Tuesday, August 23, 2011

எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டுக்குச் சாவு மணி -ரவிக்குமார்

சாதி அடிப்படைவாதம் தர்க்கபூர்வமான தனது அடுத்த அவதாரத்தை எடுக்கிறது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரில் க்ரீமி லேயராக சில சாதிகள் உருவாகிவிட்டன, எனவே அவற்றுக்கு இனிமேல் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று இப்போது ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல (?) வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இப்போது மத்திய அரசுக்கும் , மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கைத் தொடுத்திருக்கும் ஓ.பி.சுக்லா என்பவர் எஸ்.சி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் இதில் கவனிக்கப்படவேண்டியது. வால்மீகி என்ற சாதியைச் சேர்ந்த சுக்லா எஸ்.சி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ச்மார்,மாலா, மஹார்,மீனா, துசாத் மற்றும் தோபி ஆகிய சாதிகளுக்கு இனிமேல் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ரமணி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 341 மற்றும் 342 ஆகியவற்றை மறு ஆய்வுசெய்யவேண்டும். ஒரு சாதியை எஸ்.சி மற்றும் எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் இந்தப் பிரிவுகளுடைய அதிகாரம்,எல்லை போன்றவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று  கேட்டிருக்கிறார்.உன் கையைக் கொண்டே உன் கண்களைக் குருடாக்குகிறேன் என்பதுதானே சாதியவாதிகள் கையாண்டுவரும் தந்திரம்.அதற்கு சுக்லா கருவியாகியிருக்கிறார்.

ஏற்கனவே தலித் என்ற பொது அடையாளத்தை உடைக்கும் பணியில் சாதியவாதிகள் கணிசமான வெற்றியை அடைந்திருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீகக் குடிகள், குடிபெயர்ந்தவர்கள் என ஒரு பிரிவினையை உண்டாக்கி ஒரு மாநிலத்துக்குக் குடிபெயர்ந்து வந்தவர்கள் அங்கே இட ஒதுக்கீடு பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இன்று டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் , புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான தலித்துகள் இட ஒதுக்கீட்டு உரிமையை மட்டுமல்ல குடியிருப்பு உரிமையையும் இழந்தார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களை இதே காரணத்தைச் சொல்லி மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எஸ்.சி என்று குறிக்க மறுத்தார்கள் என்ற செய்தியை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

அடுத்ததாக எஸ்.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்ற பெயரால் அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி அதை மோதலாக வளர்த்தெடுத்தார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் மாலா - மாதிகா முரண்பாடு , இனி சரிசெய்யப்படவே முடியாத பகையாக வளர்க்கப்பட்டது இதற்கொரு உதாரணம். இப்போது அடுத்த தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது.1965 ஆம் ஆண்டு லோகுர் கமிட்டி எஸ்.சி/எஸ்.டி பிரிவினரில் சில சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று பரிந்துரைத்ததாகவும் அந்தப் பரிந்துரைகளை இப்போது அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டும் என்றும்  தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொதுநல வழக்கில் கேட்டிருக்கிறார்கள். இதன் தர்க்கபூர்வ வளர்ச்சி தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டுவதில்தான் போய் முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.ஏனென்றால் லோகுர் கமிட்டி அதைத்தான் சொல்லியிருக்கிறது.

