Saturday, August 6, 2011

பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கம்பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கம் இன்று ( 06.08.2011) காலை 10 மணிக்கு புதுச்சேரி, ராம் இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது. மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்குக்கு ரவிக்குமார் தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைகழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பெ.மாதையன், சென்னைப் பல்கலைகழக மொழியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் கா.பஞ்சாங்கம், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மே.து.ராசுகுமார், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர். பக்தவத்சல பாரதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் ரவிக்குமார் தொகுத்து வெளியிட்டிருக்கும் ‘ நூர்ந்தும் அவியா ஒளி- பேராசிரியர் கா.சிவத்தம்பி குறித்த நினைவுகளும் மதிப்பீடுகளும்’ என்ற நூலை புதுச்சேரி ஃப்ரெஞ்ச் நிறுவனத்தின் கீழ்த்திசை ஆய்வுப்பள்ளியைச் சேர்ந்த(EFEO) கல்வெட்டியல் அறிஞர் கோ.விஜயவேணுகோபால் அவர்கள் வெளியிட பேராசிரியர் ராஜ்கௌதமன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
மணற்கேணி - இருமாத இதழின் ’சிவத்தம்பி சிறப்பிதழை’ பேராசிரியர் வீ.அரசு வெளியிட எழுத்தாளர் இமையம் பெற்றுக்கொண்டார். 

ரவிக்குமார் தனது தலைமையுரையில் “சிவத்தம்பி ஒரு கல்வியாளர் மட்டுமல்ல, அவர் சமூக, அரசியல் தளங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இலங்கையில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் செல்வாக்கு பெறுவதற்கு முன்பு சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டபோது மனித உரிமை அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர்களைப் பாதுகாத்தவர் சிவத்தம்பி. எரிக் சோல்ஹைம் போன்றவர்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பே இலங்கை அரசுக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்துக்கு வழிகண்டவர். ஒரு கட்டத்தில் தமிழர் பகுதிக்கு முதல் அமைச்சராக நியமிக்கப்பட இருந்தவர். அவருடைய ஆய்வு, தமிழ் நாடகங்கள் தொடங்கி இலக்கணம், இலக்கிய வரலாறு, சிறுகதைகளின் தோற்றம் குறித்த ஆராய்ச்சி என விரிவடைந்தது. எந்தத் துறையாக இருந்தாலும் அதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கக்கூடியவராக இருந்தார்.தமிழ் நாட்டில் தலித் இலக்கிய ,அரசியல் எழுச்சி ஏற்பட்டபோது அதை எதிராகப் பார்க்காமல் வரவேற்றவர்.அதுபோலவே அமைப்பியல்வாதம், பின் நவீனத்தும் முதலான சிந்தனைகளையும் நேர்மறையாகப் பார்த்து அவை உருவாக நேர்ந்த சமூக, கருத்தியல் பின்னணிகளைக் கண்டுசொன்னவர் சிவத்தம்பி.அவர் தனது நூல்களில் ‘மேலாய்வுக்கு உரியது ‘ எனத் தொட்டுக்காட்டிச் சென்றிருக்கும் பகுதிகளை விரிவுபடுத்தி ஆய்வுசெய்தாலே போதும், சிறந்த ஆய்வேடுகள் உருவாகும் என்பது மட்டுமல்ல தமிழ்ச் சிந்தனையுலகும் வளம் பெறும்” என்று குறிப்பிட்டார். 

முனைவர் பக்தவத்சல பாரதி, பேராசிரியர் சிவத்தம்பியின் பண்பாட்டு ஆய்வுகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். ”தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழ்ச் சமூகம் பலவிதங்களில் வேறுபட்டது. அங்கே இன்னும் தாய்வழிச் சமூகத்தின் நல்ல விழுமியங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமூகம் பலவிதங்களில் தனித்தன்மை கொண்டதாக இருப்பதை சிவத்தம்பி எடுத்துக்காட்டியிருக்கிறார்.ஒரு குடும்பத்தின் சொத்தை சீதனம், முதுசம் , தேடிய தேட்டம்  என மூன்றாக அங்கே பிரிக்கிறார்கள், சீதனம் என்பது தாய்வழியில் வருவது.முதுசம் என்பது தந்தைவழியில் வருவது, தேடிய தேட்டம் என்பது ஒருவரது சுய சம்பாத்தியத்தில் வருவது. இவை மூன்றிலுமே பெண்ணுக்குப் பங்கு உண்டு. இத்தகைய தனித்தன்மைகளையெல்லாம் சிவத்தம்பி விளக்கியிருக்கிறார்” என்றார்.

