Wednesday, November 28, 2012

காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ் - ரவிக்குமார் இலக்கியத்துக்கானநோபல் பரிசு பெற்று முப்பது ஆண்டுகள் ஆகும் நிலையில் பத்திரிகையாளராக மார்க்யெஸ்  என்ன செய்தார் என்பதை விவரிக்கும் நூலொன்று ஸ்பானிஷ் மொழியில் வெளியாகவுள்ளது . அத பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அதைப் படிக்கும் நிலையில் அவர் இருக்கிறாரா என்பதுதான் தெரியவில்லை 
========================================================================


காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைப் படித்தபோது அவரது மரணச் செய்தியைக் கேட்டதுபோல நான் துணுக்குற்றேன்.மார்க்யெஸுக்கு சின்னச் சின்ன விஷயங்கள்கூட மறந்துவிடுகின்றன. அவர் அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து சாதாரண விஷயங்கள் பற்றியெல்லாம் விசாரிக்கும்போது எனக்கு அழுகைவருகிறது. இந்தமாதிரியான நோய் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே வந்திருக்கிறது. அவர் இனிமேல் எழுதுவது சாத்தியமில்லைஎன்று அவரது சகோதரர் சொல்லியிருக்கிறார். ஒரு படைப்பாளிக்கு நினைவுகள் மரித்துப் போவதுபோல ஒரு கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. பௌதீக உடலின் மரணத்தைவிடவும் துயரமானது அது.அந்தக் கொடுமை மார்க்யெஸுக்கு நேர்ந்திருக்கிறது.
தற்காலத் தமிழ் இலக்கியத்தை லத்தீன் அமெரிக்க எழுத்துகள் பாதித்த அளவுக்கு நமது அண்டை மாநிலங்களின் இலக்கியங்கள் பாதித்ததில்லை. மார்க்யெஸின் மேஜிக்கல் ரியாலிஸ எழுத்து முறை குறித்து இங்கே பேசப்பட்டபோது தமிழ் எழுத்தாளர்கள் பலரை அது மிரளச் செய்தது. நமது புராணங்களில் இல்லாத ‘மேஜிக்காஎன்று அவர்கள் நடுக்கத்தோடு பலவீனமாகக் குரல் எழுப்பியதையும், அவர்களை மிரட்டுவதற்கென்றே தமிழில் உருவாக்கப்பட்ட சில ‘மேஜிக்கல் ரியாலிஸப் படைப்புகளையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மார்க்யெஸ் பற்றிய செய்தியைப் பார்த்ததும் ‘லிவிங் டு டெல் த டேல்என்ற அவரது சுய சரிதையை மீண்டும் படிக்க ஆரம்பித்தேன்.

1982 ஆம் ஆண்டு தனது ஐம்பத்து நான்காவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற மார்க்யெஸ், லத்தீன் அமெரிக்காவின் தனித்துவம்மிக்கப் படைப்பாளிகளுள் ஒருவராகத் திகழ்பவர்.சட்டப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் படைப்பாளியாக மாறியவர். நமது வாழ்க்கை எவ்வளவோ வசதியானது என நம்மை எண்ண வைக்கும் அளவுக்கு வறுமையை அனுபவித்தவர். மின்சாரக் கட்டணம் அதிகமாகிவிடும் என்பதற்காக இரவில் நீண்டநேரம் படிப்பதற்கு அவரை வீட்டில் அனுமதிக்கமாட்டார்களாம். ஆனால் படிப்புதான் அவரது வாழ்க்கையைத் தீர்மானித்தது. மாண்ட்டிசோரி பள்ளியில் படிக்கும்போது தனது வீட்டில் கிடந்த பழைய புத்தகம் ஒன்றை அவர் படித்திருக்கிறார். சில ஆண்டுகள் சென்றபிறகுதான் அது ‘ஆயிரத்தொரு இரவுகள்என்ற புத்தகம் என்பது அவருக்குத் தெரிந்தது. அவரை நான்காம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவரது அம்மா அழைத்துச் சென்றபோது பள்ளியின் தலைமை ஆசிரியர் நீ என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறாய்?என்று கேட்க அவரிடம் தான் படித்த புத்தகங்களின் பட்டியலைச் சொன்னதும் அவர் உடனே பள்ளியில் சேர்த்துக்கொண்டாராம்.

