அன்பின் ரவிக்குமார், 
சுடு
 சுடு என்ற செய்திக்கு மிகவும் நன்றி. எங்கோ இருக்கும் என்போன்றவர்களுக்கு 
இதெல்லாம் விரைவில் காதில் விழாது. என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை, 
நல்லவேளை! 
சில கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பிறரும் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள் என்றும் பார்ப்போம். 
 என் கருத்து: 
அடடா,
 தமிழகத்தில் போராட்டத்துக்கு இதைவிட நல்ல காரணம் கிடைக்கவில்லையா? 
தமிழகத்தில் மக்கள் எல்லாரும் மிக நல்ல வாழ்க்கை (வயிற்றுக்கு வேண்டிய 
உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, மருத்துவ வசதி போன்ற இன்ன பிற 
வசதியோடு) வாழ்ந்துகொண்டு, "நேரம் போதவில்லை" என்ற நிலை போய் "நேரம் 
போகவில்லை" என்ற சொகுசு நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. நேரம் 
போக்குவதற்கு ஏதாவது ஒரு போராட்டம் வெளிக்கீடு. 
போராட
 வேண்டுமானால் வேறு ஒரு நல்ல காரணம் சொல்கிறேன். தமிழகத்துத் தெரு 
ஒவ்வொன்றும் பாதுகாப்புடன், துப்புரவாக இருக்கவேண்டும். தெருக்களில் குப்பை
 இருக்கக் கூடாது. தெருக்கள் கழிப்பறை போன்று அமையக்கூடாது. ஒவ்வொரு 
தெருவையும் ஒரு போரட்டக்காரர் "தத்து" எடுத்துக்கொண்டு அந்தத் தெருவின் 
பாதுகாப்புக்கும் தூய்மைக்கும் பொறுப்பு ஏற்கவேண்டும். இதைச் செய்வார்களா? 
போராட
 வேண்டுமானால் இன்னொரு நல்ல காரணம் இருக்கு. தமிழகத்தில் யாரும் பிச்சை 
எடுக்கக் கூடாது. பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு நல்வாழ்வு அமைத்துத் 
தரவேண்டும். ஒவ்வொரு போராட்டக்காரரும் ஒரு பிச்சைக்காரரைத் "தத்து" 
எடுத்துக்கொண்டு அவர்களுக்கு இருக்க இடமும் உடுக்க உடையும் உண்ண உணவும் 
ஏற்பாடு செய்யலாமே! செய்வார்களா? 
பெயர்ப்
 பலகைக்கும் கிடைக்கும் உணவுப்பொருளுக்கும் 100% பொருத்தம் இல்லை. 
கலிபோர்னியாவில் அண்மையில் "Madura Indian ..." என்ற ஓர் உணவகம் 
திறந்தார்கள். அதற்கும் மதுரைக்கும் 100% தொடர்பு இல்லை.   
அது
 சரீ ... ... ... இந்தப் போராட்டக் கழகத்தொண்டர் யாரும் தமிழகத்தில் 
இருக்கும் "ஐயங்கார் பேக்கரி"யிலிருந்து எதையும் வாங்கித் தின்னதே 
இல்லையா??? 
இந்தக் குறிப்பிட்ட  'பிராமணாள் காபி கிளப்'  பலகை அழிப்புப் போராட்டம்
 தொடங்கியவர்களுக்குச் சமையல் கலையின் நெளிவு சுளிவுகளும், உணவு வகைகளின் 
அருமையும் தெரிந்தாற்போல் இல்லை. பண்டைத் தமிழ் ஆற்றுப்படை இலக்கியங்களைப் 
படிக்கச்சொல்லுங்கள். வகை வகையான உணவுகள் பலவகைப் பட்ட மக்களின் இடங்களில் 
கிடைப்பது பற்றிய செய்தி இருக்கும். அந்தணர் குடியிருப்பில் தயிரும், 
மாதுளையும், மாவடுவும் கிடைக்கும். பரதவர் குடியிருப்பில் மீன், நண்டு 
கிடைக்கும். இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இனத்தவரின் உணவு கிடைக்கும்.
 ஓரிடத்திலும் பெயர்ப் பலகை இருந்ததில்லை. ஆனாலும், அந்தந்தச் சமையலின் 
மணம் எவரையும் உண்ண அழைக்கும். வழிப்போக்கர்களாகிய பாணர்க்கும் 
விறலியர்க்கும் வேறு எப்படி உணவு கிடைத்திருக்கும்? அங்கே எவரும் போய் இந்த
 மாதிரிப் போராட்டம் நடத்தின மாதிரிக் குறிப்பே இல்லை! பண்டைத் தமிழ், 
பண்டைத் தமிழ் என்று பாடுகிறவர்கள் இதையும் நினைத்துப் பார்க்கவேண்டுமே! 
அதோடு,
 இன்னொன்றும் சொல்கிறேன் -- சில சில உணவு வகைகளைக் குறிப்பிட்ட 
இனத்தவர்தான் சிறப்பாகச் செய்யமுடியும்; அதற்கு மரபும் பழக்கமுமே காரணம். 
ஐயர் வீட்டில் கிடைக்கும் பருப்பு உசிலி, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, 
சேப்பங்கிழங்குக் கறி; செட்டியார் வீட்டில் கிடைக்கும் மண்டி, கந்தரப்பம், 
கவுணி அரிசி, பணியாரம், கும்மாயம்; சௌராட்டிரர் வீட்டில் கிடைக்கும் 
இட்டிலி; பிள்ளைமார் வீட்டில் கிடைக்கும் இடியப்பம், ஆப்பம்,  ... 
இதெல்லாம் எல்லா இடத்திலும் ஒருபோலக் கிடைக்காது; மக்களுக்குச் சமைக்கவும் 
தெரியாது. இப்படிக் கிடைத்ததைச் சுவைத்தவர்கள் நானும் என் தோழியரும். 
எப்படி என்றால் எல்லாரும் என் தோழியர். எங்களுக்குள் பகைமை பாராட்டினதே 
கிடையாது. 
போராட்டக்காரர்களை
 வெளிநாட்டுக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள். அவர்களை வெளியே சாப்பிடக் 
கூட்டிப் போகிறவர்கள் கேட்கும் முதல் கேள்வி: எந்த மாதிரிச் சாப்பாடு 
பிடிக்கும்? தாய்லாந்து உணவா? வியட்நாம் உணவா? சீன உணவா? எத்தியோப்பியன் 
உணவா? 
மொராக்கன் உணவா? ... இப்படி. 
வகைப்படுத்துதல்
 என்பது தமிழர்களுக்குத் தொன்மைப்பட்ட வழக்கம். சும்மாக் கிடந்த 
நிலத்தைக்கூட "ஐந்திணை நிலங்கள்" என்று பாகுபடுத்தின பெருமை நமக்கு. 
ஒவ்வொரு நிலத்துக்கும் இன்னின்ன பொருட்கள் உரியன என்றும் வகைப்படுத்தினோம்.
 குடிப்பெயர், குலப்பெயர் ... இப்படி வகைப்படுத்திய தொல்காப்பியத்தைத் 
தூக்கி எறியவில்லையே, ஏற்றுக்கொண்டோமே. 
உயர்ச்சி, தாழ்ச்சி சொல்லி ஒருவர் 
மற்றவரைப் புண்படுத்துவது தப்பு; கொடுமை. அது இல்லாவிட்டால், யார் தன்னை 
எந்தச் சாதிக்காரர் என்று சொல்லிக்கொண்டால் என்ன? 
அன்புடன்,
ராஜம் 
 
No comments:
Post a Comment