எஸ்.சி/எஸ்.டி அட்டவணையை மறு ஆய்வு செய்வதற்காக 1965 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி மத்திய அரசால் அப்போது சட்ட அமைச்சகத்தில் செயலாளராக இருந்த பி.என்.லோகுர் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ’ சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சமூக மாற்றம் வேகமடைந்திருக்கிறது. கல்வி , பொருளாதார நிலைகள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. வழக்கமான சமூகத் தடைகள் குறிப்பாக நகரப் பகுதிகளில் தகர்ந்துபோய்விட்டன. ... நாங்கள் சந்தித்த பிரபலமான நபர்கள் எல்லோரும் ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள், ’கடந்த 15 ஆண்டுகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் , மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சலுகைகளை நிறுத்திவிடுவதற்கான காலம் வந்துவிட்டது... எனவே குறைந்தபட்சம் இந்த (எஸ்.சி/எஸ்.டி) அட்டவணையை ரத்து செய்வதற்கான கால வரையறையாவது செய்யப்படவேண்டும் ’என்று சொன்னார்கள். இந்த அட்டவணையில் இருக்கும் பெரிய முன்னேறிய சாதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அட்டவணையிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியிருந்த லோகுர் கமிட்டி , இந்தப் பரிந்துரையை அரசு உடனடியாகப் பரிசீலிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. அதைத்தான் இப்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொதுநல வழக்கிலும் கேட்டிருக்கிறார்கள்.இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கும் சுக்லாவும் அவருக்காக வாதாடும் வழக்கறிஞர்களும் 1969 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைப் படித்துப் பார்க்கவேண்டும்.  இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமண்ர உறுப்பினராக இருந்த திரு.எல்.இளையபெருமாள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி மத்திய சமூக நலம் மற்றும் சட்டத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. ""Report of the committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes and Connected Documents 1969" என்ற தலைப்பிலான அந்த அறிக்கை சுமார் 500 பக்கங்கள் கொண்டதாகும்.அதில், இந்தியாவெங்கும் எஸ்.சி/எஸ்.டி மக்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகளை பட்டியலிட்டிருந்த திரு இளையபெருமாள் அவர்களது கல்வி,சமூக,பொருளாதார நிலைமை கொஞ்சங்கூட முன்னேற்றமடையவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். "சுதந்திரம் அடைந்து இருபத்தொரு ஆண்டுகள் கழிந்த நிலையில் கல்வி அறிவு சதவீதத்தில் பொது பிரிவினருக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருப்பதைப் பார்க்க முடிகிறது. 1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் கல்வியறிவு பெற்றோரின் சதவீதம் 24 %ஆகும். ஆனால் தாழ்த்தப்பட்டோரில் அது 10.27% தான். பல்வேறு மாநிலங்களில் இந்திய அளவிலான நிலையை விடத் தாழ்த்தப்பட்டோரின் கல்வி நிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது." என்று அந்த அறிக்கையில் திரு.இளையபெருமாள் புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

" பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக மேற்குவங்கம், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், பீஹார், மைசூர் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வி வளர்ச்சி மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது. அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி வீணாக்கப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. எனவே இந்த மாநிலங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து வெளியிடப்படும் அரசு ஆணைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை. தொழிற்கல்வியில் 15% இடங்களைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்படட போதிலும் பல மாநிலங்கள் அதை கடைபிடிக்கவில்லை. சில மாநிலங்கள் கொள்கை அளவில் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதனால் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் சேர்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஸ்காலர்ஷிப்புகளை வழங்குவதிலும் தேவையற்ற தாமதம் நேர்கிறது. மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வி அடையலாம் மறுபடி தோல்வி அடைந்தால் அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடையாது. பிற பாடங்களைப் பயில்கிறவர்கள் தோல்வி அடைந்து விட்டால் அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதுமாக நிறுத்தப்படும் என அரசு உத்தரவிட்டிருப்பதால் தேர்வில் ஒருசில பாடங்களில் தோல்வியடையும் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் இல்லாததால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே இருக்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்துகின்ற முயற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொதுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென்று ஒதுக்கப்படும் ஸ்காலர்ஷிப்புகளில் 7.5 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் கல்வித்துறை இடஒதுக்கீட்டைச் சரியானபடி நடமுறைப்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென்று நடத்தப்படும் விடுதிகள் அந்த மாணவர்கள் பிறந்து வளர்ந்த குடிசைகளைவிடவும் கேவலமான நிலையில் உள்ளன. ஆரம்பக்கல்வியில் அதிகப்படியான தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்ப்பதற்கு கவனம் செலுத்தப்படாத காரணத்தால் அவர்களில் கல்வி சதவீதம் உயரவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கல்வி தேக்கமடைந்து இருப்பதற்கு இவையெல்லாம் சில காரணங்கள்." என்றும் இளையபெருமாள் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. லோகுர் கமிட்டிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இந்த நிலையென்றால் லோகுர் கமிட்டி சொல்லியிருப்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்வேறு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை ஆய்வு செய்து மிகுந்த சிரத்தையோடும், பொறுப்புணர்வோடும் தயாரிக்கப்பட்ட இளையபெருமாள் குழு அறிக்கை மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டது.பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி ஆராய்வதற்கு  மண்டல் தலைமையில் குழு அமைக்கப்படுவதற்கு முன்பே இளையபெருமாள் குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையை ,அதில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லி எந்தவொரு வழக்கும் இதுவரை தொடுக்கப்படவில்லை. ஆனால் பச்சைப் புளுகும் ,காழ்ப்புணர்வும் கொண்ட லோகுர் கமிட்டி அறிக்கையை நிறைவேற்றச் சொல்லி தலித்துகளைவைத்தே வழக்கு போடுகிறார்கள். இதுதான் சாதியவாதிகளின் சாமர்த்தியம்.