எப்படி அவர் ஒரு எழுத்தாளராக மாறினார் என்பதை மார்க்யெஸ் தனது சுயசரிதையில் விவரித்திருக்கிறார். மார்க்யெஸின் ரூம் மேட்களில் ஒருவரான டொமிங்கோ மானுவெல் வேகா என்ற மருத்துவ மாணவர் அவ்வப்போது அவருக்குப் படிப்பதற்கு புத்தகங்கள் தருவார். ஒரு நாள் இரவு அவர் மூன்று புத்தகங்களை எடுத்து வந்தார் அதில் ஒன்றை மார்க்யெஸிடம் தந்தார். அது, காஃப்கா எழுதிய ‘மெட்டமார்பசிஸ்’ . “ இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் புத்தகம் அதன் முதல் வாக்கியத்திலிருந்தே எனது வாழ்வின் திசையைத் தீர்மானித்துவிட்டது . . . . உண்மைகளை ( ஒரு படைப்பில் ) நிரூபணம் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு படைப்பாளி ஒரு உண்மையை எழுதும்போது அவரது திறமை, அவரது குரலின் உறுதி ஆகியவற்றைத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் அதற்குத் தேவையில்லைஎன்று அந்தக் கதை தனக்கு உணர்த்தியது என்கிறார் மார்க்யெஸ். அந்தக் கதைதான் அவரை எழுத்தாளனாக்கியது.

காஃப்காவின் கதையைப் படித்த உத்வேகத்தில் சிறுகதை ஒன்றை மார்க்யெஸ் எழுதினார். ”’எல் எஸ்பெக்டேடர் பத்திரிகையின் ஆசிரியரான எடுவர்டோ சலாமியாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினேன். கதையோடு அந்தக் கடிதத்தை இணைத்து ஒரு உறையில் போட்டு அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்று வரவேற்பறையில் கொடுத்தேன். ஆசிரியரைப் பார்ப்பதற்கு அங்கே அனுமதித்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு எனக்குத் தைரியமில்லை. வரவேற்பறையிலேயே கொடுத்துவிட்டு ஓடிவந்து விட்டேன்.. . .  இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன, ஒரு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, எல் எஸ்பெக்டேடர் பத்திரிகையின் முகப்பில் பெரிதாக த தேர்டு ரிசைனேஷன்என்ற எனது சிறுகதையின் தலைப்பு அச்சிடப்பட்டுக் கடையில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பத்திரிகையை வாங்குவதற்கு ஐந்து ஸெண்டோவா காசு என்னிடம் அப்போது இல்லைஎன்று கூறுகிறார் மார்க்யெஸ். தனது வறுமையின் மிகவும் வெளிப்படையான அடையாளம் அது என்கிற அவர் , தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவரது கையில் அந்தப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதை அவரிடம் கெஞ்சிக் கேட்டு வாங்கிவந்து தனது கதையை வரிவிடாமல் படித்ததாகக் குறிப்பிடுகிறார்.
தான் அனுபவித்த வறுமையை விவரிக்கும்போதுகூட அதை சுவாரஸ்யமான கதையைப்போல அவரால் சொல்ல முடிகிறது.  தான் தங்கியிருந்த விபச்சார விடுதியையொத்த ஹோட்டல் அறையின் வாடகைப் பணத்தைத் தர முடியாமல் ஒருமுறை தனது நாவலின் கையெழுத்துப் படிகளை அவர் அடகு வைத்திருக்கிறார்;  தங்குவதற்கு இடமின்றி இரவுகளில் தெருக்களில் அலைந்திருக்கிறார்; பாரீஸ் நகரின் மெட்ரோவில் ஒருமுறை பிச்சைகூட எடுத்திருக்கிறார்.  தனக்குக் காசு போட்டவன், தான் சொன்ன காரணத்தைக் கேட்காமலே போனதுதான் மிகவும் சோகமானது என்று கூறும் மார்க்யெஸ் முதன் முதலில் மெக்ஸிகோவில் பத்திரிக்கையொன்றில் உதவி ஆசிரியராகச் சேருவதற்குப் போனபோது தனது ஷுவின் கீழ்பாகம் பிய்ந்து ஓட்டையாகி இருந்ததை நினைவு கூர்கிறார். அவர் பத்திரிகையாளராக சேர்ந்தபோது ஒரு கட்டுரை எழுதினால் அவருக்குத் தரப்பட்ட ஊதியம் வெறும் மூன்று பெசோக்கள் மட்டும்தான். அதாவது, முப்பது ரூபாய். 
நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டாலும் மார்க்யெஸின் அடிப்படையான ஆர்வம் கவிதை.  இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞனென பாப்லோ நெருடாவைக் குறிப்பிடும் மார்க்யெஸ், "நெருடா, மிதாஸ் போல - அவர் தொட்டதெல்லாம் கவிதையாகிவிட்டது"  என்கிறார்.  ஜிபாக்குரா என்னும் இடத்தில், தான் படித்த மோசமான கவிதைகளின் காரணமாகத்தான் இலக்கியத்தில் ஆர்வமேற்பட்டது.  அப்போது ஒருபக்கம் அந்தக் கவிதைகளையும் மறுபக்கம் தனது வரலாற்று ஆசிரியர் ரகசியமாகத் தரும் மார்க்சியப் புத்தகங்களையும் தான் படித்ததாகக் கூறுகிறார்.

