Tuesday, November 27, 2012

சில்லறை வர்த்தகர்களின் சிந்தனைக்கு

அதுவொரு சனிக்கிழமை – அமெரிக்க அதிபர் ஒபாமா சிறிய புத்தகக் கடை ஒன்றில் தன் இரண்டு மகள்களுடன் நுழைகிறார். கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுப்பதற்கு குழந்தைகளுக்கான பதினைந்து புத்தகங்களை வாங்குகிறார்.  அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் ‘ ஸ்மால் பிசினஸ் சாட்டர்டே ‘ என்ற நிகழ்வின் பகுதியாக அவர் செய்த ’ஷாப்பிங்’ அது. சிறு வணிகர்களை ஊக்குவிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு முதல் ’ஸ்மால் பிசினஸ் சாட்டர்டே’ அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. சில்லறை வர்த்தகம்தான் அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவருகிறது.அதை வலுப்படுத்துவதற்கே இந்த ஏற்பாடு. 

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க இந்திய பிரதமர் ஒற்றைக்காலில் நிற்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவோ சிறு வணிகர்களை ஊக்குவிக்கிறார். மன்மோகன் சிங்கைப்போல ஒபாமா ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. தனது நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதர், அவ்வளவுதான்.

கடந்த நான்கு நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்படவேண்டும் என அவை வலியுறுத்துகின்றன. அரசுக்குப் போதிய ஆதரவு இருக்கிறது என மன்மோகன் சொன்னாலும் அதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால்தான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இன்று ( 27.11.2012 ) தி.மு.க அறிவித்திருக்கும் முடிவால் ஆளும் காங்கிரஸ் சற்றே தெம்போடு பேசத் தொடங்கியிருக்கிறது என்றாலும் முலாயமும் மாயாவதியும் எடுக்கும் முடிவில்தான் அரசின் ஆயுள் தொங்குகிறது. இப்போது தேர்தல் வந்தால் பல கட்சிகளுக்கு லாபம். அதனால் அவை தேர்தலை வரச்செய்ய முயற்சிக்கின்றன. தி.மு.க வும் கூட அப்படி நினைக்கலாம்.

சில்லறை வர்த்தகத்தைப் பற்றி இப்போதாவது  நாம் சிலவற்றைப் பேசியாகவேண்டும். அந்நிய பெருமுதலாளிகள் இந்தியாவில் வந்து சுரண்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்கிற அதே  நேரத்தில் இங்கிருக்கும் சில்லறை வணிகத்தை சாதியப் பிடியிலிருந்து மீட்டெடுப்பது குறித்தும் நாம் பேசியாகவேண்டும். அது சாதியப் பிடியில் சிக்குண்டு கிடப்பதால்தான் நவீனமயமாகாமல் தேங்கிக் கிடக்கிறது. விவசாயிகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தமது லாபம் ஒன்றையே நினைத்துச் செயல்படுகிறவர்கள்  நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் வணிகர் அமைப்புகள் தமிழ்த் தேசிய கொள்கை பேசுவதைப் பார்க்கிறோம். ஈழத் தமிழருக்கான போராட்டங்களிலும் அவை தம்மை அவ்வப்போது ஈடுபடுத்திக்கொனடன. அவர்கள் தமிழர் ஒற்றுமையிலும் முன்னேற்றத்திலும் நம்பிக்கை கொண்டிருப்பது உணமைஎன்றால் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் சாதி பெயர் இடம்பெறாமல் நீக்குவதற்கு முன்வரவேண்டும். தமது நிறுவனங்களில் சமூக நீதியைக் கடைப்பிடிக்கும் விதமாக வேலைவாய்ப்புகளையும் பகிர்ந்தளிக்க முன்வரவேண்டும்.

இன்று விவசாயத் துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது . காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதும் இடைத் தரகர்கள் சுரண்டிக் கொழுப்பதும் நியாயமாக இருக்க முடியாது. இத்தகைய குறைகளைக் களைவதற்கு தமிழகத்தில் இருக்கும் வணிகர் அமைப்புகள் முன்வருமா  ?

No comments:

Post a Comment