அம்பேத்கர் பெயரை உச்சரித்து அரசியல் செய்பவர்கள் எல்லோரும் தமது மனசாட்சியைத் தொட்டுப்பார்த்துக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர் வாதாடிப் போராடிப் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டு உரிமையை விரிவுபடுத்த இந்திய அளவில் எந்தவொரு தலித் இயக்கமும், கட்சியும் தீவிரமான போராட்டங்களை நடத்தவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொருத்தமட்டில் குத்தகையிலும், ஒப்பந்தப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தேர்தல் பாதையில் காலெடுத்து வைக்காத காலத்திலேயே முழங்கியது , போராட்டங்களை நடத்தியது. அதுபோலவே மாநிலங்கள் அவை உள்ளிட்ட மேலவைகளிலும் , பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் முதலான அவைகளிலும், பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுத்தது.தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டது.  ஆனால், இந்த முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து ஈழப் பிரச்சனைக்குப் போராடியதுபோல வன்மையான , தொடர்ச்சியான போராட்டங்களை அது எடுக்கத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்று ஒருபுறம் அண்ணா அசாரேவின் இயக்கம் பிரதிநிதித்துவ முறையையும்,  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையும் தகர்த்துக்கொண்டிருக்கிறது, மறுபுறம் நீதித் துறை தன் பங்குக்கு தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. மண்டல் கமிஷன் வழக்கில் சம்பந்தமே இல்லாமல் தலித்துகளின் இட ஒதுக்கீட்டில் கைவைத்தது உச்ச நீதிமன்றம்.இப்போது க்ரீமி லேயர்  சாதிகள் என்ற பெயரில் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் இருக்கின்ற எண்ணிக்கை பலம்கொண்ட சாதிகள் எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.பிற்படுத்தப்பட்டோருக்கு க்ரீமி லேயர் என்று பொருளாதாரத்தில் முன்னேறியவர்களைத்தான் விலக்கப் பார்த்தார்கள். இங்கோ சில சாதிகளையே விலக்கப் பார்க்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பொருளாதார அளவுகோல் ஆனால் தலித்துகளுக்கோ சமூக அளவுகோல். என்னவொரு தந்திரம் பார்த்தீர்களா?

இப்போதாவது தலித் இயக்கங்கள் விழித்துக்கொள்ளுமா? சாதியவாதிகளின் சதியைப் புரிந்துகொள்ளுமா? ஒன்றுபட்டுப் போராட வேண்டியதன் தேவையை அவை உணருமா? இன்னும் அம்பேத்கர் பெயரைச் சொல்லிக்கொண்டு சடங்குத்தனமான அரசியலுக்குள்ளேயே அவை முடங்கிக் கிடக்குமா ? என்ற கேள்விகள் நம் முன்னால் நிற்கின்றன. உணர்வுள்ள அனைவரும் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாருங்கள்.  
 

  

3 comments:

 1. respected sir,
  i m from obc..
  i studied at govt stanley medical college, in my college most of d SC category students were sons of Doctors or some other professionals in which d SC benefits have been used by their fathers...still they get all Benefits like no fees for exams, tuition fess ,applications fees like that..

  some of SC students were really true...why not extend the benefitis only for one generation...then benefits will reach all people of the category ?

  ReplyDelete
 2. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்ீடு இன்றுவரை சரியாக நிறைவு செய்யப்படவில்லை.தொழிற்கல்வி ,ஐ.ஐ.டி ோன்றவற்றில் ோட்டிகளைத் தாண்டி இரண்டாம் தலைமுறை படிப்பாளிகள்தான் நுழைய முடியும்.ஒரு தலைமுறைக்குத்தான் வாய்ப்பு என்ற உங்கள் அளவுோலை ஏன் எல்ோருக்கும் வைக்கக்ூடாது? அப்படி வைத்தால் டாடா,பிர்லா,அம்பானி ோன்ற முதலாளிகளின் பிள்ளைகள் தொழில்துறையில் ஆயிரக்கணக்கான ோடி ூபாய் மதிப்புகொண்ட சலுகைகளை அனுபவிக்க முடியாதில்லையா?

  ReplyDelete
 3. அட்டவணை சமுகத்தில் பலர் படித்து உயர் இடத்தில் வந்து உள்ளார்கள் என்பது ஏற்றுகொள்ள வேண்டியதுதான் இருந்தாலும் மற்ற சமுகத்தை கட்டிலும் மிக குறைவு ? தலித் சமுகத்தை சார்ந்த ஒருவர் கூட பொது இடத்தில் ஒரு மளிகை கடை கூட வைத்து பிழைப்பு நடத்த முடியாத நிலை உள்ளது ? இதை போக்க இந்த வளந்த சமுகம் வழிகாட்டும ?

  ReplyDelete