தங்களது யுத்த அனுபவங்களை மட்டுமே நினைவுகூர்ந்து பேசிக் கொண்டிருக்கும் கிழவர்களால் சூழப்பட்ட தாத்தா; தங்களது சவத் துணிகளைத் தாங்களே நெய்து கொள்ளும் அத்தைகள்; இறந்தவர்களின் ஆவிகளோடு உரையாடிக்கொண்டிருக்கும் பாட்டி; ஆவிகள் பெருமூச்செறியும் யாருமற்ற படுக்கையறைகள்; தோட்டத்து மல்லிகை மரம்; வாழைப் பழங்களை ஏற்றிச் செல்லும் புகை வண்டிகள்; பழத்தோட்டங்களினூடே பாயும் குளிர்ந்த நீரோடைகள் - மார்க்யெஸின் சிறிய பிராயத்தைச் சூழந்திருந்த இவைகளின் தடயங்களை அவரது எழுத்துக்களில் பார்க்கமுடியும்.  சிறுவனாக இருந்தபோது ஒருமுறை தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்குப் பிரசவம் ஆனதை ஒளிந்திருந்து பார்த்த மார்க்யெஸ், அதன்பிறகு ‘பாரிஸிலிருந்து கொக்குகள்தான் குழந்தைகளைக் கொண்டுவந்து போடுகின்றனஎன்று யாராவது சொன்னால் தனக்கு சிரிப்புத்தான் வரும் என்கிறார்.

