Kerala C M Ummanchandi speaks at Kerala Tamil Federation conference 12.10.2012
கேரள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டை கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி துவக்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார். அவர் பேசியதன் சுருக்கம் :
'' கேரளாவில் தமிழ்ச் சகோதரர்கள் நடத்தும் இந்த மாநாட்டுக்கு வரவேண்டும் என அழைத்ததும் நான் ஒப்புக்கொண்டேன். இடையில் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நான் இந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். நான் தமிழ்நாட்டுக்குப் போகும்போது அங்கிருக்கும் மலையாளிகளைப் பார்க்கிறேன்.. அவர்கள் கேரளாவில் இருப்பதைவிடவும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள். அதேபோல இங்கிருக்கும் உங்களையும் நாங்கள் பாதுகா ப்போம். தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான உறவு இன்று நேற்று உண்டானதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருவது. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் அங்கு மலையாளிகள் வாழும் மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தார். அதற்காக நான் அவரை நேரில் சந்தித்து நன்றி சொன்னேன். அதுபோல இங்கு ஐந்து மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு நாம் விடுமுறை அறிவித்திருக்கிறோம்.
இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்கு இடையில் சற்று வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. நாங்கள் இப்போது தரும் நீரில் ஒரு சொட்டுகூடக் குறைக்க மாட்டோம். நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய அணை . அதற்கு ஆபத்து வந்தால் லட்சக்கணக்கான மலையாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் புதிய அ ணை கட்டவேண்டும் என்கிறோம். அணை இருக்கும் பகுதியில் பூகம்ப ஆபத்து இருக்கிறது என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் .
கேரளத்தில் இருக்கும் தமிழர்கள் அனைத்து உரிமையோடும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்து. தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவையில் தமிழிலேயே பேசுகிறார். அதற்கு இங்கே இடம் இருக்கிறது. உங்களது தேவை எதுவென்றாலும் நான் அதை நிறைவேற்றித் தருவேன். ''
( கேரள முதல்வர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வியப்பளித்தது. அது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்படுத்திய முன்னுதாரணம். ஆனால் தமிழ்நாட்டிலோ திராவிட கலாச்சாரத்தைப் பின்பற்றுபவையாக இடதுசாரிக் கட்சிகளும் மாறிவிட்டன)
No comments:
Post a Comment