாலும் குருபூஜைகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியம் என்றே கருதுகிறேன். 

இந்தியாவெங்கும் மதக் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாடு அமைதிகாத்தது. ஆனால், அண்மைக்காலமாக இங்கே சாதி வெறிப் பிரச்சாரம் அதிகரித்து பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவெறியின் பின்னால் போலியான தேசியவாதமாவது முன்வைக்கப்படுகிறது. ஆனால் சாதிவெறியோ மக்களைத் துண்டு துண்டாக்கிச் சிதறடிக்கிறது. அந்தவிதத்தில் மதவெறியைவிடவும் சாதிவெறி ஆபத்தானதாகக் கருதப்படவேண்டும். 

’நமது சட்டங்கள் தீண்டாமையைத் தான் குற்றமாக அறிவித்துள்ளன. சாதி நம்பிக்கையைத் தவறு என்று சொல்லவில்லை’ என்பது உண்மைதான். ஆனால், சாதி நம்பிக்கை என்பது சாதிப் பெருமிதமாக மாறி, சாதி வெறியாக வெளிப்படும்போது அது சமூக சமத்துவத்தை அச்சுறுத்துகிறது,  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. குருபூஜை விழாக்கள் சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும் அவை கலவரங்களுக்கு வழிவகுப்பது இதனால்தான். எனவே ஒருபுறம் சாதிப் பெருமிதத்தை ஊக்குவித்துக்கொண்டு இன்னொருபுறம் சாதிக் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.. 

குருபூஜைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதும் தேவையா என தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.”இந்திய சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள், தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றியவர்கள் – அவர்களது வாழ்க்கையையும், சாதனைகளையும் தற்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு” இந்த விழாக்கள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. சுமார் ஐம்பது விழாக்கள் இப்படி தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. அந்தப் பட்டியலை சமூகரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் பாரபட்சம் வெளிப்படுமென்பது ஒருபுறமிருக்க, அரசே இப்படி விழாக்களைக் கொண்டாடுவதுதான் சாதி அமைப்புகள் குருபூஜைகளை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைகிறது. எனவே அவற்றையும் தமிழக அரசு கைவிடவேண்டும். 

நன்றி: புதிய தலைமுறை 21.09.2013

Saturday, September 21, 2013

ததேகூவின் வெற்றி: இலங்கை அரசின்மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கப் பயன்படவேண்டும்!



இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் வெற்றியைத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். அது இயல்பானது.ஆனால் இந்த வெற்றி ராஜபக்‌ஷே அரசுக்கும் பயன் தரக்கூடியது.நியாயமான முறையில் தேர்தலை நடத்தியிருக்கிறோம் என சர்வதேசத்தின் முன் அவர்கள் சொல்லிக்கொள்ள இந்தத் தேர்தல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பல்வேறு அச்சுறுத்தல்கள், ராணுவத்தின் மூலமான நெருக்குதல்கள் எல்லாவற்றையும் மீறித்தான் தமிழர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருக்கின்றனர் என்றாலும் இந்தத் தேர்தலை நடத்தியதற்காக இலங்கை அரசை சர்வதேசம் பாராட்டவே செய்யும். 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் , ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் பயணம், காமன்வெல்த் மாநாடு என புறக் காரணிகள் பல இந்தத் தேர்தலின் பின்னால் இருந்தாலும் இந்தத் தேர்தலில் ததேகூ பெற்றிருக்கும் வெற்றி இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை மட்டுப்படுத்த அதற்குக் கை கொடுக்கும். 

வெற்றி பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசு குறித்து எம்மாதிரியான சித்திரத்தை சர்வதேசத்தின் முன்னால் வைக்கப் போகிறது? என்பதில்தான் இலங்கை அரசின்மீதான சர்வதேச அழுத்தம் எப்படி உருமாறும் என்பது தங்கியிருக்கிறது. அது உடனடியாக அரசாங்கத்துடன் சண்டைபிடிக்க முடியாது. ஆனால் தாங்கள் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை அது மறந்துவிடக்கூடாது. எதற்காக இப்படியொரு மாபெரும் வெற்றியைத் தமக்கு மக்கள் தந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும். 

தற்போது இலங்கை அரசின்மீது சர்வதேசத்தில் அதிகரித்துவரும் அழுத்தத்தைத் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு சாதகமாக ப் பயன்படுத்துவதில் ததேகூ உடனடிக் கவனம் செலுத்தவேண்டும். 

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் விருப்பங்கள் இந்த வெற்றியோடு முழுதுமாக ஒத்துப் போகவில்லை. அவர்கள் இன்னும் ஆயுதப் போராட்டக் கனவிலேயே இருக்கிறார்கள். இப்போதாவது அவர்கள் தமது மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட முன்வரவேண்டும். 
 
ததேகூ வின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்கள் சரணாகதிப் பாதைக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனினும் இப்போதே அவர்களைத் தாக்கி அவர்களுக்கு மதிப்பில்லாமல் ஆக்கிவிட்டால் அது அவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக்கும் மக்களை அவமதிப்பதாகவே அர்த்தமாகும். இதைப் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் குறிப்பாக Tamilnet இணையதளத்தை நடத்தும் நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது ஆலோசனை அல்ல. வேண்டுகோள்!

Thursday, September 19, 2013

NIKARI AWARD INVITE

நிகரி - சமத்துவ ஆசிரியர் விருது




மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்
நிகரி - சமத்துவ ஆசிரியர் விருது 
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.
இதற்கான விழா இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே .வசந்திதேவி அவர்கள்விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.  . 

Saturday, September 14, 2013

Nikari award invite


நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது
இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது. 

அம்பேத்கர்,  தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் குறிப்  பிட்டிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் இளையபெருமாள் காலத்திலிருந்ததைப்போலவே சமத்துவமற்ற நிலை இன்றும் தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால்  அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நிலவவில்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இது களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு
(National Advisory Council - NAC)  ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.ஆனால் அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
பள்ளிகளில் மட்டுமின்றி உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவ்வாறு இடையூறுகளுக்கு உள்ளான தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அறிவோம்.

இத்தகைய பாகுபாடுகளைப் போக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆங்காங்கே எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் இந்த நிலையை எதிர்த்துத் தம்மால் இயன்ற வழிகளில் போராடிவருகின்றனர். தலித் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். சந்தடியில்லாமல் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.
இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். 
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதற்கான விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
ரவிக்குமார்