மார்க்யெஸின் மீது அவரது தாத்தாவும் பாட்டியும் செலுத்திய தாக்கம் அதிகம். அது அவரது படைப்புகளில் தனது சுவட்டினை அழுத்தமாகப் பதித்திருக்கிறது. கலோனெல் நிக்கோலஸ் ரிக்கார்டோ மார்க்யெஸ் மெஜியா அதுதான் எனது தாத்தாவின்  முழுப்பெயர்.  நான் எனது வாழ்நாளில் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர் அவர்.  எங்களுக்குள் மிகச் சிறப்பான புரிதல் நிலவியது.  ஆனால் ஐம்பது ஆண்டுகள் கழித்து இப்போது அதை நினைத்துப்பார்க்கையில் அவர் அந்தப் புரிதலைப் பூர்த்தி செய்யவில்லை எனத் தோன்றுகிறது.  ஏனென்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால், எனது இளம் பருவத்தில் தோன்றிய இத்தகைய எண்ணம் எப்போதும் என்னை செயலிழக்கச் செய்கிறது.  அது மிகவும் சோர்வு தரும் ஒரு விசயம்.  அரித்துத் தின்கின்ற, தீர்க்க முடியாத குழப்பத்தோடு வாழ்வதுபோல அது.  ஏனென்றால் எனக்கு எட்டு வயதாகும்போது எனது தாத்தா இறந்துவிட்டார்.  அவர் இறக்கும்போது நான் பார்க்கவில்லை.  அந்தச் சமயம் அரகாடகாவிலிருந்து வெகு தூரத்திலுள்ள வேறொரு நகரத்தில் நான் தங்கியிருந்த வீட்டில் அந்தச் சாவு பற்றிப் பேசிக் கொண்டார்கள்.  அந்த நேரத்தில் அது எனக்குள் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.  ஆனால் இன்று எனக்கு ஏதாவது நடக்கும்போது குறிப்பாக நல்லது நடக்கும்போது இதைத் தெரிந்துகொள்ள தாத்தா இல்லையே என்று நினைத்துக் கொள்கிறேன்.” என்கிறார் மார்க்யெஸ்.

தாத்தாவைப் போலவே பாட்டியும் மார்க்யெஸின் நினைவை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். இன்றும்கூட என் கனவுகளில், எனது குழந்தைப் பிராயத்தின்போது வரப்போகும் கெடுதலைப் பற்றி இரவு நேரங்களில் ஏற்படும் முன்னுணர்வைப் போன்றதொரு உணர்வு என்னை அலைக்கழிக்கிறது.  அது கட்டுப்படுத்த முடியாத ஒரு உணர்வு நிலை.  ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கி விடியிலின் கிரணங்கள் என் கதவிடுக்குகள் வழியே வந்து எழுப்பும் வரை தூக்கத்தில் என்னை அரித்துத் தின்கிறது.  என்னால் அதை சரிவர விவரிக்க முடியவில்லை.  ஆனால் அத்தகைய முன்னுணர்வு  இரவில் எனது பாட்டியின் ஆவியும், உற்பாதங்களும் வேண்டுதல்களும் உருப்பெற்று உலவுவதோடு தொடர்புடையதென எனக்குத் தோன்றுகிறது.  அத்தகயைது எங்கள் உறவு, கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை எங்கள் இருவரையும் அதீத உலகத்தோடு பிணைத்து வைத்துள்ளது.  பகல் வேளைகளில் எனது பாட்டியின் மாந்திரீக உலகம் என்னை வசீகரிக்கும்.  என்னை உறிஞ்சிக் கொள்ளும்.  அதுவே என் உலகமாக இருக்கும்.  ஆனால், இரவு வந்துவிட்டால் அது என்னை பயமுறுத்தும், இன்றும்கூட உலகில் ஏதோ ஒரு பகுதியில், ஏதோ ஒரு அறிமுகமற்ற ஓட்டலில் தனியே தூங்கும்போது நான் அலறி விழித்துக் கொள்கிறேன்.  இருளில் தனியே இருப்பதால் உண்டாகும் பயத்தினால்.  அப்படி எழுந்துகொண்ட பிறகு மீண்டும் நான் அமைதியடைந்து தூங்குவதற்கு நெடுநேரமாகிவிடும்.  என்னுடைய தாத்தாவோ இதற்கு நேர் எதிரானவர்.  எனது பாட்டியின் நிலையற்ற உலகில் என் தாத்தா முழுமையான பாதுகாப்பின் குறியீடாக இருந்தார் அவர் இருந்தால் எனது பதற்றம் தணிந்துவிடும்.  திடமான தளத்தில் நிற்பதுபோல நான் உணர்வேன்.  வேடிக்கை என்னவென்றால் நான் எனது தாத்தாவைப்போல - யதார்த்தமாக, வீரமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றே விரும்பினேன்,  ஆனால் எனது பாட்டியின் உலகத்தினுள் எட்டிப் பார்க்க வேண்டும் என்ற இடைவிடாத தூண்டுதலை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லைஎன்று மார்க்யெஸ் கூறும்போது அவர் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை நாம் கண்டுகொள்கிறோம்.