பேராசிரியர் பஞ்சாங்கம் பேசும்போது கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது சிவத்தம்பியை சந்தித்ததை நினைவுகூர்ந்தார்.” இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் சமூக அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். சிவத்தம்பியிடமிருந்து நாம் முக்கியமாகக் கற்றுக்கொள்ளவேண்டியது அவரது சமூக அக்கறையைத்தான். கைலாசபதியும் ,சிவத்தம்பியும் சமூக அக்கறையோடு இருந்ததற்கு அவர்களது மார்க்சியச் சார்பு ஒரு முக்கிய காரணம்.இடதுசாரிச் சார்பு இருந்தாலும் அவர் ஒருபோதும் நிறுவனமயப்பட்டுவிடவில்லை” என்றார் பஞ்சாங்கம். 

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், தான் தமிழ் எம்.ஏ படிப்பில் சேர்ந்ததும் சிவத்தம்பிக்குக் கடிதம் எழுதியதாகவும் முன்பின் தெரியாத மாணவனான தன்னையும் மதித்து பல்வேறுவிதமான வழிகாட்டுதல்களைத் தந்து நான்கு பக்கக் கடிதமொன்றை சிவத்தம்பி எழுதியதாகவும் குறிப்பிட்டார்.மார்க்சியக் கண்ணோட்டம் இருந்ததனால்தான் இலக்கியத்தையும் சமூகத்தையும் அரசியலையும் அவரால் சரியாக அணுகமுடிந்தது என்று அவர் சொன்னார். "இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த ஜோசப் நீதாம் போன்ற மார்க்சியச் சார்பு விஞ்ஞானிகளின் கருத்துக்களைஎல்லாம் அவர் அறிந்திருந்தார். அவற்றைத் தன் எழுத்துக்களில் பயன்படுத்தினார்." என்றும் அவர் குறிப்பிட்டார்.   

பேராசிரியர் மே.து.ராசுகுமார் , “ பேராசிரியர் சென்னையில் தங்கியிருந்தபோது ஒரு விருப்பத்தை வெளியிட்டார். இலங்கை அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களையும் அனுபவங்களையும் எழுதித்தருகிறேன்,ஆனால் அவற்றைத் தான் இறந்தபிறகே வெளியிடவேண்டும் என்று கூறினார். ஆனால் அவரது கண்பார்வை பழுதுபட்டதால் அவரால் அதை எழுதமுடியாமல் போய்விட்டது. நிறுவனம் சார்ந்து இருப்பதால் ஒருவர் சரியாக சிந்திக்கமுடியாது என்று சொல்லமுடியாது. சிவத்தம்பி துவக்க காலம் முதலே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்புகொண்டுதான் இருந்தார். கோவை மாநாட்டுக்கு வருவதற்கு முன்புகூட இங்கிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டுதான் வந்தார்.” என்றார்.

பேராசிரியர் பெ.மாதையன் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் சிவத்தம்பியின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.புதிதாக செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கேற்பத் தனது  ஆய்வு முடிவுகளை மாற்றிக்கொள்ள அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.ஐராவதம் மகாதேவனின் நூல் வெளியானதும் அதைப்பற்றி விரிவாக எழுதினார். அதுபோலவே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் குறித்த பேராசிரியர் ராஜனின் கருத்துகளையொட்டித் தனது பார்வையை மாற்றிக்கொண்டார். வேளாண் சமூகத்தில்தான் உபரி உற்பத்தி அதிகமாக இருக்கும் எனவே அங்குதான் அரசுருவாகத்துக்கான வாய்ப்புகள் அதிகம் என்று எழுதிவந்த அவர் ராஜனின் புத்தகத்தைப் படித்தபிறகு வேளாண்மை அவ்வளவு சிறப்பாக இல்லாத சேர நாட்டில் எப்படி அரசுருவாக்கம் நடந்தது என்பதையும் அங்கு அயல்நாட்டு வாணிபத்தின் அடிப்படையில் உபரி உற்பத்தி நடந்ததையும் உணர்ந்து தனது எழுத்தில் பதிவு செய்தார். அதுமட்டுமின்றி சொற்களுக்கும் அவற்றின் சமுதாயப் பின்புலங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர் அவர்.  இறுதிவரை அவர் துடிப்போடு செயல்பட இத்தகைய ஆய்வு அணுகுமுறையே காரணம்” என்றார்.  

