Showing posts with label parliament. Show all posts
Showing posts with label parliament. Show all posts

Tuesday, March 13, 2012

நாடாளுமன்றத்தில் தொல். திருமாவளவன் தர்ணா



இன்று நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் முன்மொழியப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர் கையளிக்க இருக்கிறார். 

Sunday, August 21, 2011

அண்ணா அசாரே:நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன்உரை

ஈழத்தில் முகாம்களைப் பார்வையிடும் திருமாவளவன் 

அண்ணா அசாரேயின் கைதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த அறிக்கையின்மீதான விவாதத்தில் பங்கேற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை:


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

இந்த அவையிலே இன்று காலை பிரதமர் அவர்கள் அண்ணா  அசாரே கைது தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையின்
மீதான விவாதத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு இதயம் கனிந்த நன்றி.

மாண்புமிகு பிரதமர் அவர்கள்,  தனது நீண்ட நெடிய அறிக்கையில் எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அண்ணா அசாராவை கைது செய்ய நேரிட்டது என்று விரிவாக எடுத்துரைத்தார்.அந்த அறிக்கையில் அண்ணா அசாரேவிற்கு உண்ணா விரதம் இருக்க அனுமதியளிக்கபட்டதாகவும் ஆனால் அதில் சில நிபந்தனைகள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் அவரது பிடிவாதமான நிலைபாட்டால், அவர் மேற்கொள்ள இருந்த சில செயல்பாடுகள் சட்டம்,ஒழுங்கை பாதித்து விடுமோ  என்கின்ற ஐயத்தில் அவரை கைது செய்யும் நிலைக்கு அரசு தள்ளபட்டது  என தனது நீண்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் இந்த அரசு
அமைதியான போராட்டங்களுக்கு எதிரானது அல்ல எனக் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டது என்று பிரதமர் சொன்னாலும் கூட,  இந்தச் சூழலை இன்னும் திறம்படக் கையாண்டு இருக்கலாம். இது போன்ற  கைது நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீது ஓர் எதிர்மறையான எண்ணம் தோன்றியுள்ளது.   ஆளும் காங்கிரஸ்கட்சி,   ஊழலை ஒழிக்க முன்வரவில்லை என்ற  ஓர் கருத்து மக்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ளது.  ஏனோ எதிர்கட்சிகள் மட்டுமே ஊழலை ஒழிக்கப்  போராடி வருவதைப்போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.   அவர்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப்  பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.

அண்ணா அசாராவைக் கைது செய்ததற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைத்து இருக்கலாம். அல்லது, அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர அனுமதித்து,  அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். இந்தப் பிரச்னையை தக்க வழிமுறையில் கையாண்டு சுமுகமாக அதே நேரத்தில் ஒரே அடியாகத் தீர்த்து வைத்திருக்கலாம்.  ஆனால்  இதனை இப்போது கையாண்ட முறையினால் அரசுக்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது.  இந்த அவையினை இன்றைக்கு
வழிநடத்துவது ஆளும் கூட்டணியா?அல்லது எதிர்க்கட்சிகளா?என்கின்ற ஒரு தெளிவற்ற நிலை உள்ளது.

எதிர்கட்சியினர் இந்த அவையைத் தாங்கள் இழுத்த இழுப்பிற்கு ஏற்றவாரு செயல்பட வேண்டுமென நினைக்கிறார்கள், தொடர்ந்து இந்த அவையினைச் செயலிழக்க  வைக்கின்றனர். இலங்கையில் சொந்த மண்ணில், மனிதத் தன்மையற்ற முறையில் வதைபடும்  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையினை எடுத்துரைத்து, அவர்களுக்காக இந்த அவையிலே குரல் எழுப்பமுடியாத ஒரு மோசமான நிலை இதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்தோடு இந்த அவையில் பதிவு செய்கின்றேன்.