என்னுடைய பாட்டி மிகவும் கொடூரமான விஷயங்களைப் பற்றி ஏராளமான கதைகளைச் சொல்வார்கள்.  அப்போதுதான் பக்கத்திலிருந்து பார்த்துவிட்டு வந்ததுபோல சொல்வார்கள்.  சந்தேகமே பட முடியாதபடி அவர் அவற்றைச் சொல்கிற விதமும், அவர் பேச்சில் காணப்படும் படிமங்களின் செறிவும் அவரது கதைகளை மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தவையாக மாற்றின என்று நினைக்கிறேன்.  நான் "ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சொலிட்யூட்" நாவலை எனது பாட்டியின் யுக்திகளைக்கொண்டுதான் எழுதினேன்.” என்று சொல்லும் மார்க்யெஸ், தனக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த அந்த நாவலை அவ்வளவு சிறந்த ஒன்றாகக் கருதுவதில்லை. தனது படைப்புகளில் ஆட்டம் ஆஃப் த பேட்ரியார்க்தான் சிறந்ததென்பது அவரது மதிப்பீடு.  அதுவொரு உரைநடைக் கவிதை என்று பெருமையோடு அவர் குறிப்பிடுகிறார்.

மாஜிக்கல் ரியாலிஸம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்றுதான் பலரும் கருதுவார்கள். ஆனால், தனது படைப்புகளின் அத்தனை வாக்கியங்களும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை என்கிற மார்க்யெஸ். நாவலில் வெளிப்படும் யதார்த்தம் என்பது கனவில் வெளிப்படும் யதார்த்தத்தை ஒத்ததுஎன்கிறார். "ஒரு நாட்டின், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் யதார்த்தத்துக்கு மட்டுமே கடமைப்பட்டிருப்பதல்ல எழுத்தின் பணி.  இந்த உலகம் முழுமைக்குமான யதார்த்தத்துக்கே எழுத்தாளன் கடப்பாடு கொண்டவனாயிருக்க வேண்டும். . . . ஒரு எழுத்தாளனின் கடமை நன்றாக எழுதுவதுதான் "  என்பது மார்க்யெஸின் உறுதியான நம்பிக்கை.
கியூபாவின் அதிபராக இருந்த காஸ்ட்ரோ முதல் உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பலரையும் நண்பர்களாகக் கொண்டிருப்பவர் மார்க்யெஸ். அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவராயிருந்த மரியோ வர்கஸ் ஜ்யோஸாவுக்கும் அவருக்கும் ஒருமுறை சண்டை வந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டது உலகறிந்த கதை. நம்மைப் புரிந்து கொள்ளாத ஒரு நண்பன், நண்பனே அல்ல என்பது என் அபிப்ராயம், நட்பில் நான் பால்பேதம் பார்ப்பதில்லை.  ஆனால் ஆண் நண்பர்களை விட பெண் நண்பர்களே பழகுவதற்கு இனிமையாக உள்ளனர்.  அவர்களோடு தான் சுமுகமாக உறவு கொள்ள முடிகிறதுஎன்பது மார்க்யெஸின் கருத்து.
எழுதுவது இன்பமானது மட்டுமல்ல மிகவும் துயரமானதும்கூட என்று கூறும் மார்க்யெஸ், செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் விடிகாலை இரண்டு மூன்று மணிக்கு செய்தித்தாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அதற்குப் பிறகு நான்கு ஐந்து பக்கங்கள் கூட எளிதாக எழுதியிருக்கிறார். ஆனால் நாள் ஆக ஆக அவர் எழுதுகிற வேகம் குறைந்துவிட்டது .அதற்குக் காரணம் வயதோ முதுமையோ அல்ல.பொறுப்புணர்ச்சி. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மிகவும் கனமுள்ளதாக மாறிவிடுகிறது.  அது ஏராளமான மனிதர்களைப் பாதிக்கிறது.  இதை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுகிறீர்கள்.” அது உங்களது எழுத்தின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.

