Wednesday, November 21, 2012

ஈழப் பிரச்சனை : சில சிந்தனைகள்


புதினப்பலகை குழுமத்தினருக்கு வணக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை ஈழத் தமிழர்கள் விவாதிக்கத் தயங்கிய அல்லது தவறிய பிரச்சனை ஒன்றை நீங்கள் வெளியிட்டிருக்கும் புதினப்பலகைக் கட்டுரை பேச முற்பட்டிருக்கிறது.( அதை எனது வலைப்பூவில் இட்டிருக்கிறேன்) அதாவது, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஈழப் பிரச்சனையில் எந்த அளவுக்குத் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து இந்தக் கட்டுரை சில கருத்துகளை உறுதியாக முன்மொழிந்திருக்கிறது. இந்த விவாதத்தைத் துவக்கியதற்காக புதினப்பலகை குழுவினரை முதலில் பாராட்டவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலோர் ஈழப் பிரச்சனையைத் தமது அரசியல் செயல்திட்டத்தின் அங்கமாகக் கருதியே பேசிவருகிறார்கள். தமிழகத்தின் அரசியலோடு அந்த அளவுக்கு ஈழப் பிரச்சனை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதாலேயே அவர்கள் அப்படிப் பேசுகிறார்கள். அவர்களுள் சிலர் ‘ எல்லைதாண்டிய பொருத்தமற்ற ஆட்டங்களை ஆடிவருகின்றனர்என புதினப்பலகை கருதினால் அவர்கள் யாரென்பதை வெளிப்படையாகச் சொல்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் அத்தகைய நபர்களை ஊதிப்பெருக்கிப் பேருருக்களாக வடிவமைக்கும் வேலையைச் செய்வது ஈழத் தமிழர்கள் தான். ஈழத் தமிழர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய குறியீடுகளை இந்த ‘தோற்றப் போலிகள் இப்போது சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை நீங்கள் தொடர்ந்து அனுமதித்தால் எதிர்காலத்தில் அந்தக் குறியீடுகளை நீங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை நீர்த்துப்போய்விடும். இது ஈழத் தமிழர்களுக்கான சிக்கல் என்றால், அவர்களால் தமிழக அரசியலில் நேர்ந்துவரும் சீரழிவு இன்னும் மோசமானது. ராஜிவ் கொலையின்மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட சேதத்தைவிட இத்தகைய தோற்றப் போலிகளை ஊதிப் பெருக்கிக் காட்டுவதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப்போகும் சேதம் அதிகம்.

ஈழப் பிரச்சனை குறித்த மீள் பரிசீலனை என்பது முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்த விவாதம் என்ற அளவோடு நின்றுவிடக்கூடாது. ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த காலந்தொட்டு நடந்த நிகழ்வுகளையும் அது கவனத்தில்கொள்ளவேண்டும்.

இந்தியாவின் பேச்சைக்கேட்டுத் தமிழகத்தில் வந்திறங்கிய போராளிகள் அப்போது தமது செயற்பாடுகள் தமிழக மக்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதுபற்றிச் சிந்தித்தார்களா? ?? இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடம், இங்கே இருக்கும் தேசிய இனங்களுக்கு உரிமை தராத இந்திய அரசு தமிழ் ஈழத்தை உங்களுக்கு எப்படி பெற்றுத் தரும் ? என்று அப்போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு செவிமடுத்தார்களா? இங்கே முகாம்கள் அமைத்துப் பயிற்சி பெற்றபோது அவர்கள் யாரோடு நெருக்கமாக இருந்தார்கள்? அப்போது மட்டுமல்ல கடந்த முப்பதாண்டுகளில் தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து ஈழப் போராளிக் குழுக்களோ அரசியல் தலைவர்களோ எப்போதாவது வாய் திறந்தது உண்டா??இந்தியாவில் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும், உளவுத் துறையையும் சார்ந்திருந்து தமது காரியம் ஆனால் போதும் என செயல்பட்ட சில ஈழப் போராளிக்குழுக்கள் குறித்தும், ஈழ அரசியல்வாதிகள் குறித்தும்  உங்களுக்குத் தெரியாதா? ?அவர்கள் இப்போதும்கூட அதேபோன்றுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையும் நீங்கள் மனம் திறந்து விவாதிக்கவேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் ஈழத் தமிழர் பிரச்சனயைப் பாழ்படுத்தியது போலவே சில ஈழத் தமிழ்க் குழுக்களின் தொலைநோக்கற்ற செயல்பாடுகள் தமிழக அரசியலையும் பாதித்திருக்கின்றன. இவற்றையெல்லாம் திறந்த மனதோடு விவாதிக்க இன்னும் பக்குவப்பட்ட நிதானமான அணுகுமுறை தேவை. உங்களைப் போன்றவர்களிலிருந்துதான் அத்தகைய ஆக்கபூர்வமான விமர்சனங்கள் பிறக்கும் என நம்புகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்    
  

No comments:

Post a Comment