Friday, August 12, 2011

வேண்டாம் மரண தண்டனை - ரவிக்குமார்பேரறிவாளன்
முருகன்
                              

சாந்தன்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களைக் குடியரசுத்தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரு.கே.ஆர்.நாராயணன், திரு.அப்துல் கலாம் ஆகியோர் காலத்தில் நிராகரிக்கப்படாத இந்தக் கருணைமனுக்கள், இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான திருமதி. பிரதீபா பாட்டில் அவர்களின் பதவிக்காலத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவும்கூட நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 286 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்து இந்தியாவின் பல்வேறு சிறைகளில் இருக்கின்றனர். அவர்களுள் 44 பேர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் இருக்கின்றன. தற்போது நிகழ்ந்துவருபவற்றைப் பார்த்தால் அந்த கருணை மனுக்கள் எல்லாமே நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலை மனதில் வைத்தும், வளர்ந்துவரும் பா.ஜ.க வின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடும்தான் இத்தகைய செயல்களைக் காங்கிரஸ் அரசு செய்கிறது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதன் பின்னாலிருக்கும் அரசியல் எதுவாக இருந்தாலும் மனித குலத்துக்கே எதிரான மரண தண்டனை முறையை  எதிர்ப்பது நம் கடமை. 2008 ஆம் ஆண்டு நான் ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன். 