செய்தியாளராக வேலைபார்த்த அனுபவம் அவரது படைப்புத் திறனுக்கு உதவியாக இருந்தது. 1955 ஆம் ஆண்டு கொலம்பியாவைச் சேர்ந்த கல்டாஸ் என்ற கப்பலில் போன எட்டு மாலுமிகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். பத்து நாள் கழித்து அதில் ஒரு மாலுமி மட்டும் உயிரோடு கரை சேர்ந்தார்.அந்த பத்து நாட்களைக் கடலில் அவர் எவ்வாறு கழித்தார், எப்படி அவர் கரை திரும்பினார் என்ற கதையை அந்த மாலுமி சொல்லச் சொல்ல தான் வேலைபார்த்த நாளேட்டில் மார்க்யெஸ் தொடராக எழுதினார். த ஸ்டோரி ஆஃப் எ ஷிப் ரெக்டு செய்லர்என்ற பெயரில் பின்னர் நூலாக வெளியிடப்பட்ட அது இன்றும் குழந்தைகளுக்கான சாகச நூல்களில் ஒன்றாக விளங்குகிறது. அதுபோலவே அவரது ‘க்ளாண்டைஸ்டன் இன் சிலிஎன்ற புத்தகமும் முக்கியமானது.  சிலி நாட்டின் சர்வாதிகாரி பினோசெ வின் ஆட்சி எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய ரகசிய டாகுமெண்டரிஆக்டா ஜெனெரல் டி சிலி’ என்பதாகும். அந்தப் படத்தை எடுத்த மிகுவெல் லிட்டின் எப்படி சிலிக்குள் போனார் எவ்வாறு அதைப் படமாக்கினார் என்பதை விவரிக்கும் புத்தகம் அது. ஒரு ரிப்போர்ட் கூட மார்க்யெஸ் போன்ற எழுத்தாளரால் எழுதப்படும்போது எப்படி ஒரு படைப்பாக மாறிவிடுகிறது என்பதற்கு அந்தப் புத்தகம் ஒரு சாட்சி.
ஒரு புத்தகத்தின் நடையை, அதன்அமைப்பை, அதன் நீளத்தை சோதித்துப் பார்க்கும் பரிசோதனைக் கூடமாக அதன் முதல் வாக்கியமே அமைந்துள்ளதுஎன்பதால், தனது படைப்புகளின்  முதல் வாக்கியத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தவர் மார்க்யெஸ். அவர் எழுதிய சிறுகதை ஒவ்வொன்றுக்கும் ஒரு காட்சி தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ‘ ஒரு விஷுவல் இமேஜ்தான் அவரது படைப்பு உருவாகும் துவக்கப் புள்ளி. சிறுவயதில் அவர் பார்த்த ஒரு காட்சி: தனது மடியில் பூனை ஒன்றை வைத்துக்கொண்டு அதைத் தடவிக்கொடுத்தபடி அழகான பெண் ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். அந்தப் பூனையாக மாறிவிட தான் விரும்புவதாக அவள் சொல்கிறாள். ஏன் என்று கேட்டபோது அந்தப் பூனை தன்னைவிட அழகாக இருக்கிறது என்று அந்தப் பெண் பதில் சொல்கிறாள். இந்தக் காட்சிதான் ஈவா ஈஸ் இன்சைட் ஹர் கேட்என்ற மார்க்யெஸின்  இரண்டாவது சிறுகதைக்கு அடிப்படை.

  நான் எப்போதுமே ஒரு பிம்பம் அல்லது காட்சியிலிருந்துதான் தொடங்குகிறேன்.  என்னுடைய சிறு கதைகளிலேயே சிறந்ததென நான் கருதும் "ட்யூஸ்டே சியஸ்டா" என்ற கதை, ஒரு பெண் மணியும் ஒரு இளம் பெண்ணும் கறுப்பு உடையணிந்து கறுப்புக் குடையை பிடித்துக்கொண்டு யாருமற்ற நகரத்தில் வாட்டியெடுக்கும் வெயிலில் நடந்து போனதைப் பார்த்ததால் தோன்றியது.  ஒரு கிழவர் தனது பேரனை அழைத்துக் கொண்டு சவ ஊர்வலமொன்றில் போனதைப் பார்த்து "லீஃப் ஸ்டார்ம்" உருவானது.  பராங்குல்லாவின் மார்க்கெட் பகுதியில் விசைப்படகு வருவதற்காகக் காத்திருந்த ஒரு ஆளைப் பார்த்ததுதான் "நோபடி ரைட்ஸ் டு தி கலோனல்" எழுதுவதற்குத் தூண்டுதல்.  என்கிறார் மார்க்யெஸ்.