பல லட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் நாங்கள் இந்த அவையிலே இருகின்றோம்.இலட்சக்கணக்கானத் தமிழர்கள்
இலங்கையில் வதைபடும் நிலைகுறித்து,  இந்த அவையில் குரல் எழுப்புவதற்கு எங்களுக்கு   ஜனநாயக வாய்ப்பு மறுக்கப்படுகிறது.    எதிர்கட்சிகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வதும், அசாரே கைதின் மூலம் ஏற்பட்டுள்ள சூழலும், அவர் விடுவிக்கப்பட்ட முறையும்- இந்த அரசு,  எதிர்கட்சியினரின்
இது போன்ற போராட்டத்தின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

நான் இந்த அரசிடம் வலியுறுத்துவது- கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது, ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள்மீது அல்ல,
ஊழலுக்கு எதிராகத்தான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்  ஊழலுக்கான ஆணிவேராக இருப்பவர்கள் மீதும், ஊழல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில்  இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. எனது இந்தக் கருத்தை  எதிர்க்கட்சி ,ஆளும்கட்சி சார்ந்த இருவரிசைகளில் உள்ளவர்களும் ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன். இன்றைக்கு எதிர்கட்சியினர், ஏதோ அவர்கள்தான் ஊழலை வேரோடு பிடிங்கி ஏறிய வந்தவர்கள் போன்ற ஒரு போலித்தனமான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த  மாயையை  உடைத்து எறிய வேண்டும் .நாம் அனைவரும் நம் அறிவாற்றலை ஒன்று சேர்த்து ஊழலை,  இந்த சமூகத்தில் இருந்து துடைத்து எறிய வேண்டும். இதற்கு நாம் ஊழலின் ஆணிவேரைக் கண்டறிய வேண்டும் .ஏழ்மையும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும் ,ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையில் பல புரட்சிகரமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் ,வியாபார நிறுவனங்களும் தான் பல முக்கிய வேட்பாளர்களுக்கு நிதியை அளித்து அதன்மூலம் அவர்களைக் கைப்பாவைகளாக்கித் தங்கள் சொற்படி அரசை  நடத்துகிறார்கள்.
முதலாளிகளும்,தொழில் அதிபர்களும்,தேர்தலில் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து ஊழலுக்கு வழிவகுக்கிறார்கள் எனவே இந்த அரசு  ஊழலுக்கான இந்த ஊற்றுக்கண்ணை அடைத்து ஊழலை முளையிலேயே கிள்ளி எறிய உறுதியான நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்பது தான்  என்  வேண்டுகோள்.
ஒப்பந்தப் புள்ளிகள், ஒப்பந்தப் பணிகள், ஏல முறைகள் போன்றவற்றில் தற்போது உள்ள நடைமுறைகளை முறைப்படுத்தி, வெளிப்படையாக்கி ஊழலுக்கான வாய்ப்பினை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கறுப்புப் பணத்தை முழுவதுமாக வெளிக்கொண்டுவரவேண்டும். ஊழல் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதை எளிதில் வேரறுக்க முடியுமா ? ,வெறும் சட்டத்தினால் அதனை அழித்துவிடமுடியாது. ஏற்கனவே தடா, பொடா போன்ற கொடும் சட்டங்களை நடைமுறைபடுத்தியும்கூடப் பயங்கரவாதத்தையும் ,வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.எனவே கடுமையான சட்டங்கள் மட்டும் ஊழலை ஒழிக்க உதவாது திருவள்ளுவர் அவர்கள் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்று ஒரு நோயைத்தீர்ப்பதற்கான அடிப்படை அணுகுமுறை அந்த நோய்க்கான மூலகாரணத்தை அறிவதுதான் என அறிவார்ந்த முறையில் எடுத்துரைத்திருப்பதை மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.

நாம் தக்க நடவடிக்கையின்மூலம் ஊழலுக்குக் காரணமானவர்களை, இந்த சமூகத்தை ஊழல் மயமாக்குபவர்கள் யார் என்பதை, ஊழல்வாதிகள் யார் என்பதைக் கண்டறிந்து ஊழலை இந்த சமூகத்தில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும் .ஊழல் முதலாளிகள் ,தொழில் அதிபர்கள் மீதும்
கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.ஜன்லோக்பால் சட்டமாக இருந்தாலும் லோக்பால் சட்டமாக இருந்தாலும் அதனால் ஊழலை வேரறுக்க முடியாது.

ஊழலுக்கான ஆணிவேர் கண்டறியப்படுவதோடு மக்களின் அடிப்படை மனநிலையும் மாறவேண்டும் தொழில் நிறுவனங்கள் ,முதலாளிகள்மீதான பிடியினை இந்த அரசு மேலும் இறுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் .

மேலும் இந்த விவகாரம் குறித்து ஒரு சமாதான உடன்படிக்கையை  ஏற்படுத்தும் வகையில் அண்ணா அசாரேவுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கி ஊழல் பிரச்சனையை திறம்படக் கையாண்டு முழுமையாக ஊழலை ஒழிக்க முற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.