குற்றம் இழைத்த ஒருவருக்கு வழங்கப்படுகிற தண்டனையின் நோக்கம் அவர் மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுப்பது மட்டுமல்ல, அவரைத் திருந்தச் செய்வதும்தான். தவறு செய்த ஒரு நபரை பழி வாங்குவதற்கும் அவரைத் தண்டிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பல சமயங்களில் குற்றத்தின் கொடூரத்தன்மை நம்மை உணர்ச்சிவயப்படுத்தி, நிதானம் இழக்கச் செய்து விடுகிறது. அப்போது நாம் நீதி வழங்குவதற்கும், பழி தீர்ப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை காணத் தவறிவிடுகிறோம். சிறு குழந்தை ஒன்று கொடூரமாக கொல்லப்படும்போது, அபலைப்பெண் ஒருவர் அநியாயமாகச் சீரழிக்கப்படும்போது, பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் சிதறிச் சின்னாபின்னமாகும்போது அதைக் காணுகிற நமக்குள் மேலோங்குவது பழி உணர்ச்சிதான். இந்தக் கொடுமைகளை எவர் செய்திருந்தாலும், அவரை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது என்றுதான் அப்போது நமது மனம் எண்ணும். ஆனால் அதையே ஆறஅமர யோசித்துப் பார்த்தால் நாம் வேறுவிதமான முடிவுக்கு வருவோம். நமது நீதி அமைப்பு பழி தீர்ப்பதற்கானதல்ல. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதை எந்தவொரு நீதி அமைப்பும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை. இந்த உண்மையை உணர்ந்ததால்தான் உலகெங்கும் மரண தண்டனை ஒழிப்புக்கான குரல் இப்போது வலுவடைந்து வருகிறது.
1980ஆம் ஆண்டில் உலகில் இருபத்தைந்து நாடுகள்தான் மரண தண்டனையை கைவிட்ட நாடுகளின் பட்டியலில் இருந்தன. இன்றோ தொண்ணூறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலும் பதினொரு நாடுகள் ராணுவ குற்றம் தவிர, சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை. இவைதவிர மேலும் முப்பத்திரண்டு நாடுகள் மரண தண்டனையை தமது சட்டப்புத்தகத்தில் வைத்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆக மொத்தத்தில் உலகில் 133 நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்த பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்யவேண்டுமென்று இங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சனை அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குகிற நேரத்திலேயே விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த விவாதத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்கள் மரண தண்டனை வேண்டாம் என்றுதான் வாதிட்டார்கள். கிரிமினல் வழக்குகளில் அப்பாவிகள்கூட தண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர்கள் விரிவாக எடுத்துக்கூறினார்கள். எனவே மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்தார்கள். அந்த விவாதத்தின் இறுதியில் பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ‘‘உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதைவிடவும் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விடுவதையே நான் ஆதரிப்பேன். இந்தப் பிரச்சனைக்கு அதுதான் சரியானத் தீர்வாக இருக்கும். நமது நாடு அகிம்சையைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ஒரு நாடாகும். நடைமுறையில் அதை முழுமையாக பின்பற்றாவிட்டாலும்கூட அகிம்சையை இயன்றவரை நாம் பின்பற்றுவதுதான் சரி. அப்படிப்பார்த்தால் மரண தண்டனை என்பதையே முற்றாக ஒழித்துவிடுவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார். அம்பேத்கரின் கருத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட அரசியல் நிர்ணய சபை மரண தண்டனையை ஒழிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் அதிகாரத்தை எதிர்கால நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுவது எனத் தீர்மானித்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு உருவான இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தே வந்துள்ளன. புகழ்பெற்ற நடிகரும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான பிருதிவிராஜ் கபூர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இதற்காக தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். 1937ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் மரண தண்டனைக்கு எதிராகப் பேசியிருக்கிறார். ‘‘மரண தண்டனை என்பது அகிம்சைக்கு எதிரானதாகும். உயிரை உருவாக்கியவர்தான் அதை எடுத்துக்கொள்ள முடியும். அகிம்சையின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஒரு அரசு கொலையாளியை மனந்திருந்தச் செய்வதற்கான வழிகளைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றங்கள் என்பவை நோய்களைப் போன்றவை. அதனால் பீடிக்கப்பட்டவர்களை நோயாளிகளாகக் கருதி வைத்தியம் செய்வதே சரியானதாகும்’’ என்று காந்தியடிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார் என்றபோதிலும், காங்கிரஸ்காரர்கள் காந்தியடிகள் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் என்று நமது நீதிமன்றங்கள் கூறி வருகின்றன. ஆனால் இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகளை ஆராய்ந்து ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும், மக்கள் சிவில் உரிமை கழகமும் (பியுசிஎல்) நூல் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் வழங்கப்படுகிற மரண தண்டனைகள் அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு நீதிபதியும், ஒவ்வொரு கோணத்தில் தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதை இந்த ஆராய்ச்சி நூல் அம்பலப்படுத்தி இருக்கிறது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்கின்படி 273 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இந்தியச் சிறைகளில் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 1967ஆம் வருடத்தைய சட்டக்கமிஷன் அறிக்கையின்படி 1954க்கும் 1963க்கும் இடையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1422 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகான விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்திலும்கூட மரண தண்டனை குறித்த விவரங்களை இந்திய அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது என ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுகின்ற வழக்குகளிலும், மதவாத வன்முறை சார்ந்த வழக்குகளிலும் குற்றவாளிகளுக்குப் பெரும்பாலும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. அதுபோலவே அரசியல் கட்சிகள் சார்ந்த வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தாராளமாகவே நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த ஆராய்ச்சி நூலில் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