இறுதியாகப் பேசிய, பேராசிரியர் வீ.அரசு ” சிவத்தம்பியின் பங்களிப்பு மூன்று விதங்களில் முக்கியமானது. தென்னிந்திய வரலாற்றை அதிலும் குறிப்பாகத் தமிழக வரலாற்றை  ஆய்வுசெய்ய முற்படுகிற ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் உள்ளிட்ட வட இந்திய ஆராய்ச்சியாளர்கள்  சிவத்தம்பியின் ஆய்வேட்டையும் அவர் உலகத் தமிழ் மாநாடுகளில் வாசித்த கட்டுரைகளையும்தான் பெரும்பாலும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.சமூக வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று காட்டியவர் சிவத்தம்பி. அது தமிழக வரலாறு குறித்த தெளிவுக்கு வழிவகுத்தது. இரண்டாவதாக, அவர் தமிழ்க் கவிதையியல் மற்றும் அழகியல் குறித்து செய்திருக்கும் ஆய்வுகள். அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மூன்றாவதாக, அவர் ஊடக அரசியல் குறித்து எழுதியிருப்பவை. அத்தகைய கட்டுரைகள் வெகுசன ஊடகங்களைப் புரிந்துகொள்ள மிகவும் பயன்படக்கூடியவை.” என்றார்.

கருத்தரங்கில் புதுவை , கடலூர் , திண்டிவனம் , விழுப்புரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் புதுவைப் பல்கலைக்கழகம், தாகூர் கலைக்கல்லூரி, மதகடிப்பட்டு மற்றும் மைலம் ஆகிய இடங்களில் இருக்கும் கல்லூரிகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான மாணவர்களும், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். 

3 comments:

 1. அன்புள்ள ரவிக்குமார்,

  மிக்க நன்றி!

  மிக அருமையான பகிர்வு,
  மிக நேர்த்தியான நிகழ்வுச்சுருக்கவுரை!

  நல்வெற்றியுடன் நடந்தேறி, பயனுள்ள கருத்துப்
  பரவல் ஏற்பட்டமை கண்டு மகிழ்ச்சி!

  அன்புடன்
  செல்வா

  ReplyDelete
 2. அன்புள்ள ரவிக்குமார்,

  பேராசிரியர் சிவத்தம்பிக்குச் சிறப்பான ஒரு கருத்தரங்கு நடத்தியிருக்கிறீர்கள்.
  ஒரு நினைவு நூலும், மணற்கேணி சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறீர்கள்.
  சிவத்தம்பியின் குடும்பத்தினர், நண்பர்கள் இதையிட்ட மிகுந்த மனநிறைவு அடைவார்கள் என்று நம்புகிறேன். என் நன்றிகளும் பாராட்டுகளும்.
  நுஃமான்

  ReplyDelete
 3. வணக்கம்
  நன்றி. நான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு நெருங்கிப் பழகியவனல்ல. அவரைப் போன்ற ஒரு ஆளுமைக்கு சங்க இலக்கியங்களைப் பயிலத் தொடங்கியுள்ள ஒரு மாணவனாகிய என்னால் செய்ய முடிந்த சிறிய மரியாதை இது.' நூர்ந்தும் அவியா ஒளி' என்ற அந்தத் தலைப்பு நீங்கள் மா ஒ க்கு எழுதிய அஞ்சலிக் கவிதையின் ஒரு வரியை சற்று மாற்றி அமைத்ததுதான்.
  நீங்கள் முன்னர் அனுப்பி வைத்திருந்த உங்களின் ஆங்கில நூலை நேற்று படித்துக்கொண்டிருந்தேன். உங்களின் கடின உழைப்பு புலப்பட்டது.
  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் உங்களைச் சந்தித்தது என் அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்கிறேன்.
  அன்புடன்
  ரவிக்குமார்

  ReplyDelete