புலம்பெயர்ந்து அலைவதை மையமாகக்கொண்ட பன்னிரெண்டு கதைகள் அடங்கிய ஸ்ட்ரேஞ் பில்க்ரிம்ஸ்என்ற தொகுப்பு மார்க்யெஸின் கதை சொல்லும் ஆற்றலுக்கு ஒரு உதாரணம். தினசரி வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அவரிடம் எப்படி அற்புதமான கதைகளாக மாறிவிடுகின்றன என்பதை அந்தத் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய படைப்பாளுமையாகத் திகழ்ந்த மார்க்யெஸுக்கு ஆதர்சமாக இருந்தது எது? இன்ஸ்பிரேஷன் என்பது ரொமான்ட்டிக்குகளால் நாசமாக்கப்பட்ட ஒரு வார்த்தை.  அதை ஒருஅனுக்கிரக நிலையாகவோ, அல்லது சொர்க்கத்திலிருந்து வரும் உயிர்மூச்சு என்பதாகவோ நான் நினைப்பதில்லை.  அது ஒரு தருணம்.  நீங்களும் நீங்கள் எழுத நினைக்கும் கதைக்கருவும் ஒன்றிப் போகிற ஒரு கணம் என்றே நான் நினைக்கிறேன்.  நீங்கள் ஒரு விஷயத்தை எழுத விரும்பியதும் ஒருவிதமான பரஸ்பர டென்ஷன் உங்களுக்கும் உங்கள் கதைக் கருவுக்கும் இடையே தோன்றிவிடுகிறது.  நீங்கள் அந்தக் கருவை நெருக்குகிறீர்கள், அது உங்களை நெருக்குகிறது.  அப்போது ஒரு கணத்தில் தடைகள் எல்லாமே கரைந்துபோய் எல்லா மோதல்களும் தீர்ந்து போய் நீங்கள் கனவுகூட காணாத அந்த விஷயம் உங்களுக்கு நிகழ்கிறது.  அந்தக் கணத்தில் எழுதுவதைத் தவிர வேறு எதுவுமே இந்த உலகத்தில் கிடையாது என நினைப்பீர்கள்.  அதைத்தான் நான் "இன்ஸ்பிரேஷன்" என்று குறிப்பிடுகிறேன்  என்று பதிலளிக்கிறார் அவர்.

மார்க்யெஸ் நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல, நமது மொழியில் அவர் எழுதவில்லை. நமக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. ஆனால் அவரது படைப்புகள் நம்மை ஈர்க்கின்றன, நம்மைப் புன்னகைக்கச் செய்கின்றன, அழ வைக்கின்றன. அவரது பாத்திரங்களின் பெயர்கள் நமக்குப் புரிவதில்லை, ஆனால் அவர்களை நாம் பார்த்திருக்கிறோம். கடல்களைத் தாண்டி, கண்டங்களைத் தாண்டி, மொழியின் எல்லைகளையும் தாண்டி நம் மனதில் வந்து படிந்திருக்கிறது அவரது படைப்பு. அதுதான் படைப்பின் மாந்திரீகம். அந்த மாயவித்தையின் மன்னனாகத் திகழ்ந்த மார்க்யெஸ் இனி எழுத மாட்டார். அவரது சுய சரிதையின் அடுத்த பாகம் இனிமேல் வரப்போவதில்லை. மார்க்யெஸ் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார் , ஆனால், மார்க்யெஸ் என்ற படைப்பாளி மரணமடைந்துவிட்டார்.

நன்றி : தீராநதி, ஆகஸ்டு,   2012 
No comments:

Post a Comment