மரண தண்டனையை எதிர்த்துப் பேசுவதென்பது எளிதானதல்ல. ஏனென்றால் மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றே சாதாரண மக்கள் எண்ணுகிறார்கள். உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதற்கு நேர் எதிரான முடிவுகளை முன்வைத்த போதிலும் மரண தண்டனை வேண்டாமெனச் சொல்வது சற்று கடினமானதுதான். அதிலும் குறிப்பாக குற்றவாளிகள் நீண்டகாலமாகத் தப்பித்து வந்த வழக்குகளில் பொதுமக்களின் நிர்ப்பந்தம் காரணமாக இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படும்போது அது தவறு என்று சொல்வதற்கு மிகுந்த மனத்துணிவு தேவைப்படுகிறது. பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாகத் தண்டனையிலிருந்து தப்பித்து வந்தார். அதுபற்றிய பொதுமக்களின் கூக்குரல் காரணமாகவே இறுதியில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது மரண தண்டனை வேண்டாம் என மனித உரிமை அமைப்புகள்கூட சொல்ல முன்வரவில்லை.
அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கயர்லாஞ்சி வழக்கும் அத்தகையதுதான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கயர்லாஞ்சி என்ற கிராமத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி நான்கு தலித்துகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். சுரேகா என்ற தாயும், பிரியங்கா என்கிற அவரது பதினேழு வயது மகளும், ரோஷன், சுதிர் ஆகிய இரண்டு மகன்களும் அந்த ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள். அந்தச் சம்பவத்தில் பையாலால் போட்மாங்கே என்ற அந்த குடும்பத் தலைவர் மட்டுமே உயிர் பிழைத்தார். ‘‘மருத்துவமனைக்கு ஒரு சவத்தை எடுத்து வந்தார்கள். அது எனது மகளின் சடலம். அந்த உடலின் மீது ஒட்டுத்துணி கூட இல்லை. எங்கு பார்த்தாலும் காயங்களாக இருந்தது. எனது மகன்கள் சுதிர், ரோஷன் மற்றும் எனது மனைவி சுரேகா ஆகியோருடைய உடல்களிலும்கூட பலத்த காயங்கள் காணப்பட்டன. எனது மனைவியின் ஜாக்கெட் கிழிக்கப்பட்டிருந்தது. பாவாடையும்கூட கன்னாபின்னாவென்று கிழிக்கப்பட்டிருந்தது. அவளது மண்டை பிளந்திருந்தது. மூளை வெளியே ஒழுகிக்கொண்டிருந்தது. ஒரு கண்ணைக் காணவில்லை’’ என்று அந்த சம்பவத்துக்குப் பிறகான காட்சியை விவரிக்கிறார் பையாலால். இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை கூட உடனே பதிவு செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க தலித்துகள் கிளர்ந்தெழுந்து போராடிய பிறகே வழக்கு பதியப்பட்டது. அதன் பின்னர் அது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சாதி கொடுமை காரணமாகவே இந்த படுகொலை நடந்ததென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீதிமன்றமோ அது முன்விரோதத்தால் நடந்த கொலை என்று கூறியதோடு எட்டு பேர் மட்டுமே குற்றவாளிகள் எனவும் அறிவித்தது. குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை பத்து நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்போவதாக நீதிமன்றம் கூறியவுடன் நாடெங்கும் தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தார்கள். அதன் காரணமாகவோ என்னவோ ஆறு பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் மரண தண்டனை வழங்குவதற்கான அடிப்படைகள் அனைத்தையும் நீதிமன்றம் காலி செய்துவிட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது என நீதிமன்றம் சொன்னது மட்டுமின்றி கற்பழிப்பும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. எனவே மரண தண்டனை வழங்குவதற்கான தர்க்கம் இந்த வழக்கில் இல்லாமல் போய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால் மேல்முறையீட்டில் இந்த தண்டனை எளிதாக ரத்தாகிவிடும். அதற்கான வழிகளை நீதிமன்றமே ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
முதலில் நீதிமன்றத்தின் அணுகுமுறையை கண்டு கொதித்தெழுந்த தலித்துகள் மரண தண்டனை விதித்ததும் ஆறுதல் அடைந்து விட்டனர். அதைக் கொண்டாடவும் தொடங்கி விட்டனர். சுதந்திர இந்தியாவில் தலித்துகள் கொல்லப்பட்ட சாதிய வன்முறை வழக்கொன்றில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன் முறை என்பதால் அவர்களது மகிழ்ச்சி நியாயமானதே. ஆனால் இங்குதான் நாம் உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சனையை அணுக வேண்டி உள்ளது. இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதால் இந்தியாவில் தலித்துகள் மீதான தாக்குதல் குறைந்து விடுமா? என்பதை தலித் இயக்கங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தனது கணவரைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினியின் மரண தண்டனையைக் குறைப்பதற்கு சோனியாகாந்தி அவர்கள் முன்முயற்சி எடுத்ததை நாமெல்லாம் பாராட்டுகின்றோம். அதுபோலவே 1999ல் ஒரிசாவில் இந்துத்துவவாதிகளால் உயிரோடு எரிக்கப்பட்ட பாதிரியார் ஸ்டெய்ன்ஸின் மனைவி அந்தக் குற்றவாளிகளை மன்னித்ததை பெருமையோடு குறிப்பிடுகின்றோம். அதே அளவுகோலை இங்கும் நாம் கடைபிடிக்க வேண்டாமா? பொத்தாம்பொதுவாக மரண தண்டனை வேண்டாம் எனச் சொல்வது பெரிய காரியமல்ல. பாதிக்கப்பட்ட தரப்பினரே அதைச் சொல்ல முன்வரும்போதுதான் அதற்குக் கூடுதல் பலம் கிடைக்கிறது.
இந்தியாவில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அந்தத் தண்டனை அத்தகைய குற்றவாளிகளை மனந்திருந்தச் செய்து மனிதர்களாக மாற்றுகின்ற தண்டனையாக இருக்கவேண்டும். எதிர்வரும் அக்டோபர் பத்தாம் நாளை மரண தண்டனைக்கு எதிரான நாளாக கடைபிடிக்குமாறு உலகெங்கும் இருக்கின்ற மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. எந்தவொரு தலித் இயக்கமும் அடிப்படையில் ஒரு மனித உரிமை இயக்கம் தான். அதை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்பு இது. கயர்லாஞ்சி படுகொலையில் முழுமையான நீதி வேண்டும் என்று கோருகிற அதே வேளையில் அந்தக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்றும் குரல் எழுப்ப தலித் இயக்கங்கள் முன் வரவேண்டும். மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்ன அண்ணல் அம்பேத்கருக்கு அவர்கள் செய்யும் மரியாதை அதுவாகத்தான் இருக்கும்.

நன்றி: ஜுனியர் விகடன் 05.10.2008

1 comment:

  1. if I have kill any DK, DMK, PMK, leader brutally do you accept it, if you struggle for me,
    if the court death sentence grand to me, are you stop it?

    MUST WANT DEATH SENTENCE

    ReplyDelete