Wednesday, February 13, 2013

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: எழுச்சியுறுமா தமிழகம்?




ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின் 22 ஆவது கூட்டம் 25.02.2013 முதல் 22.03.2013 நடக்கவுள்ளது. இலங்கை குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கூறியிருக்கிறார். வரவிருக்கும் கூட்டத்தில் விவாதிப்பதற்கென அவர் தயாரித்து அளித்திருக்கும் 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை இலங்கை அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத கொலைகளும்,ஆள் கடத்தல்களும் தொடர்ந்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கும் அந்த அறிக்கை, அங்கிருக்கும் சிறுபான்மை தமிழ்மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. எட்டு பரிந்துரைகளை முன்வைத்திருக்கும் அந்த அறிக்கையின் இறுதியில் நவி பிள்ளை அவர்கள் முன்னர் தாம் வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்: ” போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயேச்சையான நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்” என அவர் மீண்டும் கூறியிருக்கிறார். இந்த அறிக்கை ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் 20.03.2013 அன்று விவாதத்துக்கு வரவிருக்கிறது.

இலங்கை குறித்து கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய சீராய்வு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.அதில் நிறைவேற்றுவதற்கென தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்மொழியப் போவதாக அறிவித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் அந்தத் தீர்மானத்தின் வரைவு உறுப்பு நாடுகளுக்கிடையே சுற்றுக்கு விடப்படும். அப்போதுதான் அது எந்த அளவுக்குப் பயன்தருவதாக இருக்கும் எனத் தெரியும்.

இலங்கையில் மிச்சமிருக்கும் தமிழர்கள் எதையும் பேச முடியாத நிலையில் உள்ளனர்.புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்களும்கூட கடந்த ஆண்டைப் போல  இந்தப் பிரச்சனையில் உத்வேகத்தோடு இன்னும் இறங்கவில்லை. அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக இருந்த ஹிலாரியிடம் அவர்கள் நன்றாக ’லாபி’ செய்து வைத்திருந்தனர். தற்போது புதிய செயலாளர் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அதே அளவு ’லாபி’ அவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்தகையோடு நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு செயல்படுத்துமெனவும், தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் அந்தத் தீர்மானம் நம்பிக்கை தெரிவித்தது. அப்போது அந்தத் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன, 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அப்போது எதிர்த்த நாடுகளில் சிலி,ஜெர்மனி,இத்தாலி,ஸ்விட்சர்லாந்து,அயர்லாந்து ஆகியவை இப்போதும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன. அந்த நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த அர்ஜெண்டினா,கபோன்,ஜப்பான்,கொரியக் குடியரசு ஆகியவையும் உறுப்பினர்களாக இருக்கின்றன.

கடந்த முறை அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகளில் காங்கோ,ஈக்குவேடர்,இந்தோனேஷியா, குவைத்,மாலத்தீவு,மௌரிடானியா,பிலிப்பைன்ஸ்,கத்தார்,தாய்லாந்து,உகாண்டா ஆகிய   10 நாடுகள் இப்போது உறுப்பினர்களாக இருக்கின்றன. இன்னும் எத்தனை நாடுகளின் ஆதரவை இலங்கை திரட்டியிருக்கிறதோ தெரியவில்லை. அமெரிக்கா இப்போது கொண்டுவரப்போகும் தீர்மானம் வெற்றிபெற வேண்டுமெனில் 24 நாடுகள் அதை ஆதரிக்கவேண்டும். இந்தியாவின் ஆதரவு மிக மிக முக்கியம். நவி பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டுமென்று அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருமா? அல்லது இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதுபோல தீர்மானம் இருக்குமா என்பது இன்னும் தெளிவுபடவில்லை.

அமெரிக்கா கொண்டுவரவிருக்கும்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என ’டெசோ’ அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனத் தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் உரையாற்றும்போது  தெரிவித்திருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் வெளிப்பட்டதைப் போன்ற எழுச்சியை இப்போது நாம் காணமுடியவில்லை. தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்பட்டால்தான் இந்திய அரசு கொஞ்சமாவது அசைந்துகொடுக்கும். இல்லாவிட்டால் அது இலங்கைக்கு ஆதரவாகத்தான் செயல்படும். ஊடக ஆதரவு எவ்வளவுதான் இருந்தாலும் சிறிய இயக்கங்களால் இந்திய அரசைச் செயல்பட வைக்கமுடியாது. தமிழகத்தில் இருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் முன்வந்தால்தான் அது சாத்தியப்படும்.

1 comment:

  1. கண்துடைப்பு நாடகமாகக் கூட இராஜபட்சேயின் வருகையைத் தடைசெய்ய இயலாத மத்திய அரசு, அதை ஆதரிப்போர்- தமிழகத்தில் வராதே என்று எழுப்பும் வெற்று முழக்கம்-இந்தக் கட்டத்தில்கூட எழுச்சிபெறாத தமிழகம், புத்தாண்டு-பொங்கல்-வாழ்த்துக்கள் போல் கண்டன அறிக்கைகளைத் தாராளமயமாக்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள்- இந்திய அரசை எப்படிச் செயல்பட வைக்க இயலும் ?
    இந்தப்பதிவும் எமது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

    ReplyDelete